Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | பரிசோதனை மற்றும் கண்காணிப்புக் கருவிகள் (Diagnostic and Monitoring Instruments)
   Posted On :  10.01.2024 01:41 am

11 வது விலங்கியல் : பாடம் 12 : அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள்

பரிசோதனை மற்றும் கண்காணிப்புக் கருவிகள் (Diagnostic and Monitoring Instruments)

அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள்

பரிசோதனை மற்றும் கண்காணிப்புக் கருவிகள் (Diagnostic and Monitoring Instruments)


ஸ்டெத்தஸ்கோப் (Stethoscope)

ஸ்டெத்தஸ்கோப் என்னும் மருத்துவக் கருவியானது மனித உடலுக்குள் கேட்கும் ஒலிகளான, இதயத்துடிப்பு, உட்சுவாசம் மற்றும் வெளிச்சுவாசத்தின் போது நுரையீரலில் ஏற்படும் ஒலி, இரைப்பை, குடல் அலைவு ஒலிகள் மற்றும் கருப்பையினுள் கருவின் அசைவினால் ஏற்படும் ஒலி போன்றவற்றைக் கேட்டு உணரப்பயன்படும் கருவியாகும். தற்போது உள்ள நவீன மின்னனு ஸ்டெத்தஸ்கோப் மூலம் இரைச்சலான சூழ்நிலையிலும், அதிக ஆடைகள் உடுத்தியிருக்கும் நிலையிலும் கூடத் தெளிவான, துல்லியமான உடல் உள்ஒலிகளைக் கேட்க இயலும். ஸ்டெத்தஸ்கோப்பில் ஒரு வட்டு போன்ற அதிர்வு உணர்வுப் பகுதி (Resonator) உள்ளது. இதனுடன் ஒருரப்பர் குழாய் இணைக்கப்பட்டுள்ளது. இக்குழாயை இரு காதிலும் பொருத்திக் கொள்ள ஏதுவாக இரு குமிழிகள் இணைக்கப்பட்டுள்ளன. தட்டுபோன்ற பகுதியை மார்பின் மீது வைத்து குமிழிகளைக் காதில் வைத்துக் கேட்கும் போது உள்ளுறுப்புகளின் ஒலி தெளிவாகக் கேட்கிறது. இவ்வகை ஸ்டெத்தஸ்கோப் இருசெவி ஸ்டெத்தஸ்கோப் (binaural stethoscope) என அழைக்கப்படுகிறது. உடலினுள் உள்ள பிரச்சனைகளை இனம் காணவும், நோயைக் கண்டறியவும் பயன்படும் ஒரு எளிய, பயனுள்ள கருவியாக ஸ்டெத்தஸ்கோப் விளங்குகிறது (படம் 12.1).



ஸ்டெத்தஸ்கோப்பின் மருத்துவ முக்கியத்துவம்

1. இதயத்தில் ஏற்படும் சாதாரண மற்றும் அசாதாரண ஒலிகளையும் இதய வால்வுகள் செயல்படும் விதத்தையும் கண்டறியப் பயன்படுகிறது.

2. நுரையீரல் நோய்களான சளிக்காய்ச்சல், நுரையீரல் வீக்கம், மூச்சுக்குழல் வீக்கம், நுரையீரல் உறை வீக்கம் போன்றவற்றைக் கண்டறியலாம்.

3. இரத்த அழுத்தமானியோடு இணைந்து இரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவுகிறது.

4. இதய, சுவாச மற்றும் குடல் தொடர்பான குறைபாடுகளின் நிலைமையைத் தெரிந்துகொள்ள உதவுகிறது.


ஸ்பிக்மோமானோமீட்டர்(Sphygmomanometer)

ஸ்பிக்மோமானோமீட்டர் இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவியாகும். எனவே, இது இரத்த இரத்த அழுத்தமானி அல்லது அழுத்தக் கண்காணிப்புக்கருவி அல்லது இரத்த அழுத்த அளவீட்டுக்கருவி என அழைக்கப்படுகிறது. இதில் உள்ள இரப்பர் பட்டையானது மேற்கையில் சுற்றப்படும். இக்கைப்பட்டையோடு இணைந்த இரப்பர் குழாயின் மறுமுனை பாதரச அளவு கோலுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இரத்த அழுத்தத்தை நேரடியாக ஒரே சீராக பகுக்கப்பட்ட அளவுகோல் வழியாக அளவிட முடிகிறது. கைப் பட்டையினுள் உள்ள காற்றின் அழுத்தத்தைப் படிப்படியாக கூட்டியும், குறைத்தும் இரத்த அழுத்தத்தைக் கணக்கிடலாம். மேற்கையில் முழங்கை மடிப்பிற்கு 3 செ.மீ மேல் அமையும்படி ஸ்பிக்மோமானோமீட்டரின் இரப்பர் கைப்பட்டையை மென்மையாகச் சுற்றி காற்றை ஏற்றி இரத்த அழுத்தத்தை கணக்கிடலாம். கைத்தமனியில் இரத்தம் பாயும் ஒலியை முழங்கை மடிப்பில் ஸ்டெத்தஸ்கோப்பின் அதிர்வு உணர்வு வட்டுப் பகுதி வைத்துக் கண்டறியலாம். கைப்பட்டையினுள் உள்ள காற்றினை 180 மி.மீ பாதரசம் வரை துரிதமாக அதிகரித்து பின் மெதுவாக காற்று விடுவிக்கப்படுகிறது. இதனால், அழுத்தப்பட்ட தமனியும் மெதுவாக விரிவடைவதால் ஒரு மெல்லிய இரைச்சலுடன் (ஊஷ் சப்தம்) தமனியில் இரத்தம் பாயத்தொடங்குகிறது.இந்நிலையில்அளவுகோலில் காணப்படும் பாதரச மட்டம் காட்டும் எண்ணானது அந்நோயாளியின் சிஸ்டோலிக் அழுத்தம் ஆகும். இவ்வாறு கைப்பட்டையினுள் காற்றழுத்தத்தை தொடர்ச்சியாகக் குறைத்துக் கொண்டே வரும்போது எந்நிலையில் தமனியில் இரத்த ஓட்டம் பாயும் ஒலி கேட்கவில்லையோ, அந்த அளவீடு டயஸ்டோலிக் அழுத்தம் எனப்படும். இரத்த அழுத்தத்தைச் சரியாகக் கணிக்க, இரு கைகளிலும் அளவிடப்படுகிறது (படம் 12.2).


வென்ட்ரிக்கிள் சுருக்கத்தின் போது ஏற்படும் அதிகப்படியான தமனி அழுத்தம்' சிஸ்டோலிக் அழுத்தம்' எனவும் வென்ட்ரிக்கிள் தளர்வடையும்போது காணப்படும் அழுத்தம் 'டயஸ்டோலிக் அழுத்தம்எனவும் அழைக்கப்படும்.

இயல்பான இரத்த அழுத்த அளவு = 120/80 மி.மீ பாதரசம்

சிஸ்டோலிக் அழுத்தம் = 120 மி.மீ பாதரசம் 

டயஸ்டோலிக் அழுத்தம் = 80 மி.மீ பாதரசம்


ஸ்பிக்மோமானோமீட்டரின் வகைகள்

1. கைமுறை இரத்த அழுத்தமானி (Manual Sphygmomanometer)

) பாதர இரத்த அழுத்தமானி (Mercury Sphygmomanometer): அளவுகோலில் காட்டப்படும் பாதரச மட்டங்கள் காட்டும் எண்களை (மில்லி மீட்டரில்) நேரடியாகக்கண்டு இரத்த அழுத்தத்தை அளவிடலாம்.

) அனிராய்டுஇரத்த அழுத்தமானி (Aneroid Sphygmomanometer): இது குறி முள்ளுடன் வட்டவடிவில் காணப்படும் எந்திரவகை அளவீட்டுக்கருவி ஆகும். பாதரசமானோமீட்டரைப் போல் இல்லாமல், இதில் இரத்த அழுத்தத்தைக் கணக்கிட அளவு திருத்தம் (Calibration checks) தேவைப்படுகிறது.

2. இலக்கமுறை இரத்த அழுத்தமானி (Digital Sphygmomanometer) இதில் சிஸ்டோலிக் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தமானது அலைவு கணக்கீட்டு கருவியின் (Oscillometric detector) மூலம் அளக்கப்படுகிறது. எவ்விதப் பயிற்சியும் இன்றி இக்கருவியைக் கையாளலாம்.


