இரண்டாம் பருவம் அலகு -1 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மாநில அரசு | 7th Social Science : Civics : Term 2 Unit 1 : State Government

   Posted On :  19.04.2022 01:21 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : இரண்டாம் பருவம் அலகு -1 : மாநில அரசு

மாநில அரசு

கற்றலின் நோக்கங்கள் • பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்துகொள்ளுதல் • தேர்தல் நடைபெறும் முறைகளைப் பற்றி புரிந்து கொள்ளுதல் • ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரின் பணிகளையும், அதிகாரங்களையும் அறிந்துகொள்ளுதல் • அரசாங்கத்தின் செயல்முறைகளைக் கண்டு பெருமிதம் கொள்ளுதல் • அரசின் மூன்று இன்றியமையாத பிரிவுகளான சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றின் பணிகளை பற்றி அறிந்துகொள்ளுதல்

குடிமையியல்

அலகு -1

மாநில அரசு



கற்றலின்  நோக்கங்கள்

பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்துகொள்ளுதல் 

தேர்தல் நடைபெறும் முறைகளைப் பற்றி புரிந்து கொள்ளுதல்

ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரின் பணிகளையும், அதிகாரங்களையும் அறிந்துகொள்ளுதல் 

அரசாங்கத்தின் செயல்முறைகளைக் கண்டு பெருமிதம் கொள்ளுதல் 

அரசின் மூன்று இன்றியமையாத பிரிவுகளான சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றின் பணிகளை பற்றி அறிந்துகொள்ளுதல்



ஆசிரியர்: வணக்கம், குழந்தைகளே!

மாணவர்கள்: வணக்கம், ஐயா/அம்மா

ஆசிரியர்: (மாணவர்களின் வருகையைப் பதிவு செய்தபின்) இன்று அனைவரும் வருகை புரிந்துள்ளீர்கள். நன்று வாழ்த்துகள்.

உங்களுக்கு ஒரு செய்தி சொல்லட்டுமா? வரும் திங்கட்கிழமையன்று நம் பள்ளியில் விழாவொன்று நடைபெற உள்ளது. அவ்விழாவில், நீங்கள் அனைவரும் கட்டாயமாகக் கலந்துகொள்ள வேண்டும்.

யோகிதா: ஏதாவது கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளதா, ஐயா?

ஆசிரியர்: ஆம். நம் பள்ளிக்காகக் கட்டப்பட்ட புதிய கட்டடம் ஒன்றை அன்று திறக்க உள்ளோம். 

மாணவர்கள்: ஓ! அப்படியானால், இனி நாம் புதிய வகுப்பறையைப் பயன்படுத்த போகிறோம்!

முத்து: ஐயா, அந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக யார் வருகிறார்?

ஆசிரியர்: புதிய கட்டடத்தின் திறப்புவிழாவுக்குச் சிறப்பு விருந்தினராக நம்முடைய சட்டமன்ற உறுப்பினரை அழைக்க உள்ளோம்.

இரஹீம்: சட்டமன்ற உறுப்பினரா? ஐயா, இந்தப் பெயரை நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், அவர் யாரென்று எனக்குத் தெரியவில்லையே?

ஆசிரியர்: சொல்கிறேன். சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் என்கிறோம். அவர்களுள் ஒருவர்தாம், நம் பள்ளி விழாவுக்கு வருகை தர உள்ளார். அவர், நம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

சரண்: சட்டமன்றப் பேரவையா? அப்படியென்றால் என்ன ? எங்களுக்கு விளக்குங்கள், ஐயா.

ஆசிரியர்: ஓ! சொல்கிறேனே. முதலில், இந்தப் படங்களைப் பாருங்கள். (புனித ஜார்ஜ் கோட்டை, சட்டமன்றப் பேரவை, முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள் உள்ளிட்ட படங்களை ஆசிரியர், மாணவர்களுக்குக் காட்டுகிறார்.)


மீனா: ஐயா, அஃது என்ன கட்டடம்? அஃது எங்குள்ளது? அது பார்ப்பதற்குக் கோட்டையைப் போல் உள்ளதே?

ஆசிரியர்: சரியாகச் சொன்னாய். அந்தக் கோட்டை சென்னையில்தான் உள்ளது. இதுதான் ஆங்கிலேயர்களால், இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை. இந்த கோட்டையின் பெயர் புனித ஜார்ஜ் கோட்டை. தற்போது, இந்தக்கோட்டையில்தான், தமிழகச் சட்டமன்றப் பேரவையும், தலைமைச் செயலகமும் அமைந்துள்ளன. சட்டமன்றத்திலுள்ள கீழவையில்தான், மாநிலத்தின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகச் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி விவாதிப்பர்.

கயல்: ஐயா, சட்டமன்றப் பேரவையில் யாரல்லாம் உள்ளனர்?

ஆசிரியர்: சொல்கிறேன். நன்கு கவனியுங்கள். இந்தியாவிலுள்ள பல மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தனித்தனியாக நிருவாக அமைப்புகளைக் கொண்டுள்ளன. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?


இரவி: நான் சொல்லட்டுமா? நம் நாட்டில் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. யூனியன் பிரதேசங்களுள் இந்திய நாட்டின் தலைநகரான புதுதில்லியும் இதில் அடங்கும். சரிதானே, ஐயா?

ஆசிரியர்: மிகச்சரி. நான் ஏற்கெனவே கூறியது போல, இந்திய நாடு இருவகையான அரசாங்கங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, புதுதில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மத்திய அரசு; மற்றொன்று அந்தந்த மாநில அரசுகள். ஆகவே மத்திய அரசு, மாநில அரசுகளுக்கிடையே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுச் செயல்படுவதையே கூட்டாட்சிமுறை என்கிறோம். நம் இந்திய நாடு, நாடாளுமன்ற மக்களாட்சி அமைப்பைக் கொண்டுள்ளது. அரசாங்கம் நல்லமுறையில் நடைபெறுவதற்காக, இந்தியக் குடியரசுத் தலைவரும் இந்தியாவின் பிரதம மந்திரியும் அந்தந்த மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர்களும் பொறுப்புடன் செயல்படுகின்றனர். இத்தகைய அமைப்பு முறையைத்தான் மத்திய அரசாங்கம் என்கிறோம்.

நிலா: மாநிலங்களுக்கெனத் தனி அரசாங்கம் உள்ளதா, ஐயா?

ஆசிரியர்: ஆமாம். இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் தனித்தனியாக அரசாங்க அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளனர். பாராளுமன்றப் பேரவையில் உள்ளவர்களைப் பாராளுமன்ற உறுப்பினர் (பா.உ.) எனவும், சட்டமன்றப் பேரவையில் உள்ளவர்களைச் சட்டமன்ற உறுப்பினர்கள் (ச.ம.உ.) எனவும் கூறுகிறோம். ஆகவே, நம் இந்திய அரசியலமைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்தே செயல்படுகின்றன.

ஜான்: ஓ! அப்படியானால், நம் பள்ளியில் நடைபெறவுள்ள விழாவை ச. ம. உ. தான் தொடங்கி வைக்கிறாரா? அவரை யார் நியமிக்கிறார்கள்?

ஆசிரியர்: சட்டமன்ற உறுப்பினர்களை யாரும் நியமிப்பதில்லை . அவர்கள், பொதுத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நாம் முந்தைய வகுப்புகளில், அரசியல் கட்சிகளைப்பற்றி அறிந்துகொண்டது நினைவிலிருக்கிறதா? அத்தகைய அரசியல் கட்சிகள்தாம், தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றுகின்றன. தேர்தலுக்காக நாடு, மக்கள்தொகையைப் பொருத்துப் பல தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் தங்களுடைய வேட்பாளரை அரசியல் கட்சிகள் நிறுத்துகின்றன. அந்தத் தொகுதியைச் சேர்ந்த 18 வயது நிறைவடைந்த வாக்காளர்கள், தங்கள் வாக்குகளைத் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு அளிக்கின்றனர். அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றி பெறுகிறார். அவ்வாறு வெற்றி பெற்றவரையே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கிறோம். தேர்தல்களை நடத்துவதும், அவற்றைக் கண்காணிப்பதும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பணியாகும். தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், எந்தக் கட்சியில் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ, அந்தக் கட்சியே பெரும்பான்மைக் கட்சியாக உருவாகிறது. ஆளுநர், அந்தப் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை அழைத்து, மாநில அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுப்பார். பாதிக்குமேல் உள்ள தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பெரும்பான்மைக் கட்சியே மாநிலத்தில் ஆளும் கட்சியாக உருவாகிறது. பெரும்பான்மைக் கட்சிக்கு அடுத்தநிலையில், எந்தக் கட்சியில் அதிக உறுப்பினர்கள் உள்ளனரோ, அவர்களைக் கொண்டு சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சி உருவாகிறது. ஆளும் கட்சியைச் சேராத வேறு பல கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியினர் என அழைக்கப்படுவர்.


ஷண்மி : ஐயா, நீங்கள் கூறும் செய்திகள் எங்களுக்கு மிகுந்த ஆர்வத்தைத் தருகின்றன. மாநில அரசாங்கத்தில் யாரல்லாம் இடம் பெறுவார்கள் என்று கூறுங்கள்.

ஆசிரியர்: சொல்கிறேன். ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் இருப்பர். இந்தியக் குடியரசுத் தலைவர், ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆளுநரைத் நியமிப்பார். அந்த ஆளுநர், பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக நியமிப்பார். ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசித்துத் தம் கட்சியின் உறுப்பினர்களை கொண்டு அமைச்சரவையை (மந்திரி சபையை) உருவாக்குவார். அந்த அமைச்சரவை, மாநிலத்தில் ஐந்தாண்டு ஆட்சிபுரியும்.

இலயா: ஐயா, நான் ஆளுநராகவோ முதலமைச்சராகவோ வரமுடியுமா?

ஆசிரியர்: முதலில் நீ இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும். 35 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். வாழ்வில் சிறந்த நிலையில் இருக்கவேண்டும். இவை மட்டுமல்ல, எவ்வித வருவாய் தரும் எந்த ஒரு அரச பதவியிலும் இருக்கக்கூடாது. முதலமைச்சராக ஆக விரும்பினால், 25 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினராக (ச.ம.உ.) இருக்க வேண்டும். ஒருவேளை, சட்டமேலவை உறுப்பினராக (ச.மே.உ.) ஆக விரும்பினால், 30 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

ஆரியா: சட்டமேலவை உறுப்பினரா? யார் அவர்? கூறுங்கள், ஐயா.


ஆசிரியர்: மாநிலச் சட்டமன்றத்தில் / சட்டசபையில் வழக்கமாக இரு அவைகள் இடம்பெற்றிருக்கும். ஒன்று, மேலவை; மற்றொன்று கீழவை. இதனை ஈரவைச் சட்டமன்றம் / சட்டசபை என்று அழைப்பர். சட்டமன்ற மேலவை என்பது, சட்டமன்ற சபை. இதன் உறுப்பினர்கள், சட்டமேலவை உறுப்பினர்கள் என அழைக்கப்படுவர். இவர்கள், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை . கீழவை என்பது, சட்டமன்ற சபை இதன் உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களாவர். நான் முன்பே கூறியதைப்போல, சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தியாவிலுள்ள சில மாநில சட்டமன்றங்களில் மேலவை, கீழவை என்னும் ஈரவை அமைப்பு உள்ளது. ஆனால், நம் தமிழ்நாட்டில் கீழவை மட்டுமே உள்ளது. இதனை ஓரவை சட்டமன்றம் என்பர்.

அமர்: ஓ! அப்படியா! நன்கு புரிந்துகொண்டோம். ஐயா! ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரின் அதிகாரங்களையும் பணிகளையும் பற்றி எங்களுக்கு எடுத்துச்சொல்வீர்களா?

ஆசிரியர்: ஓ! கட்டாயம் சொல்கிறேன். மாநிலச் சட்டமன்றத்தின்/ ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக ஆளுநர் செயல்படுகிறார். இவர், மாநிலச் நிருவாகத்துறையின் தலைவராகவும் மகத்தான அதிகாரங்களை உடையவராகவும் திகழ்கிறார். மாநில அரசாங்கத்தின் அனைத்துச் நிருவாகத்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயரால் நடைபெறுகின்றன. மாநிலத்திலுள்ள அரசுப் பல்கலைக் கழகங்களின் வேந்தராகவும் அவர் இருக்கிறார். மாநில சட்டத்துறையால் இயற்றப்படுகிற அனைத்துச் சட்டமுன் வரைவுகளும் (மசோதாக்களும்) அவரின் ஒப்புதலுக்குப் பின்னரே சட்டமாகின்றன. மாநிலத் தலைமை வழக்குரைஞர், மாநிலப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்கள், மாநிலத்தலைமைத் தேர்தல் ஆணையர், அரசுப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் போன்றோரையும் ஆளுநரே நியமிக்கிறார்.

மாநில நிருவாகத்துறையில் பெயரளவுத் தலைவராக ஆளுநர் செயல்படுகிறார். மாநில நிருவாகத்துறையின் உண்மையான தலைவராக முதலமைச்சர் செயல்படுகிறார். முதலமைச்சர், தனது அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்கிறார். அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் மாநிலச் சட்டசபைக்குப் பொறுப்புடையவர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்றனர். மக்களின் நலனுக்கானத் திட்டங்களையும் கொள்கைகளையும் முதலமைச்சர் வகுக்கிறார்.

அரசாங்கத்தில் சட்டமன்றம், நிருவாகத் துறை, நீதித்துறை என்னும் மூன்று பிரிவுகள் உள்ளன. சட்டமன்றம், சட்டங்களை இயற்றுகிறது. நிருவாகத்துறை சட்டங்களை செயல்படுத்துகிறது. நீதித்துறை, சட்டங்களை நிலைநாட்டுகிறது.

நந்து: ஐயா, நீதித்துறை என்று நீங்கள் குறிப்பிடுவது, நீதிமன்றங்களா?


ஆசிரியர்: ஆம். மாநில அளவில், மிகப்பெரிய நீதித்துறை அமைப்பாக இருப்பது உயர்நீதிமன்றம். இவ்வமைப்பு, சுதந்திரத் தன்மையுடன் செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஓர் உயர்நீதிமன்றம் உண்டு. மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் இருப்பர். உயர்நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை . குடியரசுத் தலைவரால் தலைமை நீதிபதி நியமிக்கப்படுகிறார். தலைமை நீதிபதி, தமக்கு 62 வயது ஆகும்வரை, அந்தப் பதவியில் இருப்பார். உயர் நீதிமன்றத்தைத் தவிர, மாவட்ட அளவில் நீதிமன்றங்களும் தீர்ப்பாயங்களும் உள்ளன. அவை, எவ்விதச் சார்புமின்றி, மக்களுக்கு நீதி வழங்குவதை உறுதி செய்கின்றன. அவை மட்டுமல்லாமல், குடும்ப நல நீதிமன்றங்களும் உள்ளன. அவை, திருமணம்/குடும்பம் தொடர்பாக எழும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்துவைக்கின்றன.

மாணவர்கள்: எங்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், இன்றைய பாடம் அமைந்தன. மிக்க நன்றி, ஐயா.

ஆசிரியர்: நான் கூறுவதைக் கவனத்துடன் கேட்ட உங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் திங்களன்று நடைபெற உள்ள விழாவுக்கான ஆயத்த பணிகளை நாம்தாம் மேற்கொள்ளப் போகிறோம். ஆகவே, அதற்காக என்ன செய்யலாம் என்று சிந்திப்போம். நல்லமுறையில் ஏற்பாடுகளைச் செய்து, பாராட்டுகளைப் பெறுவோம்.


பாடச்சுருக்கம்

1. இந்தியா 29 மாநிலங்களாகவும் 7 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கென்று தனித்தனி சட்டமன்றங்களைக் கொண்டுள்ளது. 

2. மாநில அரசு ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழுவை உள்ளடக்கியதாகும். 

3. மாநில அரசின் தலைவர் கவர்னர் ஆவார். ஆளுநர் 5 ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். சட்டமன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுகிறார்.

4. மாநில அரசின் நிருவாக அதிகாரம் முதலமைச்சரிடம் உள்ளது. பெரும்பான்மைக் கட்சியின் தலைவர் முதலமைச்சராக நியமிக்கப்படுகிறார். 

5. முதலமைச்சர் மற்றும் அமைச்சரவைக் குழுவினர் சட்டமன்றத்திற்கு கூட்டு பொறுப்புடையவர்கள் ஆவர். 

6. உயர்நீதிமன்றம் மாநில அரசின் உச்சபட்சநீதியமைப்பு உயர்நீதிமன்றம் மாநிலத்தின் ஒட்டுமொத்த பரப்பிற்குமான அதிகார எல்லை உடையது.


சொற்களஞ்சியம்

1. சட்டமன்றம் - Legislative - law making body

2. மந்திரிசபை - Cabinet - the committee of senior ministers

3. நிருவாகம் சார்ந்த - Executive - administrative

4. நீதித்துறை – Judiciary - a system of courts of law


இணையச்செயல்பாடு

மாநில அரசு



நம் மாநில அரசின் துறைகளைப் - பற்றித் தெரிந்துகொள்வோம்.

படிநிலைகள் : 

படி 1: கீழ்க்காணும் உரலி /விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்க்குச் செல்லவும். 

படி 2: 'Government' என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள 'Departments' என்பதைத் தேர்வு செய்து சொடுக்குக. 

படி 3: இப்பொழுது நீங்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் பட்டியலையும் அத்துறை சார்ந்த இணையப் பக்கத்திற்கான இணைப்பையும் காணலாம். 

படி 4: குறிப்பிட்ட ஒரு துறையின் மேல் சொடுக்கி அத்துறையின் தற்போதைய அமைச்சரின் பெயர் மற்றும் புகைபடத்தையும், அத்துறையின் செயலரையும், துறை பற்றிய விளக்கமும், தொடர்பு எண்களையும் காணலாம்.


மாநில அரசு உரலி:

http://www.tn.gov.in

** படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே. 

* தேவையெனில் 'Adobe Flash' ஐ அனுமதிக்கவும்.



Tags : Term 2 Unit 1 | Civics | 7th Social Science இரண்டாம் பருவம் அலகு -1 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : Civics : Term 2 Unit 1 : State Government : State Government Term 2 Unit 1 | Civics | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : இரண்டாம் பருவம் அலகு -1 : மாநில அரசு : மாநில அரசு - இரண்டாம் பருவம் அலகு -1 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : இரண்டாம் பருவம் அலகு -1 : மாநில அரசு