Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | உரைநடை: பெருமழைக்காலம்

இயல் 2 | 12 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: பெருமழைக்காலம் | 12th Tamil : Chapter 2 : Poiyana paiyum malai

   Posted On :  01.08.2022 02:26 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை

உரைநடை: பெருமழைக்காலம்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை : உரைநடை: பெருமழைக்காலம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

உரைநடை உலகம்

இயற்கை - உ

பெருமழைக்காலம்நுழையும்முன்

உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையான மழை, உழவுக்கும் இன்றியமையாதது. பருவம் தவறாது பொழிந்த மழை, பருவம் தப்பியும் சில நேரங்களில் பொய்த்தும் போகிறது. இயற்கைச் சமநிலையை நாம் சீர்குலைத்ததன் விளைவே பருவநிலை மாற்றம். சரியான திட்டமிடலின்றி உருவாக்கப்படும் பெருநகர அமைப்பு, நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தாமை இவற்றால் மழைக்காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகு சிந்தனைகளை முன்வைக்கின்றது இக்கலந்துரையாடல் ......


கலந்துரையாடல்

உலகப் புவி நாளை (ஏப்ரல் 22.) முன்னிட்டுச்

சூழலியலாளர்கள் பங்குபெறும் கலந்துரையாடல் 

நெறியாளர் : அகத்தியன் 

பங்கேற்பாளர்கள் : ஆல்வின், முத்துக்குமரன், ஆயிசா, கவின்மலர்

நெறியாளர்:  அனைவருக்கும் வணக்கம். இயற்கையைப் போற்றுகிற சமூகமாகத் தமிழ்ச்சமூகம் என்றைக்கும் இருந்து வருகிறது. 'மாமழை போற்றுதும்' என்றும் 'நீரின்றி அமையாது உலகு என்றும் மழையைக் கொண்டாடிய நாம் இன்று புயல், மழையைப் பற்றிய அறிவிப்புகளைக் கேட்டாலே ஒருவித அச்ச நிலைக்கு ஆட்படுகிறோம். 'மாரியல்லது காரியமில்லை' என்பது முன்னோர் மொழி. இன்றைக்கோ பெருமழை பொழிந்தால் காரியமே இல்லை என்று கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். ஏன் இந்த நிலையை அடைந்தோம்? புயல், மழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொள்வது இன்றியமையாத தேவை என்னும் சூழலில் இதுகுறித்து, விரிவான கலந்துரையாடலை நிகழ்த்த நம்மிடையே சூழலியல் ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் தொடர்ந்து பேசுவோம்.

அண்மைக் காலங்களில் தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், கேரளா, பீகார் முதலான மாநிலங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நிஷா, தானே, வர்தா, ஒக்கி, கஜா முதலான பெரும்புயல்கள் நம் நிலத்தையும் வாழ்வின் அடிப்படைகளையும் பாதித்திருக்கின்றன. நம் நாட்டில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஐந்து முறை வறட்சியும் ஏற்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு மும்பையில் ஒரே நாளில் 994 மி.மீ மழை பெய்தது. 2010ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ‘லே’ பகுதியில், 30 நிமிடங்களில் 150 முதல் 250 மி.மீ வரை மழையளவு பதிவானது. இத்தகைய மாறுபட்ட இயற்கை நிகழ்வுகள் நேர்வதற்கான காரணமென்ன?

ஆல்வின் : இயற்கையானது சமநிலையோடு இருந்தால்தான், அந்தந்தப் பருவநிலைக்கேற்ற நிகழ்வுகள் நடக்கும். மாறாக அது சமநிலையை இழக்கும்போது இயல்பான பருவநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாகப் புயல், பெருமழை, பெருவெள்ளம், புவி வெப்பமாதல் உள்ளிட்ட மாறுபட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.

மழை பெய்வதால் எல்லாவற்றிலும் நீர் ததும்புகிறது. செடி கொடிகள் வளர்கின்றன. காய்கனிகள் காய்க்கின்றன. நெல், தானியங்கள் விளைகின்றன. மனிதன் காய்கறிகளையும் விலங்குகளையும் உண்கிறான். ஆடு, மாடு போன்றவை செடி கொடிகளை மேய்கின்றன. புலி, சிங்கம் போன்றவை ஆடு, மாடு, மான்களை உண்கின்றன. தாவரங்களை உண்ணும் பிராணிகள், தாவரங்களை உண்டு வாழ்கின்றன. விலங்குகளை உண்ணும் " ஊன் உண்ணிகள் ", தாவரங்களை உண்ணும் விலங்குகளைப் பிடித்து உண்கின்றன. இந்த இயற்கையின் சுழற்சியே இயற்கைச் சமநிலை. 

நெறியாளர்: புவி வெப்பமடைவது இயற்கையாகவே நேர்கிறதா? மனிதர்களது செயல்பாடுகளால் நேர்கிறதா? என்ற விவாதம் அறிவியலாளர்களிடையே நடைபெற்று வருகிறதே!

முத்துக்குமரன்: மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறான். இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியல் கருத்தாளர் டேவிட் கிங் "புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக்கொண்ட சிக்கலே" என்று திட்டவட்டமாகக் கூறுகின்றார். ஆர்டிக் பகுதி, கடந்த முப்பது ஆண்டுகளில் நான்கு இலட்சம் சதுர மைல்கள் உருகியுள்ளது. இதற்குப் புவி வெப்பமாதலே காரணமாகும்.

நெறியாளர்: புவி வெப்பமயமாதலுக்கும் தட்ப வெப்பநிலை மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு யாது? 

கவின்மலர்:  கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், நீர்வாயு போன்றவற்றைத்தான் பசுமைக்குடில் வாயுக்கள் என்கிறார்கள். இதன் அளவு அதிகமாக அதிகமாகப் புவி வெப்பமடையத் தொடங்குகிறது. இதனால், காலநிலை மாறுதல்கள் ஏற்பட்டுப் புவியின் இயக்கம் குறைந்து வருகிறது. எனவே மாற்று ஆற்றல்களாக விளங்கக்கூடிய சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், ஹைட்ரஜன் ஆற்றல், தாவர ஆற்றல் போன்ற கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாட்டை நோக்கி உலக நாடுகள் சென்றால் மட்டுமே நிலைமையை ஓரளவேனும் கட்டுப்படுத்த முடியும். 

நெறியாளர்:  உலக நாடுகள் என்று கூறினீர்களே. உலக நாடுகள் ஒன்றிணைந்து புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த எத்தகைய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன? 

ஆயிசா:  ஐக்கிய நாடுகள் அவை 1992ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை (UNFCCC - United Nations Framework Convention on Climate Changes) உருவாக்கியது.


தெரியுமா?

புயலுக்குப் பெயர் 

சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்குக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. அதன்படி வங்கக்கடலிலும் அரபிக்கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்க இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் ஒவ்வொன்றும் எட்டுப் பெயர்களைப் பரிந்துரை செய்திருக்கின்றன. அந்தப் பட்டியலில் உள்ள 64 பெயர்களின் வரிசைப்படிதான் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கப்படுகிறது.

இந்த அமைப்பில் தொடக்கத்தில் 50 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. பின்னர் இந்த எண்ணிக்கை 193 நாடுகளாக உயர்ந்தது. ஒவ்வோர் ஆண்டும் பசுமைக்குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்த உரையாடல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள நாடுகளைக் கணக்கெடுத்தால் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. 

நெறியாளர்: புவி வெப்பமாதலால் ஏற்படும் கேடுகள் நம் எதிர்கால வாழ்வையும் வரும் தலை முறையையும் அச்சுறுத்துவதாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறதா? 

ஆயிசா: ஆம். இந்திய வானிலை ஆய்வுத்துறையினர் 2009 ஆம் ஆண்டைக் கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தனர். 2001ஆம் ஆண்டிற்குப் பிறகு புவியின் வெப்பம் ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது; இவ்வாறு உயர்ந்து கொண்டே போனால் அடுத்த 50 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் உயர்ந்து உலகத்தில் 200 கோடி மக்கள் வெள்ளத்தால் சூழப்படுவர் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக உலகின் இயற்கைச் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

முத்துக்குமரன்: உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டிருந்தாலும் நாற்பது விழுக்காடு மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பெருகிவரும் தேவைகளுக்காக இயற்கை வளங்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். அதனாலேயே இயற்கைச் சமநிலை குலைந்து பேரிடர் ஏற்படுகிறது. இவற்றைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு மனித சமூகத்திற்கு உண்டு. 

நெறியாளர்: சின்னச்சின்ன மழைத்துளிகள் மனித வாழ்வின் பேரின்பம்; அண்மைக்கால வெள்ளப்பெருக்குகள் அதைப் பெருந்துயராக மாற்றி அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இவை பருவ நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைத்தானே உணர்த்துகின்றன.

முத்துக்குமரன்: இயல்பாகவே பெருமழையைத் தாங்கக்கூடிய குளம், குட்டை, ஏரி, ஆறு, வடிகால் வாய்க்கால்கள், வெள்ளச் சமவெளிகள் போன்ற ஏற்பாடுகளை இயற்கை அமைத்திருக்கிறது. நாம் இந்த அமைப்பில் இடையீடு செய்து நீர்நிலைகளை அழித்துக் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கிக்கொள்கிறோம். நெகிழி மற்றும் திடக்கழிவுகளைக் கொட்டி நீர்வழிப்பாதைகளைக் குறுக்கி வெள்ளச் சமவெளிகளை இல்லாமல் செய்துவிடுகிறோம். இதன் விளைவாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிர், உடைமை இழப்புகள் ஏற்படுகின்றன. பெருமழைக் காலங்களில் நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

நெறியாளர்: வெள்ளச் சமவெளிகள் இன்றும் இருக்கின்றனவா? உபரிநீர்க் கால்வாய்களும் வெள்ளச் சமவெளிகளும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையனவா?

ஆல்வின்: தமிழ்நாட்டில் மழைக்காலங்களில் பெறும் நீரைச் சேமித்து வைக்கும் நீர் மேலாண்மை அமைப்புகள் இருந்தன. வெள்ளச் சமவெளி என்பது ஆற்றின் நீரோட்ட வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரண். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வரும் காலங்களில் அடித்து வரப்படும் பொருள்கள் ஆற்றின் ஓரங்களில் படிந்துவிடும். இது ஆற்றங்கரைப்படிவு எனப்படும். இதில் படிகின்ற பொருள்களால் ஆற்றுச் சமவெளியில் அடர்த்தியான மணலாலும் மற்றும் சேற்றினாலும் அடுக்குப் படிவம் உருவாகும். அப்படிவம் வெள்ளப் பெருக்குக் காலங்களில் நீரை உறிஞ்சுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறையும்; நீர் மாசடைவதைத் தடுக்கும்; மண் அரிப்பைத் தடுக்கும்; வறட்சிக் காலங்களில் நீர்மட்டம் குறைந்துவிடாமல் பாதுகாக்கும். உபரிநீர்க் கால்வாய்களும் வெள்ளக்காலங்களில் உதவியாக இருக்கும். 

நெறியாளர்: அப்படியானால் இன்று ஆற்றில் பாறைகள் தெரியும் அளவிற்கு மணல் அள்ளியதன் விளைவாகத்தான் வெள்ளச் சமவெளிகள் அழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறதா?

முத்துக்குமரன்: ஆம். கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் 85% வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டவையே. இதற்கு மணல் அள்ளுவதும் ஒரு காரணம். 

கவின்மலர்: தமிழக நிலப்பரப்பில், விடுதலைக்கு முன்பு, ஏறத்தாழ ஐம்பதாயிரம் நீர்நிலைகள் இருந்தன. இன்றைக்கு அவை, வெறும் இருபதாயிரமாகக் குறைந்துபோயிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சென்னை, மதுரை ஆகிய மாநகரங்களைச் சுற்றி மட்டுமே ஏறத்தாழ ஐந்நூறு ஏரிகள், குளங்கள் காணாமல் போய் விட்டன. இருக்கின்ற நீர்நிலைகளில் பெரும்பாலானவை தூர்ந்து கிடக்கின்றன. இதனால் இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் மட்டமும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் மணலின் பங்கு இன்றியமையாதது. இன்று குறிப்பிட்ட அளவையும் கடந்து மணலை எடுத்துப் பயன்படுத்தியதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து நீரோட்டத்தில் தடை ஏற்பட்டு ஏராளமான எதிர்மறைவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலை தொடர்ந்தால் வேளாண்மைத் தொழில் கற்பனை செய்ய முடியாத அளவு இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.

ஆல்வின்: வளர்ந்த நாடுகளில் திட்டமிடப்பட்ட கட்டமைப்புகள், வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ளும் விழிப்புணர்வுப் பரப்புரை, நீர்நிலைகளை முறையாகப் பராமரித்தல் ஆகிய செயல்பாடுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் பெரிய அளவிற்குப் பொருளிழப்பு ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படுவதில்லை. நம் நாட்டில் வெள்ளப்பெருக்குக் காலங்களில் மட்டும் மாற்று ஏற்பாடுகளைச் செய்கிறோம். நாம், வெள்ளம் வடிந்த பிறகு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவும் வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. இனி வரும் காலங்களில் இவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது மிகவும் இன்றியமையாதது. 

நெறியாளர்: பேரிடர்க் காலங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வழிகாட்டு நெறி முறைகள் ஏதும் உருவாக்கப்பட்டுள்ளனவா?

ஆயிசா: நடுவண் அரசு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, சுனாமி, நிலச்சரிவு, தீ விபத்து, சூறாவளி, பனிப்புயல், வேதி விபத்துகள் முதலான பேரிடர்கள் நிகழும்போது பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயலாற்ற இந்த ஆணையம் உதவுகிறது. இதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

நெறியாளர்: இக்குழுக்கள் அனைத்து நிலைகளிலும் அமைக்கப்பட்டுள்ளனவா?

ஆயிசா: மாநிலம், மாவட்டம், ஊராட்சி, சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் குழுக்கள் அமைத்துப் பேரிடர்க் காலங்களில் செயலாற்ற, பேரிடர் மேலாண்மை ஆணையம் வழிவகை செய்துள்ளது.

நெறியாளர்: பேரிடர்களிலிருந்து தற்காத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

முத்துக்குமரன்: பேரிடர்க் காலங்களில் தாங்கக்கூடியவையாகப் புதிய கட்டுமானங்களை அமைக்க வேண்டும். நீர்வழிப் பாதைகளுக்கான தெளிவான வரைபடம் உருவாக்கப்பட்டு அப்பாதைகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டங்களைச் சமூக இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும். கடற்கரை ஓரங்களில் சதுப்பு நிலக் காடுகளை வளர்த்தல் வேண்டும்.

கவின்மலர்: பேரிடர் வந்து விட்டால் மேற்கொள்ள வேண்டியவை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். பதற்றமடைதலைத் தவிர்த்து, வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிடும் புயல், மழை தொடர்பான தகவல்களின் அடிப்படையில் மக்கள் செயல்பட வேண்டும்; வதந்திகளை நம்பவோ, பரப்பவோ கூடாது; அரசு, தீயணைப்புத்துறை, காவல்துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் மீட்பு , பாதுகாப்பு முதலான பணிகளில் ஈடுபடுவதுடன் பாதுகாப்பு மையங்களையும் மருத்துவக் குழுக்களையும் அணியமாக வைத்திருக்க வேண்டும்.

ஆயிசா: அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது அரசு, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வக்குழுக்கள், தனிமனிதர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட்டனர். வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டெடுத்தல், முகாம்கள் அமைத்தல், அடிப்படை வசதிகளை உண்டாக்குதல், உணவு வழங்குதல், மருத்துவ உதவிகளைச் செய்தல் ஆகியவற்றில் மனிதம் உச்சமடைந்ததைக் கவனிக்க முடிந்தது. இக்கூட்டுமுயற்சி, இயற்கைச் சமநிலையைப் பாதுகாப்பதிலும் தொடர்ந்தால் பேரிடர் நிகழ்வுகளைத் தவிர்க்க முடியும்.

நெறியாளர்: புயல், மழை, பெருவெள்ளம், இயற்கைச் சமநிலை, புவி வெப்பமயமாதல், இயற்கை வளங்களைக் காத்தல், நீர்நிலைகளைப் பெருகச் செய்தல், பேரிடர்க் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியன குறித்துத் தொடர்ந்து உரையாட வேண்டிய இன்றியமையாமையும் தேவையும் நமக்கு இருக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உளமார்ந்த நன்றி.

தெரியுமா?

மழையைக் கணிக்கும் அறிகுறிகள்:

குஜராத்தில் உள்ள ஆனந்த் வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்  குறிப்பிடும், மழையைக் கணிக்கும் அறிகுறிகள்.

கார் மேகங்கள், சூரிய உதயத்திற்கு 15, 20 நிமிடங்களுக்கு முன்னதாகக் கிழக்கு வானத்தில் தோன்றுதல், செம்மை நிற மேகங்கள், திடீர்ப் புயல், காற்றின் திசை, இடி, மின்னல், பலமான காற்று, வானவில், முட்டைகளைச் சுமந்திருக்கும் எறும்புகள், பறக்கும் பருந்து, சூரியனைச் சுற்றி ஒளிவட்டம், வெப்பமும் ஈரப்பதமுமான வானிலை, தூசுப் பனிமூட்டம்.


Tags : Chapter 2 | 12th Tamil இயல் 2 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 2 : Poiyana paiyum malai : Prose: Peru malaikalam Chapter 2 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை : உரைநடை: பெருமழைக்காலம் - இயல் 2 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை