விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் : பாடச்சுருக்கம் | 12th Zoology : Chapter 1 : Reproduction in Organisms
பாடச்சுருக்கம்
உயிரிகள் தங்களைப்போன்றே மற்றொரு உயிரியை உருவாக்கும் இனவிருத்தி நிகழ்ச்சி இனப்பெருக்கம் ஆகும். பாலிலி இனப்பெருக்கம் மற்றும் பாலினப் பெருக்கம் என இனப்பெருக்கத்தை இரு பெரும் வகைகளாகப் பிரிக்கலாம். இனச்செல்கள் உருவாக்கம் மற்றும் அவை இணைதல் போன்ற நிகழ்ச்சிகள் பாலினப்பெருக்கத்தில் மட்டுமே நடைபெறுகிறது. பாலிலா இனப்பெருக்கத்தில் இவ்விதம் நிகழ்வதில்லை. பிளவுறுதல், முகிழ்த்தல், துண்டாதல், இழப்பு மீட்டல் போன்ற முறைகளில் பாலிலா இனப்பெருக்கம் நிகழ்கிறது. பிளவுறுதல் நிகழ்ச்சியானது இரு சமப்பிளவுமுறை, பல பிளவுமுறை, ஸ்போர் உருவாக்கம், ஸ்ட்ரோபிலா உருவாக்கம் போன்ற பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பிளவுறுதல் நடைபெறும் தளத்தைப் பொறுத்து பல வகையான இரு பிளவுறுதல் காணப்படுகிறது. அவையாவன, எளிய ஒழுங்கற்ற இருசமப் பிளவுமுறை கிடைமட்ட இரு சமபிளவு முறை, நீளவாட்டு இரு சம்பிளவு முறை மற்றும் சாய்வு மட்ட இரு சமப்பிளவு முறை. பல பிளவு முறை என்பது தாய் செல்லானது ஒரே நேரத்தில் பல சிறிய சேய் செல்களாகப் பிரியும் நிகழ்ச்சியாகும். பாலிலி இனப்பெருக்கத்தின் மற்றொரு முறை முகிழ்த்தல் ஆகும். பெற்றோரின் உடலத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொட்டுகள் தோன்றி ஒவ்வொரு மொட்டும் ஒரு இளம் உயிரியாக வளர்ச்சியடைந்து பின்பு உடலத்தில் இருந்து தனித்துப் பிரிந்து இயல்பான வாழ்க்கையை மேற்கொள்கின்றன. பெற்றோர் உடலத்தின் மேற்பரப்பில் பல மொட்டுகள் தோன்றினால் அது ‘புற முகிழ்த்தல்’ என்றும் பெற்றோர் உடல் செல்களின் சைட்டோபிளாசத்தில் பல மொட்டுகள் தோன்றினால் அது ‘அக முகிழ்த்தல்' என்றும் அழைக்கப்படும். ‘துண்டாதல்' என்பது மற்றொரு வகையான பாலிலி இனப்பெருக்கம் ஆகும். இதில் பெற்றோர் உடலானது பல துண்டுகளாக உடைகிறது. இவ்வாறு உருவான ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரியை உருவாக்கும் திறனைப் பெற்றுள்ளது. இழப்பு மீட்டல் என்பது ஒரு சிறு துண்டிலிருந்து முழுமையான உயிரியை உருவாக்கும் நிகழ்வாகும். இது, சீராக்கல் வகை இழப்பு மீட்டல் மற்றும் மீண்டும் உருவாக்குதல் வகை இழப்பு மீட்டல் என இரு வகைப்படும்.
விலங்குகளில் பலவகையான பாலினப்பெருக்க முறைகள் காணப்படுகின்றன. ஒருங்கிணைவு முறையில் இரண்டு ஒற்றைமய இனச்செல்கள் ஒன்றிணைந்து கருமுட்டை உருவாக்கப்படுகிறது. விலங்குகளில் கீழ்க்காணும் பல வகையான ஒருங்கிணைவு முறைகள் நடைபெறுகின்றன. அவை தன் கருவுறுதல், அயல் கருவுறுதல், முழுச்சேர்க்கை, இளம் செல்சேர்க்கை, மாறுபட்ட செல் சேர்க்கை, ஒத்த செல்சேர்க்கை, வேறுபட்ட செல் சேர்க்கை மற்றும் இணைவு முறை இனப்பெருக்கம் ஆகியவை ஆகும். கன்னி இனப்பெருக்கம் என்பது விலங்குகளில் காணப்படும் சிறப்பு வகையான இனப்பெருக்க முறை ஆகும். இது இயற்கையான கன்னி இனப்பெருக்கம் மற்றும் செயற்கையான கன்னி இனப்பெருக்கம் என இருவகைப்படும்.