Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | சாலைப் பாதுகாப்பு

மூன்றாம் பருவம் அலகு -3 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சாலைப் பாதுகாப்பு | 7th Social Science : Civics : Term 3 Unit 3 : Road Safety

   Posted On :  19.04.2022 09:13 pm

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மூன்றாம் பருவம் அலகு -3 : சாலைப் பாதுகாப்பு

சாலைப் பாதுகாப்பு

கற்றலின் நோக்கங்கள் • சாலைப் பாதுகாப்பின் அவசியத்தைப் புரிந்து கொள்ளுதல் • சாலை விபத்திற்கான காரணங்களை ஆராய்தல் • சாலைப் பாதுகாப்பு முறைகளைப் பட்டியலிடுதல் • அரசாங்கம் மற்றும் தனிமனிதனின் சாலைப் பாதுகாப்பு அங்கீகரித்தல் • சாலைப் பாதுகாப்பு வாரம் போக்குவரத்துக் குறியீடுகள் முதலியவற்றை அறிந்து கொள்ளுதல்

அலகு - 3

சாலைப் பாதுகாப்பு



கற்றலின்  நோக்கங்கள்

சாலைப் பாதுகாப்பின் அவசியத்தைப் புரிந்து கொள்ளுதல் 

சாலை விபத்திற்கான காரணங்களை ஆராய்தல் 

சாலைப் பாதுகாப்பு முறைகளைப் பட்டியலிடுதல் 

அரசாங்கம் மற்றும் தனிமனிதனின் சாலைப் பாதுகாப்பு அங்கீகரித்தல் 

சாலைப் பாதுகாப்பு வாரம் போக்குவரத்துக் குறியீடுகள் முதலியவற்றை அறிந்து கொள்ளுதல்


அறிமுகம்

புரட்சிகர கண்டுபிடிப்பான சக்கரமானது போக்குவரத்துமுதல் இயந்திரம்வரை பலவித தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. இது நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல அடிப்படை கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். சக்கரத்தின் கண்டுபிடிப்பு புரியாத புதிராக இருப்பினும், வாகனங்களின் வரலாற்றில் மனிதனின் அறிவுத்திறமையை நிரூபிக்கிறது. இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இல்லாத வையகத்தை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?


சாலைப் பாதுகாப்பு


ஒவ்வொரு நாளும் நாம் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அலுவலகத்திற்கோ , கடைகளுக்கோ, உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதற்கோ சாலைவழியே பயணிக்கிறோம். சாலையில்பயணிக்கும்போது, நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சாலைப் பாதுகாப்பு என்பது, சாலையைப் பயன்படுத்துவோர் உயிரிழப்பு மற்றும் கடுமையாகக் காயப்படுவதை தடுக்கும் முறைகள் மற்றும் நடவடிக்கைகளைக் குறிக்கிறது. 


சாலைப் பாதுகாப்பின் தேவை


உலகத்திலேயே, அதிகமான சாலை விபத்துகள் இந்தியாவில்தான் ஏற்படுகின்றன என்பது மிகவும் வருந்ததக்கச் செய்தியாகும். உலகளவில் 10% சாலை விபத்துகளுக்கு இந்தியா பொறுப்பாகிறது. சாலை விபத்துகள், இந்தியமக்களின் வாழ்வு, வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தைப் பெரிதும் அச்சுறுத்துகின்றன.


சாலை விபத்திற்கான காரணங்கள் 

வாகனம் இயக்கும் போது ஏற்படும் கவனச்சிதறல்


வாகனம் இயக்கும் போது ஏற்படும் கவனச்சிதறலே, சாலைவிபத்துகள் ஏற்படுவதற்கு முதன்மையான காரணமாக விளங்குகிறது. ஓட்டுநர் வாகனத்தை இயக்கும்போது, வேறு ஏதேனும் செயல்களில் ஈடுபடுவதால், கவனச்சிதறல் ஏற்படுகிறது. வாகனம் இயக்கும்போது, கைப்பேசியில் பேசுவதோ, அதில் குறுஞ்செய்தி அனுப்புவதோ, மற்ற பல செயல்களில் ஈடுபடுவதோ கவனச்சிதறலுக்கு வழிவகுக்கிறது.


கட்டுப்பாடு இல்லாமல் வாகனங்களை இயக்குதல்


கட்டுப்பாடு இல்லாமல் வாகனங்களை இயக்குதல் என்பது ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறும் செயலாகும். ஓட்டுநர் வேண்டுமென்றே போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்கும் மனநிலையாகும். 


இரவில் வாகனங்களை இயக்குதல்


இரவு நேரத்தில் வாகனம் இயக்கும்போது அதிகமான கவனம் தேவைப்படுகிறது. கட்டுப்படுத்த முடியாத தூக்கம், அதிக தூரம் தொடர்ந்து வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் சோர்வு மற்றும் சாலையில் குறைந்த வெளிச்சம் ஆகியவையே கோரமான சாலை விபத்துகளுக்குக் காரணமாகின்றன.


வாகனங்களுக்கிடையே இடைவெளி இல்லாதிருத்தல்


ஒரு வாகனத்தின் ஓட்டுநர் தம் வாகனத்திற்கும் தமக்கு முன்னால் போகும் வாகனத்திற்கும் இடையே போதுமான இடைவெளி இல்லாது இயக்குவதேயாகும். இந்நிலையில், முன்னால் செல்லும் வாகனம் திடீரென நிறுத்தப்படும்போது, பின்னால் செல்லும் வாகனம் அதன்மீது மோதிகிறது.


போக்குவரத்து நெரிசல்

வாகனங்களின் அதிக எண்ணிக்கையால் சாலையில் போக்குவரத்து நெரிசலும், மாசுபாடும் அதிகரிக்கிறது.



சாலையின் நிலை


வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவிற்குச் சாலைகளின் விரிவாக்கம் இல்லாமல் மிகவும் குறைவாகவே உள்ளது.


பாதுகாப்பு கவசங்களை தவிர்த்தல்


இருசக்கர வாகனங்கள் இயக்கும்போது, தலைக்கவசம் அணியாமல் இருப்பது, நான்கு சக்கரவாகனம் இயக்கும்போது இருக்கைப்பட்டை அணியாமல் இருப்பது விபத்து காயங்களை தீவிரமாக்குகிறது.


பாதசாரிகளின் பொறுமை இன்மை

சாலையில் நடந்துசெல்லும் பாதசாரிகளின் பொறுமையின்மையும், சாலைவிதிகளைப் புறக்கணித்தலுமே விபத்துகளை ஏற்படுத்துகின்றன.



இதர காரணங்கள்

மது அருந்திவிட்டு வாகனம் இயக்குதல், போக்குவரத்து குறியீடுகளை மதிக்காமல் இருத்தல், அதிவேகமாக இயக்குதல், ஆளில்லா இருப்புப்பாதை பகுதிகளில் கவனமில்லாது கடப்பது போன்ற செயல்களால் உயிர்ச்சேதம் அதிகரிக்கிறது. இதனால், பல குடும்பங்கள் வருமானம் ஈட்டும் தம் நபரை இழந்து வாடுகின்றன.


சாலைப் பாதுகாப்பு விதிகள்

ஒவ்வொரு நாடும் அதன் குடிமக்களின் நலன்கருதி, சாலைப்போக்குவரத்து விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும் வகுத்துள்ளது. இந்தியாவும் சாலைகளைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்புகருதி விபத்தோ, காயமோ ஏற்படாவண்ணம் சாலைப் பாதுகாப்பு விதிகளை வகுத்துள்ளது.


10. சாலை பாதுகாப்பிற்கான முக்கிய விதிகள்



நில் அல்லது மெதுவாகச் செல் 

வரிக்குதிரைக் கடவில், பாதசாரிகள் பாதுகாப்பாக முதலில் கடந்து செல்வதற்கு அனுமதித்தல் பாதையைப் பயன்படுத்திடும் முழு உரிமை அவர்களுக்கு உள்ளது (விதிமுறை 11). 

இருக்கையின் வார்ப்பட்டையை அணிதல் 

இருக்கையின் வார்பட்டையை அணிவதால் நீங்களும் உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக இருத்தல் இருக்கையின் வார்பட்டையினால் 60% காரோட்டிகளின் இறப்பில் மாற்றம் நிகழ்கிறது.

போக்குவரத்து விதிமுறைகளையும் சைகைகளையும் பின்பற்றுதல் சாலை விபத்துகளைத் தடுக்க (பகுதி 119).

வேகத்தடைகளை மதித்தல் 

உங்களின் பாதுகாப்பு மற்றும் மற்றவர்களின் பாதுகாப்பிற்காக மக்கள் வசிக்கும் இடம் மற்றும் வணிக வளாகம் இருக்கும் இடம் ஆகியவற்றில் சரியான வேகம் 20 கிமீ/மணி வேகத்தின் அளவு 30 கிமீ/மணி (பகுதி 112). 

வாகனத்தை முறையாக பராமரித்தல் 

வாகனத்தில் அதிகம் பழுது ஏற்படாமலும், வாகனத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏதும் நேராமலும் தடுப்பதால் சாலை விபத்துகளும் தடுக்கப்படுகின்றன (பகுதி 190).

வாகனம் இயக்கும்போது கைப்பேசியை எப்போதும் பயன்படுத்தாமல் இருத்தல் 

விபத்துக்களுக்கு வழிவகுக்கும் கவனச்சிதறலைத் தவிர்க்க வும் (பகுதி 184).

தலைக்கவசம் அணிதல் 

இருகச்சர வாகனம் இயக்கும் போது தலைக்கவசம் அணிவதால் தலைக்கு பாதுகாப்பு தரமான தலைக்கவசம் அணிவதால் 70% கடுமையான தலைக்காயங்கள் குறையும் வாய்ப்புகள் உள்ளன. (பகுதி 129). 

வாகனத்தை வேகமாக இயக்காது இருத்தல் 

உங்கள் பாதுகாப்பு மற்றும் சாலையை பயன்படுத்துவோரின் பாதுகாப்பினை உறுதி செய்தல் (பகுதி 184). 

மற்றவர்மீது அக்கறை கொள்ளுதல் 

சாலையை அனைவரும் பயன்படுத்த வழிவகை செய்வதும் மற்றவர் மீது கரிசனத்தோடு நடந்து கொள்வதும் அவசியம் அதிவேகமாக ஓட்டுவதால் உங்களுக்கு சாலையை பயன்படுத்துவோருக்கு ஆபத்து நேரிடும். மது அருந்துவதையும் வாகனம் ஓட்டுவதையும் ஒன்றாகச் செய்யாதிர்கள் பொறுப்பாக இருங்கள். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்திடுங்கள் (பகுதி 185) 

கவனக்குறைவால்/சிதறலால் ஏற்படும் விபத்துக்களை தடுத்தல் 

பொறுப்பாக இருங்கள்.... குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் (பகுதி 185)

1. சாலை விதிகளின் ஒழுங்குமுறைகள் 1989 

2. மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் 1989

3. மோட்டார் வாகன விதிமுறைகள் 1968.


இந்திய சட்டப்படி, ஒருவர் வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் வயது 18 ஆகும். வாகனம் இயக்கும்போது. கைப்பேசி பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை அல்லது பள்ளிவளாகம் அருகில் வாகனங்கள் ஒலியெழுப்ப தடைசெய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனம் இயக்கும்போது, தரமான தலைக்கவசம் அணிய வேண்டும் - வாகனத்தில் ஏறும் முன்பே அதனைப் பொருத்திக் கொள்ள வேண்டும். மகிழுந்தில் பயணிக்கும்போது ஓட்டுநரும் அவர் அருகில் இருப்பவரும் இருக்கை வார்பட்டையைப் பொருத்திக் கொள்ள வேண்டும். இருசக்கர வாகனத்தை இயக்கும்போது அதிகமான பளுவை ஏற்றக்கூடாது. இரு சக்கர வாகனம் இயக்குபவர், தம் பின்னால் ஒருவரை மட்டுமே அமர்த்திச் செல்ல வேண்டும். குடும்பம் முழுவதையும் ஏற்றக் கூடாது. ஓட்டுநர் ஒவ்வொருவரும் தமக்கு முன்னால் செல்லும் வாகனத்திற்குப் போதுமான பாதுகாப்பான இடைவெளி விட்டுத்தான் இயக்க வேண்டும். வளைவுகளில், திருப்பங்களில் முக்கியமாக மலைப்பிரதேசங்களில் வேகத்தைக் குறைத்தே இயக்கவேண்டும். சாலை போக்குவரத்துச் சட்டம், பாராளுமன்றத்தால் 1988இல் ஏற்படுத்தப்பட்டு, 1989இல் நாடு முழுவதிற்குமாக நடைமுறைபடுத்தப் பட்டுள்ளன.


தடுப்பு நடவடிக்கைகள் 

அரசாங்கம் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வாயிலாக, நமது இந்திய அரசாங்கம் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

i) அதிகமான விபத்து பகுதிகளில் சாலைகளை சீர்செய்தல் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்துதல்.


ii) போக்குவரத்துக் குறியீடுகள் மற்றும் சாலைச் சைகைகள் முதலியன போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் நன்றாகச் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்கின்றன. 

iii) நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களின் சாலைகளை நல்ல முறையில் அமைத்தல். 

iv) அதிவேகமாக இயக்குபவர்களைக் கண்காணித்திட கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்துதல். 

v) சாலைகளில் குழிதோண்டுதல் மற்றும் மணல்களை குவிப்பதை தடை செய்தல். 

vi) சாலை ஆக்கிரமிப்புகளை நீக்கி பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் சாலை விதிகளை மதிக்காமல் சென்றால் அரசு கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தி அவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தனிமனிதன்

ஒரு வாகனத்தை இயக்கும் ஒருவர், தற்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குத் தேவையான பயிற்சியும் அதற்கான தேர்வுகளில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். வாகன இயக்குபவர்கள், எப்போதும் தம்முடைய ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ், வாகனவரி கட்டியதற்கான சான்றிதழ், அனுமதி மற்றும் தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

வாகனத்தின் பிரேக் திடீரெனப் பழுதாவதால், பயங்கரமான விபத்துகள் நேர்ந்துவிடுகின்றன, எனவே, வாகனம் நல்ல நிலையில் இருப்பதும், தகுந்த இடைவெளிக் காலங்களில் வாகனங்களை பழுதுநீக்கி இயக்குவது அவசியமாகிறது.

கார்பூலிங் ஒவ்வொருவரும் ஒரு இடத்திற்கு வழக்கமாக மகிழுந்தில் செல்லும்போது அந்த இடத்திற்கு அதிகமான மகிழுந்து செலுத்தப்படுகிறது. இதை தவிர்க்க மகிழுந்தில் பயணப் பகிர்வு மேற்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அதிக மகிழுந்து செல்வதை தடுத்தல்.

ஒரே பகுதியிலிருந்தோ அல்லது ஒரே வழித்தடத்தில் தினந்தோறும் மகிழுந்து அல்லது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதே இடத்திற்கோ அல்லது அதே தடத்தில் செல்பவர்களை உடன் அழைத்துச் செல்வதே கார்பூலிங் ஆகும்.

ரக்க்ஷா பாதுகாப்பான வாகன இயக்கம். ரக்ஷா ஒரு தானியங்கி கருவி. இது வாகனத்தில் பொருத்தப்பட்டு வாகனம் தற்போது எங்கு உள்ளது என்பதையும், வாகனத்தின் - இயந்திரத்தின் செயல்பாட்டினை கண்காணிக்கவும், வாகனத்தின் பதட்ட நிலையையும் உடனடியாக வெளிப்படுத்துகிறது.

சாலைகளில் உள்ள குழிகள் மற்றும் மேடுகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுத்திட வாகனங்களில் ரக்க்ஷா பாதுகாப்பு கருவி பொருத்தப்படுவதால், சாலையில் உள்ள மேடுகள் பற்றிய முன்னெச்சரிக்கையையும் மோசமான நிலையில் உள்ள சாலை பற்றியும், வேகத்தை மீறும்போதும் ஓட்டுநருக்கு எச்சரிக்கை செய்கிறது.

கார்பூலிங் செய்வதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். பலர் ஒரே வாகனத்தை பயன்படுத்துவதால் எரிபொருள், பணம் மற்றும் நேரம் சேமிக்கப்படுகிறது. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது காற்றுமாசுபாடும் குறைகிறது. சகமனிதர்களை நன்கு புரிந்து கொள்ளவும் இணக்கமான உறவுமுறை ஏற்படவும் வழிவகுக்கிறது. 


பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள்

இளம் வயதினருக்கு, சாலைப்பாதுகாப்புக் கல்வியைத் தருவதில் பெற்றோரும் ஆசிரியர்களும் பெரும்பங்கு வகிக்கின்றனர். ஒரு பெற்றோர் போக்குவரத்து விதிகளை மீறும்போது, அந்தக்குழந்தையும் பிற்காலத்தில் தன் பெற்றோரைப் போலவே போக்குவரத்து விதிகளை மீறும். எனவே பெரியவர்கள் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடித்து முன்மாதிரியாளர்களாக விளங்கவேண்டும். குழந்தைகள் காணொலி மற்றும் கணினியில் வாகனத்தை வேகமாக இயக்குவது போன்ற படக்காட்சிகள் காண்பதையோ, விளையாடுவதையோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில், அவ்விளையாட்டுகள் பிற்காலத்தில் வாகனங்களை வேகமாக இயக்கும் பழக்கத்தைக் குழந்தைகளிடையே ஏற்படுத்திவிடும். எனவே அரசு இத்தகைய விளையாட்டுகளை தடை செய்யவேண்டும்.


போக்குவரத்து குறியீடுகள் மற்றும் போக்குவரத்து விதிகளை குழந்தைகள் அறிந்திட உதவுங்கள், சரியான குறியீட்டிற்காகக் காத்திருந்து, பாதசாரிகளுக்கான வரிக்குதிரை பாதையின் வழியாகச் சாலையைக் கடந்திட அறிவுறுத்துங்கள். சாலைகளில் அங்கும் இங்குமாகவோ, குறுக்காகவோ ஓடுதல் கூடாது என்பதைக்கூறி எச்சரிக்கை செய்யுங்கள். சாலைகளில் நடந்து செல்லும்போது நடைபாதையை பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். 

குழந்தைப் பருவத்திலிருந்தே போக்குவரத்துக் கல்வியை கற்றுத்தரவேண்டும். பள்ளிப்பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக போக்குவரத்துக் கல்வி இணைக்கப்பட வேண்டும். கலைத்திட்டத்தில் சாலைப்பாதுகாப்பு தொடர்பான போட்டிகள் நடத்தப்படவேண்டும். வாசகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுதல், படம் வரைதல் போன்ற செயல்களால் சாலைப்பாதுகாப்பினை வலுபெறச் செய்யலாம்.


ஊடகம்


மது அருந்துதல் உயிரைக் கொல்லும் விபத்துகள் ஏற்படுகின்றன

மது அருந்துதல் உங்கள் பார்வை பாதிப்பதுன் விரைவாக செயல்படும் உங்கள் திறனையும் குறைக்கிறது.

வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் போன்ற ஊடகங்களுக்கு, சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு உள்ளது.


சச்சின் டென்டுல்கரின் 45ஆவது பிறந்தநாளையொட்டி மும்பை காவல்துறை, மோட்டார் வாகனம் ஓட்டுபவரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் "தலைக்கவசம் அணிந்து சிறந்த சாதனைகளைச்செய்துள்ள இவரைப்பாருங்கள்! நாமும் இவரைப் பின்பற்றுவோம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது"


போக்குவரத்துக் குறியீடுகள்


போக்குவரத்துக் குறியீடுகள், சாலைகளில் போக்குவரத்தை நடத்தும் சத்தமில்லா நடத்துநராகவே செயல்படுகின்றன. 'நில்', வேகத்தடை, 'வலப்புறம் திரும்பு' 'இடப்புறம் திரும்பாதே' போன்ற சில குறியீடுகள் கட்டாயக் குறியீடுகள் ஆகும்.

குறியீடுகள் ஓட்டுநருக்கு எச்சரிக்கை தருவதால், எச்சரிக்கை குறியீடுகள் ஆகின்றன. மருத்துவமனை, பெட்ரோல் பங்க், இளைப்பாறும் இடம், வாகனம் நிறுத்துமிடம், நிறுத்தக்கூடாத இடம் போன்றவை தகவல்களைத் தருவதால் தகவல் குறியீடுகள் என்றழைக்கப்படுகின்றன.


சாலைப் பாதுகாப்பு வாரம்


பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலைவிபத்துகளால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பு வாரம் தேசிய நிகழ்வாக நடத்தப்படுகிறது. இது ஆண்டுதோரும் அனுசரிக்கப்படுகிறது. மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடப்படுகிறது. சாலைபாதுகாப்பு தொடர்பான பலவித நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சாலைப்பாதுகாப்பு குறித்த பேனர்கள், போஸ்டர்கள் சுவராட்டிகள், கையடக்க வழிப்புணர்வு ஏற்படுத்திடும் வண்ணம் அமைக்கப்படுகின்றன.

இந்திய அரசாங்கம், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில், சாலைப்பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கிறது.


பரிந்துரைகள் 

* 1 கி.மீ அல்லது 2 கி.மீ. தூரமெனில் நடந்து செல்வது மற்றும் மிதிவண்டியில் செல்வது நல்லதொரு பயிற்சியாகவும் கருதப்படுகிறது. 

* சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வாகனங்களை பயன்படுத்த வேண்டும். 

* தடுப்பு இல்லாத இருப்புப்பாதை வழிகளில் கட்டைகளை ஊன்றிவைக்கலாம். 

* மிதிவண்டியில் செல்வோர்க்கான தனிவழியைச் சாலைகளில் அமைத்தால், சாலை விபத்துகளைக் குறைத்து பல நன்மைகளை அடையலாம் 

* மிதிவண்டியில் செல்வது ஆரோக்கியமான பழக்கமாகவும் காற்று மாசுபாட்டைத் தடுப்பதாகவும் அமைகிறது. 

* வாகன உற்பத்தியாளர்கள் இருசக்கர வாகனத்தை உற்பத்தி செய்யும்போதே அதிகபட்ச வேகமாக 50கி.மீ./மணிக்குமேல் செல்லாதபடி வடிவமைக்க வேண்டும். 

* உண்மை நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறியோ, காணொலி மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது.


பாடச்சுருக்கம் 

* சாலைப்பாதுகாப்பு என்பது, சாலையைப் பயன்படுத்துவோர் மற்றும் வாகனம் பயன்படுத்துவோரைக் கோரவிபத்துகள் மற்றும் பெரும் காயங்கள் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகள் ஆகும். சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்காததால் ஏற்படும் சாலை விபத்துகள் ஒரு நாட்டின் முன்னேற்றம் மற்றும் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும்.

* போக்குவரத்துக் குறியீடுகள் சாலையில் சத்தமில்லா நடத்துநராக அனைவரையும் வழிநடத்துகின்றன. 

* ஒவ்வொரு நாடும் சாலைப் பாதுகாப்பு வாரத்தைக் கொண்டாடுகிறது.

* நாம் சாலை பாதுகாப்பிற்கானவிதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்து நமது நாட்டைப் பாதுகாப்போம்.


சொற்களஞ்சியம் 

1. பாதசாரிகள் - Pedestrians - persons walking on the road

2. விபத்தால் ஏற்படும் இழப்பு - Fatalities - deaths due to accident

3. குடும்பத்திற்காக சம்பாதிப்பவர் – Breadwinner - one who earns money to support the family

4. மிகவும் கடுமையான - Stringent - severe

5. மோதல் - Collision - crash

6. திருத்தம் - Rectification - correction

7. பாதையில் உள்ள குழிகள் - Potholes - holes in a road surface

8. கட்டாயம் - Mandatory - compulsory

9. கட்டை தூண்கள் – Bollards - short concrete posts used to prevent vehicles on the road

10. இருசக்கர வாகன பின் இருக்கை – Pillion - seat behind in a two wheeler


இணையச்செயல்பாடு

சாலை பாதுகாப்பு

இச்செயல்பாட்டின் மூலம் சாலைகளின் பாதுகாப்பு விதிமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். 


படிநிலைகள் : 

படி 1: கொடுக்கப்பட்டுள்ள உரலி (URL) அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க. 

படி 2: திரையில் தோன்றும் இணையப்பக்கத்தில் PLAY பொத்தானை சொடுக்கி ஏதேனும் - ஒரு கதாபாத்திரத்ததை தெரிவு செய்யவும். 

படி 3: URBAN அல்லது RURAL (கிராமப்புற / நகர்புற பகுதியினை தெரிவு செய்யவும். பின்பு கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி விளையாட்டினை தொடங்கவும். 

படி 4: இலக்கினை பாதுகாப்பாக அடைய சரியான பாதையினை A அல்லது B யினை தேர்வு செய்யவும். 


புத்த மதம் உரலி:

http://www.buddhanet.net/e-learning/buddhism/storybuddha.htm 

* படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே. 

* தேவையெனில் 'Adobe Flash' ஐ அனுமதிக்கவும்,



Tags : Term 3 Unit 3 | Civics | 7th Social Science மூன்றாம் பருவம் அலகு -3 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : Civics : Term 3 Unit 3 : Road Safety : Road Safety Term 3 Unit 3 | Civics | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மூன்றாம் பருவம் அலகு -3 : சாலைப் பாதுகாப்பு : சாலைப் பாதுகாப்பு - மூன்றாம் பருவம் அலகு -3 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மூன்றாம் பருவம் அலகு -3 : சாலைப் பாதுகாப்பு