Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | துணைப்பாடம்: மனித யந்திரம்

இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: மனித யந்திரம் | 8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam

   Posted On :  16.07.2023 10:31 pm

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்

துணைப்பாடம்: மனித யந்திரம்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் : துணைப்பாடம்: மனித யந்திரம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் எட்டு

விரிவானம்

மனித யந்திரம்

நுழையும்முன்

ஒரே மனிதனுக்குள் இரண்டு வகையான பண்புகள் புதைந்துகிடக்கும் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள். நல்லதையே நினைத்து, நல்லதையே செய்வது ஒன்று; தீயனவற்றைச் செய்யத் தூண்டுவது மற்றொன்று. இவற்றுள் எப்பண்பு மேலோங்கி இருக்கிறதோ, அத்தகைய செயல்களையே மனிதர்கள் செய்வர், தவறு செய்யும் எண்ணம் தோன்றும்போது அதனை அடக்கி, நேர்மையாக வாழ்வதே உயர்ந்த மனிதர்களின் இயல்பு, இக்கருத்துகள் பொதிந்த கதையொன்றை அறிவோம்.

மீனாட்சிசுந்தரம் ஒரு ஸ்டோர் குமாஸ்தா. அவருக்குச் சென்ற நாற்பத்தைந்து வருடங்களாக அதே பாதை, அதே விடு, அதே பலசரக்குக் கடையின் கமறல்தான் விதி. கடையும் மீனாட்சிசுந்தரமும் ஒன்றாக வளர்ந்தார்கள்; ஆனால் ஒட்டி வளரவில்லை. கடையில் வரவுசெலவு வளர்ந்தது; மீனாட்சிசுந்தரத்துக்குக் கவலையும் வளர்ந்தது.

மீனாட்சிசுந்தரம் பற்றுவரவுக் கணக்குகளில் உள்ள சிக்கல்களையெல்லாம் அற்புதமாகத் தீர்த்துவைப்பார். அந்தக்காலத்தில் புன்னை எண்ணெய்க் குத்துவிளக்கடியில் இரவு பன்னிரண்டுமணிவரை மல்லாடுவார். இப்பொழுதும் அந்த மல்லாட்டத்திற்கெல்லாம் குறைச்சல் இல்லை; ஆனால் இப்பொழுது மின்சாரவிளக்கும் விசிறியும் உடன்விழித்திருக்கும்.

அவரது சம்பளமும் ஆமைவேகத்தில் 'ஓடி' மாதத்துக்கு இருபது ரூபாய் என்ற எல்லையை எட்டிவிட்டது. வீட்டு வரவுசெலவுக் கணக்கு மட்டும் அவருடைய இந்திரஜால வித்தைகளுக்கெல்லாம் மீறி, உலகளந்த பெருமாளாக, சென்ற நாற்பத்தைந்து வருடங்களாகப் பெருகிக் கொண்டு வருகிறது.

மழையானாலும் பனியானாலும் ஆற்றில் குளித்துவிட்டு ஈரவேட்டியைச் சற்று உயர்த்திய கைகளால் பின்புறம் பறக்கவிட்டுக்கொண்டு, உலர்ந்தும் உலராத நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம் விகசிக்க அவர் செல்லும் காட்சியைச் சென்ற நாற்பத்தைந்து வருடங்களாகக் கண்டவர்களுக்கு நன்றாக முடுக்கிவிடப்பட்ட பழுதுபடாத யந்திரம் ஒன்று நினைவிற்கு வரும்.

மீனாட்சிசுந்தரம் மிகவும் சாது; அதாவது, விநயமாக இருக்கவேண்டும், தம்மைப் பாதுகாத்துக்கொள்ள உண்மை, நாணயம் முதலிய பழக்கங்களைக் கைக்கொள்ளவேண்டும். என்று உறுதிப்பட்டவர். ஆனால் பெட்டிப் பாம்பாக அடங்கிக்கிடக்கும் அவரது உள்ளத்தில், அலாவுதீன் ஜீனியைப்போல் ஆசை பூதாகாரமாய் விரிந்து, அவரது சித்தப்பிரபஞ்சத்தையே கவித்து ஆக்கிரமித்துக்கொண்டது,

இந்தமனம் இருக்கிறதே, மீனாட்சிசுந்தரத்துக்கும் அஃது உண்டு. நீறுபூத்த நெருப்பை வேதாந்திகள் பெரியவிஷயங்களுக்கு உபமானம் சொல்லுவார்கள். ஆசையைப் பொறுத்தவரை அந்த உபமானத்தால் மீனாட்சிசுந்தரம் பெரியமனுஷர்தான்.

'மீனாட்சியா! அந்த அப்பாவிப் பயல்!' என்று பலர் துச்சமாகக் கருதுவார்கள். முகத்திற்கெதிரேயும் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட 'அப்பாவி'ப் பிராணியின் மனத்தில் புகைந்து கவிகிறது ஆசை. வீட்டில் குழந்தைக்குப் பால் தட்டாமலிருக்க - ஏன், பால்விற்று நாலுகாசும் சம்பாதிக்க - மாடும் கன்றும் வாங்கவேண்டும்! தெற்குத்தெரு மாவன்னாவுக்கு 'மேடோவர்' செய்தநிலத்தைத் திருப்பவேண்டும். இதுமட்டுமா? கால்மேல் கால்போட்டு, 'ஏ மீனாட்சி!' என்று தாம் அழைக்கப்படுவதுபோல், தம் இஷ்டப்படி ஆட ஒரு மீனாட்சி ஸ்டோர் கடையும் கைக்குள்வரவேண்டும்.

ஒருமுறை கொழும்புக்குப் போய்விட்டுத் தங்க அரைஞாண், கடிகாரச்சங்கிலி, வாட்டசாட்டமான உடம்பு, கையில் நல்ல ரொக்கம் முதலிய சகல வைபவங்களுடனும் திரும்பவேண்டும். தெருவில் எதிரே வருகிறவர் எல்லாரும் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, பல்லை இளித்தவண்ணம் 'அண்ணாச்சி சௌக்கியமா?' என்று கேட்க வேண்டும்!

தினசரி பணப்புழக்கம் எல்லாம் அவர் கையில்தான். கடைசியாய், தனியாகக் கடையைப் பூட்டிச்சாவியை எடுத்துக்கொண்டு போகிறவரும் அவர்தான். அதேசமயத்தில்தான் கடைக்குக் கூப்பிடுகிற தூரத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் ஐந்து நிமிஷம் நின்றுவிட்டுத் தூத்துக்குடி வண்டி புறப்படுகிறது. டிக்கட் வாங்கிக்கொண்டு ராத்திரியோடு ராத்திரியாகக் கம்பி நீட்டிவிடலாம். டிக்கட்டுக்கு மட்டிலும் பணம் எடுக்கத் தினசரி கடையில் புரளும் பணம் போதும்.

மூலைத்தெருவில் மற்ற இடங்களெல்லாம் ஒடுங்கிவிட்டன. ஸ்டோரில் பெட்டியடிமேல் ஒற்றை மின்சாரவிளக்குப் பிரகாசிக்கிறது. மீனாட்சிசுந்தரம் ஓலைப்பாயில் உட்கார்ந்துகொண்டு மேஜையின் மேலுள்ள சிட்டைப்புத்தகத்தில் ஏதோ பதிந்துகொண்டு இருக்கிறார்.

சுப்புவின் கணக்கு. நாலு, நாலரை, நாலரையே மாகாணி, நாலரையே மாகாணியும் ஒரு சல்லியும், நாலரையே மாகாணி ஒரு சல்லி, ஒருதுட்டு, நாலு, ஒம்பது, அஞ்சு சல்லி!.. சவத்துப்பயலுக்குக் குடுத்துக் குடுத்துக் கட்டுமா? நாளைக்கு வரட்டும் சொல்லறேன்" நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்துவிட்டு ராமையாவின் பேரேட்டைத் திருப்பிக்கூட்ட ஆரம்பித்தார். அரைக்கால், அரையே அரைக்கால்..."

தெரிந்து தெளிவோம்

மாகாணி, வீசம் போன்றவை அக்காலத்தில் வழக்கிலிருந்த அளவைப்பெயர்களாகும்.

அணா, சல்லி, துட்டு என்பது அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த நாணயப் பெயர்கள் ஆகும். பதினாறு அணாக்கள் கொண்டது ஒரு ரூபாய். அதனால்தான் இன்றும் பேச்சுவழக்கில் அரை ரூபாயை எட்டணா என்றும் கால் ரூபாயை நாலணா என்றும் கூறுகின்றனர்.

மீனாட்சிசுந்தரத்துக்கு மனம் கணக்கில் லயிக்கவில்லை. பெட்டியில் மூடி வைத்தார். 'தூத்துக்குடி வண்டி இன்னும் புறப்படவில்லையே!' என்ற எண்ணம் திடீரென்று உதித்தது. 'சவத்தைக் கட்டி எத்தனை நாள்தான் மாரடிப்பது!' என்று முணுமுணுத்தார். நெற்றியில் குபீர் என்று வியர்வை எழும்பியது. பெட்டிச்சொருகை அனாவசிய பலத்தை உபயோகித்து வெளியே இழுத்தார். உள்ளேயிருந்த சில்லறையும் ரூபாயும் குலுங்கிச் சிதறின. செம்பு, நிக்கல், வெள்ளி என்று பாராமல் மடமடவென்று எண்ணினார். நாற்பதும் சில்லறையும் இருந்தது. அவசர அவசரமாக எடுத்து மடியில் கொட்டிக்கொண்டு, விளக்கை அணைத்து, மடக்குச் கதவுகளைப் பூட்டினார்.

சாவிக்கொத்து கையில் இருக்கிற உணர்வுகூடஇல்லாமல் வேகமாக ஸ்டேஷனை நோக்கி நடந்தார்.

'நாற்பத்தைந்து வருஷமாக உழைத்துப் போட்டும் என்ன பலன்? நாக்குக்கு ருசியாகச் சாப்பிட முடிந்ததா? என்ன பண்ணிவிடுவான்?'

கொஞ்சதூரம் சென்றபிறகுதான் செருப்பைக்கூடக் கடையிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார் என்ற உணர்வு தட்டியது.

நல்லகாலமாக எதிரில் யாரையும் காணோம். 'பார்த்தால்தான் என்ன? கடையைப் பூட்டினபிறகு நேரே வீட்டிற்குத்தான் போகவேண்டுமா? நம்ம நினைப்பு அவனுக்கெப்படி தெரியும்?

ஸ்டேஷனுக்கு வந்தாய்விட்டது. பெட்ரோமாக்ஸ் விளக்கடியில் தூங்கும் சில்லறைச் சிப்பந்திகள், பக்கத்து வெற்றிலைபாக்குக் கடையில் வாயடிக்கும் போர்ட்டர்கள்! வெளிக்கேட்டில் அவ்வளவு கூட்டம் இல்லை. ரயிலுக்குக் கூட்டம்இருக்காததும் நல்லதுதான் என்று நினைத்து உள்ளுக்குள்சந்தோஷப்பட்டுக்கொண்டார்.

டிக்கட்கவுண்டரில் பத்தேகாலணாவைக் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு பிளாட்பாரத்தில் நுழைந்தார். வண்டி வந்து நின்றுகொண்டிருக்கிறது. புறப்பட இன்னும் பத்து நிமிஷம். ஒருவரும் இல்லாத தனி வண்டியில் ஏறி, ஜன்னல் அண்டையில் உட்கார்ந்தார். வண்டி எப்பொழுது புறப்படும் என்பதை ஆவலாக அறிய எஞ்சின் பக்கம் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார்.


"மீனாட்சிசுந்தரம்... ஏது இந்த ராத்திரியில்!" என்றது கம்பீரமான ஒருகுரல். வேறு ஒருவரும் இல்லை. ரயில்வே போலிஸைச் சேர்ந்த அவரது நண்பர் கலியாணசுந்தரம். திடுக்கிட்டுத் திரும்பினார்.

போலிஸ்காரர்! மீனாட்சிசுந்தரம் நண்பரைப் பார்க்கவில்லை காக்கி உடையைத்தான் பார்த்தார்! தன்னையறியாமல் அவரது வாய், "தூத்துக்குடிவரை!" என்றது.

"என்ன அவசரம்! நான் உங்களை மணியாச்சியில் பார்க்கிறேன்!" என்று சொல்லி, அளவெடுத்து வைக்கும் பெருமிதமான நடையுடன் ஸ்டேஷன் மாஸ்டரை நாடினார் கலியாணசுந்தரம்.

மீனாட்சிசுந்தரத்துக்கு நுனிநாக்குமுதல் அடித்தொண்டைவரை ஒரே வறட்சி; கண்கள்ந சுழன்றன.

"கலர்! சோடா!" என்று நீட்டினான் சோடாக்காரன். 'பூப்!' என்று ஏப்பமிட்டுக்கொண்டே ஓரணாவை அவன் கையில் கொடுத்துவிட்டுப் பலகையில்சாய்ந்து கண்ணை மூடினார். 'கலியாணி பார்த்துவிட்டானே! நாளைக்கு நம் குட்டு வெளிப்பட்டுப் போகுமே!!

ரயில் விஸில் கிரீச்சிட்டது. மீனாட்சிசுந்தரம் அவசர அவசரமாகக் கதவுப்பக்கம் வந்து ரயிலை விட்டு இறங்கினார்.

மெதுவாக, நிதானமாக ஸ்டேஷனைவிட்டு வெளியேறி ஸ்டோர்பக்கமாக நடந்தார். வழியில் சிறிதுதூரம் செல்கையில்தான் பாஸ் இல்லாமல் எப்படிக் கப்பலில் செல்வது என்ற ஞாபகம் வந்தது. 'புத்தியைச் செருப்பால்தான் அடிக்கணும்!' என்று சொல்லிக்கொண்டார். அவருக்குத் தமது ஆபத்தான நிலைமை அப்பொழுதுதான் தெளிவாயிற்று. உடல்நடுங்கியது.

ஸ்டோருக்கு வந்துவிட்டார். கதவைத் திறந்து, விளக்கை ஏற்றினார். மடியில் இருந்த சில்லறையைப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, சிட்டையை எடுத்து, 'மீனாட்சி பற்று பதினொன்றே காலணா' என்று எழுதினார்.


மறுபடியும் விளக்கு அனைந்தது. காலில் செருப்பை மாட்டிக்கொள்ளும் சப்தம்; பூட்டு கிளிக் என்றது.

முதலாளி வீட்டை நோக்கிச் சருக்கருக்கென்ற செருப்புச் சப்தம்.

முதலாளி காற்றுக்காக வெளியே விசிப்பலகையில் தூங்குகிறார்.

"ஐயா! ஐயா!" என்றார் மீனாட்சிசுந்தரம்.

ஐயா.

"என்னவே, இவ்வளவு நேரம்!" என்று புரண்டுகொண்டே கொட்டாவிவிட்டார் முதலாளி

இல்லே, சோலி இருந்தது. எம்பத்துலே இன்னக்கி பதினொண்ணேகாலணா எழுதியிருக்கேன்!" என்றார் மீனாட்சிசுந்தரம். அப்பொழுதும் அந்த நாவறட்சி போகவில்லை.

"சரி! விடியனெ வரப்போ மூக்கனெ வண்டியைப் போட்டுக்கிட்டு வரச்சொல்லும். சந்தைக்குப் போகணும்!" என்றார். சொல்லிவிட்டுக் கொடுங்கையைத் தலைக்கு வைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டார்.

மீனாட்சிசுந்தரம் முதலாளி ஐயாவைச் சற்றுநேரம் பார்த்துக்கொண்டே நின்றார். அப்புறம் மெதுவாகத் திரும்பி நடந்தார்.

 

நூல் வெளி


சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர் என்று இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர். நூற்றுக்குமேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். சில திரைப்படங்களுக்குக் கதை, உரையாடலும் எழுதியுள்ளார். கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம், ஒருநாள் கழிந்தது போன்றன இவரது சிறுகதைகளுள் புகழ்பெற்றவை.

மணிக்கொடி இதழில் வெளியான புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

Tags : Chapter 8 | 8th Tamil இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam : Supplementary: Manitha endhiram Chapter 8 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் : துணைப்பாடம்: மனித யந்திரம் - இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்