Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | இந்தியப் பொருளாதாரச் சிந்தனையாளர்களின் பங்களிப்பு
   Posted On :  06.10.2023 08:10 pm

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரச் சிந்தனையாளர்களின் பங்களிப்பு

இந்தியப் பொருளாதாரச் சிந்தனையாளர்களின் பங்களிப்பு

இந்தியப் பொருளாதாரச் சிந்தனையாளர்களின் பங்களிப்பு


1. திருவள்ளுவர்


திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துக்கள் காலத்தால் அழியாத, அறநூலான திருக்குறளில் காணக் கிடைக்கின்றன. திருவள்ளுவரின் காலம் குறித்து பல்வேறு கருத்துகள் அறிஞர்கள் மத்தியில் நிலவினாலும் பொதுவாக மூன்றாம் நூற்றாண்டின் சங்ககாலத்தையே அவரின் காலமாகக் கருதலாம். திருவள்ளுவரின் கருத்துக்கள் நடைமுறைக்கு ஏற்றவைகளாகவே இன்றும் கருதப்படுகின்றன.

வள்ளுவரின் பொருளாதாரக் கருத்துக்கள் திருக்குறளின் இரண்டாம் பகுதியான பொருட்பாலில் மிகுதியாகக் காணப்படுகின்றன. பொருட்பால் செல்வத்தோடு தொடர்புடையது. வாழ்வின் அடிப்படைகளை அறிந்தவர் வள்ளுவர். அவர் மழையை வாழ்வின் பெரும் ஆதாரமாகக் கருதினார். மழை தான் உணவு தருகிறது. மழைதான் பொருளாதார வாழ்வில் அடிப்படையை உருவாக்குவதாக நம்பினார். வாழ்வின் அடிப்படை பொருளாதார தேவையான வேளாண்மை மழையைச் சார்ந்திருக்கிறது அழிவையும் தரும், அழிவிலிருந்து மீண்டும் தழைத்தோங்கவும் செய்யும்.


. உற்பத்திக் காரணிகள்

உற்பத்திக் காரணிகளான நிலம், உழைப்பு, முதல், அமைப்பு, காலம், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பல கருத்துகளை வள்ளுவர் எளிமையாகச் சொல்லியிருக்கிறார்

"பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த 

மக்கட்பேறு அல்ல பிற

என்கிறார் திருவள்ளுவர் (குறள் 61) 

'

. வேளாண்மை

வள்ளுவர் வேளாண்மையை, அடிப்படைப் பொருளாதார நடவடிக்கை என்கிறார். உலகத்தின் அச்சாணியாக வேளாண்மை இருக்கிறது. பொருளாதார ரீதியாக பிற துறைகளின் செழுமை வேளாண்மை துறையின் செழுமையைச் சார்ந்தது. உழவுத்தொழில் புரிபவன் மட்டுமே தலையாய மனிதன்

"உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் மற்றெல்லாம் 

தொழுதுண்டு பின் செல்பவர்"

(குறள் எண் - 1032, அதிகாரம் - உழவு

உழவுத்தொழிலே மற்ற தொழில்களைவிட உயர்ந்ததாக வள்ளுவர் கருதுகிறார்


. பொது நிதி

திருவள்ளுவர் பொதுநிதி பற்றி பொது வருவாய், பொதுச் செலவு, நிதி நிர்வாகம் ஆகிய தலைப்புகளில் விரிவாக எழுதியிருக்கிறார். 1. வருவாய் உருவாக்குதல் 2. வருவாயை சேகரித்தல் 3. வருவாய் நிர்வாகம் 4. பொதுச் செலவு பற்றியெல்லாம் குறிப்பிடுகிறார்.


. பொதுச் செலவு 

வள்ளுவர் சமநிதிநிலை அறிக்கையைப் பரிந்துரை செய்கிறார். "ஒரு நாடு அதன் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பட்சத்தில், அதன் வருமானம் குறைவாக இருந்தாலும் பாதகமில்லை" என்கிறார். நிதிநிலைக் கொள்கை வகுக்கும்போது செய்ய வேண்டியதாக அவர் சொல்வது "எப்போதும் உபரி நிதிநிலை இருக்கட்டும், சிலநேரங்களில் சம நிதி நிலை இருக்கலாம், ஆனால் ஒரு போதும் பற்றாக்குறை நிதிநிலை மட்டும் கூடாது". பொதுச் செலவை கீழ்க்காணும் மூன்று இனங்களுக்கு செலவிடுமாறு வலியுறுத்துகிறர் வள்ளுவர், 1. பாதுகாப்பு 2. பொதுப்பணிகள்  3. சமூகப்பணிகள்.


. வெளிநாட்டு உதவி

வள்ளுவர் வெளிநாட்டு உதவி பெறுதலை ஆதரிக்கவில்லை . குறள் 739-ல் வெளி உதவி கோரும் நாடுகள் நாடுகளே அல்ல என்கிறார். வேறுவகையில் சொல்வதனால் அவர் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தையே வலியுறுத்தினார்.


. வறுமையும்  மற்றும் பிச்சையெடுத்தலும் (இரத்தல்)

பசிக்கொடுமையிலிருந்து பெறும் விடுதலையே ஒவ்வொரு மனிதனும் பெறக்கூடிய அடிப்படை சுதந்திரம் என்றும் அனைத்து குடிமகனும் இதனை அனுபவிக்க வேண்டும் என்றும் வள்ளுவர் கருதினார். வறுமையே அனைத்து தீமைகளுக்கும் வேராய் இருந்து எக்காலத்தும் தீராத துன்பங்களைத் தருவதாகவும் கருதினார். ஆனால் இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கையில் பிச்சையெடுப்பவர்கள், வசிப்பிடமின்றி சாலையோரம் வாசிப்பவர்கள் மற்றும் குப்பை எடுப்பவர்கள் அதிகமாக உள்ளனர்.


. செல்வம்

செல்வம் வாழ்வதற்கான வழியே அன்றி அதுவே இலக்கல்ல என்று வள்ளுவர் கருதினார். செல்வம் சிறந்த மதிக்கத்தகுந்த வழிகளிலேயே ஈட்டப்பட வேண்டும் என்கிறார். செல்வத்தைப் பதுக்கி வைப்பது பயனற்றுப் போகும் என்றகிறார். அவரைப் பொறுத்த வரையில் தொழில்தான் உண்மையான செல்வம், மேலும் உழைப்பு தான் மிகப் பெரும் வளம்


. நலம்பேணும் அரசு

திருவள்ளுவர் நலம்பேணும் அரசு எது என்பதைக் குறித்து விளக்கியுள்ளார். ஒரு நலம்பேணும் அரசில் வறுமை, எழுத்தறிவின்மை மற்றும் நோய்கள் போன்றவை இருக்காது என்கிறார்

நலம் பேணும் அரசின் முக்கியக் கூறுகளாவன

நோய் நொடியற்ற ஆரோக்கியமான மக்கள் 

பெருஞ்செல்வம் 

நல்ல விளைச்சல் 

வளம் மற்றும் மகிழ்ச்சி 

மக்களுக்கு முழுப் பாதுகாப்பு


2. மகாத்மா காந்தியடிகள்


காந்தியப் பொருளாதாரம் நன் நெறியை அடிப்படையாகக் கொண்டது. 1921 ஆம் ஆண்டில் காந்தி "ஒரு தேசத்தின் அல்லது ஒரு தனியாரின் தார்மீக ஒழுக்க நெறிகளை காயப்படுத்தினால் அந்த பொருளாதார நடவடிக்கை இழுக்கானது; மேலும் அது பாவமானது" என எழுதுகிறார். "தார்மீக மதிப்புகளைப் புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்றது" என அதே நம்பிக்கையை காந்தியடிகள் மீண்டும் 1924 ஆம் ஆண்டில் கூறுகின்றார்


காந்தியப் பொருளாதார சிந்தனைகளின் சிறப்பியல்புகள்


1. கிராமக் குடியரசு: காந்தியடிகள் கிராமங்களில் தான் இந்தியா வாழ்வதாகக் கருதினார். தன்னிறைவு பெற்ற கிராமமாக முன்னேறுவதை அவர் விரும்பினார். அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்துதல், நகர்மயமாதல் மற்றும் தொழில் மயமாதல் ஆகியவற்றை எதிர்த்தார்


2. இயந்திரங்கள்: காந்தியடிகள் இயந்திரங்களை 'மிகப்பெரிய பாவம்' என்று வர்ணித்தார். காந்தியடிகள், "இயந்திரங்களின் தீமைகள் குறித்து விளக்க புத்தகங்கள் எழுதப்பட வேண்டும்; அதன் தீமைகள் மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்; இயந்திரங்கள் வரமல்ல, மாறாக நமக்கு சாபம் என்று நாம் உணர வேண்டும். இயந்திரத்தின் தீமைகளை நாம் பார்க்க வேண்டும்; அவை நம் இணக்கமான வாழ்வை முடிவுக்கு கொண்டுவந்து விடும்" என்கிறார்


3. தொழில்மயம்: தொழில்மயம் மனித இனத்தின் பெரும் சாபக்கேடு என்று காந்தி கருதினார். நாட்டின் திறன் முழுவதையும் சுரண்டுவதை தொழில்மயம் சார்ந்துள்ளது எனக் கருதினார்.

 

4. உற்பத்தி பரவலாக்கம்: உற்பத்தி பரவலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய காந்தி அது அநேக இடங்களில் சிறிய அளவிலும் அல்லது வீடுகளிலேயே உற்பத்தி நடைபெற வேண்டுமென்றும் விரும்பினார்


5. கிராம சர்வோதயா: "உண்மையான இந்தியா வாழ்வது நகரங்களிலோ புறநகரங்களிலோ இல்லை கிராமங்களில் தான்" என்று சொன்ன காந்தியடிகள் கிராமங்கள் தன்னிறைவு பெற்றவைகளாகவும் சுயசார்பு பெற்றவைகளாகவும் இருக்க வேண்டும் என்றார்.


6. உடல் உழைப்பு (bread labour): மனித உழைப்பின் மகத்துவம் உணர்ந்தவர் காந்தியடிகள். கடவுள் மனிதனைப் படைத்ததன் நோக்கமே, தனக்கு தேவையான உணவை தானே நெற்றி வியர்வை சிந்தி தன் உழைப்பின் வழியால் பெற்றுக்கொள்வான் என்பதே என்ற கருத்தை நம்பினார். மனித உழைப்பு என்பதே உடல் உழைப்புதான் என்று காந்தி உறுதிபடக் கூறுகிறார்


7. அறக்கட்டளைக் கோட்பாடு: தற்போதைய முதலாளித்து முறையை மாற்றி சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே அறக்கட்டளைக் கோட்பாடு எனப்படும்; இதில் முதலாளித்துவத்திற்குப் பங்கில்லை. இருப்பினும் இந்தியா சூதாட்ட முதலாளித்துவம் மற்றும் குறைகூறும் முதலாளித்துவம் சார்ந்த அனுபவங்களையும் பெற்றுள்ளது


8. உணவுப் பிரச்சனை: உணவுப்பொருட்களின் மீதான எல்லாவிதக் கட்டுப்பாடுகளையும் காந்தி எதிர்த்தார். அத்தகைய கட்டுபாடுகள் செயற்கைப் பற்றாக்குறையை உருவாக்கும் என்றார். இந்தியா ஒரு சமயத்தில் உணவு தானியத்திற்காக கையேந்தும் நிலையில் இருந்தது. ஆனால் தற்போது, உணவு தானியம், பழங்கள், காய்கறிகள், பால், முட்டை இறைச்சி போன்ற அதிக அளவு உற்பத்தி செய்து உலக அளவில் உயர்ந்த இடத்தில் உள்ளது.


9. மக்கள் தொகை: காந்தி செயற்கையான குடும்பக் கட்டுபாட்டு முறைகளை எதிர்த்தார். ஆனாலும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சுயகட்டுப்பாடு மற்றும் பிரம்மச்சாரியத்தை வலியுறுத்தினார். சுயகட்டுப்பாடே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சிறந்த வழி என்று கருதினார்.


10. மதுவிலக்கு : முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தியவர் காந்தியடிகள். "மது நமக்கு எந்த விதத்திலும் துணை செய்வதல்ல, மாறாக நோயைத் தருகிறது" என்றார் காந்தியடிகள். "இந்தியா குடிகாரர்களின் நாடாக இருப்பதை விட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல்" என்றார். ஆனால் பல மாநிலங்களின் வருவாய் மது விற்பனையைச் சார்ந்துள்ளது.


3. ஜவஹர்லால் நேரு


நவீன இந்தியாவை கட்டமைத்த முதன்மை சிற்பிகளில் ஒருவர் ஜவஹர்லால் நேரு ஆவார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம அமைச்சராக பதவியேற்ற நாள் முதல், 1964ல் இறக்கும் வரை அவர் பிரதமராக பதவி வகித்தார். அவர் ஒரு மிகப்பெரிய தேச பக்தர், சிந்தனையாளர், அரசியல்வாதி. அவருடைய பொருளாதார கருத்துக்கள் அவர் ஆற்றிய எண்ணற்ற உரைகளிலிருந்தும் அவர் எழுதிய புத்தகங்களிலிருந்தும் நமக்கு கிடைக்கின்றன.


. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை

ஜனநாயகத்தை உறுதியாக நம்பியவர் ஜவஹர்லால் நேரு. அவர் பேச்சுரிமை குடிமக்கள் உரிமை, வாக்குரிமை, சட்டத்தின் வழி ஆட்சி மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம் ஆகியவற்றை நம்பியவர். மதச்சார்பின்மை இந்தியாவிற்கு நேரு தந்த மிகப்பெரிய பங்களிப்பு. நமது இந்தியாவில் இந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம், புத்த மதம், ஜைனமதம், சொராஸ்ட்ரிய மதம், சீக்கிய மதம் போன்ற இன்னும் பிற மதங்களும் இருக்கின்றன. ஆனால் மதப்பெருமான்மையால் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை. மதச்சார்பின்மை என்பது எல்லா மதங்களுக்கும் சமமான மரியாதை அளித்தல் ஆகும்


. திட்டமிடுதல்

திட்டமிடுதலை நம் நாட்டில் அறிமுகப்படுத்திய பெருமை ஜவஹர்லால் நேருவையேச் சேரும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு, திட்டம் அவசியம் என்று அவர் கருதினார். 1956 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கருப்பொருள் மீதான விவாதத்தை பாராளுமன்றத்தில் துவக்கிவைத்து பேசினார். "திட்டமிடுதலின் சாரம் என்பது மனித சக்தி வளங்கள், பணம் இவற்றை சிறந்த வழிகளில் பயன்படுத்துவதை குறிக்கும்" என்கிறார்

திட்டமிடுதல் என்பது தொழில் மயமாதலோடு தொடர்புடையது, இதன்மூலம் ஒரு நாடு தன்னைத்தானே வளர்ச்சியடைய செய்து தற்சார்பினை அடைகிறது. எனவே நேரு திட்டமிட்ட வளர்ச்சிபெற இந்த யுக்தியை முன்னெடுக்கிறார். அறிவியல், ஆராய்ச்சி, தொழில் நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் நேருவின் பங்களிப்பு மறக்க முடியாது. அவர் பிரதமராகப் பணியாற்றிய காலத்தில் தான் பல IIT (இந்திய தொழில் நுட்ப கழகம்) மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவர் எப்போதும் அறிவியல் மனப்பான்மையை வலியுறுத்தினார்.


. ஜனநாயக சமதர்மம்

சமதர்மம் என்பது இந்தியாவிற்கு நேருவின் மிகப் பெரிய பங்களிப்பு ஆகும். அவர் நம் இந்தியாவை சமதர்ம சமூகமாக கட்டமைக்க விரும்பினார். ஆனால் நேருவின் சமதர்மம் என்பது ஜனநாயக சமதர்மம் ஆகும்.

11th Economics : Chapter 7 : Indian Economy : Contributions of Indian Economic Thinkers in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம் : இந்தியப் பொருளாதாரச் சிந்தனையாளர்களின் பங்களிப்பு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்