Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | விலங்குலக வகைப்பாடு (Classification of Kingdom Animalia)
   Posted On :  05.01.2024 09:58 am

11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம்

விலங்குலக வகைப்பாடு (Classification of Kingdom Animalia)

உடல் கட்டமைப்பின் அடிப்படையில் விலங்குலகம், பாராசோவா மற்றும் யூமெட்டாசோவா என இருதுணை உலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

விலங்குலக வகைப்பாடு (Classification of Kingdom Animalia)

உடல் கட்டமைப்பின் அடிப்படையில் விலங்குலகம், பாராசோவா மற்றும் யூமெட்டாசோவா என இருதுணை உலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.



1. பாராசோவா (Parazoa)

கடற்பஞ்சு போன்ற விலங்குகள் பல செல்களால் ஆனவை. எனினும் செல்கள் தளர்ச்சியாக இணைந்துள்ளது. உண்மையான திசுவோ உறுப்போ, உருவாகவில்லை.

2. யூமெட்டாசோவா (Eumetazoa) 

பலசெல்களைக் கொண்ட இவ்விலங்குகளில் நன்கு வளர்ச்சியடைந்த திசுக்கள் உறுப்பாகவோ, உறுப்பு மண்டலமாகவோ உருவாகியிருந்தால் அவை யூமெட்டாசோவா (Eumetazoa) எனப்படும். இவ்வகை உயிரிகள் ஆரச்சமச்சீருடையவை (Radiata) மற்றும் இருபக்க சமச்சீருடையவை (Bilateria) என இரு வகைப்பாட்டு நிலைகளைக் கொண்டுள்ளன.

நிலை 1: ஆரச்சமச்சீருடையவை (Radiata) 

பல செல் விலங்குகளில் சில விலங்குகள் புறப்படை மற்றும் அகப்படை என இரண்டு அடுக்குகளை மட்டும் பெற்றுள்ளன. இரண்டு அடுக்குகளுக்கும் இடையே ஜெல்லி போன்ற மீசோகிளியா காணப்படுகிறது. இவை ஆரச்சமச்சீருடையதாகவும் ஈரடுக்கு தன்மையுடையதாகவும் காணப்படுகின்றன. (.கா. நிடேரியன்களான கடல்சாமந்தி, ஜெல்லி மீன்) மற்றும் டினோஃபோர்கள் (சீப்பு ஜெல்லிகள்).


நிலை 2: இருபக்க சமச்சீருடையவை (Bilateria)

ஆரச்சமச்சீருடைய விலங்குகளைத் தவிர மற்ற பலசெல் விலங்குகள் அனைத்தும் மூவடுக்குகளையும் உறுப்பு அளவிலான உடற்கட்டமைப்பையும், இருபக்க சமச்சீர் தன்மையுடனும் காணப்படும். இரு பக்க சமச்சீருடைய விலங்குகள் வாய் உருவாகும் தன்மையின் அடிப்படையில் புரோட்டோஸ்டோமியா மற்றும் டியூட்டிரோ ஸ்டோமியா என இரு பிரிவுகளாகப் (Division) பிரிக்கப்பட்டுள்ளன.


பிரிவு 1: புரோட்டோஸ்டோமியா

(கிரே. புரோட்டோ - முதல்; ஸ்டோமியம்வாய்

கருக்கோள துளையிலிருந்து வாய் உருவாகும் பலசெல் விலங்குகள் புரோட்டோஸ்டோமியாக்கள் எனப்படும். இது உடற்குழி உருவாகும் தன்மையின் அடிப்படையில் உடற்குழியற்றவை (Acoelomata), போலி உடற்குழியுடையவை (Pseudocoelomata) மற்றும் சைஷோசீலோமேடா (Schizocoelomata) என மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன


பிரிவு 2: டியூட்டிரோஸ்டோமியா

(கிரே. டியூட்டிரான் - இரண்டாம் நிலை ஸ்டோமியம்வாய்

பலசெல் விலங்குகளில் கருக்கோளத் துளையிலிருந்தோ அல்லது கருக்கோளதுளைக்கு அருகிலிருந்தோ மலத்துளையும், கருக்கோளத் துளையை விட்டுத் தூரத்திலிருந்து வாயும் உருவானால் அவ்விலங்குகள் டியூட்டிரோஸ்டோம்கள் எனப்படும். இதில் என்டிரோசீலோமேட்டா (enterocoelomata) எனும் ஒரே துணைப்பிரிவு மட்டும் காணப்படும். இவற்றில் மூலக்குடலிலிருந்து உருவாகின்ற என்டிரோசீல் என்னும் உண்மையான உடற்குழி காணப்படுகிறது.

11th Zoology : Chapter 2 : Kingdom Animalia : Classification of Kingdom Animalia in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம் : விலங்குலக வகைப்பாடு (Classification of Kingdom Animalia) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம்