Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | உரைநடை : தமிழர்களின் வீரக்கலைகள்

பருவம் 2 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை : தமிழர்களின் வீரக்கலைகள் | 5th Tamil : Term 2 Chapter 2 : Nagarigam panbadu

   Posted On :  22.07.2023 12:47 am

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு

உரைநடை : தமிழர்களின் வீரக்கலைகள்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு : உரைநடை : தமிழர்களின் வீரக்கலைகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

உரைநடை

தமிழர்களின் வீரக்கலைகள்


தனக்கென்று தனித்த நாகரிகமும் பண்பாடும் உடையது தமிழ் மரபு. தமிழரின் பண்பாட்டுக் கூறுகளும் கூறுகளும் கலைகளும் இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பண்டைத்தமிழன், வாளாண்மையால் பகைவரை வென்றான். தாளாண்மையால் நன்னிலம் ஆக்கினான். வேளாண்மையால் வளம் பெருக்கினான். வீரமும் தீரமும் நிறைந்த விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினான். தமிழர்க்கென்றே இருக்கும் வீரம் செறிந்த கலைகளை அறியுந்தோறும் வியப்பு மேலிடும்; மனம் மகிழ்ச்சியில் நிறைந்திடும்.

ஏறுதழுவுதல், சிலம்பாட்டம், இளவட்டக்கல் தூக்குதல், மற்போர் முதலான கலைகள் தமிழர்களின் வீரக்கலைகளாக விளங்குகின்றன. இக்கலைகளுள் இன்றளவும் நடைமுறையில் உள்ள சில விளையாட்டுகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.

 

ஏறுதழுவுதல்


தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் விளையாட்டுகளுள் ஒன்று, ஏறுதழுவுதல் ஏறு என்பது, காளை மாட்டைக் குறிக்கும். ஏறு தழுவுதல் என்பது, காளையைத் தழுவி, அதன் வீரத்தை அடக்குவதாகும். இவ்விளையாட்டு, பழங்காலந்தொட்டு இன்றுவரை விளையாடப்பட்டு வருகிறது. வளமான புல்வளம் கொண்ட முல்லைநிலமே ஏறு தழுவுதலுக்கு உகந்த நிலமாக விளங்கியது. இன்று பல மாவட்டங்களில் இவ்வீர விளையாட்டு நடைபெறுகிறது. பொங்கல் திருவிழா கொண்டாடப்படும் நாள்களில் ஏறுதழுவதல் என்னும் இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு எனப் பல பெயர்களிலும் அது அழைக்கப்படுகிறது. ஊரிலுள்ள இளைஞர்கள், காளைகளை அடக்கித் தங்கள் வீரத்தை வெளிப்படுத்துகின்றனர்.

காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை; வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது, தமிழர் கொள்கை. கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்பதைத்தமிழர்கள் திடமாக நம்பினர். காளையின் வாலைப் பிடித்தவன், அதன் காலால் உதைபட்டு, மண்ணிடை வீழ்வான். ஆதலால், கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் கோழையின் செயல் வசமாகப் பிடி கிடைத்தால், காளையின் விசை அடங்கும்; வீரம் அடங்கும்; திடமின்றி மண்ணில் சோர்ந்து விழும். இத்தகைய வீர விளையாட்டை விளையாடுவதற்குச் சில விதிமுறைகள் இன்று பின்பற்றப்படுகின்றன.

இவ்விளையாட்டில் பங்குபெறும் காளைக்குக் கன்று பருவத்திலிருந்தே பாய்ச்சலுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. காளையின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் ஜல்லிக்கட்டுத் துணியை எடுப்பவரே வெற்றிபெற்றவர் ஆவர். தற்காலத்தில் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் காளைகளுக்கு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. போட்டி நடைபெறும்போது வாடிவாசலை மறித்துக்கொண்டு போட்டியாளர்கள் நிற்கக்கூடாது. காளையின் திமில் பகுதியைப் பிடித்தபடி 15 மீட்டர் தூரம் அல்லது 30 வினாடிகள் அல்லது மூன்று துள்ளல்கள்வரை ஓடும் போட்டியாளர் வெற்றி பெற்றவர் ஆவார். இவ்விளையாட்டில் ஈடுபடுவதற்கு நல்ல உடல் திறனும், அஞ்சா நெஞ்சமும் தேவை.

 

சிலம்பாட்டம்


தமிழர்களின் மற்றொரு வீர விளையாட்டு, சிலம்பம். சிலம்பு என்றால் ஒலித்தல் என்பது பொருள். கம்பு சுழலும்போது ஏற்படும் ஓசையை அடிப்படையாகக் கொண்டே சிலம்பம் எனப் பெயரிட்டனர். கம்பு சுழற்றுதல் என்னும் பெயரும் இதற்கு உண்டு. தற்காப்புக்காகத் தோன்றிய இக்கலை, இன்று வீர விளையாட்டாக அறியப்படுகிறது.

சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல் எதிராளியின் உடலில் சிலம்புக் கம்பினால் தொடுதல் போன்றவை அடிப்படையாகும். இதற்கான கம்பு நன்கு வளைந்து கொடுக்கக்கூடிய 'சிறுவாரைக்கம்பு' என்னும் மூங்கில் இனத்திலிருந்து செய்யப்படுகிறது.

சிலம்பக் கலையில் மான்கொம்பு, பிச்சுவா கத்தி, சுருள்பட்டா, வளரி போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்துவர். நாடிநரம்புகளையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும் இவ்விளையாட்டு, தமிழரின் வீரத்திற்கும் நுட்பமான செயல்திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

 

வில்வித்தை


வித்தை என்பது, வியப்படையச் செய்யும் வகையில் நிகழ்த்தப்படும் ஒரு செயல். அவற்றுள் வில் வித்தையும் ஒன்று. பண்டைத் தமிழர் விரும்பிக் கற்றுக்கொண்ட விளையாட்டாக வில்வித்தை விளங்கியது. தொடக்கத்தில் அம்பெய்தி விலங்குகளை வேட்டையாடவும், போர்முனைகளில் எதிரிகளை வெல்லவும் இவ்வில்லாற்றல் பயன்பட்டது.

கடையெழு வள்ளல்களுள் ஒருவரான 'வல்வில் ஓரி' 'வல்வில் ஓரி' வில்லாற்றலில் சிறந்து விளங்கியவர் என்பதைத் தமிழ் இலக்கியங்களில் காணலாம். அவர், வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது, பெரிய யானையொன்று எதிர்ப்பட, அதன்மீது அம்பெய்தினார். அந்த அம்பானது, அப்பெரிய யானையின் தலையில் பாய்ந்தும், அங்குக் குறுக்கிட்ட பெரும்புலியைக் கொன்றும், அதனைக் கடந்து சென்ற கலைமானைச் சாய்த்தும், மேலும் விசை குறையாமல் சென்று, ஒரு பன்றியின் மேல் பாய்ந்ததோடு அல்லாமல், புற்றிலே இருந்த ஓர் உடும்பின் மீதும் பாய்ந்து தன் சினம் தீர்த்தது என்று புறநானூற்றுப் பாடல்வழி அறிகிறோம். படைத்திறமும் கொடைத்திறமும் கொண்டு விளங்கிய வல்வில் ஓரியை வன்பரணர் பாடி மகிழ்ந்தார்.

இன்று வில்வித்தை, ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளமை தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

 

மற்போர்


படைக்கலன்கள் ஏதுமின்றி இருவர் போரிடும் விளையாட்டே மற்போர். மல் என்பது, வலிமையைக் குறிக்கும். ஒருவன் தன் உடல் வலிமையால் செய்யும் போரே, மற்போர்'. மற்போரில் வெற்றி பெற்றவர்களை மல்லன்' என்னும் சொல்லால் குறிக்கும் வழக்கம் இருந்தது. மற்போரில் சிறந்து விளங்கியமையாலேயே மாமல்லன் என்று அக்கால அரசர்கள் போற்றப்பெற்றனர்.

மல்யுத்தம் என உலகம் முழுதும் போற்றப்படும் இவ் வீரக்கலை, பண்டைத்தமிழரின் போர்முறைகளுள் ஒன்றாக இருந்தது. புறநானூற்றுப் பாடலொன்றில் மற்போர் பற்றிய நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

இருவர் கைகோத்துக் கால்களாலும் தலையாலும் இடித்தும் உதைத்தும் ஒருவருடன் ஒருவர் போர் செய்வதே மற்போர். பகைவரை எதிர்கொள்ளும் வகையில் விளங்கிய இம்மற்போர், பின்னர் வீரவிளையாட்டாக மாறியது. நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் மற்போர் கழகங்கள் உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளில் மற்போரிடுவதும் ஒன்றாக இருந்து வருகின்றது.

மேலும் பல விளையாட்டுகள், பண்டைக் காலம்முதல் இன்றுவரை வழக்கில் இருந்து வருகின்றன. வழுக்குமரம், நீர் விளையாட்டு, கபடி என்கின்ற சடுகுடு போன்றபலவிளையாட்டுகளை நாம் இப்போதும் விளையாடிமகிழ்கிறோம். உடலில் வலிமையும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் விளையாட்டால் ஏற்படுகின்றது. உடலில் உறுதி உடையவரே, உலகை ஆளும் உள்ள உறுதியும் உடையவர் ஆவர். ஆகையால், குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்குப் பிடித்த வீரவிளையாட்டுகளை விளையாடி மகிழ்வோம், அதுமட்டுமின்றி, உலக விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியை நாட்டிற்கு அளிப்போம்.

Tags : Term 2 Chapter 2 | 5th Tamil பருவம் 2 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 2 Chapter 2 : Nagarigam panbadu : Prose: Tamilargalin Veerakalaigal Term 2 Chapter 2 | 5th Tamil in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு : உரைநடை : தமிழர்களின் வீரக்கலைகள் - பருவம் 2 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு