தொழில்கள் - இரண்டாம் நிலைத் தொழில் | 12th Geography : Chapter 4 : Economic Activities
இரண்டாம் நிலைத் தொழில் (Secondary Activities)
இரண்டாம் நிலைத் தொழில் என்பது முதல்நிலைத் தொழிலிலிருந்து பெறப்படும்
மூலப்பொருட்களை நுகர்வோர் பொருட்களாக மாற்றுவது ஆகும். எனவே, உற்பத்தி மற்றும் தொழில்
துறை நடவடிக்கைகள் இரண்டாம் நிலைத் தொழிலில் அடங்கும். மேலும், இது மூலப்பொருட்களின்
மதிப்பை கூட்டுவதால் இதனை மதிப்பு கூட்டும் துறை எனலாம். தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை,
நுகர்பொருட்களாக மாற்றுவதற்கு அதிக அளவு எரிசக்தி மற்றும் எந்திரங்களும் தேவைப்படுகிறது.
இரண்டாம் நிலைத் தொழில்கள் முதல்நிலைத்தொழிலையும், மூன்றாம் நிலைத் தொழிலையும் ஊக்குவிக்கும்
தன்மையுடையவை.
1. மூலப்பொருட்களின்
இருப்பு மற்றும் அதன் அருகாமை (Availability of raw materials): மூலப்பொருட்களின்
இருப்பும் அதன் அருகாமையும் தொழிலகம் அமையும் இடத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் முதன்மையான
காரணிகளாகும். மூலப்பொருட்கள் அதிகமாகவும் மற்றும் விலைகுறைவாகவும் கிடைக்கும் இடங்களில்
தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதை எடை இழக்கும் மூலப்பொருட்களைக் கொண்ட தொழிற்சாலைகளில்
அதிகமாக காணலாம். உதாரணம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை
கூறலாம். ஏனெனில் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக எண்ணெய் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி
செய்யப்படுகிறது.
2. எரிசக்தி
(Availability of Power): தொழிலக அமைவிடத்தை நிர்ணயிப்பதில் எரிசக்தி
முக்கிய காரணியாக உள்ளது. பழங்காலத்தில் தொழிற்சாலைகளை இயக்க நீராவி சக்தி பயன்படுத்தப்பட்டதால்
நிலக்கரி சுரங்கங்களுக்கு அருகில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட
பின்பு, தொழிற்சாலைகளை இன்று மின்சாரம் கிடைக்கும் இடங்களில் அமைத்துக் கொள்ளலாம்.
அலுமினிய தொழிற்சாலைகள் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கு அருகாமையில்
அமைக்கப்படுகின்றன.
3. போக்குவரத்து
செலவு (Transport Cost): தொழிலக அமைவிட காரணிகளை நிர்ணயிப்பதில் போக்குவரத்து
செலவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தொழிற்சாலைகளின் போக்குவரத்து செலவு என்பது மூலப்
பொருட்களை தொழிற்சாலைக்கு கொண்டு வருவது மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைக்கு
கொண்டு செல்வதற்காகும் செலவினை குறிக்கும். எந்த பகுதியில் போக்குவரத்து செலவு குறைவாக
உள்ளதோ அங்கு தொழிற்சாலைகளை தொடங்குவதுதான் சிக்கனம் ஆகும். அதிக எடை மற்றும் அதிக
இடத்தையும் அடைத்து கொள்ளும் மூலப்பொருட்களை எடுத்து செல்ல போக்குவரத்து செலவு அதிகமாகும்.
4. சந்தைக்கு
அருகாமை (Nearness to the Market): நவீனகாலத்தில் ஒரு தொழிற்சாலை
அமைப்பதை நிர்ணயிப்பதில் சந்தைக்கு அருகாமை என்பது ஒரு முதன்மை காரணியாக உள்ளது. இதில்
பல சாதகமான நன்மைகள் உள்ளன.
5. தொழிலாளர்கள்
(Availability of Labour): தொழிலகங்களில் உற்பத்தி தொடர்பான பணிகளுக்கு
அதிகளவு தொழிலாளர்கள் தேவைபடுகின்றனர். தொழிலதிபர்களும் பெரும்பாலும் தொழிலாளர்கள்
அதிகம் காணப்படும் பகுதிகளிலேயே தங்கள் தொழிற்சாலை அமைவதை விரும்புகின்றனர். (எ.கா)
மும்பைக்கு அருகில் காணப்படும் அதிகளவு பருத்தி நெசவாலைகள் அங்கு செறிந்து காணப்படும்
தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டனவையாகும்.
6. அரசாங்ககொள்கைகள்
(Government Policy): அரசாங்கத்தின் கொள்கைகளும் தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும்
காரணிகளில் முக்கியமானதாகும். பின்தங்கிய பகுதிகளில் ஒரு தொழிலகம் அமைப்பதற்கு தேவையான
நிதி உதவி, நிலம், நீர், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை அரசாங்கம் அளிப்பதன்
மூலம் அப்பகுதியின் முன்னேற்றத்திற்கு உதவுகிறது. சந்தைக்கான ஆலோசனைகள், வரிச்சலுகை,
ஏற்றுமதி, இறக்குமதி வசதிகளை அளிப்பதில் அரசாங்கம் பெரிதும் உதவுகின்றது.
7. மூலதனம்
(Availability of Capital): தொழிலக அமைவிடக் காரணிகளில் மூலதனம் மிக முக்கிய
காரணியாக விளங்குகிறது.
வெபர் தனது தொழிலக அமைவிடக் கோட்பாட்டில் குறைந்த செலவு கொள்கையை
வலியுறுத்துகிறார். இவரது கோட்பாடு போக்குவரத்து செலவு மற்றும் சில நிபத்தனைகளையும்
அனுமானங்களின் அடிப்படையில் கொண்டுள்ளது.
1.சில மூலப்பொருட்கள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கிடைக்கக்கூடியவை.
ஆனால் நீர் போன்றவை எங்கும் காணக்கூடியது.
2. சந்தை சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் காணப்படும்.
3. போக்குவரத்து செலவு மூலப்பொருட்களின் எடையையும் தூரத்தையும்
அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.
4.உற்பத்தி பொருட்களுக்கு சந்தையில் நிறைவான போட்டி காணப்படுகிறது.
5. மனிதர்கள் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தங்களது நுகர்வோர்
நடத்தை ஆகியவற்றை பொறுத்து பகுத்தறிந்து செயல்படுகின்றனர்.
இந்த அனுமானங்களின் அடிப்படையில் வெபர் குறைந்த செலவில் அதிக
லாபம்" என்ற கருத்தை தனது தொழிலக அமைவிடக் கோட்பாட்டில் விளக்குகிறார். இக்கோட்பாடு
ஒரு முக்கோண வடிவத்தின் மூலம் வெபரால் விளக்கப்படுகிறது. முக்கோணத்தின் அடிக்கோட்டின்
இருமுனைகளும் மூலப்பொருட்கள் கிடைக்குமிடங்களாகும். (R1, R2,)
முக்கோணத்தின் உச்சி முனை சந்தையாகும். (M) P என்பது தொழிற்சாலை அமைந்துள்ள இடமாகும்.
வெபரின் கோட்பாட்டின் பின்னால் உள்ள தர்க்கம் என்னவெனில் சில தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உற்பத்தி பொருட்களின் எடை மூலப் பொருட்களின் எடையைக் காட்டிலும் குறைவாக இருக்கும். இவை எடை இழக்கும் கச்சாப் பொருட்கள் எனப்படும். அதனால் இந்த வகை மூலப்பொருட்களை தொழிற்சாலைக்கு கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவு, அதனை உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களாக சந்தைக்கு கொண்டு சேர்ப்பதற்கான செலவை காட்டிலும் அதிகம். ஏனெனில் இத்தகைய மூலப்பொருட்களிலுள்ள அதிக கழிவுகளை தொழிற்சாலைகளிலேயே பிரித்தெடுக்க வேண்டியுள்ளது. எனவே இத்தகைய தொழிற்சாலைகள் மூலப்பொருட்கள் கிடைக்கும் இடத்திற்கு அருகிலேயே அமைவது லாபகரமானது.
R1, R2, மூலப்பொருட்கள் கிடைக்கும் இடம்
M - சந்தை
P - தொழிலக அமைவிடம்
படம் A - ஒரு தொழிலகம் மூலப்பொருள் அமைவிடமான R1,
என்னும் இடத்தில் அமைந்துள்ளது. மற்றொறு மூலப் பொருளானது R2, என்ற இடத்திலிருந்து
R1, க்கும் இவ்விடத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டப் பொருள்கள் சந்தைக்கு
கொண்டு செல்லப்படும் நிலை போக்குவரத்து செலவை அதிகரிக்கின்றது.
படம் B - ஒரு தொழிலகமானது R, என்ற இடத்தில் அமைந்திருப்பது போக்குவரத்து
செலவை அதிகரிக்கும் மேலும் ஒரு தொழிலகமானது சந்ததை பகுதியில் (M) அமைந்திருந்தாலும்
மூலப்பொருட்கள் , மற்றும் R, என்ற இடங்கலிருந்து சந்தை பகுதிக்கு கொண்டு செல்வதும்
போக்குவரத்து செலவை அதிகரிக்கும்.
படம் C ஒரு தொழிலகமானது மூலப்பொருட்கள் கிடைக்கும் R, மற்றும்
R, என்ற இடங்களுக்கு இடையில் அமைந்திருந்தால்
மூலப்பொருட்களை தொழில் பகுதிக்கு அனுப்பும் செலவும், தொழிலகத்திலிருந்து சந்தை பகுதிக்கு
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை அனுப்பும்
செலவும் குறையும். பொதுவாக தூரம் அதிகரிக்க போக்குவரத்து செலவும் அதிகரிக்கும்.
படம் D - ஒரு தொழிலகம் P என்ற இடத்தில் அமைந்திருப்பின் மூலப்பொருட்களை
தொழிலகத்திற்க்கு அனுப்பும் செலவும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைக்கு அனுப்பும்
செலவும் குறையும் என்பது இறுதி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே அதிக வருவாய்
ஈட்டக்கூடிய தொழிலக அமைவிடமாக வெபர் கருதுகிறார்.
படம் E - உற்பத்திக்கு பின் எடை அதிகமாக்கும் பொருட்களை தயாரிக்கும்
தொழிலகம் அமைய வேண்டிய இடத்தினை இப்படம் காண்பிக்கின்றது.
படம் F - கச்சாப்பொருட்கள் R, R, எடை குறைவாக இருந்தால் அதனை
தொழிலகத்திற்கு எடுத்து செல்லும் போக்குவரத்து செலவு குறைகிறது. ஆனால், உற்பத்திசெய்யப்பட்ட
பின் பொருட்களின் எடை அதிகரிக்கும் தன்மையுடையது என்றால் அத்தகைய தொழிற்சாலைகள் சந்தைக்கு
அருகில் அமைந்தால் சந்தைக்கு பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு குறைகிறது
என்பதை காட்டுகிறது. எனவே போக்குவரத்து செலவினை அடிப்படையாக கொண்டு விளக்கப்படும் வெபரின்
இந்த தொழிலக அமைவிடக் கோட்பாடே மற்ற கோட்பாடுகளைவிட சிறந்ததாக அதன் தர்க்க ரீதியான
விளக்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளின் வகைகள்
• பெரிய
அளவு தொழிற்சாலைகள்: அதிக அளவு தொழிலாளர்களையும், அதிக அளவு மூலதனத்தையும்
கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள் பெரிய அளவு தொழிற்சாலைகள் எனப்படும். பருத்தி மற்றும்
சணல் தொழிற்சாலைகள் இதற்கு உதாரணமாகும்.
• நடுத்தர
அளவு தொழிற்சாலைகள்: மிக அதிகமாகவோ, மிக குறைவாகவோ தொழிலாளர் எண்ணிக்கை
இல்லாமல் இயங்குபவை நடுத்தர அளவு தொழிற்சாலைகள் ஆகும். அதேபோல் இதன் முதலீடும் மிதமானதாக
இருக்கும். மிதிவண்டி, வானொலி, தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் இந்த வகையில்
அடங்கும்.
• சிறிய
அளவு தொழிற்சாலைகள்: சிறிய அளவு முதலீடும் குறைவான எண்ணிக்கையில் தொழிலாளர்களையும்
கொண்டு இயங்குபவை சிறிய அளவு தொழிற்சாலைகளாகும். திருகு மற்றும் ஆணி தயாரிக்கும் தொழிற்சாலைகள்,
கயிறு, நெகிழி, சாயத் தொழிற்சாலைகள், தீப்பெட்டி, நெசவு செய்தல் போன்றவை இந்த தொழிற்சாலைகளின்
கீழ் வருகின்றன.
குடும்ப உறுப்பினர்களோ அல்லது தனி மனிதர்களோ வீட்டில் இருந்தபடியே
தங்களது சொந்தமான கருவிகளின் உதவியுடன் பொருட்களை தயாரிக்கும் முறையை குடிசைத் தொழில்
என்கிறோம். இவை மிகச் சிறியவைகளாகவும், முறைசாரா அமைப்பாகவும் இருக்கும். நெசவுத் தொழில்
மற்றும் மட்பாண்டம் தயாரித்தல் இதற்கான உதாரணங்கள் ஆகும்.
அதிக எடையும், அதிக அளவிலான மூலப்பொருட்களும் பெரிய அளவில் உற்பத்தி
செய்யப்படும் பொருட்களையும் கொண்டவை "பெரிய அளவு தொழிற்சாலைகள்" எனப்படும்.
இரும்பு எஃகு தொழிற்சாலைகள் இதற்கான சிறந்த உதாரணமாகும்.
இத்தகைய தொழிற்சாலைகள் எடைகுறைவான மூலப்பொருட்களை பயன்படுத்தி
எடைகுறைவான பொருட்களையே உற்பத்தி செய்யக்கூடியவையாகும். மின் விசிறி, தையல் எந்திரங்கள்
ஆகியவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இதில் அடங்கும்.
தனி நபர் அல்லது தனியாருக்கு சொந்தமான நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும்
தொழிற்சாலைகள் "தனியார்துறை தொழிற்சாலைகள்" ஆகும். பஜாஜ் ஆட்டோ , டிஸ்கோ
(TISCO) ஜாம்ஷெட்பூரில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலைகள் ஆகும்.
அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் நிர்வகிக்கும் தொழிற்சாலைகள்
"பொதுத்துறை தொழிற்சாலைகள்" எனப்படும். பாரத் மிகுமின் நிறுவனம் (BHEL) பிலாய்
இரும்பு உருக்காலை, துர்க்காபூர் இரும்பு உருக்காலை போன்றவை இதற்கான உதாரணங்களாகும்.
தனியார்துறையும், பொதுத்துறையும் இணைந்து நடத்தி வரும் தொழிற்சாலைகளை
கலப்புத் துறை தொழிற்சாலைகள் என்கிறோம். குஜராத் வெடியுப்பு லிமிடெட், இந்திய எண்ணெய்
நிறுவனம் ஆகியவை இதற்கு உதாரணங்களாகும்.
மக்கள் ஒரு குழுவாக செயல்பட்டு அவர்களால் உற்பத்தி செய்யப்படும்
மூலப்பொருட்களைக் கொண்டு அவர்களே நடத்தி வரும் தொழிற்சாலைகள் கூட்டுறவுத் தொழிற்சாலைகளாகும்.
சர்க்கரை ஆலைகள் கூட்டுறவு முறையில் இயங்கி வருகின்றன.
இத்தகைய தொழிற்சாலைகள் தனது உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை
விவசாயத்திலிருந்து பெற்றுக் கொள்கின்றன. பருத்தி நெசவு தொழிற்சாலைகள் சணல், சர்க்கரை,
தாவர எண்ணெய் தயாரித்தல் ஆகியவை இதற்கு உதாரணமாகும்.
பிரதானமாக கனிமங்களிலிருந்து தனது மூலப்பொருட்களைப் பெற்று இயங்கக்கூடிய
இரும்பு எஃகு தொழிற்சாலை, அலுமினியம் மற்றும் சிமெண்ட் தொழிற்சாலை ஆகியவை இதன் கீழ்
வருகின்றன.
தனது மூலப் பொருட்களுக்காக விலங்குகளை சார்ந்துள்ள தொழிற்சாலைகள்
இதில் அடங்கும். விலங்குகளின் தோல், எலும்பு, கொம்புகள், குளம்புகள் மற்றும் பால் பண்ணைப்
பொருட்கள் ஆகியவையும் இத்தகைய தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாக பயன்படுகின்றன.
காகிதம், அட்டை, மரப்பிசின், கோந்து, பட்டை, அரக்கு, மரப்பாத்திரங்கள்,
கூடை ஆகியவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் காடுகளிலிருந்து கிடைக்கும் பொருட்களைச் சார்ந்துள்ளது.
தயாரிக்கப்படும் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சாலைகளை
"அடிப்படையான தொழிற்சாலைகள்" என்றும் நுகர்வோர் தொழிற்சாலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
அடிப்படை தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றொரு தொழிற்சாலைக்குத் தேவையான
மூலப்பொருட்களாக இருக்கும். உதாரணமாக இரும்பு எஃகு தொழிற்சாலையில் தயாராகும் எந்திரங்கள்
தான் ஜவுளித்துறை தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருள். நுகர்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்
நுகர்வோரின் நேரடி பயன்பாட்டிற்கான பொருட்களை உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக தொலைக்காட்சி
பெட்டி, சோப்பு, பிஸ்கட் போன்றவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள்.