Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | உயிரிய மருத்துவத் தொழில்நுட்பங்கள் (Biomedical Techniques)
   Posted On :  10.01.2024 03:06 am

11 வது விலங்கியல் : பாடம் 12 : அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள்

உயிரிய மருத்துவத் தொழில்நுட்பங்கள் (Biomedical Techniques)

அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள்

உயிரிய மருத்துவத் தொழில்நுட்பங்கள் (Biomedical Techniques)


ஹீமோசைட்டோ மீட்டரைப் பயன்படுத்தி இரத்தச் செல்களை எண்ணும் முறை:

மையத்தில், எண்ணும் அறைகளைக் கொண்ட ஒரு தடித்த கண்ணாடித் துண்டம் ஹீமோசைட்டோமீட்டர் எனப்படும் கருவியாகும். இதில் இரு எண்ணும் அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையும் 3மி.மீ நீளம் மற்றும் 3 மி.மீ அகலம் கொண்ட மேம்படுத்தப்பட்ட நியூபார் (Neubauer) கோடுகளைக் கொண்டவை. இவை 'முதன்மை அறைகள்' என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு முதன்மை அறையும் 1 மி.மீ நீளம் மற்றும் 1 மி.மீ அகலம் கொண்ட 9 'இரண்டாம் நிலை' அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதன்மை அறையின் நான்கு மூலைகளிலும் உள்ள அறைகள் ஒவ்வொன்றும் 16 'மூன்றாம் நிலை' அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை வெள்ளை அணுக்களை எண்ணுவதற்குப் பயன்படுகின்றன. முதன்மை அறையின் மையத்தில் உள்ள இரண்டாம் நிலை அறை மட்டும் 0.2 மி.மீ நீளம் மற்றும் 0.2 மி.மீ அகலம் கொண்ட 25 மூன்றாம் நிலை அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்றாம்நிலை அறைகள் ஒவ்வொன்றும் 16 மிகச்சிறு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் நிலை அறைகளில் தீட்டப்பட்ட பின்னணி கொண்ட அனைத்து அறைகளும் இரத்தத்தட்டுகளை(Platelets) எண்ணுவதற்கு பயன்படுகின்றன. 25 மூன்றாம் நிலை அறைகளில் நான்கு மூலைகளிலும் உள்ள 4 அறைகளும் மத்தியில் உள்ள ஒரு அறையும் மட்டுமே சிவப்பணுக்களைக் கணக்கிடப் பயன்படுகிறது (படம் 12.10).



நீர்க்கச்செய்யும் திரவம் (Diluting Fluid)

சில குறிப்பிட்ட திரவங்களைச் சேர்த்து இரத்தச் செல்களானது உடையாமல் பாதுகாக்கப்படுகிறது. 'ஹேயம்ஸ் திரவம்' (Hayem's solution) எனப்படும் RBCக்களை நீர்க்கச் செய்யும் திரவம் இரத்தத்துடன் சம அடர்வோடு (Isotonic) காணப்படுவதால் இரத்தச் சிவப்பணு சிதைவு ஏற்படுவதில்லை. இரத்தத்தை RBC நீர்க்கச் செய்யும் திரவத்துடன் சேர்த்து 1:200 மடங்கு நீர்க்கச் செய்து 45 X பொருளருகு லென்ஸ் கொண்டு பார்க்கப்பட்டுச் செல்களானது எண்ணப்படுகிறது.

WBC நீர்க்கச் செய்யும் திரவமான 'டர்க்ஸ் திரவம்' (Turk's solution) வெள்ளை அணுக்களை எண்ணுவதற்கு உதவுகிறது. இதில் கிளேசியல் அசிட்டிக் அமிலமும் ஜென்ஷியன் வயலட்(Gentian violet) திரவமும் கலந்துள்ளது. கிளேசியல் அசிட்டிக் அமிலமானது சிவப்பணுக்களை மட்டும் சிதைவடையச் செய்கிறது. ஜென்ஷியன் வயலட்டானது வெள்ளையணுக்களின் உட்கருவைச் சாயமேற்றுகிறது. இவ்வகையில் டர்க்ஸ் திரவத்தால் இரத்தம் 1:20 மடங்கு நீர்க்கச் செய்து, வெள்ளை அணுக்களானது 10 X பொருளருகு லென்ஸ் கொண்டு பார்க்கப்படுகிறது. எண்ணப்பட்ட செல்களின் எண்ணிக்கைமி.மீ3 எனும் அலகால் குறிக்கப்படுகிறது.

ஹீமோசைட்டேமீட்டரில் RBC மற்றும் WBC பிப்பெட் என்னும் இரு வகை பிப்பெட்டுகள் உள்ளன.

1. RBC மற்றும் WBC பிப்பெட்டுகளில் தனித்தனியாக 0.5 அளவீடு வரை இரத்தம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

2. WBC பிப்பெட்டில் WBC நீர்க்கச் செய்யும் திரவத்தை 11 என்ற அளவீடு வரையிலும் RBC பிப்பெட்டில் RBC நீர்க்கச் செய்யும் திரவத்தை 101 என்ற அளவீடு வரையிலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

3. பின்பு அந்தந்தப் பிப்பெட்டுகளை கிடைமட்டமாகப் பலமுறை உருட்டி நீர்க்கச் செய்யும் திரவமும் இரத்தமும் நன்கு கலக்கச் செய்யப்படுகிறது.

4. ஹீமோசைட்டோமீட்டரின் எண்ணும் அறையின் மீது மூடுவில்லை (Cover slip) பொருத்தப்படுகிறது.

5. இப்போது, பிப்பெடின் நுனியானது எண்ணும் அறைகளுக்கும் மூடுவில்லைக்கும் இடையே கவனமாக (WBC மற்றும் RBC அறைகளில் முறையே) வைக்கப்பட்டு அந்தந்த எண்ணும் அறைகள் இரத்தம் மற்றும் நீர்க்கச்செய்யும் திரவக் கலவையால் நிரப்பப்படுகின்றன.

6. எண்ணும் அறைகளிலுள்ளள செல்கள்படிவதற்காகச் சில நிமிடங்கள் அசைவின்றி வைக்கப்பட்டுப் பின்பு ஹீமோசைட்டோ மீட்டரானது நுண்ணோக்கியில் வைத்து எண்ணப்படுகிறது.


இரத்தப்பூச்சு (Blood Smear) தயாரிக்கும்முறை

தோலுக்கடியிலுள்ள இரத்த ஓட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ஒரு கண்ணாடி வில்லையின் மீது உலர் பூச்சாக ஏற்படுத்திச் சோதனைச்சாலையில் பரிசோதிக்கப்படுகிறது. இதன் மூலம்,

1. இரத்தத்தில் உள்ள செல் வகைகளைக் கண்டறியலாம்.

2. அவற்றின் புற அமைப்பைக் கண்டறியலாம்

3. இரத்தத்தில் ஏதேனும் ஒட்டுண்ணிகள் உள்ளனவா எனக் கண்டறியலாம்.

4. வேறுபட்ட நோய்களுக்கு ஏற்றவாறு நமது உடல் செய்யும் பிரதி வினைகளைக் கண்டறியலாம்.

படம் 12.11 இரத்தப்பூச்சு உருவாக்கும் முறை 


இரத்தப்பூச்சு தயாரிக்கும் வழிமுறைகள் (படம் 12.11)


1. ஒரு தூய்மையான கண்ணாடி வில்லையை எடுத்துக்கொண்டு அதன் ஒரு முனையில் இருந்து 1 செ.மீ தூரத்தில் ஒரு துளி இரத்தத்தை வைக்க வேண்டும்.

2. மற்றொரு தூய்மையான கண்ணாடிவில்லையை எடுத்து அதன் ஒரு முனை இரத்தத்துளியில் படுமாறு 45° கோணத்தில் வைத்து விரைந்து, ஒரே வீச்சில் நகர்த்தி ஒரு மெல்லிய தீற்றலை (பூச்சை) ஏற்படுத்த வேண்டும்.

3. பூச்சின் மீது லீஷ்மன் (Leishman's stain) சாயத்தைக் கொண்டு சாயமிடவும்.

4. வில்லையைச் சிறிது நேரம் உலரவைத்த பின் அதிகப்படியான சாயத்தைக் கழுவி விடவேண்டும்.

5. இப்போது கண்ணாடி நழுவத்தை நுண்ணோக்கியில் வைத்து உற்று நோக்க வேண்டும் (படம் 12.12).



தெரிந்து தெளிவோம்

ஒரு மனிதர் தீவிரமான காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் சோர்வினால் பாதிக்கப்பட்டதால் மருத்துவரை அணுகினார். அவருக்கு என்ன விதமான நோயறியும் வழிமுறைகளை மருத்துவர் பரிந்துரைத்திருப்பார்? அதற்குப் பயன்படும் மருத்துவக் கருவியின் பெயரை எழுது.


வகைக் கணக்கெடுப்பு (Differential Count) 

நன்றாகச் சாயமேற்றப்பட்ட இரத்தப்பூச்சைக் கொண்ட கண்ணாடி வில்லையில் உள்ள வெள்ளை அணுக்களின் வேறுபட்ட வகைகளைத் தனித்தனியாகக் கணக்கிடும் முறைக்கு வகைக்கணக்கெடுப்பு (DC) என்று பெயர். இவ்விதம் கணக்கிடப்பட்ட வகைகள் ஒவ்வொன்றும் மொத்த எண்ணிக்கையில் எத்தனை சதவீதம் உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது (படம் 12.13).



11th Zoology : Chapter 12 : Basic Medical Instruments and Techniques : Basic Biomedical Techniques in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 12 : அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் : உயிரிய மருத்துவத் தொழில்நுட்பங்கள் (Biomedical Techniques) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 12 : அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள்