அலகு - IV
பாடம் - 12
அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள்
பாட உள்ளடக்கம்
12.1 பரிசோதனை மற்றும் கண்காணிப்புக் கருவிகள்
12.2 நிழலுரு கருவிகள்
12.3 சிகிச்சைக் கருவிகள்
12.4 உயிரிய மருத்துவத் தொழில் நுட்பங்கள்
சர்க்கரை நோய் மற்றும் கிளாக்கோமாவைக் கண்டறிவதற்கான நேர்த்தியான கண் ஒட்டு லென்ஸ் உணர்வி
கற்றலின் நோக்கம்:
• கருவிகளின் அடிப்படைக் கொள்கையையும் இயங்கு முறையையும் புரிந்து கொள்ளுதல்
• இரத்தச் செல்களை எண்ணுவதற்கு ஹீமோசைட்டோமீட்டரை பயன்படுத்துதல்
• இரத்தப்பூச்சை உருவாக்கி வெள்ளை அணுக்களின் வேறுபட்ட வகைகளைப் பற்றி கற்று கொள்ளுதல்.
ஒரு நபரின் உடல் நலத்தைப் பரிசோதிக்க வெப்பநிலைமானி, ஸ்டெத்தஸ்கோப், ஸ்பிக்மோமானோமீட்டர் போன்ற சில எளிய கருவிகளை மருத்துவர்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வருகின்றார்கள். கடந்த சில ஆண்டுகளாக மருத்துவத் தொழில் நுட்பமானது நன்கு வளர்ச்சியடைந்து மருத்துவத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ அனலைசர், எலக்ட்ரோகார்டியோகிராம், எலக்ட்ரோஎன்செஃபாலோகிராம், அல்ட்ராசவுண்ட்ஸ்கேனர்கள், சி.டிஸ்கேனர்கள் NMRI, ஐசோடோப் இமேஜிங் போன்ற பல்வேறுவகை, நோயறியும் மற்றும் சிகிச்சையளிக்கும் நவீன கருவிகளைக் கொண்டு இயங்கும் நவீன மருத்துவமனைகள் அதிகரித்துள்ளன. மருத்துவ சிகிச்சையில், நோயறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் என்பவை இரு முக்கியக் கூறுகள் ஆகும். நோயை அடையாளம் கண்டு நோயின் தன்மையைத் தீர்மானிக்கும் முறை 'நோயறிதல்' எனப்படும். பின்பு அந்நோய் காரணியை அகற்றிக் குணமடைய வைக்கும் செயல்பாடுகள் சிகிச்சை எனப்படும். மருத்துவ சோதனைச்சாலை ஆய்வுகள் நோயைச்சரியாக அறிதலுக்கும், சிகிச்சையளிக்கவும் ஒரு மருத்துவருக்கு உதவுகின்றன.
இவற்றுடன் முன்னேற்றமடைந்த தொலைத்தொடர்பு தொழில் நுட்பத்துடன் கூடிய தொலைதூர மருத்துவம் (Telemedicine) எனும் மருத்துவ முறையானது தற்போது கிராமப்புற மக்களின் நலவாழ்விற்கான முறையாக முன்னேற்றமடைந்து வருகிறது.
தெரிந்து தெளிவோம்
ஹெமட்டாலஜி (Haemotology) - இரத்தம் தொடர்பான நோய்களைக் கண்டறிதல், முன்கணித்தல், சிகிச்சையளித்தல் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பான மருத்துவத்துறையின் ஒரு பிரிவு.
நச்சு இயல் (Toxicology) - உயிரினங்கள் மேல் வேதிப்பொருட்கள் ஏற்படுத்தும் அபாயகரமான பாதிப்புகளையும், அதைக்கண்டறியும் முறைகளையும், நச்சுப் பொருட்களிலிருந்தும் நஞ்சூட்டிகளிலிருந்தும் ஏற்படும் தாக்கங்களுக்கு சிகிச்சையளிக்கும் முறைகளையும் கொண்ட அறிவியல் பிரிவு.