விலங்குகள் | பருவம் 3 அலகு 1 | 5 ஆம் வகுப்பு அறிவியல் - கேள்வி பதில் | 5th Science : Term 3 Unit 2 : Animals
மதிப்பீடு
I.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. பிளவடைதல் என்பது ----------- இனப்பெருக்கம்.
அ. பாலிலா
ஆ. பால்
இ. குஞ்சு பொரித்தல்
ஈ. குட்டி ஈனுதல்
[விடை : அ. பாலிலா]
2. --------------- ஒரு முட்டையிடும் விலங்கு,
அ. பசுமாடு
ஆ. மான்
இ. வெள்ளாடு
ஈ. வாத்து
[விடை : ஈ. வாத்து]
3. அழியும் நிலையிலுள்ள விலங்குகள் ------------- இல் பாதுகாக்கப்படுகின்றன.
அ. அருங்காட்சியகம்
ஆ. சர்க்கஸ்
இ. பண்ணை
ஈ. சரணாலயம்
[விடை : ஈ. சரணாலயம்]
4. முண்டந்துறை சரணாலயம் ----------- மாவட்டத்தில் உள்ளது.
அ. திருப்பூர்
ஆ திருவாரூர்
இ. திருநெல்வேலி
ஈ. திருவள்ளூர்
[விடை : இ. திருநெல்வேலி]
5. நீலச் சிலுவை அமைப்பின் முக்கிய நோக்கம் விலங்குகளை
-----
அ. துன்புறுத்தல்
ஆ. சிறைபிடித்தல்
இ. காப்பாற்றுதல்
ஈ. புறக்கணித்தல்
[விடை : இ. காப்பாற்றுதல்]
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. நேரடியாக குட்டிகளை ஈனும் விலங்குகள் ---------- என்று அழைக்கப்படுகின்றன.
விடை : குட்டி ஈனும் விலங்குகள்
2. விலங்குகளை ---------- அவற்றை அழியும் நிலைக்குக் கொண்டு
செல்லும்.
விடை : வேட்டையாடுதல்
3. கிர் தேசியப் பூங்கா --------- க்கு பெயர் பெற்றது.
விடை : ஆசிய சிங்கத்துக்கு
4. நீலச் சிலுவை அமைப்பு என்பது ஒரு --------- நல அமைப்பாகும்.
விடை : விலங்குகளின்
5. நீலகிரி வரையாடு ஒரு --------- இனமாகும்.
விடை : அழியும் நிலையில் உள்ள
III. பொருத்துக.
1. கரு - பாலிலா இனப்பெருக்கம்
2. குட்டியினும் விலங்கு - யானை
3. அழியும் நிலையிலுள்ள விலங்கு - பூனை
4. முதுமலை - கருமுட்டை
5. துண்டாதல் – காண்டாமிருகம்
விடை :
1. கரு - கருமுட்டை
2. குட்டியினும் விலங்கு - பூனை
3. அழியும் நிலையிலுள்ள விலங்கு -
காண்டாமிருகம்
4. முதுமலை - யானை
5. துண்டாதல் – பாலிலா இனப்பெருக்கம்
IV.
சுருக்கமாக விடையளி.
1. கருவுறுதல் என்றால் என்ன?
விடை :
ஆண் உயிரணுக்கள் பெண் உயிரணுக்களைச் சென்றடையும்
போது அவை ஒன்றோடொன்று இணைகின்றன. இந்த உயிரணுக்களின் இணைவு கருவுறுதல் எனப்படும்.
2. பாலினப் பெருக்கத்தின் நிலைகள் யாவை?
விடை :
பால் இனப்பெருக்கம் கீழ்க்காணும் நிலைகளைக் கொண்டது.
அ. கருவுறுதலுக்கு முன் ஆ. கருவுறுதல் இ. கருவுற்றபின்
3. பாலிலா இனப்பெருக்கத்தின் பல்வேறு வகைகளைக் கூறுக.
விடை :
பிளவிப் பெருக்கம், மொட்டு விடுதல், துண்டாதல், சிதறல்கள்
(ஸ்போர்கள்) ஆகியவை பாலிலா இனப்பெருக்கத்தின் பல்வேறு வகைகள் ஆகும்.
4. குட்டியினும் விலங்குகளுக்கும், முட்டையிடும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக்
கூறுக.
விடை :
முட்டையிடும் விலங்குகள்
● கருவின் வளர்ச்சி விலங்கின் உடலுக்கு வெளியே நடைவறுகிறது
● இவை தங்கள் இளம் உயிரிகளை முட்டையிட்டு உருவாக்குகின்றன.
● கருவானது முட்டையின் மஞ்சள் கருவிலிருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்கிறது.
● எடுத்துக்காட்டு; பூச்சிகள், மீன், ஊர்வன, பறவைகள்
குட்டி ஈனும் விலங்குகள்
● கருவின் வளர்ச்சி விலங்கின் உடலுக்கு உள்ளே நடைபெறுகிறது.
● இவை நேரடியாக இளம் உயிரிகளை ஈணுகின்றன.
● கருவானது தனது வளர்ச்சிக்கான ஊட்டச்சத்தை தனது தாயிடமிருந்து பெற்றுக்கொள்கிறது.
● எடுத்துக்காட்டு: பூனை, நாம், சிங்கம், மனிதன்.
5. நீலச் சிலுவை அமைப்பு குறித்து சிறு குறிப்பு எழுதுக.
விடை:
நீலச் சிலுவை சங்கம் என்பது இங்கிலாந்து நாட்டில்
அமைந்துள்ள விலங்குகளின் நலனிற்காக பதிவு – செய்யப்பட்ட
அமைப்பு ஆகும். ஒவ்வொரு செல்லப் பிராணியும் ஆரோக்கிய வாழ்வை, மகிழ்ச்சியான இல்லத்தில் ) அனுபவிக்கவேண்டும்
என்ற நோக்கத்துடன் 1897ஆம் ஆண்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
தங்களின் செல்லப் பிராணிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில்
சிகிச்சையளிக்க முடியாத நபர்களுக்கு இது உதவுவது, புறக்கணிக்கப்பட்ட விலங்குகளுக்கு ஒரு இல்லம்
கண்டுபிடித்துக் கொடுப்பது மற்றும் விலங்குகளை வைத்திருப்போருக்கு பொறுப்புணர்வைக்
கற்றுக் கொடுப்பது ஆகிய பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
V.
விரிவாக விடையளி.
1. பாலிலா இனப்பெருக்க முறைகளை விளக்குக.
விடை:
பிளவிப் பெருக்கம் : பிளவிப் பெருக்கம் முதுகெலும்பற்ற பல செல்களுடைய
உயிரிகளில் நடைபெறுகிறது. இம்முறையில் ஒரு உயிரினம் தானாகவே இரண்டு உயிரினங்களாகப்
பிரிவடைகிறது. எடுத்துக்காட்டாக,
தட்டைப்புழு, கடற்பஞ்சு, கடல் வெள்ளரி போன்ற உயிரினங்கள் இரண்டு பகுதிகளாகப்
பிரிவடைந்து ஒவ்வொன்றும் இரு புது உயிரிகளாக வளர்ச்சியுறுகின்றன.
மொட்டு விடுதல் : மொட்டு விடுதல் என்பது ஒரு வகை பாலிலா இனப் பெருக்கமாகும்.
உடல் உறுப்புகள் புறவளர்ச்சி பெறுவதன் மூலம் இவ்வகை இனப்பெருக்கம் நடை பெறுகிறது. இம்மொட்டுக்கள்
பின்னர் தாய் உடலிலிருந்து பிரிந்து புதிய உயிரினம் உருவாகின்றது. மொட்டு விடுதல் பொதுவாக
முதுகெலும்பற்ற விலங்குகளாகிய ஹைட்ரா மற்றும் பவளப் பாறைகளில் நடைபெறுகிறது.
துண்டாதல் : உயிரிகளின் உடல் சிறு சிறு துண்டுகளாகப் பிளவு
பட்டு பின்னர் அவை புதிய உயிரியாக வளர்ச்சியடைவது துண்டாதல் எனப்படும். இவ்வகையான இனப்பெருக்கம்
கடற்பஞ்சு மற்றும் நட்சத்திர மீன்களில் – காணப்படுகிறது.
இது விபத்தின் மூலமோ அல்லது எதிரிகளின் தாக்குதல் மூலமோ அல்லது இயற்கையாகவோ நடைபெறலாம்.
சிதறல்கள் : ஒரு சில புரோட்டாசோவாக்கள், பாக்டீரியாக்கள், தாவரங்கள் மற்றும் பூஞ்சைகள் ஸ்போர்கள் மூலம்
இனப்பெருக்கம் செய்கின்றன. ஸ்போர்கள் என்பவை ஒரு உயிரினத்தின் வாழ்க்கைச் சுழற்சியின்
ஒரு பகுதியாக ) இயற்கையாக வளரக்கூடியவை. இவை உடலத்திலிருந்து பிரிந்து, சிதறலடைந்து காற்று அல்லது நீர் மூலமாகப் பரவுகின்றன. பின்னர் ஏற்ற சூழலில் முழுமையான உயிரினமாக
வளர்ச்சியடைகின்றன.
2. விலங்குகள் அழிந்து போவதற்கான காரணங்கள் யாவை?
விடை:
ஒரு தாவரம் அல்லது விலங்கு அழியும் நிலையில் இருப்பதற்கான
காரணங்கள் பின்வருமாறு.
● அநேக விலங்குகளுக்கு
உணவு மற்றும் தங்குமிடத்தை வழங்கக்கூடிய காடுகள் மனிதத் தேவைகளுக்காக அழிக்கப்படுகின்றன.
● அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் அவற்றின் கொம்பு, தோல், பல் மற்றும்
பிற விலைமதிப்பற்ற பொருள்களுக்காக வேட்டையாடப்படுகின்றன.
● நீர் மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை
விலங்குகளைப் பாதிக்கின்றன.
● சில நேரங்களில் சில விலங்குகள் மனிதர்களால் அவற்றின்
இயற்கை வாழிடத்தை விட்டு வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அவை அங்கு வாழமுடியாமல்
அழிந்துவிடுகின்றன.
● பூச்சிகள், புழுக்கள்
மற்றும் களைச் செடிகளை அழிப்பதற்காக உபயோகிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் பாதிக்கின்றன.
● இயற்கைப் பேரழிவுகளான வெள்ளம், புயல், மற்றும் தீ
விபத்துகளாலும் இவை அழிகின்றன.
3. தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் குறித்து
எழுதுக.
விடை:
தேசியப் பூங்கா என்பது வன உயிரிகளின் நலனைப் பேணுவதற்கான
பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பு ஆகும்.
இப்பகுதிகளில் பல்வேறு தேவைகளுக்காக காடுகளைப்
பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பு மற்றும் பயிரிடுதல் போன்ற செயல்பாடுகளுக்கு
அனுமதி இல்லை. மேலும் இந்த நிலப்பகுதிகளை தனிநபர் எவரும் தனது உடைமையாக்கிக் கொள்ளமுடியாது.
இந்த தேசியப் பூங்காக்களின் பரப்பளவு 100 முதல் 500 சதுர கிலோமீட்டர் வரை இருக்கும்.
ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா : ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவானது உத்தரகாண்ட்
மாநிலத்திலுள்ள நைனிடால் என்னும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. புலிகளே இங்கு அதிகமாகக்
காணப்படுகின்றன.
காஸிராங்கா தேசியப்பூங்கா: வன விலங்குகளான காண்டாமிருகம், புலி, யானை, காட்டெருமை மற்றும் கடமான் ஆகியவை இங்கு காணப்படுகின்றன.
கிர் வன தேசியப் பூங்கா : இது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு
ஆசிய சிங்கங்களை அவற்றின் இயற்கை வாழிடத்திலேயே காணலாம்.
சுந்தர்பான் தேசியப் பூங்கா : மேற்கு வங்கத்திலுள்ள சுந்தர்பான் தேசியப் பூங்காவானது
புலிகளின் காப்பகமாகவும், கங்கை நதியின் டெல்டா பகுதியில் அமைந்துள்ள உயிர்கோளக்
காப்பமாகவும் உள்ளது.
கன்ஹா தேசியப் பூங்கா : மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கன்ஹா
தேசியப் பூங்காவானது புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.
பெரியார் தேசியப் பூங்கா : பெரியார் தேசியப் பூங்கா கேரளாவில் உள்ள தேக்கடியில்
அமைந்துள்ளது. பல்வேறு வகையான உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன. அவற்றுள் கம்பீரமான
யானைகள், ராஜரீகமான புலிகள் மற்றும் மீன்கள், ஊர்வன மற்றும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன.
கிண்டி தேசியப் பூங்கா : இந்தப் பூங்காவானது சென்னையின் மையப் பகுதியில்
அமைந்துள்ளது. புள்ளிமான், புல்வாய் மான், நதிநீர்
நாய், கழுதைப்புலி, குல்லாய்
குரங்கு, புனுகுப்பூனை, குள்ளநரி, எறும்பு உண்ணி , முள்ளெலி மற்றும் சாதாரண கீரிப்பிள்ளை போன்ற விலங்குகளின்
வசிப்பிடமாக இந்தப் பூங்கா உள்ளது.
சரணாலயம் என்பது விலங்குகளின் பாதுகாப்புக்காகவே
ஒதுக்கப்பட்ட பகுதி ஆகும். மரம் வெட்டுதல், காடு சார்ந்த
பொருள்களைச் சேகரித்தல் மற்றும் தனிநபர் உரிமை கோருதல் போன்றவற்றிற்கு இங்கு அனுமதி
உண்டு. சுற்றுலாப் பயணிகளுக்கு இங்கு அனுமதி உண்டு.
களக்காடு வனவிலங்குகள் சரணாலயம் : இந்த சரணாலயம் புலிகளுக்குப் பெயர் பெற்றது.
முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் : இந்த சரணாலயம் ஊட்டியில் அமைந்துள்ளது. வங்கப்புலி, யானை மற்றும் சிறுத்தைப் புலி போன்றவை இங்கு காணப்படுகின்றன.
முண்டந்துறை வனவிலங்குகள் சரணாலயம் : இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இங்கு
காணப்படும் முக்கிய விலங்கு புலி ஆகும்.
ஆனைமலை வனவிலங்குகள் சரணாலயம் : இது இந்திராகாந்தி வன விலங்கு சரணாலயம் என்றும்
வழங்கப்படுகிறது. இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது. செந்நாய், காட்டு நாய் மற்றும் இராட்சச அணில் ஆகியவை இங்கு
உள்ளன.
வேடந்தாங்கல் வனவிலங்குகள் சரணாலயம் : இது தமிழ்நாட்டின் மிகப் பழமையான சரணாலயம் ஆகும்.
இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கரண்டிவாயன், நத்தைக் கொத்தி நாரை மற்றும் பெலிகான் போன்ற அநேக
வலசை போகும் பறவைகள் காணப்படுகின்றன.
சரணாலயங்களின் பயன்கள் :
விலங்கினங்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல்
தங்களை தகவமைத்துக் கொள்ள இயலும்.
வேறுபட்ட இனங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளமுடியும்.
விலங்குகளின் இயற்கை வாழிடம் பாதுகாக்கப்படுகிறது.
இவற்றைப் பராமரிக்கும் செலவு குறைவு. மேலும் இவற்றை எளிதில் கையாளவும் முடியும்.
செயல்பாடு 1
ஏதேனும் மூன்று முட்டையிடும் விலங்குகள் மற்றும் குட்டி ஈனும் விலங்குகளின் பெயர்களை எழுதுக.
செயல்பாடு 2
உனது பகுதியிலுள்ள அருங்காட்சியகம் அல்லது மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் நட்சத்திர மீன், கடல் வெள்ளரி மற்றும் ஹைட்ரா போன்வற்றின் பதக்கூறுகளைக் (ஸ்பெஸிமன்) கண்டறிக.. அவற்றின் படங்களைச் சேகரித்து, படத்தொகுப்பு ஒன்றைத் தயாரிக்கவும்.
செயல்பாடு 3
வெவ்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் படங்களைச் சேகரிக்கவும். இந்தியாவில் அழியும் நிலையிலுள்ள தாவர மற்றும் விலங்கினங்களைப் பற்றிய ஒரு படத்தொகுப்பைத் தயாரிக்கவும். மேலும், அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறியவும்.
செயல்பாடு 4
காடுகளையும் விலங்குகளையும் பாதுகாக்க வலியுறுத்தும் சில வாக்கியங்களை எழுதவும். இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான சில நாட்களை அனுசரிக்கும் விதமாக ஊர்வலம் சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.
செயல்பாடு 5
உங்கள் பள்ளி வளாகத்தில் ஆலமரம், வேப்பமரம், குடைமரம் மற்றும் நாவல் மரம் போன்ற நாட்டு மரங்களை அதிக அளவில் வளர்க்கவும். அவை அநேக பறவைகளுக்கு உதவியாக இருக்கும்.
செயல்பாடு 6
தமிழ்நாட்டிலுள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களைப் பட்டியலிடுக. உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்குச் சென்று அங்கு காணப்படும் விலங்குகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும்.
செயல்பாடு 7
உன் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள விலங்குகள் எவ்வாறு மனிதர்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்று கண்டறியவும். மேலும், மனிதர்கள் விலங்குகளை வதை செய்வதை எவ்வாறு தடுக்கலாம் என்பதையும் குழுவாக ஆலோசிக்கவும்.