Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | துணைப்பாடம் : நன்மையே நலம் தரும்

பருவம் 3 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம் : நன்மையே நலம் தரும் | 5th Tamil : Term 3 Chapter 3 : Manitham, allumai

   Posted On :  24.07.2023 06:04 am

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை

துணைப்பாடம் : நன்மையே நலம் தரும்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை : துணைப்பாடம் : நன்மையே நலம் தரும் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

துணைப்பாடம்

நன்மையே நலம் தரும்


தமிழ்மணியின் வீட்டில் அழகிய தோட்டம் ஒன்று இருந்தது. வண்ண வண்ண மலர்களும் பயன் தரும் செடி, கொடிகளும் அங்கு நிறைந்திருந்தன. தோட்டத்தின் அருகிலேயே சில மரங்களும் இருந்தன. அதனால், அந்த இடத்தில் எப்போதும் குளிர்ச்சியும் தூய்மையான காற்றும் இருந்துகொண்டே இருக்கும்.

மாலைநேரத்தில் தமிழ்மணி அங்குள்ள மரக்கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடுவான். ஒருநாள், அங்கிருந்த ஒரு மரக்கிளையில் பறவையொன்றின் கூட்டைக் கண்டான். பெற்றோரிடம் இதுபற்றிக் கூறினான். அவன் தந்தை, "ஆமாம், தமிழ்மணி! நான் நேற்றே பார்த்துவிட்டேன். இரண்டோ மூன்றோ பறவைக் குஞ்சுகள் இருக்கின்றன. அவற்றின் கீச்...கீச்... ஒலியை நீயும்கூட கேட்கலாம்" என்றார்.


அப்பா, தாய்ப்பறவை இல்லாத நேரத்தில நான் அந்தப் பறவைக் குஞ்சுகளை எடுக்கட்டுமா" என்றான் தமிழ்மணி. உடனே அவன் அம்மா, நீ அப்படியெல்லாம் செய்யக்கூடாது. தாயிடமிருந்து பிரித்துவிட்டால், அவை மிகுந்த துன்பமடையும்" என்று அறிவுறுத்தினாள். சரி, சரி என்று தலையாட்டிக்கொண்டே விளையாடச் சென்றான் அவன்,

தமிழ்மணிக்கு அன்று பிறந்தநாள். கொண்டாட்டத்துக்குச் சொல்லவா வேண்டும்? போன ஆண்டைவிட இந்த ஆண்டு, அவனுக்கு நண்பர் கூட்டம் அதிகரித்திருந்தது. தன் பெற்றோரிடம் தனக்கு என்னென்ன வேண்டும்? பிறந்த நாள் விழாவுக்கு எத்தனை நண்பர்கள் வருவார்கள்? என்றெல்லாம் அவன் முன்பே சொல்லி வைத்திருந்தான். அதனால், அவன் பெற்றோரும் விழாவுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

மாலை மூன்று மணியிலிருந்தே நண்பர்கள் தமிழ்மணியின் வீட்டுக்கு வரத் தொடங்கினர். தோட்டத்தைப் பார்த்ததும் அவர்களுக்குக் கட்டுக்கடங்கா மகிழ்ச்சி ஏற்பட்டது. சிலர் அங்கிருந்த பூக்களைப் பறித்துக் கீழே போட்டனர். சிலர், இலைகளைச் சுருட்டி அடுத்தவர் காதில் ஊதினர். ஊஞ்சலில் ஏறியும் இறங்கியும் சிலர் விளையாடினர். சிலர், மரத்திற்கு மரம் ஓடிப்பிடித்து விளையாடினர். தமிழ்மணியும் அவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டிருந்தான்.

அச்சமயம், அவன் நண்பன் ரஷீத் மரத்தின் மேலிருந்த பறவைக்கூட்டைப் பார்த்தான். "எல்லாரும் இங்க பாருங்க, சின்னச் சின்னதாப் பறவைக்குஞ்சுகள் இருக்கும்போல, கீச்... கீச்னு சத்தம் கேட்குது என்றான் ரஷீத். அங்கங்கே விளையாடிக் கொண்டிருந்த நண்பர்கள் எல்லாம் பறவைக்கூடு இருந்த மரத்தினருகே ஒன்றுகூடினார்கள்.


அப்போது, யாரும் எதிர்பாரா வகையில் மற்றொரு நண்பன், பீட்டர் திடீரென அந்தக் கூட்டின் மீது கல்லெறிந்தான். நல்லவேளை! அவன் எறிந்த கல், கிளையில் பட்டு, அருகிலிருந்த பூந்தொட்டியின் மீது விழுந்தது. இதைப் பார்த்ததும், தமிழ்மணிக்குச் சினம் பொங்கியது.

"பீட்டர், ஏன் இப்படி செய்தாய்? அந்தப் பறவைக்குஞ்சுகள் பாவம் இல்லையா? நீ எறிந்த கல் அந்தச்சின்னஞ்சிறிய பறவைக் குஞ்சுகளின்மேல் பட்டிருந்தால் என்னவாயிருக்கும்? உன் வீட்டை யாராவது இடித்துத் தள்ளினால், நீயும் உன் குடும்பத்தாரும் என்ன செய்வீர்கள்? அதுபோன்றுதானே அந்தப் பறவைகளின் நிலையும். இதை ஏன் நீ புரிந்து கொள்ளவில்லை" என்று படபடவெனப் பேசினான் தமிழ்மணி.

தன்னுடைய இழிவான செயலை நினைத்த பீட்டர், என்ன சொல்வதென்றுதெரியாமல் தலைகுனிந்து நின்றான். "தமிழ், என்னை மன்னித்துவிடுடா, நான் அறியாமல் செய்த தவற்றை எண்ணி வருந்துகிறேன். இனி எப்போதும் இதுபோன்ற தவறுகளைச் செய்ய மாட்டேன்" என்று வருத்தத்துடன் கூறினான் பீட்டர். அவன் கூறியதைக் கேட்ட மற்ற நண்பர்கள், "அவன்தான் தவற்றை ஒப்புக்கொண்டானே, மன்னித்துவிடுடா, அவன் மட்டும் இல்லே நாங்களும் இதுபோன்று தவறு செய்யமாட்டோம்" என்று கூறினர்.

அப்போது அங்கு வந்த தமிழ்மணியின் பெற்றோர் நடந்ததை அறிந்துகொண்டனர். "நம்மைப்போலத்தான் இவ்வுலகில் எல்லா உயிர்களும் வாழ்கின்றன. அவற்றிடம் நாம் அன்புகாட்ட வேண்டும். மற்ற உயிர்களுக்குச் செய்யும் தீங்கு, நமக்கு நேர்ந்தது போன்று உணர வேண்டும். நமக்கு வலித்தால் அவற்றிற்கும் வலிக்கும் அல்லவா" என்றார் தமிழ்மணியின் தந்தை.

அவர் கூறியதைப் புரிந்துகொண்ட தமிழ்மணியும் நண்பர்களும் "இனி நாங்கள் யாரையும் துன்புறுத்த மாட்டோம்" என்று உறுதி கூறினர். தாங்கள் கூறியதை மெய்ப்பிப்பதுபோல், கொண்டு வந்த தின்பண்டங்களையும் சிறுதானியங்களையும் பறவைகளுக்குக் கொடுத்தனர்.

மேலும், தாம் பார்க்கும் இடங்களிலும் பள்ளியிலும் பறவைகளின் கூடுகளைக் கண்டால், அவற்றைக் கலைக்காமல் பாதுகாப்போம் என்று உறுதி பூண்டனர்.

பறவைகளுக்குத் தானியங்களும் தண்ணீரும் கொடுத்து உதவுவோம் என்று கூறி உறுதி அளித்தனர். பிறர்க்கு உதவுவதே சிறந்த பிறந்த நாள் பரிசு என்று கூறித் தமிழ்மணியை அனைவரும் வாழ்த்திச் சென்றனர்.

Tags : Term 3 Chapter 3 | 5th Tamil பருவம் 3 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 3 Chapter 3 : Manitham, allumai : Supplementary: Nanmaiya nalam tharum Term 3 Chapter 3 | 5th Tamil in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை : துணைப்பாடம் : நன்மையே நலம் தரும் - பருவம் 3 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை