பருவம் 3 இயல் 2 | 3 ஆம் வகுப்பு தமிழ் - தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும் | 3rd Tamil : Term 3 Chapter 2 : Tukananguruvium ottagachivengiyum
2. தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும்
காட்டில் இருந்த பெரிய மரம் ஒன்றின் கிளையில் தன் குஞ்சுகளுடன் கூட்டில் தூக்கணாங்குருவி ஒன்று வசித்து வந்தது. அதன் குஞ்சுகள், கீச்...... கீச்.... என்று ஒலி எழுப்பி மகிழ்ச்சியுடன் இருந்தன. அப்போது அந்த வழியாக ஒட்டகச்சிவிங்கி ஒன்று வந்தது.
ஒட்டகச்சிவிங்கி: அப்பாடா... என்ன வெயில்... என்ன வெயில் .... இந்த மரத்தின் அடியில் கொஞ்ச நேரம் ஒதுங்கலாம். என நினைத்தது. அப்போது தூக்கணாங்குருவி குஞ்சுகள் மகிழ்ச்சியுடன் சத்தமிட்டுக் கொண்டிருந்தன... என்ன ஒரே சத்தம்! என ஒட்டகச்சிவிங்கி மேலே பார்த்தது. மரக்கிளையில் உள்ள கூட்டில் இருந்த தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் சத்தமிட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்து கோபம் கொண்ட, ஒட்டகச்சிவிங்கி மரக்கிளையைப் பிடித்து உலுக்கியது.
தூக்கணாங்குருவி: ஏ! ஒட்டகச்சிவிங்கியே! ஏன் மரக்கிளையை உலுக்குகிறாய்? என் கூட்டிலுள்ள குஞ்சுகள் பயப்படுகின்றன.
ஒட்டகச்சிவிங்கி: உன் குஞ்சுகள் கத்துவது எனக்குப் பிடிக்கவில்லை.
(அப்போது... தேனீ ஒன்று பறந்து வந்து மரத்தில் உள்ள பூவில் அமர்ந்தது)
தேனீ: ஒட்டகச்சிவிங்கியே! மரம் அனைவருக்கும் பொதுவானது. தூக்கணாங்குருவி கூடு கட்டி வாழ்கிறது. உனக்கு ஓய்வெடுக்க நிழல் தருகிறது. எனக்கு இம்மரத்தில் உள்ள பூக்களில் இருந்து தேன் கிடைக்கிறது. எனவே நாம் அனைவரும் நண்பர்களாக இருப்போம்.
ஒட்டகச்சிவிங்கி: இல்லை! இல்லை! நான் உங்களுடன் சேர முடியாது. எனக்கு இந்தக் குஞ்சுகள் கத்துவது பிடிக்கவில்லை.
(மீண்டும் மரக்கிளையை ஒட்டகச்சிவிங்கி உலுக்கியது)
தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் பயந்து, காப்பாத்துங்க.... காப்பாத்துங்க என மீண்டும் அலறின.
தேனீ: நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். அருகில் உள்ள குளத்தில் புத்திசாலித் தவளை வாழ்ந்து வருகிறது. அதனிடம் சென்று உதவி கேட்போம்.
(தேனீ, ஒட்டகச்சிவிங்கியின் அடாத செயலை தவளையிடம் கூறியது. தூக்கணாங்குருவியும் தன் நிலையைக் கூறித் தவளையிடம் உதவி கேட்டது)
தவளை: உங்களுக்குக் கட்டாயம் உதவுகிறேன். தண்ணீர் குடிக்க வரும் போதெல்லாம் இந்த ஒட்டகச்சிவிங்கியின் கால்களில் மிதிபட்டு எங்கள் இனம் அழிந்து போகிறது. அதனால், நாம் படும் துன்பம் அதற்குத் தெரியவில்லை. அதற்கும் அந்த நிலை ஏற்பட்டால்தான், தானாகவே புரிந்துகொள்ளும் போலிருக்கிறது.
(மறுநாள், ஒட்டகச்சிவிங்கி வழக்கம்போல் அந்த மரத்தின் அருகில் வருகிறது.)
ஒட்டகச்சிவிங்கி: அப்பாடா! இன்று கொஞ்சம் வெயில் பரவாயிலே. அட, அது என்ன? அந்தத் தேனீக்கூட்டம் எப்போது பார்த்தாலும் ஙொய்...ஙொய்..னு சத்தம் போடுதே. இரு, இரு, இப்ப உங்களை என்ன செய்றேன் பாருங்க.
தேனீக்களின் கூட்டை ஒட்டகச்சிவிங்கி, தன் தலையால் தட்டிக் கலைக்கிறது. சினம் கொண்ட தேனீக்கள், ஒட்டகச்சிவிங்கியின் காதைக் கடிக்கின்றன. வலி பொறுக்கமுடியாமல், ஒடகச்சிவிங்கி அருகிலிருந்த குளத்தில் விழுகிறது. அது விழுந்ததால் அங்கிருந்த தவளைகள், அதன் உடலின்மீது அங்குமிங்கும் ஓடுகின்றன. தண்ணீரிலிருந்து தட்டுத்தடுமாறி எழுந்த ஒட்டகச்சிவிங்கி, மீண்டும் மீண்டும் கூச்சம் தாங்காமல் தண்ணீரில் விழுகிறது. தேனீக்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன.
ஒட்டகச்சிவிங்கி: ஐயோ தேனீக்களே என்னை கொட்டாதீர்கள். தவளைகளே என் மீது ஏறாதீர்கள் - என்று கத்தியது
நமக்கு ஏற்பட்டதுபோலத்தானே அந்தத் தூக்கணாங்குருவிகளுக்கும் ஏற்பட்டிருக்கும். தங்கள் கூட்டைக் கலைத்ததால்தானே அந்தத் தேனீக்களும் என்னைக் கொட்டின. பாவம், அந்தத் தவளைகள் எத்தனை முறை அவற்றை நான் காலால் மிதித்திருக்கிறேன். எனக்கு வலித்ததுபோல அவற்றிற்கும் வலித்திருக்கும் என்று ஒட்டகச்சிவிங்கி, தான் செய்த தவற்றை எண்ணுகிறது. இனிமேல், யாருக்கும் தொல்லை தரமாட்டேன். துன்பம் செய்ய மாட்டேன் என்று உண்மையாகவே மனம் வருந்தியது ஒட்டகச்சிவிங்கி. மேலும், தன் தவற்றைப் பொறுத்துக் கொள்ளுமாறு அனைவரிடமும் வேண்டியது. பின்னர், அனைவரோடும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது.
நீதிக் கருத்து: நல்லதே நினைப்போம்! நன்மை பெறுவோம்!