Home | 3 ஆம் வகுப்பு | 3வது தமிழ் | உண்மையே உயர்வு

பருவம் 2 இயல் 1 | 3 ஆம் வகுப்பு தமிழ் - உண்மையே உயர்வு | 3rd Tamil : Term 2 Chapter 1 : Unmaiya uyarvu

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : உண்மையே உயர்வு

உண்மையே உயர்வு

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : உண்மையே உயர்வு

1. உண்மையே உயர்வு



கதைப்பாடல் 

உப்பு மூட்டை சுமந்துதான் 

கழுதை ஒன்று வந்தது 

ஓடை கடக்கும் நேரத்தில் 

நீரில் மூட்டை விழுந்தது 


உப்பு நீரில் கரைந்தது 

எடை குறைந்து போனது 

நனைந்த மூட்டை அதனையே 

கழுதை முதுகில் ஏற்றியே 


உரிமையாளர் கழுதையை 

வேகமாக ஓட்டினார் 

உப்பு எடை குறைந்ததால் 

கழுதை மகிழ்ந்து சென்றது. 


நாள்தோறும் உப்பு மூட்டையை 

கழுதை மீது ஏற்றினார் 

ஓடைக் கரையில் வந்ததும் 

அசைத்துக் கீழே தள்ளிடும் 


எடையும் குறைந்து போய்விடும் 

கழுதை மகிழ்ச்சி கொண்டிடும் 

புரிந்துகொண்ட உரிமையாளர் 

பாடம் புகட்ட எண்ணினார் 


அடுத்த நாளும் வந்தது 

பஞ்சு மூட்டை ஒன்றையே 

கழுதை மீது ஏற்றினார் 

ஓடைக்குள்ளே வந்ததும் 


அசைத்துக் கீழே தள்ளியது 

எடை குறையும் என்றுதான் 

உப்பைப் போல நினைத்தது 

நீரில் நனைந்த பஞ்சுகளால் 


எடையும் அதிகம் ஆனது 

உரிமையாளர் மூட்டையை 

கழுதை முதுகில் ஏற்றினார் 

கனத்த மூட்டை அழுத்தவே 


கழுதை வருந்தி அழுதது 

உண்மையான உழைப்புத்தான் 

வாழ்வில் உயர்வைத் தந்திடும் 

ஏய்த்துப் பிழைக்க எண்ணினால் 

என்றுமில்லை வெற்றியே!


பாடல் பொருள்

உரிமையாளர், தம் கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஓடை வழியே சென்றார். ஓடையைக் கடந்து செல்லும்போது, கழுதையின் முதுகிலிருந்த மூட்டைகள் நீரில் விழுந்தன. அதனால், உப்பு கரைந்து எடை குறைந்தது. எடை குறைவதை அறிந்துகொண்ட கழுதை, நாள்தோறும் ஓடைநீரில் மூட்டைகளை அசைத்துத் தள்ளியது. கழுதையின் ஏமாற்று வேலையைப் புரிந்துகொண்ட உரிமையாளர், அதற்குப் பாடம் புகட்ட எண்ணினார். மற்றொரு நாள் உரிமையாளர், கழுதையின் முதுகில் பஞ்சுமூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஓடை வழியே சென்றார். அவரை ஏமாற்ற நினைத்த கழுதை, மூட்டைகளை அசைத்து நீரில் தள்ளியது. ஆனால், நீரில் நனைந்ததால் பஞ்சுமூட்டைகளின் எடை கூடின. உரிமையாளரை ஏமாற்ற நினைத்துத் தன்னைத்தானே கழுதை ஏமாற்றிக்கொண்டது. ஆகையால், உண்மையான உழைப்பே உயர்வு தரும். பிறரை ஏமாற்றி நாம் வாழ்தல் கூடாது.


மீண்டும் மீண்டும் சொல்லலாமா?

கூவுற கோழி கொக்கரக் கோழி

கொக்கரக் கோழி கொழு கொழு கோழி

கொழு கொழு கோழி கொத்தற கோழி

தோணி மேலே கோணி

கோணி மேலே அணில்

அணில் கையில் கனி


மொழியோடு விளையாடு

சொற்களைக் கூறுவோம் கைகளைத் தட்டுவோம் 



மாணவர்களை வட்டமாக நிற்கச் செய்க. உப்பு, உடை, உண்டியல், போன்று 'உ' எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கூறினால் மாணவர்கள் ஒருமுறை கையைத் தட்டவேண்டும். கழுதை, கடை, கண் போன்ற 'க' என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கூறினால் இருமுறை கையைத் தட்டவேண்டும். இவை அல்லாத சொற்களைக் கூறினால் கைகளைத் தட்டக்கூடாது. இவ்வாறு எழுத்துகளை மாற்றி விளையாடிப் பார்க்கலாம்.




Tags : Term 2 Chapter 1 | 3rd Tamil பருவம் 2 இயல் 1 | 3 ஆம் வகுப்பு தமிழ்.
3rd Tamil : Term 2 Chapter 1 : Unmaiya uyarvu : Unmaiya uyarvu Term 2 Chapter 1 | 3rd Tamil in Tamil : 3rd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : உண்மையே உயர்வு : உண்மையே உயர்வு - பருவம் 2 இயல் 1 | 3 ஆம் வகுப்பு தமிழ் : 3 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : உண்மையே உயர்வு