Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | துணைப்பாடம் : என்ன சத்தம்

பருவம் 1 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம் : என்ன சத்தம் | 5th Tamil : Term 1 Chapter 1 : Mozhli

   Posted On :  19.07.2023 10:20 pm

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி

துணைப்பாடம் : என்ன சத்தம்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி : துணைப்பாடம் : என்ன சத்தம்.... | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

துணைப்பாடம்

என்ன சத்தம்...

அன்று ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் செழியன் தன் பாட்டியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றான்.

ஆடுகள் காட்டின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. செழியன் ஒருமரத்தடியில்அமர்ந்து காட்டின் அழகை இரசித்துக் கொண்டிருந்தான். அந்த மரத்தின் மேலிருந்த குரங்குகள் அலப்பும் ஓசை அவனுக்கு எரிச்சலாக இருந்தது. அதனால், அவன் வேறு ஒரு மரத்தடிக்குச் சென்று அமர்ந்தான். அங்கிருந்த மரங்களில் அணில்கள் ஓடிப் பிடித்து விளையாடின. அம்மரத்திலிருந்த குயில் ஒன்று குக்கூ குக்கூ.... எனக் கூவியது. குயிலின் ஓசை செழியனின் செவிக்கு இனிமையாக இருந்தது. அப்படியே படுத்துச் சிறிது நேரம் ஓய்வெடுத்தான். திடீரென ஆடுகள் மே....மே..எனக் கத்தும் சத்தம் கேட்கவே, செழியன் பதற்றத்துடன் எழுந்து என்னவென்று கவனித்தான். அருகில் பச்சைப் புதரருகே நரி ஒன்று ஆடுகளைக் கொன்று தின்ன, நேரம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். உடனே ஒரு குச்சியை வளைத்து வில்லாக்கி நரியை நோக்கி அம்பை எய்தான். அம்பு பட்டுக் காயமடைந்த நரி ஊளையிட்டுக் கொண்டே ஓடி விட்டது.


செழியன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு பாட்டியுடன் வீட்டிற்குக் கிளம்பினான். தூரத்தில் எங்கோ சிங்கம் முழங்கும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் காடே பரபரப்பாகி விட்டது. பறவைகள் இறக்கைகளைப் படபடவென அடித்துக் கொண்டு இங்குமங்கும் பறந்தன. யானை பிளிறியது; ஆந்தை அலறியது; கீரிப்பிள்ளையும் செடிகளின் மறைவிலிருந்து ஓடியது; மயில் அகவியது; பாம்பும் தன் புற்றிலிருந்து வெளியே வந்து சீறியது; குதிரை கனைத்தது.


இவற்றை எல்லாம் கேட்ட செழியனுக்குப் பயத்தால் நாக்கு வறண்டது. தான் வைத்திருந்த தண்ணீரைக் குடித்தான். பாட்டியுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் கம்பங்கொல்லையில் வண்டுகள் முரலும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. ஊருக்கு அருகே வந்த பிறகுதான் செழியனுக்குப் பயம் சற்றுக் குறைந்தது. செழியன் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்ததுமே அவனைக் கண்ட மகிழ்ச்சியில் தொழுவத்திலிருந்த பசு கத்தியது. செழியன் ஆடுகளை ஆட்டுப்பட்டியில் அடைத்துவிட்டுத் தன் அம்மாவிடம் சென்று, காட்டில் தான் கண்ட நரியைப் பற்றியும் சிங்கம், யானை இவற்றின் சத்தத்தைப் பற்றியும் மிகுந்த பரபரப்போடு கூறினான். அம்மா செழியனின் துணிவைப் பாராட்டினார்.

வாழைத் தோட்டத்திலிருந்த தண்ணீர்த் தொட்டியில் செழியன் குளித்துவிட்டு வந்தான். அம்மா கொடுத்த முறுக்கைத் தின்றான். அப்போது தங்கை பூவிழி பால் பருகிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, செழியனையும், பூவிழியையும், பாட்டியையும் சாப்பிட வாருங்கள் என்று அம்மா அழைத்தார். அம்மாவின் குரலைக் கேட்டதும் இருவரும் சென்று கொடுத்த உணவை உண்டனர்.


பின்னர், தூங்கப் போகும் முன் பாட்டி கதை கூறினார். இருவரும் கதையை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். எலியும் எலிக் குஞ்சும் கீச் ...கீச் என்று சத்தமிட்டன.

எலியின் இந்த சத்தம், பாட்டியின் கதைக்குப் பின்னணி சேர்ப்பதுபோல் இருந்தது.நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்து பார்த்தான். அங்கே பூனை ஒன்று சீறுவதைக் கண்டு நாய் குரைத்த காரணம் அறிந்தான். இரண்டையும் அருகிலிருந்த தென்னந் தோப்பின் பக்கம் விரட்டிவிட்டு வீட்டிற்கு வந்து படுத்துக் கொண்டான். பாட்டியும், தங்கையும் முன்பே தூங்கிவிட்டனர்.

கொய்யாத் தோப்பிலிருந்த மரத்தின் மேலிருந்து கொக்கரக்கோ கொக்கரக்கோ...என சேவல் ஒன்று கூவும் ஓசையைக் கேட்டுக் கண் விழித்தான் செழியன்.

கா....கா..... எனக் காகமும் தன் பங்குக்குக் கரைந்தது.

செழியன் உற்சாகமாகத் துள்ளியெழுந்து அன்றைய நாளின் கடமைகளை மகிழ்ச்சியாகச் செய்ய ஆரம்பித்தான். தன் அனுபவங்களைத் தன் நண்பர்களோடு பகிரப் போகும் ஆவலுடன் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றான்.

பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் ஒலிப்பு முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென முன்னோர் கூறிய மரபினைத் தொன்று தொட்டுப் பின்பற்றி வருகிறோம்.

Tags : Term 1 Chapter 1 | 5th Tamil பருவம் 1 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 1 Chapter 1 : Mozhli : Supplementary: Enna satham Term 1 Chapter 1 | 5th Tamil in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி : துணைப்பாடம் : என்ன சத்தம் - பருவம் 1 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி