Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

அலகு 6 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை | 8th Social Science : Civics : Chapter 6 : Defence & Foreign Policy

   Posted On :  14.06.2023 10:05 pm

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 6 : பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

வெளியுறவுக் கொள்கை என்பது பஞ்சசீலம் இறையாண்மை கொண்ட ஒரு நாடு உலகின் மற்ற நாடுகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளும் என்பதை வரையறுக்கும் அரசியல் இலக்குகளின் தொகுப்பாகும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

வெளியுறவுக் கொள்கை என்பது பஞ்சசீலம் இறையாண்மை கொண்ட ஒரு நாடு உலகின் மற்ற நாடுகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளும் என்பதை வரையறுக்கும் அரசியல் இலக்குகளின் தொகுப்பாகும். இது நாட்டு மக்களின் நலன்களையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முயல்கிறது. நமது நாட்டின் வெளியுறவு என்பது சில கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் அடிப்படையாக கொண்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது, அதன் காலனித்துவ பாதிப்புகளின் பின்னணியிலிருந்து உருவானது ஆகும்.


இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள்

• தேதிய நலனைப் பாதுகாத்தல்

• உலக அமைதியினை அடைதல்

• ஆயுதக் குறைப்பு

• காலனித்துவம், இனவெறி மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றை நீக்குதல்

• நட்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்

• பொருளாதார வளர்ச்சி

 

பஞ்சசீலம்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்திய வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் முதன்மை சிற்பியாக இருந்தார். நேரு உலக அமைதிக்கு ஆதரவாளராக இருந்ததால் தனது கொள்கை திட்டமிடலில் உலக அமைதிக்கு மிக முக்கிய இடத்தை வழங்கினார். பஞ்சசீலம் என்றழைக்கப்பட்ட அமைதிக்கான ஐந்து கொள்கைகளை அவர் அறிவித்தார். அவைகள்:

1. ஒவ்வொரு நாட்டின் எல்லையையும் இறையாண்மையையும் பரஸ்பரம் மதித்தல்

2. பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை

3. பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்

4. பரஸ்பர நலனுக்காக சமத்துவம்  மற்றும் ஒத்துழைத்தல் -

5. அமைதியாக இணைந்திருத்தல்

 

அணிசேராமை

அணிசேராமை என்ற சொல் வி.கே. கிருஷ்ணமேனன் என்பவரால்  உருவாக்கப்பட்டது. அணிசேராமை என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் தலைமையிலான இராணுவக் கூட்டில் இணையாமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தை பராமரித்தலே அணி சேராதிருத்தலின் நோக்கம் ஆகும். அணிசேராமை என்பது நடுநிலைமையும் அல்ல, ஈடுபாடின்மையும் அல்ல. அணிசேராமை என்பது எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் (அமெரிக்கா, ரஷ்யா) சேராமல் சர்வதேச பிரச்சனைகளில் சுதந்திரமாக தீர்மானிக்கும் நிலைப்பாட்டைக் குறிக்கும்.

அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்: இந்தியாவின் ஜவஹர்லால் நேரு , யுகோஸ்லாவியாவின் டிட்டோ, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோராவர்.


நெல்சன் மண்டேலா - இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் (தென் ஆப்பிரிக்கா) தலைவராக செயல்பட்டார். இவர் இனவெறிக்கு எதிரான ஓர் உறுதியான போராளி ஆவார். நிறவெறிக் கொள்கை என்பது இனப்பாகுபாட்டின் ஒரு மோசமான வடிவம் ஆகும். இது மனிதாபிமானத்திற்கும், மக்களாட்சிக்கும் எதிரானது. இனவெறிக் கொள்கை மற்றும் அனைத்து வகையான இனப்பாகுபாட்டிற்கும் எதிராக இந்தியா போராடியது. 1990ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்தது இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிகச்சிறந்த வெற்றியாகும்.


அண்டை நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு

அண்டை நாடுகளுடன் இந்தியாவின் நிலைப்பாடு தனித்துவமானது. இந்தியா எப்போதும் சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது, ஏனென்றால் ஒத்துழைப்பு மூலமே நாடுகளிடையேயான பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது நட்புறவுகளை வளர்ப்பது மற்றும் அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பது என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், சீனா, பூடான், வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுடன் இந்தியா பொதுவான நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. மேலும் இலங்கையுடன் பொதுவான கடல் எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது.

இந்தியா பின்வரும் நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டு பரந்த நாடாக விளங்குகிறது.

•வடமேற்கில் - பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்

•வடக்கில் - சீனா, நேபாளம் , பூடான்

•கிழக்கில் வங்காளதேசம்

•தூர கிழக்கில் – மியான்மர்

•தென்கிழக்கில் - இலங்கை

•தென்மேற்கில் - மாலத்தீவு



அண்டை நாடுகளுக்கான முன்னுரிமைக் கொள்கை

இக்கொள்கையானது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்துகிறது. வளஆதாரங்கள், கருவிகள் மற்றும் பயிற்சி ஆகிய வடிவில் அண்டை நாடுகளுக்குத் தேவையான ஆதரவினை இந்தியா அளித்து வருகிறது. பொருட்கள், மக்கள், ஆற்றல், மூலதனம் மற்றும் தகவல்கள் ஆகியவற்றின் தடையில்லா பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்காக அதிக இணைப்பும் ஒருங்கிணைப்பும் அளிக்கப்படுகிறது.


கிழக்குச் செயல்பாடு என்ற கொள்கை

தென்கிழக்கு ஆசியா இந்தியாவின் வடகிழக்கில் இருந்து ஆரம்பமாகிறது. மியான்மர் இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் பாலமாக அமைந்துள்ளது. இக்கொள்கையின் நோக்கம் ஆசியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதோடு, இந்தோ - பசிபிக் பகுதியில் நிலையான மற்றும் பன்முக சமநிலையை உறுதி செய்வதும் ஆகும்.

இந்தியா தனது அண்டை நாடுகளுடன் பின்வரும் பொதுவான பொருளாதார செயலாண்மைத் திறனில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


சார்க் (SAARC)

இந்தியா பிராந்திய ஒத்துழைப்பில் நம்பிக்கை கொண்டுள்ளது. தெற்காசிய நாடுகளுக்கிடையே சகோதரத்துவ பிணைப்புகளை வளர்ப்பதற்காகவும், ஒத்துழைப்பு மற்றும் அமைதியான முறையில் இணைந்திருத்தல் ஆகியவற்றிற்காகவும் தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு நிறுவப்பட்டது. சார்க் அமைப்பு 8 உறுப்பு நாடுகளைக் கொண்டது. அவைகள் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம், பூடான், இலங்கை , மாலத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியனவாகும்.


பி.சி.ஐ.எம் (BCIM)

இது வங்காளதேசம், சீனா, இந்தியா, மியான்மர் பொருளாதார போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தொலை தொடர்பு ஆகியவற்றில் எல்லை கடந்து ஒரு செழிப்பான பொருளாதார மண்டலத்தை உருவாக்க இக்கூட்டமைப்பு உதவுகிறது.


பிம்ஸ்டெக் (BIMSTEC)

இது வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான முயற்சி ஆகும். தொழில்நுட்ப அடிப்படையில் பொருளாதார ஒத்துழைப்பு, பன்னாட்டு வர்த்தகம், வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவற்றை வலுப்படுத்துவதும் மேம்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும். இதன் உறுப்பு நாடுகளாவன, வங்காளதேசம், இந்தியா, மியான்மர். இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம்.


பி.பி.ஐ.என் (BBIN)

பயணிகள், சரக்கு மற்றும் எரிசக்தி மேம்பாடு ஆகியவைகளின் பரிமாற்றத்திற்கான கூட்டமைப்பில் வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

சுருக்கமாக கூறினால், இந்தியா பன்முக கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு பெரிய நாடு. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே உயர்ந்த நிலையைக் கொண்டுள்ளது. நாடுகளிடையே அமைதி, சுதந்திரம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றை பராமரிப்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும். இந்தியா எந்த பெரிய இராணுவ கூட்டணியிலும் இல்லை என்றாலும், முக்கிய சக்திகளுடனான இந்திய உறவுகள் ஆழமான வியூகத்தைப் பெற்றுள்ளன.
Tags : Chapter 6 | Civics | 8th Social Science அலகு 6 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 6 : Defence & Foreign Policy : Foreign Policy of India Chapter 6 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 6 : பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - அலகு 6 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 6 : பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை