Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கவிதைப்பேழை: ஓ, என் சமகாலத் தோழர்களே!

வைரமுத்து | இயல் 4 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஓ, என் சமகாலத் தோழர்களே! | 9th Tamil : Chapter 4 : Ettutikum sendriduVeer

   Posted On :  19.08.2023 07:05 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

கவிதைப்பேழை: ஓ, என் சமகாலத் தோழர்களே!

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் : கவிதைப்பேழை: ஓ, என் சமகாலத் தோழர்களே! - வைரமுத்து | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

தொழில்நுட்பம்

கவிதைப் பேழை

ஓ, என் சமகாலத் தோழர்களே!

- வைரமுத்து



நுழையும்முன்

அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்ந்ததே தமிழ்ச் சமூகம். எனவே அறவியலோடு அறிவியல் கண்ணோட்டமும் வளர்க்கப்பட வேண்டும் என்பதைத் தற்காலப் படைப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர். அவ்வகையில் அறிவியல் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற தம் விழைவை இப்பாடல் மூலம் கவிஞரும் வெளிப்படுத்துகின்றார்.



கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்

கிழக்கு வானம் தூரமில்லை 

முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால் 

பூமி ஒன்றும் பாரமில்லை


பாய்ந்து பரவும் இளைய நதிகளே

பள்ளம் நிரப்ப வாருங்கள் 

காய்ந்து கிடக்கும் கழனிகள் எங்கும்

கதிர்கள் சுமந்து தாருங்கள்


முன்னோர் சொன்ன முதுமொழி எல்லாம்

முதுகில் சுமந்தால் போதாது 

சொன்னோர் கருத்தை வாழ்க்கைப் படுத்த 

துணிந்தால் துன்பம் வாராது


காட்டும் பொறுமை அடக்கம் என்னும்

கட்டுப் பாட்டைக் கடவாதீர் 

கூட்டுப் புழுதான் பட்டுப் பூச்சியாய்க் 

கோலம் கொள்ளும் மறவாதீர்


அறிவை மறந்த உணர்ச்சி என்பது

திரியை மறந்த தீயாகும் 

எரியும் தீயை இழந்த திரிதான் 

உணர்ச்சி தொலைந்த அறிவாகும்


பழையவை எல்லாம் பழமை அல்ல

பண்பும் அன்பும் பழையவைதாம் 

இளையவர் கூட்டம் ஏந்தி நடக்க 

இனமும் மொழியும் புதியவைதாம்


அறிவியல் என்னும் வாகனம் மீதில்

ஆளும் தமிழை நிறுத்துங்கள் 

கரிகா லன்தன் பெருமை எல்லாம் 

கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்*


ஏவும் திசையில் அம்பைப் போல

இருந்த இனத்தை மாற்றுங்கள் 

ஏவு கணையிலும் தமிழை எழுதி 

எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.*

இலக்கணக்குறிப்பு 

பண்பும் அன்பும், இனமும் மொழியும் - எண்ணும்மைகள்.

சொன்னோர் - வினையாலணையும் பெயர்.

பகுபத உறுப்பிலக்கணம்

பொருத்துங்கள் - பொருத்து + உம் + கள்

பொருத்து - பகுதி

உம் - முன்னிலைப் பன்மை விகுதி

கள் - விகுதி மேல் விகுதி


நூல் வெளி

கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர். இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர். கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும் மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர். இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப்பாடப் பகுதி வைரமுத்து கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

இலக்கியங்களில் அறிவியல்

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி

புறநானூறு

பாடல் 27, அடி 7-8.


அந்தரத் தார்மய னேஎன ஐயுறும் 

தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன்

வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி,"ஓர் 

எந்திர வூர்திஇ யற்றுமின்" என்றான். 

- சீவக சிந்தாமணி 

நாமகள் இலம்பகம் 50.

Tags : by Vairamuthu | Chapter 4 | 9th Tamil வைரமுத்து | இயல் 4 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 4 : Ettutikum sendriduVeer : Poem: O en samakaalla tholarkale by Vairamuthu | Chapter 4 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் : கவிதைப்பேழை: ஓ, என் சமகாலத் தோழர்களே! - வைரமுத்து | இயல் 4 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர்