புவியியல் - புவியியல் தரவுகளைக் காட்டும் முறைகள் | 12th Geography : Chapter 12 : Representation of Geographical Data
அலகு 12
புவியியல் தரவுகளைக் காட்டும் முறைகள்
அலகு கண்ணோட்டம்
1. அறிமுகம்
2. புள்ளியியல் வரைபடங்களின் வகைகள்
1. கோட்டு வரைபடம்
2. பட்டை விளக்கப்படம்
3. வட்ட விளக்கப்படம்
• பல்வேறு வகையான புவியியல் தரவுகளைக் கண்டறிதல்
• புவியியல் தரவுகளைக் காட்டும் முறைகளை புரிந்து கொள்ளுதல் •குறிப்பிட்ட தரவுக்குப் பொருத்தமான விளக்கப்படத்தைத் தயாரிப்பதற்கான பல்வேறு முறைகளைப் பகுப்பாய்வு செய்தல்
பொருளாதார வல்லுநர்கள், புள்ளியியலாளர்கள், புவியியலாளர்கள் போன்றோர் புள்ளியியல் விவரங்களையும் தரவுகளையும் அவர்கள் சார்ந்த துறைகளில் பயன்படுத்துகிறார்கள். வெப்ப நிலை, அழுத்தம், மழைப்பொழிவு போன்ற காலநிலை தரவுகள் முறையே சமவெப்ப கோடுகள் , சம அழுத்தக் கோடுகள், மற்றும் சம மழைக் கோடுகளாக காட்டப்படுகின்றன. தரவுகளை அட்டவணையாக காட்டுவதைத் தவிர அவற்றை கோட்டுப்படங்களாவோ அல்லது விளக்கப்படங்களாவோ காட்டலாம். மக்கள் தொகை, காலநிலை மற்றும் சமூக பொருளாதார தரவுகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அவற்றை கோட்டுப் படங்களாகவும் விளக்கப் படங்களாகவும் (Charts), வரைபடங்களாகவும் மற்றும் நிலவரைபடங்களாகவும் காட்டமுடியும். இவ்வாறு, பொருத்தமான நிலவரைபடவியல் தொடர்புக்கு, புவியியல் தரவுகள் அறிவியல் கண்ணோட்டத்துடன் இருக்கவேண்டும். ஆகையால் தரவுகளின் தன்மை மற்றும் இடம் மற்றும் காலம் சார்ந்த வேறுபாடுகளின் வடிவங்களை ஆராய்வதற்கும் தரவுத் தொகுப்புகளை பகுப்பாய்வு செய்யவும் மற்றும் உண்மையான பொருட்களை கண்டறிந்து வகைப்படுத்தவும் புவியியல் தரவுகளைக் காட்டும் முறைகள் மிகவும் அவசியமாகும். நாம் புவியியலில் காலநிலை, பொருளாதார மற்றும் மக்கள் தொகைத் தரவுகளைப் பற்றி படிக்கிறோம். எண் வடிவிலான தரவுகள் அல்லது கருத்துகள் திட்டமிட்ட முறையில் சேகரிக்கப்பட்டு சில நோக்கங்களைப் பூர்த்தி செய்வது மற்றும் அட்டவணை வடிவத்தில் காட்டுவது புள்ளியியல் ஆகும்.
புள்ளியியல் தரவுகளை காட்டும் விளக்கப்படங்கள் புள்ளியியல் விளக்கப்படங்கள் எனப்படுகின்றன. புள்ளியியல் தரவுகளை வரைபடங்கள் மூலமாக குறிக்க பட்டைகள், செவ்வகங்கள், சதுரங்கள், வட்டங்கள், கனசதுரங்கள், கோளங்கள் அல்லது கோடுகள் போன்ற வடிவியல் வடிவங்கள் பயன்படுகின்றன. இந்த வரைபடங்கள் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளன.
1. புள்ளி விவரங்களைப் பார்த்தவுடன் அவற்றை ஒப்பீடு செய்வதற்கு புள்ளியியல் விளக்கப்படங்கள் உதவுகின்றன.
2. விவரங்களை எளிமையான முறையில் நினைவில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.
3. தரவுகளை பகுப்பாய்வு செய்து எளிதாக அனுமானத்தை பெற உதவுகின்றன.