Home | 3 ஆம் வகுப்பு | 3வது தமிழ் | தமிழ்மொழியின் பெருமை

பருவம் 3 இயல் 7 | 3 ஆம் வகுப்பு தமிழ் - தமிழ்மொழியின் பெருமை | 3rd Tamil : Term 3 Chapter 7 : Tamil mozhyen perumai

   Posted On :  02.07.2022 09:02 pm

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 7 : தமிழ்மொழியின் பெருமை

தமிழ்மொழியின் பெருமை

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 7 : தமிழ்மொழியின் பெருமை

7. தமிழ் மொழியின் பெருமை


உலகில் உள்ள மொழிகளுள் மிகவும் தொன்மை வாய்ந்தது தமிழ்மொழி. ‘அமிழ்தினும் இனிய மொழியாக’ நம் தமிழ்மொழி விளங்குகிறது. தமிழ், தமிழ் என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் காதில் 'அமிழ்து, அமிழ்து’ எனத் தேனாய்ப் பாய்வதை உணர்வீர்கள். அதனால்தான், பாரதியாரும்,

'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் 

தேன் வந்து பாயுது காதினிலே 

என்று பாடியுள்ளார். மேலும்,

'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்' 

எனத் தமிழைப் போற்றிப் புகழ்கிறார்.

'தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' 

எனப் பாரதிதாசனாரும் தமிழின் பெருமையைக் கூறுகிறார்.

இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் இணைந்தது, முத்தமிழ். இம்மூன்று துறைகளின் கீழ் தமிழ்மொழியின் வெளிப்பாட்டைக் காணலாம்.

எழுத்து நடை வாயிலாக வெளிப்படுவது, இயல் 

பாடல்கள் மூலம் வெளிப்படுவது, இசை 

அங்க அசைவுகளுடன் வெளிப்படுவது, நாடகம்


பழங்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், அணிகலன்கள், பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள அகழாய்வுகள் உதவுகின்றன. அண்மையில் சிவகங்கை மாவட்டத்தில் 'கீழடி' என்னுமிடத்தில் நடைபெற்ற அகழாய்வில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்மொழி 'ஆதித் தமிழர் மொழி’ என்பது புலப்படுகிறது.

கணியன் பூங்குன்றனார் எழுதிய 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்னும் புறநானூற்றுப்பாடல் தொடர் இன்றளவிலும் ஐக்கிய நாடுகள் அவையில் தமிழ்மொழியின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

நடுவண் அரசு 12.10.2004 ஆம் ஆண்டு தமிழ்மொழியானது, பிறமொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் திறனுள்ள 'செம்மொழி’ என அறிவித்துள்ளது. இது தமிழ்மொழிக்கு வளமை சேர்ப்பதாக உள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டுகளை விளக்கும் பாறை ஓவியங்கள், கல்வெட்டுகளில் காணப்படும் அரசர்களின் கொடை பற்றிய செய்திகள், இலக்கியங்கள் குறிப்பிடும் பண்பாட்டுக் கூறுகள் போன்ற யாவும் தமிழர்களின் வீரம், கொடை, பண்பாடு, விருந்தோம்பல் முதலான பண்புகளைத் தெளிவாக விளக்குகின்றன.

'தமிழன் என்று சொல்லடா 

தலை நிமிர்ந்து நில்லடா' 

என்னும் பாடல் வரிகள், தமிழர்களின் பெருமையைக் கூறுகின்றன. தமிழர்களின் எழுத்து, சொல், உணர்வு, ஒழுக்கம், வாழ்வு, பண்பாடு ஆகியவற்றைத் தமிழின் தொன்மை இலக்கணநூலான தொல்காப்பியம் எடுத்துக் கூறுகிறது. உலக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சிறப்புப் பெற்று விளங்கும் நூல், திருக்குறள். 'உலகப் பொதுமறை' என்று அழைக்கப்படும் இந்நூலில், தமிழரின் வாழ்வியல் நெறிகள் காணப்படுகின்றன.

தமிழ்மொழியின் சிறப்பை உணர்ந்த அயல்நாட்டார் பலரும் தமிழைக் கற்றுக் கொண்டதோடு, தமிழில் பல இலக்கண, இலக்கியங்களையும் படைத்துள்ளனர். திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்தவர், ஜி. யு. போப். இவர், ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார். தம்மைத் 'தமிழ் மாணவன்’ என்றே உலகோர் அறியச்செய்தார்.

நம் தாய்மொழியான தமிழ், ஈராயிரம் ஆண்டுக்குமேல் பேச்சிலும் எழுத்திலும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. நாளும் பொலிவுடன் வளர்தமிழாய் தன் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்தி வருகிறது. ஆகவே, இன்னும் எத்தனையோ ஆண்டுகள் பிறரை வாழ வைக்கவும், வழிநடத்தவும் திறமையுள்ள மொழியாக விளங்கும் நம் தமிழ்மொழியை உலகில் உள்ளோர் பாராட்டும் வகையில் மென்மேலும் உயர்த்த உறுதுணையாக இருப்போம்.

Tags : Term 3 Chapter 7 | 3rd Tamil பருவம் 3 இயல் 7 | 3 ஆம் வகுப்பு தமிழ்.
3rd Tamil : Term 3 Chapter 7 : Tamil mozhyen perumai : Tamil mozhyen perumai Term 3 Chapter 7 | 3rd Tamil in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 7 : தமிழ்மொழியின் பெருமை : தமிழ்மொழியின் பெருமை - பருவம் 3 இயல் 7 | 3 ஆம் வகுப்பு தமிழ் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 7 : தமிழ்மொழியின் பெருமை