Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | உரைநடை : அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்

பருவம் 1 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை : அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம் | 5th Tamil : Term 1 Chapter 1 : Mozhli

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி

உரைநடை : அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி : உரைநடை : அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

உரைநடை

கவிதைப் பட்டிமன்றம்


கவிதைப் பட்டிமன்றத்துக்கான அறிமுகம்

பேசுதல் என்பது அடிப்படைத்திறன் எனில், பேச்சாற்றல் என்பது உயர்நிலைத் திறன். பேசுதவின் வளர்நிலையே பேச்சாற்றல் அத்தகைய பேச்சாற்றல் திறனை வளர்க்கும் பாடங்களு ஒன்று, இக்கவிதைப் பட்டிமன்றம்.

பலர் நிறைந்த அவையினிலே தாம் இயற்றிய கவிதையை வெளியிட்டபோது, பாரதியாருக்கு 11 வயதுதான். ஆதலால், கவி பாடும் திறமையை இளமையிலேயே வளர்த்துக்கொள்வது சாலச் சிறந்தது. இங்கு உரைநடைப் பாடமாக அமைந்துள்ள இப்பகுதி, இலக்கியத்தின் ஒரு வடிவமான கவிதை நடையில் அமைந்துள்ளமை, புதுமையின் நுழைவாயில். கவிதைக்குரிய சொல்லாடல், உவமைச்சிறப்பு, மோனை, எதுகை போன்ற நயங்கள் மேலும் பாடப்பகுதியைச் சிறப்புடையதாக்குகின்றன. மாணவர்கள், குரல் ஏற்றஇறக்கத்தோடும் தங்குதடையின்றியும் வாய்விட்டுப் படிக்கும் போதுதான் இக்கவிதைப் பட்டிமன்றப் பேச்சு, ஆற்றல் வாய்ந்த பேச்சுக்கலையாக மிளிரும். அதற்கான வாய்ப்பை ஆசிரியர்கள் ஏற்படுத்தித் தரவேண்டும்.

இடம் : பள்ளிவளாகம்

காலம்: பிற்பகல் 3.00 மணி

உறுப்பினர்கள் : நடுவராகச் சிறப்பு விருந்தினர், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இன்சுவை, அருளப்பன், மதியொளி, சலீமா.

 

அறிவா? பண்பா?

நடுவர் : செந்தமிழே ! நறுந்தேனே!

செகம் போற்றும் செம்மொழியே !

முத்தமிழ் சொல்லெடுத்து

நற்றமிழ்ப் பட்டி மண்டபத்தின்

நடுவராக நான் வந்துள்ளேன்.

வணக்கம்

தித்திக்கும் தேன்தமிழில்

எத்திக்கும் புகழ்பரப்பும்

வித்தகக் கவிதையால்,

பெரிதும் தேவை அறிவா? பண்பா?

எனக் கவிதை வாசிக்க வருகின்றனர்

பாராட்டுக்குரிய நால்வர்,

தனித்துவமிக்க இன்சுவை,

சொல்லழகி சலீமா

அருமையான அருளப்பன்

ஒப்பற்ற மதியொளி....

முதல் கவிதை முத்தாய்ப் பாட

இனிதே அழைக்கின்றேன் இன்சுவையை......

இன்சுவை : புவி காக்கும் தமிழ்த் தாய்க்கும்

கவியரங்கத் தலைமைக்கும்

ஆன்றோருக்கும் சான்றோருக்கும்

அறிவுதான் முன்னேற்றத்தின்

ஆணிவேர் என்றே

அடித்துக் கூற வந்துள்ளேன்

'அக்னி' தந்த அப்துல்கலாம்

அசத்தியதும் அறிவாலே! அறிவாலே!

அறிவின் துணை கொண்டே

ஆயிரம் கண்டுபிடிப்பால் தாமஸ்

ஆல்வா எடிசனும் வாழ்கின்றார் அறிவாலே!

அறிவுமிகு மனிதனாக

அகிலத்தில் உயர்ந்து நின்றால்

அத்தனையும் நம் கையில்

என்று கூறி விடை பெறுகின்றேன்.......

நடுவர் : இன்சுவையின் கவிதை அறிவாயுதம்.......

அடுத்து, ஒளிரும் கவிதையுடன் மதியொளி கவிபாட வருகின்றார்

மதியொளி : அகிலமெல்லாம் தமிழே மணக்கும்!

பண்புதான் வெற்றிப்படி என்றே

பறை சாற்ற வந்துள்ளேன்.

நற்பண்பு தூக்கிவிடும்

நம்மை உயரத்திலே

நற்பண்பு புகுந்து விட்டால்

நாவினிலே இனிமை வரும்

பண்பாலே சிறந்தவர் தாம்

பலருண்டு நம்மிடையே

புத்தரோடு வள்ளுவரும்

போதித்ததும் நற்பண்பே....

நன்னெறியால் நிலைத்து

நிற்போம் உலகினிலே....

நடுவர் : மிளிர்கின்ற தமிழ்க் கவிதை

மதியொளியின் அரும் கவிதை....

அறிவாற்றல் பயன் பேச

அருளப்பன் வருகின்றார்

செறிவாற்றல் கவிதையொன்றைச்

செப்பிடவே வருகின்றார்.

அருளப்பன் : அறிவாற்றல் உள்ளவன்தான்

ஆளுகின்றான் அண்டத்தை

வெறும் பண்பை வைத்துக்கொண்டு

பெரும் பந்தல் போடலாமோ?

கூறும் பண்பில் நம்

வயிறும் நிறைந்திடுமோ?

நல்லவன் இருந்தால்

நாடென்ன முன்னேறுமோ?

வல்லவன் வகுத்ததன்றோ

வளமான இவ்வுலகு.....

தூண் போன்ற அறிவேதான்

வான் முகத்தைத் தொட்டிடுமே!......

நடுவர் : பண்பின் பெருஞ்சிறப்பைப் பொழிந்திடவே வருகின்றார் சொல்லழகி சலீமா......

சலீமா : பண்பிலான் பெற்ற செல்வம்

பயனில்லை உலகோர்க்கே

பண்பேதான் அன்பை நல்கும்

பன்மடங்கு உயர்வைத் தரும்

உண்மை சொன்னேன் யாவர்க்கும்

அன்பின் மிகுதியால் அதியமான்

உயிர் காக்கும் நெல்லிக்கனியை

உவந்தளித்தான் ஔவைக்கு

அத்தனையும் எளியோர்க்கு

அன்னை தெரசா பெற்றுத் தந்தார்

குணமென்னும் நற்பண்பே

குன்றிலிட்ட விளக்கன்றோ.....

நடுவர் : எல்லோரும் சிறப்பாக

நல்லோரே போற்றும் வண்ணம்

நற்கவிதை வாசித்தார்கள்....

என்னுடைய தீர்ப்பிற்கு

இசைந்தே தான் வருகின்றேன்....

கண்ணுக்கு இருவிழி

கல்வியின் நேர்விழி

அறிவும் பண்பும்

சமமாக வைத்தேதான்

உறு புகழ் பெறுவோமே....

பொறி ஐந்தும் பண்பாகப்

பார் முழுவதும் அறிவாக

வலம் வருவோம் நாமே

உளம் நிறை வாழ்த்தோடு

நலம் இரண்டும் தானென்று

நல்ல தீர்ப்பு கூறி

நானும் விடைபெறுகின்றேன் .....

நன்றி வணக்கம்!

Tags : Term 1 Chapter 1 | 5th Tamil பருவம் 1 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 1 Chapter 1 : Mozhli : Prose : Ariva? Panpa? Kavithai pattimandram Term 1 Chapter 1 | 5th Tamil in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி : உரைநடை : அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம் - பருவம் 1 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி