பொருளாதாரம் - இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும் | 11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence
இயல் 8
இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்
விடுதலை எந்த விலைக்கும் ஈடாகாது. விடுதலை என்பது வாழ்வின் மூச்சு. வாழ்வதற்காக மனிதன் எதைக் கொடுக்க மாட்டான்? - டெய்லர் கோவன் (Tyler Coiven)
கற்றல் நோக்கங்கள்
1. ஆங்கிலகாலனித்துவ ஆட்சியின் போது இந்திய அனுபவங்களை புரிந்து கொள்ளல்.
2. சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய அரசு எடுத்த முயற்சிகளை ஆய்வு செய்தல்.
அறிமுகம்
இந்த இயல் விடுதலைக்கு முன் பின் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பற்றி விவாதிக்கிறது. இந்தியா நீண்ட காலமாக காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. காலனித்துவம் என்பது இரண்டு நாடுகளுக்கிடையேயான சமூக மற்றும் பொருளாதார தொடர்புகளில் ஒரு நாடு அதிகாரம் செலுத்தும் நிலையிலும், மற்றொரு நாடு அடிமையாக இருப்பதையும் குறிக்கும். அதிகார நிலையில் உள்ள நாடு தான் அதிகாரம் செலுத்தும் நாட்டின் மீது அரசியல் கட்டுப்பாடு மட்டுமில்லாமல் பொருளாதார கொள்கைகளையும் தீர்மானிக்கிறது. அடிமை நாட்டு மக்கள் தங்கள் நாட்டின் வளங்களை பயன்படுத்துவதிலும் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பார்கள். காலனி ஆதிக்கத்தின் கசப்பான அனுபவத்தை இந்தியா பெற்றுள்ளது.