அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் | 9th Science : Matter Around Us
அலகு 10
நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
❖ வேதி இயைபின் அடிப்படையில் பொருட்களை தனிமங்கள், சேர்மங்கள் மற்றும் கலவைகளாக வகைப்படுத்துதல்.
❖ கலவைகளை ஒருபடித்தான கலவை மற்றும் பல படித்தான கலவைகளாக குழுப்படுத்தல்
❖ கலவையின் பகுதிப் பொருட்களைப் பிரிக்க பொருத்தமான முறையைக் கண்டறிதல்.
❖ கரைபொருளின் துகள்களின் அளவின் அடிப்படையில் கரைசல்களை வகைப்படுத்தல் மற்றும் அவற்றின் பண்புகளின் அடிப்படையில் உண்மைக்கரைசல்கள்,
கூழ்மங்கள் மற்றும் தொங்கல்களை ஒப்புமைப்படுத்துதல்.
❖ பிரிகை நிலைமை மற்றும் பிரிகை ஊடகம் ஆகியவற்றின் தன்மையின் அடிப்படையில் கூழ்மங்களை வேறுபடுத்தல்.
❖ எ/நீ மற்றும் நீ/எ பால்மங்களை ஒப்பிடுதல்.
❖ கூழ்மங்களின் முக்கியமான எடுத்துக்காட்டுகள் மற்றும் பயன்களை விவாதித்தல்.
அறிமுகம்
பருப்பொருள் என்பது அண்டத்திலுள்ள அனைத்து பொருட்களையும் குறிப்பதற்காக நாம் பயன்படுத்தும் ஒரு சொல் ஆகும். நம்மைச் சுற்றியுள்ள அனைத்துமே பருப்பொருளாகும். நாம் சுவாசிக்கும் காற்று,
உண்ணும் உணவு, எழுதும் எழுதுகோல், மேகம், கற்கள், தாவரங்கள், விலங்குகள், ஒரு துளி நீர், மணல் கூறு ஆகிய அனைத்தும் பருப்பொருள்கள். அனைத்திலும் இரண்டுபொதுவான பண்புகள் இடம் பெற்றுள்ளன, அவை நிறை மற்றும் இடத்தை அடைக்கும் இயல்பு.
எனவே, நிறை மற்றும் இடத்தை அடைக்கும் அனைத்துப் பொருள்களையும் பருப்பொருள்கள் என நாம் அழைக்கிறோம்.
]