Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | செயல்பாடு, தனிநபர் ஆய்வு, பாடச் சுருக்கம் - விலங்குலகம்

விலங்கியல் - செயல்பாடு, தனிநபர் ஆய்வு, பாடச் சுருக்கம் - விலங்குலகம் | 11th Zoology : Chapter 2 : Kingdom Animalia

   Posted On :  05.01.2024 11:21 pm

11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம்

செயல்பாடு, தனிநபர் ஆய்வு, பாடச் சுருக்கம் - விலங்குலகம்

விலங்குலகத்தில் பலதரப்பட்ட விலங்கு சிற்றினங்கள் அடங்கியுள்ளன. அதாவது சிறிய ஒட்டுண்ணி உருளைப்புழுக்கள் முதல் மிகப்பெரிய பாலூட்டியான நீலத்திமிங்கிலம் வரை இதில் அடங்கும்.

பாடச் சுருக்கம்

விலங்குலகத்தில் பலதரப்பட்ட விலங்கு சிற்றினங்கள் அடங்கியுள்ளன. அதாவது சிறிய ஒட்டுண்ணி உருளைப்புழுக்கள் முதல் மிகப்பெரிய பாலூட்டியான நீலத்திமிங்கிலம் வரை இதில் அடங்கும். அடிப்படை பண்புகளான, பல்வேறு நிலை கட்டமைப்புகள், ஈரடுக்கு, மூவடுக்குத் தன்மை, சமச்சீர் நிலை, உடற்குழி, கண்டங்களாதல், முதுகுநாண் போன்றவை விலங்கு உலகத்தை வகைப்படுத்துதலுக்குத் துணைபுரிகின்றன. இவை தவிர, ஒவ்வொரு தொகுதிக்கும், வகுப்புக்கும் உரிய சிறப்புப் பண்புகளும் வகைப்பாட்டில் பயன்படுகின்றன.

முதுகுநாணற்றவை மற்றும் முதுகுநாண் உடையவை என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதுகுநாணைக் கொண்டிராத விலங்குகள் முதுகு நாணற்றவை என்று அழைக்கப்படுகின்றன. முதுகுநாண் மற்றும் அதன் முதுகுப்புறமாக அமைந்த நரம்பு வடம், செவுள் பிளவுகள் போன்ற பண்புகளுடன் முதுகுநாணிகள் காணப்படுகின்றன. விலங்குலகமானது, துளையுடலிகள், குழியுடலிகள், டீனோஃபோரா, தட்டைப் புழுக்கள், உருளைப் புழுக்கள், வளைத்தசைப் புழுக்கள், கணுக்காலிகள், மெல்லுடலிகள், முட்தோலிகள், அரைநாணிகள் மற்றும் முதுகுநாணுள்ளவை ஆகிய பதினோரு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கார்டேட்டா எனும் பெரிய தொகுதியில் யூரோகார்டேட்டா, செஃபலோகார்டேட்டா மற்றும் வெர்ட்டிபிரேட்டா எனும் மூன்று துணைத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. துணைத்தொகுதி முதுகெலும்பிகள் (வெர்டிபிரேட்டா) ஆனது தாடையற்றன மற்றும் தாடையுடையன எனப்படும் தாடைகளுடய மீன்கள் மற்றும் நான்கு காலிகளான இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.


தனிநபர் ஆய்வு


இந்தியப் பறவையியல் ஆராய்ச்சியின் பிதாமகன் இந்தியப் பறவை மனிதன் என்றழைக்கப்படும் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி அவர்கள் ஆவார். 1896ல் நவம்பர் 12 ஆம் நாள் பம்பாயில் பிறந்த, 20 ஆம் நூற்றாண்டின் மதிப்பு மிகுந்த திறன் வாய்ந்த, இந்திய இயற்கை ஆர்வலராக வளர்ந்தார். 1987 ஆம் ஆண்டு ஜூன் 20ம் நாள் மறைந்தார். அவர் இளம் வயதிலேயே, அதாவது 10 வயது ஆகும்போதே பறவைகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பறவைகளைப்பற்றிப் பல புத்தகங்கள் எழுதி இந்தியப் பறவையியலை உலகறியச் செய்தார். 'இந்தியப் பறவைகளின் புத்தகம்' (Book of Indian Birds) மற்றும் 'இந்திய, பாகிஸ்தான் பறவைகளின் கையேடு' (Hand Book of Birds of India and Pakistan) ஆகிய இரு முக்கியமான புத்தகங்கள் இவரால் எழுதப்பட்டவையாகும். 'ஒரு குருவியின் வீழ்ச்சி' (Fall of a Sparrow) எனும் அவரின் சுயசரிதை பறவைகளுடனான அவரது தொடக்கத்தையும் வாழ்க்கை அனுபவங்களையும் விவரிக்கிறது. 1958ல் பத்மபூஷன் விருதையும் 1976ல் பத்ம விபூஷன் விருதையும் அவருக்குஅளித்து இந்திய அரசாங்கம்அவரைக்கௌரவித்தது.1985ல் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தனது புத்தகங்களின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களைப் பறவையியல் மீதும் இயற்கை வரலாறு மீதும் ஆர்வம் கொள்ளச் செய்தார். பெரும்பாலான இன்றைய சுற்றுச் சுழல் ஆர்வலர்கள் தங்களது உத்வேகத்தை/ ஆர்வத்தைச் சலீம் அலியின் புத்தகங்களைப் படித்ததன் மூலம் பெற்றார்கள். இந்திய அரசு, 1990ல் அவரை மேலும் கௌரவப்படுத்தும் விதமாக 'சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையம்' (Salim Ali Centre for Ornithology and Natural History SACON) எனும் தேசிய அளவிலான ஆராய்ச்சி மையத்திற்கு அவரது பெயரைச் சூட்டி, அம்மையத்தைத் தமிழ் நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் நிறுவியது. SACON, இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் ஆதரவுடன், சிறப்பான ஆராய்ச்சி மையமாகத் திகழ்கிறது. இம்மையத்தின் அனைத்து ஆராய்ச்சிகளும் செயல்பாடுகளும் இந்தியப் பல்லூயிர்த் தன்மை பாதுகாப்பு தொடர்பாகவும் குறிப்பாகப் பறவைகளின் பல்லுயிர்தன்மை பற்றியும் முழு ஈடுபாட்டுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. SACON மையத்தின் மையக்கட்டிமானது கோயம்புத்தூரிலிருந்து 24 கிலோமீட்டர்தொலைவில் வடமேற்கில் அமைந்துள்ள நீலகிரி உயிரியல் பூங்காவில் மரங்கள் அடர்ந்த ஆனை கட்டி வனப்பகுதியில் அமைந்துள்ளது. ஆராய்ச்சிகள் மூலமாக இந்தியப் பல்லுயிர்த்தன்மையையும் அதன் தொடர் பயன்களையும் பாதுகாத்தல், பொதுமக்களுக்காக, பறவைகளை மையமாகக் கொண்ட கல்வியைப் போதித்து அவற்றைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடச் செய்தல் போன்றவை SACON மையத்தின் பணிகள் ஆகும். பல்லுயிர்த் தன்மையின் அனைத்துக் கூறுகளைப் பற்றியும் இயற்கை வரலாறு பற்றியும் ஆராய்ச்சிகள் SACON மையத்தில் நடைபெற்று வருகிறது. இம்மையம் தொடங்கி 25 ஆண்டுகளுக்குள் 50க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள்,பறவையியல் மற்றும் உலகளாவிய ஆராய்ச்சி இதழ்களில் இம்மையத்தின் மூலம் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றனர். SACON மையம் இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வரும் புகழ் பெற்ற இயற்கை கல்வித்திட்டமானது ஆயிரக்கணக்கான மக்கள் மனதிலும் குறிப்பாகப் பள்ளிக் குழந்தைகளிடத்திலும் இயற்கையின் மேல் மற்றும் பறவைகள் மேல் நேசத்தை வளர்ப்பதாக அமைகிறது. 'குழந்தைகளின் சூழியல் கூட்டமைப்பு' மற்றும் 'சலீம் அலி கோப்பைக்கான இயற்கை தொடர்பான போட்டிகள்' SACON மையத்தின் புகழ் வாய்ந்த நிகழ்ச்சிகளாகும். இம்மையத்தின் "சலீம் அலி இயற்கையாளர்கள் பேரவை" பொதுமக்கள் பறவை நோக்கல் மையமாக மிளிர்கிறது.

(மூலம்: SACON (2018)


செயல்பாடு:

நோக்கங்கள்:

பிற உயிரிகளிடமிருந்து அவற்றை வேறுபடுத்தும் சில உயிரினத் தொகுப்புகளின் பண்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு கிளாடோகிராமை உருவாக்கி தீர்வைக் கண்டறிந்து அவை எவ்விதம் பொதுவான முன்னோடியைக் கொண்டுள்ளன என்பதையும் அவற்றுக்கிடையேயான பரிணாமத்தொடர்பின் வீச்சையும் பகுத்தாய்வு செய்க.

செய்முறை (Procedure)

படிநிலை – 1. உனது பாடநூலைப் படித்து கீழ்க்காணும் விலங்குகளின் பண்புகளைக் கண்டறிக. குறிப்பிடப்பட்ட பண்பை அவ்வுயிரினம் பெற்றிருந்தால் தரவு அட்டவணையில் 'X' குறியிடவும்.

படிநிலை - 2தரவு அட்டவணையின் கீழ், வென்படம் (Venn diagram) வரைந்து அதில் தனிப்பட்ட விலங்குகளின் பண்புகளைத் தொகுத்து, அவற்றுள், அவை பகிர்ந்து கொள்ளும் பொதுவான பண்புகளைக் குறிப்பிடுக.

படிநிலை - 3. வென் படத்தைப் பயன்படுத்தி ஒரு கிளாடோகிராம் வரைந்து அவ்விலங்குகளின் முன்னோடிகளை விளக்குதல். இப்படம் விலங்குகள் காலப்போக்கில் தங்களது பண்புகளில் கொண்டிருந்த பொதுத்தன்மையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்

படிநிலை - 4. வென் படம் வரைந்து, கொடுக்கப்பட்ட ஒரு விலங்கு எவ்விதம் மற்ற விலங்கோடு பண்புகளைப் பகிர்ந்துள்ளது என்பதைக் கிளாடோகிராம் வரைந்து விளக்குக.




இணையச்செயல்பாடு


Cladogram

Cladogram பற்றித் தெரிந்து கொள்வோமா!

படிகள்

1. கொடுக்கப்பட்டுள்ள உரலி / விரைவுக் குறியீட்டின் மூலம் தோன்றும் திரையில் உள்ள, "Play Game" என்னும் பொத்தானை அழுத்தி உங்களது சொந்த அல்லது பள்ளி "id" இல் உள்நுழையவும். அப்படியில்லை எனில் "Guest Pass" என்னும் பொத்தானைப் பயன்படுத்தி இந்தச் செயல்பாட்டினை ஆரம்பிக்கலாம்.

2. ஆரம்பகட்டத்தில் இரண்டு இனங்களின் பண்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். கொடுக்கப்பட்ட சிறிய வட்டத்தில் சுட்டியின் உதவியுடன் அதனை இழுத்துப் பொருத்தவும்.

3. சுட்டியைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள பண்புகளை இழுத்து சரியான சிறிய வட்டத்தில் பொருத்தவும்.

4. நீங்கள் சரியாகப் பொருத்திவிட்டால் இந்த விளையாட்டானது அடுத்த கட்டத்திற்குச் செல்லும். இதனைச் சரியாகப் பொருத்தவில்லை எனில் மீண்டும் இந்தச் செயல்பாட்டினை ஆரம்பித்து பண்புகளைக் கற்றுக் கொள்ளும்வரைத் தொடரவும்.

Evolution Lab's உரலி

http://www.pbs.org/wgbh/nova/labs/lab/evolution/

* படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

Tags : Zoology விலங்கியல்.
11th Zoology : Chapter 2 : Kingdom Animalia : Activity, Case Study and Summary - Kingdom Animalia Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம் : செயல்பாடு, தனிநபர் ஆய்வு, பாடச் சுருக்கம் - விலங்குலகம் - விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம்