பருவம் 1 அலகு 1 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வரலாறு என்றால் என்ன? | 6th Social Science : History : Term 1 Unit 1 : What is History?
வரலாறு
அலகு 1
வரலாறு என்றால் என்ன?
கற்றலின் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றுக்கொள்வதன் வாயிலாக,
• வரலாறு என்றால் என்ன என்று அறிந்துகொள்ளுதல்
• வரலாற்றின் சிறப்பைப் புரிந்துகொள்ளுதல்
• வரலாற்றுக்கு முந்தைய கால மனித இனத்தின் வாழ்வியல்
முறையைத் தெரிந்துகொள்ளுதல்
• பாறை ஓவியங்கள் அவர்களின் வாழ்வியல் கூறுகளை
வெளிப்படுத்துவதை அறிதல்
• வரலாறு மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தினைத்
தெரிந்துகொள்ளுதல்
பள்ளியிலிருந்து திரும்பிய தமிழினி வீட்டிற்குள் நுழைந்தாள்.
உள்ளே உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த அம்மா எழுந்து வந்து தமிழினியை வரவேற்று
அணைத்துக் கொண்டார். தமிழினியின் புத்தகப் பையை வாங்கிவைத்துவிட்டு அவளைக் கைகால்,முகம்
கழுவி வரச்சொன்னார். பின்னர், தமிழினிக்குச் சிற்றுண்டியைக் கொடுத்துவிட்டு, அன்று
வகுப்பில் நடந்தவற்றைப் பற்றி விசாரித்தார்.
அம்மா:
"தமிழினி, இன்றைக்கு என்ன பாடம் படித்தாய்?"
தமிழினி:
"வரலாறு அம்மா"
அம்மா: "அப்படியா... நன்று வரலாறு என்றால் என்ன என்று தெரிந்து கொண்டாயா?"
தமிழினி: "ஓரளவுக்குத் தெரிந்து கொண்டேன், அம்மா. நீங்கள் வரலாறு குறித்து மேலும் சில செய்திகளைச் சொல்லுங்களேன்"
உங்களுக்குச் தெரியுமா?
வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவு.
அம்மா:
"சொல்கிறேன், தமிழ். முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறாயா?
அம்மா: உன்னுடைய பெயர் என்ன?"
தமிழினி:
"தமிழினி, அம்மா..'
அம்மா:
"உன் அம்மாவின் பெயர்?"
தமிழினி:
"திருமதி. சுமதி, அம்மா'
அம்மா:
"அப்பாவின் பெயர்?"
தமிழினி:
"திரு. அதியமான்"
அம்மா:
"அப்பாவின் அப்பா பெயர் ..?"
தமிழினி:
"அது
வந்து தாத்தாவைத் தானே கேட்கிறீர்கள் அம்மா..? திரு. சிதம்பரம்.."
அம்மா:
"சிதம்பரம்
தாத்தாவின் அப்பா பெயர் தெரியுமா?"
தமிழினி:
"கொள்ளுத்தாத்தா என்று பாட்டி சொல்லுவார்களே, அவருடைய பெயரா அம்மா? "ம்ம்ம்.
அம்மா:
ஆமாம்,
தமிழினி.. உன் கொள்ளுத்தாத்தாவின் பெயர் திரு. ராமசாமி. அப்பா ஒரு பழைய கட்டைப் பேனாவை
வைத்துக்கொண்டு, இது எங்க பயன்படுத்திய பேனா, தெரியுமா?" என்று
தகவல் பேழை
வரலாறு
என்ற சொல் கிரேக்கச் சொல்லான இஸ்டோரியா' (Istoria) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன்
பொருள் "விசாரிப்பதன் மூலம் கற்றல்" என்பதாகும்.
பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பாரே, அது உனக்கு நினைவிருக்கிறதா?"
தமிழினி:
"அடடே, ஆமாம் அம்மா அப்பாவுடைய மேசையில் அழகான சிறிய மரப்பெட்டியில் வைத்திருக்கிறாரே,
சொல்கிறீர்கள்?"
அம்மா: "சரியாகச் சொன்னாய், தமிழினி. அது ஒரு பழைய பேனா.
இப்போது அதை வைத்து எழுத முடியாது. ஆனால், அப்பா அதை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறார்.
அப்பாவிடம் கேட்டால், அந்தப் பழைய பேனாவைக் கொண்டு அவரின் தாத்தா எழுதி வைத்துள்ள நாட்குறிப்புகளையும்
உனக்குக் காட்டுவார். இதன் மூலம் அக்காலத்தில் பெரும்பான்மையானவர்கள் எழுதப் படிக்கத்
தெரியாதவர்களாக இருந்தபோதிலும் உனது கொள்ளுத் தாத்தா அவரது ஊரில் எழுதப்படிக்கத் தெரிந்தவராக
இருந்துள்ளார் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? மேலும், அவர் எழுதிய
நாட்குறிப்புகளைக் கொண்டே அந்த ஊரில் அந்தக் காலகட்டத்தில் என்னவெல்லாம் நடந்தன என்பதையும்
அறிந்து கொள்கிறோம்"
தமிழினி:
"நாட்குறிப்புகளை வைத்துக் கொண்டே இவ்வளவு செய்திகளையும் தெரிந்துகொள்ள முடியுமா
அம்மா?"
அம்மா:
"முடியும் தமிழினி. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய
கற்கருவிகளைக் கொண்டு அவர்கள் வாழ்ந்த காலத்தையும், அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும்
நாம் அறிந்து கொள்வதைப் போன்றது தான் இது."
தமிழினி:
"வரலாற்றுக்கு முந்தைய மக்களின் வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ள உதவும் பிற
சான்றுகள் எவை அம்மா?"
அம்மா: பழங்கற்கால மனிதர்கள் எப்படி வேட்டையாடினார்கள் என்பதை
மலைப்பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் வரையப்பட்டுள்ள பாறை ஓவியங்களிலிருந்து தெரிந்து
கொள்கிறோம் தமிழினி".
தகவல் பேழை
நாணயவியல்
- நாணயங்கள் பற்றிய படிப்பு
கல்வெட்டியல் - எழுத்துப்பொறிப்புகள் பற்றிய
படிப்பு
தமிழினி:
"பாறை ஓவியங்களா? அதிசயமாக இருக்கிறதே! அம்மா, எதற்காக அவர்கள் பாறைகளில் ஓவியம்
தீட்டியிருப்பார்கள்?"
அம்மா:
"வேட்டைக்குப் போக இயலாமல் குகைகளிலேயே சிலர் இருப்பார்கள் அல்லவா? வேட்டைக்குப்
போனவர்கள் அங்கு நடந்தது என்ன என்பதை, தங்களோடு வர இயலாதவர்களுக்குக் காட்டுவதற்காகப்
பாறைகளிலும் குகைச்சுவர்களிலும் இப்படியான ஓவியங்களைத் தீட்டியிருக்கலாம். சில நேரங்களில்
பொழுதுபோக்காகவும் தீட்டியிருக்கலாம்.
பண்டைய மனிதர்கள், குகைகளில் வாழ்ந்தபோது, பாறைகளில் ஓவியங்கள்
வரைந்தனர். இவை பாறை ஓவியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தமது வாழ்க்கை நிகழ்வுகளைப்
பதிவு செய்வதற்காக இவ்வாறு செய்திருக்கலாம்.
தமிழினி: 'உண்மை
தான் அம்மா, அதனால் தானே இன்று நாம் அவர்களின் வாழ்க்கையை ஓரளவாவது அறிந்து கொள்ள முடிகிறது".
அம்மா:
"சரியாகச் சொன்னாய் தமிழினி வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது கற்கருவிகளை பயன்படுத்தியதற்கும்
எழுதும் முறைகளை கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட காலம் ஆகும். தொல்லியல் அடையாளங்களான
கற்கருவிகள், புதை படிமங்கள், பாறை ஓவியங்கள் போன்ற பலவற்றிலிருந்தும் வரலாற்றுத் தகவல்களைப்
பெறுகிறோம்".
அம்மா:
"வரலாற்றுத் தொடக்க காலம் (Proto History) என்றால் என்ன என்று தெரியுமா தமிழினி?".
தமிழினி:
"வரலாற்றுக்கும்,
வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கும் இடைப்பட்ட
காலம் அம்மா".
அம்மா:
"மிகச் சரி, இக்காலத்தில் எழுதப்பட்ட பதிவுகள் உள்ளன. ஆனால், அவற்றின் பொருளை
இன்னும் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.
"இப்போது நாம் நவீன கருவிகளுடன், மிகப் பாதுகாப்பாக வாழ்கிறோம்.
ஆனால் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த பழங்கால மனிதர்கள் அப்படிப் பாதுகாப்பான
சூழலில் வாழவில்லை. அவர்கள் வாழ்ந்து வந்த
குகைகளுக்குள் கொடிய விலங்குகள் நுழைந்துவிடும். அவை எதிர்பாராமல் வரும் போது மனிதர்களால்
அவற்றை அறிய முடியாமற் போனதுண்டு. ஆனால், அவர்களுடன் திரிந்து கொண்டிருந்த நாய்கள்
தமது கூர்மையான மோப்ப உணர்வினால் விலங்குகளின் வருகையை அறிந்து கொண்டு குரைத்தன. இதைக்
கண்ட மனிதர்கள், நாய்களைப் பழக்கி, தங்கள் பாதுகாப்பிற்காகவும், வேட்டையாடுவதற்காகவும்
வேட்டையாடப் போகும்போது உடன் அழைத்துச் செல்லத் தொடங்கினர்.
தெளிந்து தெரிவோம்
வலிமைமிக்க பேரரசர் அசோகர்
பண்டைய இந்திய அரசர்களில் பேரும் புகழும் பெற்ற அரசர் அசோகர்
ஆவார். இவரது ஆட்சியில் தான் புத்த மதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது.
கலிங்கப் போருக்குப் பின் பல உயிர்கள் மடிவதைக் கண்டு வருந்தி, போர் தொடுப்பதைக் கைவிட்டார்.
அதற்குப் பிறகு புத்த சமயத்தைத் தழுவி, அமைதியையும் அறத்தையும் பரப்புவதற்காகத் தன்
வாழ்வையே அர்ப்பணித்தார். பொதுமக்களுக்கு அவர் ஆற்றிய சேவை முன் மாதிரியாக விளங்கியது.
வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் அசோகர்தான். உலகிலேயே முதன்முதலாக விலங்குகளுக்கும்
தனியே மருத்துவமனை அமைத்துத் தந்தவரும் அசோகரே ஆவார். இன்றும் அவர் உருவாக்கிய சாலைகளை
நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். நமது தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள 24 ஆரக்கால்
சக்கரம் அசோகர் நிறுவிய சாரநாத் கற்றூணில் உள்ள முத்திரையிலிருந்தே பெறப்பட்டது. இதிலிருந்து
அசோகரது முக்கியத்துவத்தை நாம் அறியலாம். ஆனால், இத்தகைய சிறப்புகளைக் கொண்ட அசோகர்
குறித்த தகவல்கள், வரலாற்றின் பக்கங்களில் 19 ஆம் நூற்றாண்டு வரை இடம்பெறவே இல்லை.
ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர்களான வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்ஸாண்டர்
கன்னிங்ஹாம் போன்றவர்கள் வரலாற்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்த வரலாற்றுச் சான்றுகள்தான்
மாமன்னர் அசோகரின் சிறப்புகளை வெளி உலகிற்குக் கொண்டு வந்தன.
இதன் அடிப்படையில் சார்லஸ் ஆலன் எனும் ஆங்கிலேய எழுத்தாளர் அசோகர்
குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்துத் தொகுத்து நூலாக வெளியிட்டார். அந்த
நூலின் பெயர் 'The Search for the India's Lost Emperor'. அதற்குப் பிறகு பல ஆய்வாளர்கள்
தங்கள் ஆய்வுகள் மூலம் அசோகரின் பொற்கால ஆட்சி குறித்த செய்திகளை வெளிக்கொணர்ந்தனர்.
இதற்கான சான்றுகள் சாஞ்சி ஸ்தூபியிலும், சாரநாத் கற்றூணிலும் காணப்படுகின்றன. இவை அசோகரின்
பெருமையை நமக்கு எடுத்துச் சொல்லுகின்றன.
"இப்பெட்டிச் செய்தியின் மூலம் வரலாற்று ஆராய்ச்சிகள் எவ்வளவு
முக்கியம் என்பதை நாம் உணர முடியும். வரலாற்று ஆய்வாளர்கள் முயற்சியால்தான் அசோகர்
குறித்த வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வர முடிந்தது.
"கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள், செப்புப் பட்டயங்கள்,
வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டுப்பயணக் குறிப்புகள், நாட்டுப்புறக் கதைகள் போன்றவை
வரலாற்றைக் கட்டமைக்கவும் மறுசீரமைக்கவும் பெரிதும் உதவுகின்றன.
தமிழினி: 'வரலாறு
என்றால் என்ன என்பது இப்போது எனக்கு நன்றாகப் புரிகிறது அம்மா, நன்றி".
மீள்பார்வை
* வரலாற்றுக்கு
முந்தைய கால மக்களின் வாழ்வியலைக் கற்கருவிகள், பாறை ஓவியங்கள், புதை படிமங்கள் மற்றும்
அகழாய்வுப்பொருள்கள் அறிந்துகொள்ளலாம்.
* வரலாற்றுக்கு
முந்தைய காலத்துக்கும் வரலாற்றுக்காலத்துக்கும் இடைப்பட்டது தொடக்க கால வரலாறு எனப்படுகிறது.
* பழங்கால
மனிதர்கள் தங்கள் பாதுகாப்புக்காகவும் வேட்டைக்காகவும் நாய்களைப் பழக்கப்படுத்தினார்கள்.
* பேரரசர்
அசோகர் அமைதி, அறம் ஆகியவற்றைப் பின்பற்றினார்.
* நமது
தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள 24ஆரக்கால் சக்கரம் அசோகர் நிறுவிய சாரநாத் கற்றூணில்
உள்ள இலச்சினையாகும்.
கலைச் சொற்கள்
1 ஆதாரங்கள் - Sources
2 முன்னோர்கள் - Ancestors
3 தம்மா - Dharma
4 நினைவுச் சின்னம் - Monument
5 கல்வெட்டு - Inscription
6 வரலாற்றாசிரியர் - Historian
இணையச் செயல்பாடு
வரலாறு
என்றால் என்ன?
வரலாறு கால வரிசைப்படி அறியலாமா
படிநிலைகள்:
* கீழேக்
கொடுக்கப்பட்டிருக்கும் உரலியைத் தேடுபொறியில் தட்டச்சு செய்க அல்லது துரித துலங்கள்
குறியீட்டை ஸ்கேன் செய்க.
* http://www.readwritethink.org/files/resources/interactives/timeline_2/
* திறக்கும்
பக்கத்தில் காலக்கோடு தோன்றியிருக்கும். அதில் உங்கள் பெயர் மற்றும் செயல்திட்டத்தின்
பெயரை அந்தந்த பெட்டிகளில் தட்டச்சு செய்யவும்.
* அங்கு
உள்ள வெற்றுக்காலக்கோட்டில் சொடுக்கி தோன்றும் மெனு பெட்டியில் தேவையான விபரங்களை தட்டச்சு
செய்யவும்."choose image"-இல் படங்களை தேர்வு செய்து உள்ளீடு செய்து டிக்
குறி உள்ளதை சொடுக்கவும்.
* கால வரிசைப்படி
எல்லா விபரங்களையும் உள்ளீடு செய்த பின் "Fnish" மற்றும் "Save
Fnal" சொடுக்கி உங்கள் செயல் திட்டத்தை சேமிக்கவும்.
உரலி:
http://www.readwritethink.org/files/resources/interactives/ timeline