Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | உரைநடை : கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

பருவம் 1 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை : கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் | 5th Tamil : Term 1 Chapter 2 : Kalvi

   Posted On :  20.07.2023 12:19 am

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : கல்வி

உரைநடை : கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : கல்வி : உரைநடை : கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

உரைநடை

கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

மலர்விழியும் தமிழரசியும் தோழிகள். இருவரும் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் வந்ததும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிப் பேசிக் கொண்டு வருகிறார்கள். அப்போது மலர்விழி தன் தோழியிடம் தொலைக்காட்சியில் நேற்று கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மின்சாரம் போய்விட்டது அதனால், நடுவரின் தீர்ப்பை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை எனக்கு வருத்தமாக இருந்தது என்று கூறினாள்.

தமிழரசி: வருத்தப்படாதே மலர்விழி, இந்தப் பட்டிமன்றம் பார்த்தவர்களிடம் முடிவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

மலர்விழி: சரி தமிழரசி. வா, போய்க் கொண்டே பேசலாம்.

தமிழரசி: கல்விச் செல்வமா? பொருட் செல்வமா? எது சிறந்தது என நீ நினைக்கிறாய்?

மலர்விழி: நான் கல்விச் செல்வம்தான் சிறந்தது என்று கூறுவேன்.

தமிழரசி: அதெப்படி? அவ்வளவு திட்டவட்டமாகக் கூறுகிறாய்?

மலர்விழி: கல்வி கற்காதவன் "களர்நிலத்திற்கு ஒப்பாவான் " என்று பாரதிதாசனாரும் "கேடில் விழுச் செல்வம் கல்வி" என்று திருவள்ளுவரும் கூறியிருக்கிறார்கள்.

தமிழரசி: கல்வியின் சிறப்பைக் கூறிய திருவள்ளுவர்கூடப் "பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்றே கூறியிருக்கிறார். பொருட்செல்வம் இல்லை என்றால் நமது தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாது. கல்வி கற்பதற்குக்கூட பணம் வேண்டும் அல்லவா!

மலர்விழி: "பணம் பத்தும் செய்யும்" என்பது எனக்குத் தெரியும். வாழ்க்கையை நடத்துவதற்குப் பணம் தேவைதான். பணம் படைத்தவருக்குச் சொந்த ஊரில் தான் மதிப்பு. "கல்வி கற்றவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு" பெறுவர்.

தமிழரசி: கல்வி கற்றவர், செல்வம் படைத்தவர்களின் தயவில்தாம் வாழ வேண்டியுள்ளது.

மலர்விழி: பொருட் செல்வம் நிலையில்லாதது, கல்விச் செல்வமே 'இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது' என்றும் அழியாதது. பொருட்செல்வம் கொடுக்கக் கொடுக்கக் குறையக் கூடியது. கள்வர்களால் கவர்ந்து செல்லக் கூடியது.

தமிழரசி: 'பணமில்லாதவன் பிணம்', பணமென்றால் பிணம்கூட வாயைத்திறக்கும்' என்ற பழமொழிகளை எல்லாம் நாம் அறிந்ததுதானே! கற்றவரால் என்ன செய்ய முடியும்?

மலர்விழி: இன்றைய கல்வி வளர்ச்சிதான் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். அதனால்தான் இன்று நாம் எல்லாரும் வசதியாக வாழ முடிகின்றது.


தமிழரசி: புதுமைகளைக் கண்டறிய கற்றவர்களுக்குப் பணமும் தேவைப்படும் அல்லவா?

மலர்விழி: ஆம், அதற்காகப் பணம்தான் உயிர்நாடி என்று கூறுவது தவறு. கல்விதான் அறிவை வளர்க்கிறது. நன்மை,தீமைகளைப் பகுத்தறிந்து நல்வழியில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வழி செய்கிறது.

தமிழரசி: 'பசி வந்திடப் பத்தும் போகும்' வறுமைதான் சமூகத் தீமைகளுக்கும் காரணமாகின்றது.

மலர்விழி: வறுமையிலும் செம்மையாக வாழ்பவன் கற்றறிந்தவன்; கல்லாதவன் அறியாமையால் தவறு செய்கிறான்.

தமிழரசி: அறியாமை உள்ளவன் பணக்காரனாகவே இருந்தாலும் அமைதியான வாழ்வுக்குக் கல்வி அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். வசதியான வாழ்விற்குப் பொருட்செல்வம் அவசியம் என்பதை நீ ஒப்புக்கொள்கிறாயா?

(விவாதம் நீண்டு கொண்டிருக்கிறது.)

மறுநாள் இருவரும் தமிழாசிரியரைச் சந்தித்து விவாதத்தைக் கூறுகிறார்கள்

தமிழாசிரியர்: மக்களிடம் அறியாமை இருளை நீக்கி, அறிவு (கல்வி) \கல்வியாலை நாம் நீக்கி, அறிவு ஒளிபெறச் செய்வது இளமையிலேயே பெறுவதுதான் சிறந்த வழி. 'இளமையில் கல்வி, சிலையில் எழுத்து' என்னும் முதுமொழியை நாம் மறந்துவிடக்கூடாது.

மலர்விழி: ஐயா, கல்வியின் சிறப்பைப் புரிந்துகொண்டோம். ஆயினும், கல்வியோடு பொருளும் இருக்கவேண்டுமா?

தமிழாசிரியர்: ஆம். கல்வியும் பொருளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் எனலாம். பொருளுடையவரால் ஆகாதது ஒன்றுமில்லை. பொருளுடைமை, வெற்றி தரும்; பெருமை தரும்; அழகு தரும். அவை மட்டுமா? உயர்கல்வி பெறும் வாய்ப்பையும் தரும். இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' என்று வள்ளுவர் கூறியதையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே, அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்குப் பொருள் கட்டாயம் தேவை. ஆனால், நம்மை மேன்மைப்படுத்துவது கல்விதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை

தமிழரசியும் மலர்விழியும்: உண்மைதான் ஐயா, கல்வியால் அறிவுத்தெளிவு உண்டாகும். பொருளால் நம் வாழ்வு வளம் பெறும் என்பதைப் புரிந்து கொண்டோம்.

Tags : Term 1 Chapter 2 | 5th Tamil பருவம் 1 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 1 Chapter 2 : Kalvi : Prose: kalvi selvamum porut selvamum Term 1 Chapter 2 | 5th Tamil in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : கல்வி : உரைநடை : கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் - பருவம் 1 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : கல்வி