Home | 4 ஆம் வகுப்பு | 4வது தமிழ் | வேலைக்கேற்ற கூலி

பருவம் 2 இயல் 9 | 4 ஆம் வகுப்பு தமிழ் - வேலைக்கேற்ற கூலி | 4th Tamil : Term 2 Chapter 9 : Velaikattra kuli

   Posted On :  27.07.2023 09:21 am

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 9 : வேலைக்கேற்ற கூலி

வேலைக்கேற்ற கூலி

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 9 : வேலைக்கேற்ற கூலி

9. வேலைக்கேற்ற கூலி

அழகாபுரி மன்னர், சிறந்த முறையில் ஆட்சி செய்துவந்தார். அவரது நாட்டில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். மன்னரின் புகழ், அண்டை நாடுகளுக்கும் பரவியது. அண்டை நாடுகளுள் ஒன்றான இரத்தினபுரி மன்னரும் இதனைக் கேள்விப்பட்டார். தம் நாட்டு அமைச்சர்களிடம் இதைப்பற்றி ஆலோசனை நடத்தினார்.

"நானும் சிறந்த முறையில்தானே ஆட்சி நடத்துகிறேன். ஆனால், என்னை மட்டும் ஏன் யாரும் புகழவில்லை? என்று அமைச்சர்களிடம் வினவினார். அமைச்சர்கள் விடை கூறத் தெரியாமல் விழித்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் எழுந்தார். "மன்னா, உங்கள் ஆட்சியில் நம் நாட்டு மக்களுக்கும் எந்தக் குறையும் இல்லை. ஆனால்...." என்று மெல்லிய குரலில் கூறி, நிறுத்தினார் அந்த அமைச்சர்.


"என்ன ஆனால். சொல்லுங்கள் அமைச்சரே, நான் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லையா? நான் வேறென்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்டான் மன்னன்.

"நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீர்கள். அழகாபுரி நாட்டுக்குச் சென்று, ஒருநாள் முழுவதும் அந்த நாட்டு மன்னருடன் நீங்கள் உடனிருக்கவேண்டும். அவர், தம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களிடமும் எப்படி நடந்து கொள்கின்றார் என்று அறிந்துகொண்டால், நாமும் அவற்றுள் சிலவற்றையாவது பின்பற்றலாம் மன்னா" என்று ஒரே மூச்சில் கூறி முடித்தார் அந்த அமைச்சர்.

மற்ற அமைச்சர்களும், ஆமாம் மன்னா, இவர் சொல்வதும் நல்ல யோசனைதான். அதுமட்டுமின்றி, அழகாபுரி மன்னர், உங்களிடம் மிகுந்த நட்பு பாராட்டுபவர். ஆகையால், நட்பின் நிமித்தமாக நீங்கள் ஒருநாள் அங்குச் செல்லவேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து என்று கூறினர்.

"அப்படியா? சரி, சரி. நான் நாளைக்கே புறப்படுகிறேன். எனக்கும் அழகாபுரி மன்னரின் ஆட்சிமுறையை நேரடியாகக் காண்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமல்லவா?" என்று கூறிய இரத்தினபுரி மன்னர், தம் பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய கட்டளையிட்டார்.

நட்பின் நிமித்தமாகத் தம் நாட்டிற்கு வருகை புரிந்த இரத்தினபுரி மன்னரை ஆரத்தழுவி வரவேற்றார் அழகாபுரி மன்னர். இருவரும் தத்தமது நாட்டைப் பற்றிச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், "நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். நான் அரசவைக்குச் சென்று வருகிறேன்" என்று கூறியவாறே எழுந்தார் அழகாபுரி மன்னர். "இருங்கள், மன்னா. நானும் உங்களுடனே அரசவைக்கு வர விரும்புகிறேன்" என்று துள்ளிக் குதித்து எழுந்தார் இரத்தினபுரி மன்னர். "அப்படியா, மிக்க மகிழ்ச்சி. வாருங்கள், இருவரும் சேர்ந்தே போகலாம்" என்று கூறிய அழகாபுரி மன்னர், அவரையும் உடன் அழைத்துக்கொண்டு அரசவைக்குச் சென்றார்.

அரசவையில் இரத்தினபுரி மன்னரை அனைவருக்கும் அறிமுகம் செய்து, அவரைத் தமக்குச் சமமான இருக்கையில் அமர்த்தினார் அழகாபுரி மன்னர். அப்போது, ஒருவன், தன் கைகளைக் கட்டிக்கொண்டு அவர்முன்பு பணிவாக வந்துநின்றான். அவனைப் பார்த்ததும் அழகாபுரி மன்னர், "யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.

அதற்கு அந்த ஆள், "மன்னா, நான் ஒரு விறகுவெட்டி. என் மனத்தில் சிறியதாக ஒரு குறை. உங்களிடம் கூறினால், எப்படி எடுத்துக் கொள்வீர்களோ என்று பயமாக இருந்தது. இருந்தாலும் உங்களிடம் கேட்டுவிடலாம் என்றுதான் இங்கு வந்திருக்கிறேன்" என்றான் அந்த விறகுவெட்டி.

"அடடா, நாம் இதை. ... இதைத்தானே எதிர்பார்த்தோம். இந்த அழகாபுரி மன்னர் இந்த விறகுவெட்டியின் குறையை எப்படித் தீர்த்து வைக்கிறார் என்று பார்ப்போம்" என்று ஆவலுடன் உற்றுநோக்கத் தொடங்கினார் இரத்தினபுரி மன்னர்.

'ஐயா, விறகு வெட்டுபவரே, உங்கள் மனக்குறையைச் சொல்லுங்கள். என்னால் முடிந்தஅளவு தீர்த்து வைக்கிறேன்" என்ற அழகாபுரி மன்னர்.

"மன்னா, எங்களைப் போன்றோர்க்கு நாள்தோறும் இரண்டு ரூபாய் கூலி கொடுக்கிறீர்கள். ஆனால், உங்களிடம் பணிபுரியும் அமைச்சர்களுக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறீர்களே, இது எந்த வகையில் நியாயமாகும்? இதுதான் உங்களின் சிறந்த ஆட்சிமுறையா? எங்களைச் சமமாக நடத்தாதது மிகப்பெரிய குறையாக உங்களுக்குத் தோன்றவில்லையா? என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டான் அந்த விறகுவெட்டி.

அழகாபுரி மன்னர் புன்முறுவலுடன், "என் ஆட்சியில் யாருக்கும் எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாகத்தான் இருக்கிறேன். ஆனால், உங்கள் மனக்குறையின்படி உங்களையும் அமைச்சர்களையும் நான் சமமாக நடத்தவில்லை என்று எண்ணுகிறீர்கள். கொஞ்சம் பொறுங்கள். உங்கள் ஐயத்தை இப்போதே தீர்த்து வைக்கிறேன்' என்று கூறிய மன்னர், அமைச்சர்களுள் ஒருவரை அழைத்தார். பின்னர், அவர்களிருவரையும் பார்த்து, அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதா? என்று பார்த்துவிட்டு வாருங்கள்" என்று கூறினார்.

இரத்தினபுரி மன்னர் அரசவையில் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். வெளியில் சென்ற விறகுவெட்டி, உடனே திரும்பி வந்து, "ஆம். மன்னா, அரண்மனைக்கு வெளியே ஒரு வண்டி செல்கிறது" என்றான்.

"அந்த வண்டியில் என்ன இருக்கிறது?" என்று கேட்டார், மன்னர். "இருங்கள், மன்னா. இதோ பார்த்துவிட்டு வருகிறேன்" என்று வெளியில் ஓடினான் அந்த விறகுவெட்டி. "மன்னா, அந்த வண்டியில் நெல்மூட்டைகள் இருக்கின்றன" என்றான் அவன்.

"அப்படியா? அந்த வண்டி எந்த ஊரிலிருந்து வருகிறது?" என்று கேட்ட மன்னரிடம்,"அடடா, அதைக் கேட்காமல் வந்துவிட்டேனே, சற்றுப் பொறுங்கள். இதோ வருகிறேன்" என்று கூறியவாறே ஓடத் தொடங்கினான் அந்த விறகுவெட்டி. வெளியில் சென்றிருந்த அமைச்சர் அப்போது அரசவையினுள் நுழைந்தார். அவரைப் பார்த்த மன்னர்,"ஐயா, விறகுவெட்டி. சற்று நில்லுங்கள். இதோ அமைச்சர் வந்துவிட்டார். உங்களிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடமும் கேட்கிறேன். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்" என்று கூறிய மன்னர், "அமைச்சரே, நீங்கள் என்ன பார்த்தீர்கள்? சொல்லுங்கள்" என்றார்.

அமைச்சரும் மன்னரைப் பார்த்து, "மன்னா, அரண்மனைக்கு வெளியே முப்பது நெல்மூட்டைகள் ஏற்றிய வண்டியொன்று, வளவனூரிலிருந்து அண்டை நாட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறது. நம் நாட்டில் தயாரான தரமான நெல்வகைகள் அந்த மூட்டைகளில் உள்ளன. வண்டியில் வண்டியோட்டியும் அவரின் பத்து வயது மகனும் உள்ளனர். மழை வருவதற்குள் நெல்மூட்டைகளைப் பாதுகாப்பாக இறக்கிவிட்டு, இன்று இரவுக்குள் மீண்டும் வளவனூர் திரும்பிவிட வேண்டுமென விரைந்து செல்கின்றனர்" என்று கூறி முடித்தார் அமைச்சர்.


அமைச்சர் கூறியதைக் கேட்டு, வாய் பிளந்து நின்றான் அந்த விறகுவெட்டி. அழகாபுரி மன்னர், விறகுவெட்டியைப் பார்த்து, "ஐயா, விறகுவெட்டி, உங்கள் மனத்திலிருந்த சந்தேகம் இப்போது நீங்கியிருக்கும் என்று எண்ணுகிறேன். அமைச்சருக்கு நான் கொடுக்கும் கூலி சரியானதுதானே? இப்போது சொல்லுங்கள்" என்று கூறினார்.

மன்னா என் மனக்குறை நீங்கிவிட்டது. உங்களைப்பற்றித் தவறாக எண்ணிவிட்டேன். அமைச்சரின் அறிவுக்கூர்மையையும் அவருடைய திறமையையும் கண்டுவியக்கிறேன். அவருடன் ஒப்பிடும்போது, என் அறியாமையையும் நான்உணர்ந்து கொண்டேன். நான், நான்தான். அமைச்சர், அமைச்சர்தாம். அவரவர் திறமைக்கேற்ற, வேலைக்கேற்ற கூலி கொடுப்பதுதான் நியாயம் என்பதைப் புரிந்துகொண்டேன்" என்றான் அந்த விறகுவெட்டி.

இவ்வளவு நேரமாக அரசவையில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்த இரத்தினபுரி மன்னர் தம் மனத்துக்குள், "அடடா நாம்கூட இந்த மன்னருக்குக் கிடைத்த பேரும்புகழும் எண்ணிப் பொறாமை கொண்டோமே, இப்போது உண்மையை உணர்ந்துகொள்ள நமக்கும் நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது" என்று அழகாபுரி மன்னர் தம் குடிமக்களிடம் நடந்துகொண்ட அணுகுமுறையை எண்ணி வியப்பெய்தினார். தாமும் தம் குடிமக்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதையும் அறிந்துகொண்டார்.

Tags : Term 2 Chapter 9 | 4th Tamil பருவம் 2 இயல் 9 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 2 Chapter 9 : Velaikattra kuli : Velaikattra kuli Term 2 Chapter 9 | 4th Tamil in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 9 : வேலைக்கேற்ற கூலி : வேலைக்கேற்ற கூலி - பருவம் 2 இயல் 9 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 9 : வேலைக்கேற்ற கூலி