உங்களுக்குத் தெரியுமா?

வெள்ளை மேல் சட்டைவிளைவு (White coat effect):

சில நோயாளிகள், வெள்ளைமேல் சட்டை அணிந்த மருத்துவர்களைக் காணும்போது பயந்து, அதனால் இரத்த அழுத்தம் அதிகரித்துக் காணப்படுவார்கள். எனவே, இது 'வெள்ளை மேல் சட்டை விளைவு" எனப்படுகிறது. இவர்களது இரத்த அழுத்தமானது மருத்துவமனைச் சூழலில் (பயம் காரணமாக) அதிகரித்தும் மற்ற சூழலில் இயல்பாகவும் காணப்படும்..


மருத்துவ முக்கியத்துவம்

1. மிகையழுத்தம், குறையழுத்தம் போன்ற அபாயகரமான இரத்த அழுத்த நிலைகளைக் கண்டறிய உதவுகிறது.

2. இரத்த ஓட்ட நிலைமையை மதிப்பிட உதவுகிறது.

3. இதயச்செயல்பாடு பற்றிய விளக்கத்தைஅளிக்கிறது.


குளுக்கோமீட்டர் (Glucometer)

இரத்த குளுக்கோஸ் அளவைத் தோராயமாக அளவிட மற்றும் எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய எளிய, கையடக்கமான மருத்துவக்கருவி குளுக்கோமீட்டர் ஆகும். இது ஒரு சிறிய மின் கலத்தின் உதவியுடன் இயங்கும் இலக்க முறைகருவி ஆகும். விரலிலிருந்து ஒரு துளி இரத்தம் எடுக்கப்பட்டு ஒரு சோதனைப் பட்டையில் வைக்கப்படுகிறது. இப்பட்டை குளுக்கோமீட்டரில் சொருகப்படுகிறது. குளுக்கோமீட்டரானது இரத்த குளுக்கோஸ் அளவைக்கணக்கிட்டு இலக்கங்களாக மி.கி / டெ.லி அலகுடன் திரையில் காண்பிக்கிறது. பெரும்பாலான குளுக்கோமீட்டர்கள் மின்வேதி வினைத் தொழில் நுட்பத்திலோ அல்லது நிறப்பிரதிபலிப்புக் கொள்கையின்அடிப்படையிலோசெயலாற்றுகின்றன (படம் 12.3).



முக்கியத்துவம்:

1. கையடக்கமானது, எளிதில் தூக்கிச் செல்லக் கூடியது.

2. நாற்பது வினாடிகளுக்குள் முடிவு தெரியும் வகையில் இயங்குகின்றன.

3. கணக்கீடு தேவையில்லை.

4. கருவியைப் பயன்படுத்த பயிற்சி தேவையில்லை.

இயல்பான இரத்த சர்க்கரை அளவுகள்

இயல்பான அளவு: 70 - 100 மி.கி / டெ.லி

தொடர்பின்றி (எப்போதாவது) (Random blood sugar) எடுக்கப்படும் இரத்த சர்க்கரை அளவு: 80 - 120 மி.கி / டெ.லி

உணவுண்ணா நிலையில் (Fasting blood sugar) 70 - 110 மி.கி / டெ.லி

உணவுண்ட பின் (இரண்டு மணி நேரம் கழித்து) (Post prandial blood sugar) : 110 – 140 மி.கி / டெ.லி 


தானியங்கி பகுப்பாய்வி (Autoanalyser) 

ஆட்டோ அனலைசர் என்பது கணினி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு கருவி ஆகும். பல்வேறு வகை உயிர்-வேதிப் பொருட்களான, குளுக்கோஸ், யூரியா, கொலஸ்ட்டிரால், நொதிகள் மற்றும் உடல் திரவத்தினுள் காணப்படும் இதர வகை புரதங்கள் ஆகியவற்றை உடனடியாக அளவிட இக்கருவி பயன்படுகிறது. வேதி வினைகளுக்குத் தேவையான வெப்பநிலை, பரிசோதனைக்குத் தேவையான மாதிரிகள், கரைசல்கள் (வேதிப்பொருட்கள்), இவற்றை இடமாற்றம் செய்யத் தேவையான அமைப்புகள் ஆகியவை இக்கருவியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.குறிப்பிட்டமாதிரியிலிருந்து பலவிதச் சோதனைகளைச் செய்யும் திறன்மிக்க அதிநவீன தானியங்கி பகுப்பாய்விகள் தற்போது உபயோகத்தில் உள்ளன (படம் 12.4.).



உடல் அணி நலம்பேணும் கருவிகள் (Wearable Healthcare Devices) உடலில் அணிவதன் மூலம், உடல் நலம் பேண உதவும் கருவிகளாக ஸ்மார்ட் கடிகாரங்கள் (smart watches), உடல் இயக்கமறியும் மணிக்கட்டுப்பட்டைகள் (fitbit wristbands), உடல் தகுதி கண்காணிப்பான்கள் (fitness trackers), தலை கவசத்துடன் அணியும் விளைவு சோதிப்பான்கள் (helmet-worn impact checker), முதுகுவலியை ஏற்படுத்தும் தோற்ற அமைவு சோதிப்பான்கள் (back pain posture checkers), கழுத்துப்பட்டைகள் (necklaces), கிடுக்கிப்பிடிப்பான்கள் (Clipons), ஸ்மார்ட் ஆடைகள் (smart clothing), இழை உட்பொருத்திகள் (filament implant) போன்றவை செயல்புரிகின்றன. தேர்வு செய்யப்பட்ட உணர்விகளைக் கொண்ட இம்மருத்துவக் கருவிகள், பல்வேறு உடற்செயலியல் குறித்த தரவுகளை அவ்வப்போது பதிவு செய்து, அத்தரவுகளை மின்னணு தொழில் நுட்பத்தை பயன்படுத்தியோ அல்லது திறன் பேசியில் (Smartphone) அதற்கென நிறுவப்பட்ட செயலிகள் (App) வாயிலாகவோ மருத்துவருக்கு அனுப்புகின்றன. உடல் ஆராக்கியத்தைப் பேணும் இச்செயலிகள் இரண்டு பிரிவுகளாக உள்ளன. அவை உடல் செயல்பாடுகளுக்கான செயலி (Activity app) மற்றொன்று உடற்பயிற்சிக்கான செயலி (Work out app). உடல் செயல்பாட்டுச் செயலியானது (Activity app), அனைத்து வகை உடல் ஆரோக்கியம், உடல் இயக்கம், உடல் நலம் மற்றும் அன்றாட உடல் செயல்பாடுகள் போன்றவற்றை கண்காணித்து பதிவு செய்கிறது. உடல் பயிற்சிக்கான செயலியானது (Work out app), ஓடுதல், மிதிவண்டி ஓட்டுதல், நடத்தல் போன்ற செயல்பாடுகளின் போது உடல்நிலையைக் கண்காணித்து அதை பதிவு செய்கிறது.

உடலில் அணிந்துக் கொள்ளக்கூடிய இம்மருத்துவ கருவிகள், நாம் எடுத்து வைக்கும் காலடிகளின் எண்ணிக்கை, நடந்த தூரம், பயன்படுத்தப்பட்ட கலோரியின் அளவு, இதயம் செயல்படும் விதம், இரத்த கொள்ளளவு, இரத்த அழுத்தத்தால் இரத்த நுண்குழல்களின் அளவில் ஏற்படும் மாற்றங்கள், உடல் வெப்பநிலை மற்றும் உறக்கத்தின் தன்மை போன்ற செயல்பாடுகளைக் கண்காணிப்பதன் மூலம் உடல் நலம் பேண உதவுகின்றன. இச்செயலிகள், உடல் நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பதால், உடல் எடை, இரத்த குளுக்கோஸ் அளவு இரத்த அழுத்தம், தூங்கும் கால அளவு,அருந்தும் நீரின் அளவு போன்றவற்றில் ஒருவர் தினசரி இலக்குகளை ஏற்படுத்திக்கொள்ள உதவுகிறது.

11th Zoology : Chapter 12 : Basic Medical Instruments and Techniques : Diagnostic and Monitoring Instruments in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 12 : அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் : பரிசோதனை மற்றும் கண்காணிப்புக் கருவிகள் (Diagnostic and Monitoring Instruments) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 12 : அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள்