Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | மனிதச் சுற்றோட்ட மண்டலம் (Human Circulatory System)
   Posted On :  08.01.2024 07:56 am

11 வது விலங்கியல் : பாடம் 7 : உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்

மனிதச் சுற்றோட்ட மண்டலம் (Human Circulatory System)

மனித இதயம் இதயத்தசை (Cardiac muscle) எனும் சிறப்புத்தசையால் ஆக்கப்பட்டது.

மனிதச் சுற்றோட்ட மண்டலம் (Human Circulatory System)

ரேமண்ட் டி வீசன்ஸ் (Raymond De viessens) என்பவர் 1706ம் ஆண்டு இதயத்தின் அமைப்பை விவரித்தார். மனித இதயம் இதயத்தசை (Cardiac muscle) எனும் சிறப்புத்தசையால் ஆக்கப்பட்டது. மார்பறையில் இரு நுரையீரல்களுக்கு இடையே இடதுபுறம் சற்றுச் சாய்வாக இதயம் உள்ளது. பெரியவர்களின் இதயத்தின் எடை ஏறத்தாழ 300 கிராம் ஆகும். இதயம் ஏறக்குறைய அவரவர் மூடிய கையின் அளவு இருக்கலாம். மனித இதயம் நான்கு அறைகளாலானது, மேற்புறம் இரு ஆரிக்கிள்களையும், (ஏட்ரியங்கள்) கீழ்ப்புறம் இரு பெரிய வென்ட்ரிக்கிள்களையும் கொண்டது. பாப்பில்லரித் தசைகளைக் (Papillary muscles) கொண்டுள்ளதால் வென்ட்ரிக்கிள்களின் சுவர் ஆரிக்கிள்களின் சுவரை விடத் தடித்துக் காணப்படுகிறது. இதயம், பெரிக்கார்டியம் எனும் உறையால் சூழப்பட்டுள்ளது. இவ்வடுக்குகளுக் கிடையே உள்ள இடைவெளி பெரிக்கார்டியல் இடைவெளி (Pericardial space) எனப்படுகிறது. இவ்விடைவெளியில் பெரிக்கார்டியல் திரவம் (Pericardial fluid) நிறைந்திருக்கின்றது. இதயச்சுவர் மூன்று அடுக்குகளால் ஆனது. அவை, வெளிப்புற அடுக்கான எபிகார்டியம் (Epicardium), நடுவில் உள்ள மயோகார்டியம் (Myocardium) மற்றும் உட்புற எண்டோகார்டியம் (Endocardium) போன்றவையாகும்.

மேற்புற இரு ஆரிக்கிள்களும் ஆரிக்குலார் இடைச்சுவரினாலும் வென்ட்ரிக்கிள்கள் வென்ட்ரிக்குலார் இடைச்சுவரினாலும் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தடுப்புச்சுவர்களின் மூலம் ஆக்ஸிஜனுள்ள மற்றும் ஆக்ஸிஜனற்ற இரத்தம் ஒன்றாகக் கலந்து விடாமல் தடுக்கப்படுகிறது. ஆரிக்கிள்கள், வென்ட்ரிக்கிள்களுடன் ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார்துளை (Auriculo ventricular aperture) வழியே தொடர்பு கொள்கிறது. ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் துளை ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வுகளால் பாதுகாக்கப்படுகிறது. வலப்புற ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் துளை மூவிதழ் வால்வினால் (Tricuspid valve) பாதுகாக்கப்படுகிறது. இடது ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் துளை, ஈரிதழ் வால்வு (Bicuspid valve) அல்லது மிட்ரல் வால்வினால் (Mitral valve) பாதுகாக்கப்படுகிறது (படம் 7.6). இரத்தத்தை ஒரே திசையில் ஆரிக்கிள்களிலிருந்து வென்ட்ரிக்கிள்களுக்கும் வென்ட்ரிக்கிள்களிலிருந்து நுரையிரல் தமனி அல்லது அயோர்டாவிற்கு மட்டுமே செல்ல இந்த வால்வுகள் அனுமதிக்கின்றன. இந்த வால்வுகள் இரத்தம் பின்னோக்கிச் செல்வதைத் தடுக்கின்றன.


நுரையீரல் தமனி வலது வென்ட்ரிக்கிளில் இருந்து தொடங்கும் இடத்திலும், மகா தமனி இடது வென்ட்ரிக்கிளிலிருந்து தொடங்குமிடத்திலும் அரைச்சந்திர வால்வுகள் (Semilunar valves) உள்ளன. ஒவ்வொரு வால்வும் மூன்று அரைச்சந்திர வடிவக் கதுப்புகளைக் கொண்டிருக்கின்றன. வென்ட்ரிக்கிளின் மயோகார்டியல் தசைகள் சீரற்ற தசைமேடுகளை நீட்சிகளாகக் கொண்டுள்ளன. இதற்கு ட்ரபெகுலே கார்னியே (Trabeculae corneae) என்று பெயர். இது கார்டே டென்டினே ஆக (Chordae tendinae) மாற்றமடைந்துள்ளது. ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வுகளை மூடவும் திறக்கவும் கார்டே டென்டினே உதவுகிறது.கார்டே டென்டினே பாப்பில்லரி தசைகள் மூலம் வென்ட்ரிக்கிளின் அடிப்புற உட்சுவரில் இணைக்கப்பட்டுள்ளன. மேற்பெருஞ்சிரை மற்றும் கீழ்ப்பெருஞ்சிரைகள் (Superior, inferior vena cava) உடலில் பல பகுதிகளிலிருந்தும் வரும் ஆக்ஸிஜனற்ற இரத்தத்தை வலது ஆரிக்கிளை நோக்கிச் செலுத்துகின்றன. நுரையீரலிலிருந்து வரும் ஆக்ஸிஜன் நிரம்பிய இரத்தமானது நான்கு நுரையீரல் சிரைகள் வழியாக இடது ஆரிக்கிளை அடைகிறது.


இதயத் துடிப்பு தோன்றலும் பரவுதலும் (Origin and Conduction of Heart Beat)

மனித இதயம் மயோஜெனிக் வகையைச் சேர்ந்தது. (இதயத் தசையில் உள்ள கார்டியோமயோசைட்டுகள் முனைப்பியக்க நீக்கம் இயல்பான, சீரான இதயத் துடிப்பைத் துவக்குகின்றன). இதயத்தின் மின் தூண்டல் படிநிலைகள் படம் 7.7 ல் விளக்கப்பட்டுள்ளன. விரைவான சீரியக்கம் கொண்ட இதயத்தசைச் செல்கள் இதயத்தூண்டி செல்கள் அல்லது பேஸ்மேக்கர் செல்கள் எனப்படும். ஏனெனில், மொத்த இதயத்தின் துடிப்பு வீதத்தை இச்செயல்களே தீர்மானிக்கின்றன. இந்தப் பேஸ்மேக்கர் செல்கள் வலது சைனு ஏட்ரியல் (SA node) கணுவில் அமைந்துள்ளன. வலது ஆரிக்கிளின் இடது பகுதியில் ஆரிக்குலோ வென்ட்ரிகுலார் கணு (AV node) உள்ளது. ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் முடிச்சிலிருந்து தோன்றும் இரு சிறப்பு இதயத் தசையிழைகளுக்கு ஹிஸ்ஸின் கற்றைகள் (Bundle of His) என்று பெயர். இது வென்ட்ரிக்குலார் இடைச்சுவர் வழியாகக் கீழ்நோக்கிச் சென்று வென்ட்ரிக்கிளின் சுவர் பகுதியில் நுண்ணிழைகளாக பரவியுள்ளன. இதற்கு பர்கின்ஜி நாரிழை (Purkinje fibres)தொகுப்பு என்று பெயர்.


பேஸ்மேக்கர்செல்கள்,மின்முனைப்பியக்க நீக்கம் (depolarisation) மூலம் செல் சவ்வைக் கிளர்ச்சியடையச் செய்கின்றன. சோடியம் உள்ளே நுழைவதாலும் பொட்டாசியம் வெளியேற்றம் குறைவதாலும் தொடக்கத்தில் மின்முனைப்பியக்க நீக்கம் மெதுவாக நிகழ்கின்றது. குறைந்த பட்ச மின்னழுத்த வழி மூலம் கால்சியம்(Ca+) கால்வாயைத் தூண்டுவதன் விளைவாகத் துரித மின் முனைப்பியக்க நீக்கம் தோன்றுகின்றது. இதனால் செயல்நிலை மின்னழுத்தம் (Action potential) தோன்றுகின்றது. பேஸ்மேக்கர் செல்கள், K+ வெளியேற்றத்தால் மீண்டும் மெதுவாக மின்முனைப்பியக்கம் அடைகிறது.


இதயத்துடிப்பு (Heart Beat)

இதயம் சீராகச் சுருங்கி விரிதல் இதயத்துடிப்பு (Heart beat) எனப்படுகின்றது. இதயம் சுருங்குதல் சிஸ்டோல் (Systole) எனவும், இதயம் விரிவடைதல் டையஸ்டோல் (Diastole) எனவும் அழைக்கப்படும்.

ஒரு முதிர் மனிதனின் இதயம் நிமிடத்திற்கு 70 – 72 முறைகள் துடிக்கும். ஒவ்வொரு இதயச் சுழற்சியின்போதும் வால்வுகளின் இயக்கத்தால் உண்டாகும் இருவகை இதய ஒலிகளை 'ஸ்டெத்தஸ்கோப்பின்' உதவியுடன் கேட்கலாம். வென்ட்ரிக்கிள்கள் சுருங்கும் போது மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக்கொள்வதால் 'லப்' (Lub) எனும் முதல் ஒலி தோன்றுகிறது. மாறாக வென்ட்ரிக்குலார் சிஸ்டோலின் முடிவில் அரைச்சந்திர வால்வுகள் மூடுவதால் 'டப்' (Dub) எனும் இரண்டாவது ஒலி தோன்றுகிறது. இந்த இருவகை இதய ஒலிகள் மருத்துவ நோய் அறிதலில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதயத்துடிப்பு வீதம் அதிகரிக்கும் நிலை டாக்கிகார்டியா (Tachycardia) அல்லது இதயமிகைத் துடிப்பு என்றும் இதயத்துடிப்பு வீதம் குறையும் நிலை பிராடிகார்டியா (Bradycardia) அல்லது இதய மந்தத்துடிப்பு என்றும் அழைக்கப்படுகின்றன.


இதய இயக்கச் சுழற்சி (Cardiac Cycle)

இதயத் துடிப்பின் தொடக்கம் முதல் அடுத்த துடிப்பின் தொடக்கம் வரை உள்ள நிகழ்வுகள் இதய இயக்கச் சுழற்சி ஆகும். இது 0.8 வினாடிகள் வரை நடைபெறுகிறது. கீழ்க்காணும் படிநிலைகளில் இதய இயக்கச் சுழற்சியை நாம் அறியலாம்.

படிநிலை -1 வென்ட்ரிக்குலார் டயஸ்டோல் (Ventricular diastole): ஆரிக்கிள் அழுத்தம் வென்ட்ரிக்கிள் அழுத்தத்தை விட உயர்கின்றது. இந்நிலையில் ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வுகள் திறக்கின்றன. அரைச்சந்திர வால்வுகள் மூடுகின்றன. இரத்தம் ஆரிக்கிள்களில் இருந்து வென்ட்ரிக்கிள்களுக்குள் இயல்பாகச் செல்கின்றது.

படிநிலை -2 ஆரிக்குலார் சிஸ்டோல் (Atrial systole): இந்நிலையில் ஆரிக்கிள்கள் சுருங்குகின்றன. வென்ட்ரிக்கிள்கள் தொடர்ந்து தளர்ந்த நிலையிலேயே உள்ளன ஆரிக்கிள்கள் சுருங்கி டையஸ்டோலிக் முடிவு கொள்ளளவை (End diastolic volume - EDV) எட்டும் வரை, அதிக அளவு இரத்தம் வென்ட்ரிக்கிளை நோக்கி உந்தித்தள்ளப்படுகின்றது. டையஸ்டோலிக் முடிவு கொள்ளளவு இதயத் தசை நார்களின் நீளத்தைப் பொறுத்தது. தசை நீட்சி அதிகரித்தால் EDV யும் வீச்சுக் கொள்ளளவும் உயர்கின்றது.

படிநிலை -3 வென்ட்ரிக்குலார் சிஸ்டோல் (Ventricular Systole): (ஒத்தக் கொள்ளளவு சுருக்கம் Isovolumetric contraction): வென்ட்டிரிக்கிளின் சுருக்கம் ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வுகளை மூடச் செய்து வென்ட்ரிகுலார் அழுத்தத்தை அதிகரிக்கின்றது. வென்ட்ரிக்கிள் சுவரின் தசை நார்களின் நீளம் மற்றும் வென்ட்ரிக்கிளின் கொள்ளளவில் மாற்றம் இல்லை.

படிநிலை -4 வென்ட்ரிக்குலார் சிஸ்டோல் (Ventricular Systole): (வென்ட்ரிகுலார் வெளியேற்றம் - Ventricular ejection): வென்ட்ரிக்கிளின் அழுத்தம் அதிகரிப்பதால் அரைச்சந்திர வால்வுகள் திறக்கின்றன. இரத்தம் பின்னோக்கிச் செல்வது தடுக்கப்பட்டுப் பெருந்தமனி மற்றும் நுரையீரல் தமனிகளுக்குள் செலுத்தப்படுகிறது. இந்நிலை சிஸ்டோலிக் முடிவுக் கொள்ளளவு (ESV) எனப்படும்.

படிநிலை -5 வென்ட்ரிக்குலார் டயஸ்டோல் (Ventricular diastole): இந்நிலையில் வென்ட்ரிக்கிள்கள் விரிவடையத் தொடங்குகின்றன. தமனிகளின் இரத்த அழுத்தம் வென்ட்ரிக்கிளின் அழுத்தத்தை விட உயர்கின்றன. இதனால் அரைச்சந்திர வால்வுகள் மூடுகின்றன. இதயம் படிநிலை 1ன் நிலையை மீண்டும் அடைகிறது.


இதயத்திலிருந்து வெளிப்படும் இரத்த அளவு Cardiac Output)

ஒவ்வொரு வென்ட்ரிக்கிளும் ஒரு நிமிடத்தில் வெளியேற்றும் இரத்தத்தின் அளவே இதயத்திலிருந்து வெளியேறும் இரத்த அளவு (Cardiac output- CO) ஆகும். இது இதயத்துடிப்பு வீதம் (Heart rate- HR) மற்றும் வீச்சுக்கொள்ளளவின் (Stroke volume/SV) விளைவாகும். இதயத்துடிப்பு வீதம் அல்லது நாடித்துடிப்பு (Pulse) என்பது ஒரு நிமிடத்தில் இதயம் துடிக்கும் எண்ணிக்கையாகும். நாடித்துடிப்பு அழுத்தம்=சிஸ்டோலிக் அழுத்தம்டயஸ்டோலிக் அழுத்தம். வீச்சுக் கொள்ளளவு என்பது ஒவ்வொரு துடிப்பின் போதும் ஒரு வென்ட்ரிக்கிள் வெளியேற்றும் இரத்தத்தின் அளவாகும். வீச்சுக்கொள்ளளவு வென்ட்ரிக்குலார் சுருக்கத்தைச் சார்ந்துள்ளது.

CO = HR × SV

வீச்சுக்கொள்ளளவு டையஸ்டோலின் போது வென்ட்ரிக்கிளினுள் செல்லும் இரத்தத்தின் அளவுக்கும் (EDV) வென்ட்ரிக்கிள் சுருங்கிய பிறகு அங்கு மீதமுள்ள இரத்தத்தின் அளவுக்கும் (ESV) இடையே உள்ள வேறுபாட்டைக் குறிக்கிறது. SV =EDV-ESV.

ஃப்ராங்க் - டார்லிங் விதிப்படி இதயம் சுருங்குவதற்குச் சற்று முன்னர் எந்த அளவுக்கு இதயத்தசைச் செல்கள் நீட்சியடைகின்றன என்பதே வீச்சுக் கொள்ளளவைக் கட்டுப்படுத்தும் முக்கியக் காரணியாகும்.

இதயத்திற்கு திரும்பி வந்து வென்ட்ரிக்கிள்களை விரிவடையச் செய்யும் சிரை இரத்தத்தின் அளவே இதயத் தசைகளை நீட்சியடைய வைக்கும் முக்கிய காரணியாகும். தீவிர உடற்பயிற்சியின் போது இதயத்திற்குத் திரும்பும் சிரை இரத்தத்தின் விளைவாக வீச்சுக்கொள்ளளவு இரட்டிப்பாகிறது. பொதுவாக, இதயம் வெளியேற்றும் இரத்தத்தின் அளவுக்கும் இதயத்திற்குத் திரும்பி வரும் சிரை இரத்தத்தின் அளவுக்கும் இடையே ஒரு சமநிலையை இதயத்தின் இரத்தத்தை வெளித்தள்ளும் திறன் பராமரிக்கிறது. இதயம் ஒரு இரட்டை உந்தம் அமைப்பு என்பதால் அதன் ஒரு பக்கம் அடுத்த பக்கத்தின் தொடர்பு இல்லாமல் செயலிழக்கக் கூடும். இதயத்தின் இடதுபக்கம் பாதிக்கப்பட்டால் நுரையீரல் அடைப்பு ஏற்படும் இதயத்தின் வலது பக்கம் பாதிக்கப்பட்டால் புறப்பகுதிகளில் அடைப்பு ஏற்படும் ஃப்ராங்க் ஸ்டார்லிங் விளைவு இரத்தத்தின் கொள்ளளவில் ஏற்படும் அசாதாரணமான அதிகரிப்பிலிருந்து இதயத்தைப் பாதுகாக்கிறது.


தெரிந்து தெளிவோம்

இரத்த அளவு திடீரெனக் குறையும் போது வீச்சுக் கொள்ளளவில் நிகழ்வதென்ன? வீச்சுக்கொள்ளளவு அதிகரிக்குமா? அல்லது குறையுமா? எனக்கூறு.


இரத்த அழுத்தம் (Blood Pressure) 

முக்கியத் தமனிகளின் வழியே இரத்தம் பாயும்போது அத்தமனிகளின் பரப்பில் தோன்றும் அழுத்தமே இரத்த அழுத்தம் (Blood pressure) எனப்படும். இவ்வழுத்தமே இரத்தத்தைத் தமனிகள், சிரைகள் மற்றும் இரத்த நுண்நாளங்களினுள் சுழலச்செய்கிறது. இரண்டு வகையான இரத்த அழுத்தங்கள் உண்டு. அவை சிஸ்டாலிக் அழுத்தம் மற்றும் டையஸ்டாலிக் அழுத்தம் ஆகும். இதயத்தின் அறைகள் சுருங்கும் போது தமனிகளில் தோன்றும் அழுத்தம் சிஸ்டாலிக் அழுத்தம் எனப்படும். இதயத்தின் அறைகள் தளர்ச்சியடையும் வேளையில், தமனிகளின் சுவரில் காணப்படும் அழுத்தம் டையஸ்டாலிக் அழுத்தம் எனப்படும். இரத்த அழுத்தத்தை ஸ்பிக்மோமானோமீட்டர் (Sphygmomanometer) எனும் இரத்த அழுத்த மானியால் அளவிடலாம். இவ்வழுத்தத்தைச் சிஸ்டாலிக் அழுத்தம் / டையஸ்டாலிக் அழுத்தம் எனக் குறிப்பிடலாம். உடல் நலத்துடன் இருக்கும் ஒருவரின் இரத்த அழுத்தம் 120/80 மிமீ பாதரசம் ஆகும்.

இதயத்திலிருந்து வெளியேறும் இரத்தத்தின் அளவு (CO) மற்றும் அச்சமயத்தில், நுண்தமனிகளின் சுவரில் தோன்றும் எதிர்ப்பு ஆகியவற்றினால் ஏற்படுவது சராசரி தமனி அழுத்தம் (Mean arterial pressure) எனப்படும். சராசரி தமனி அழுத்தத்தை நிலையாகப் பேணுவதற்கான முதன்மை கட்டுப்பாட்டு வழிமுறையே அழுத்த உணர்வேற்பி எதிர்வினையாகும் (baroreceptor reflex). ஒவ்வொரு காலையிலும் துயில் எழும்போது, அழுத்த உணர்வேற்பி எதிர்வினைச் செயலாற்றுகிறது. படுக்கையில் படுத்திருக்கும்போது, புவியீர்ப்பு விசை உடலெங்கும் சமமாகப் பரவியிருக்கிறது. ஆனால் எழுந்து நிற்கும் போது ஈர்ப்பு விசையின் காரணமாக, உடலின் கீழ்ப்பகுதிகளில் அதிக இரத்தம் சேருகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது. இதற்கு 'ஆர்த்தோஸ்டேட்டிக் குறை அழுத்தம்' (Orthostatic hypotension) என்று பெயர். ஆர்த்தோஸ்டாட்டிக் எதிர்வினை பொதுவாக அழுத்த உணர்வேற்பி எதிர்வினையைத் தூண்டுகிறது. இது இதயத்திலிருந்து வெளியேறும் இரத்தத்தின் அளவையும் புறப்பரப்பு எதிர்ப்பையும் அதிகரிக்கிறது. இவையிரண்டும் சேர்ந்து சராசரி தமனி அழுத்தத்தை அதிகரிக்கிறது.


எலக்ட்ரோகார்டியோகிராம் (Electrocardiogram- ECG) 

எலக்ட்ரோகார்டியோகிராம் (.சி.ஜி) என்பது குறிப்பிட்ட காலத்தில் இதயத்தில் ஏற்படும் மின்திறன் மாற்றங்களைப் பதிவு செய்யும் எளிய சோதனை முறையாகும். தோல், கைகள், கால்கள் மற்றும் மார்புப் பகுதியில் மின் முனைகளைப் பொருத்தி மின் திறன் பதிவு செய்யப்படுகிறது. ஒரு இதயச் சுழற்சியில் இதயத்தின் மின் திறனில் ஏற்படும் மாற்றங்களை இக்கருவி பதிவு செய்கிறது. இதயச் சுழற்சியின் போது, இதயத்துடிப்பைத் துவக்குவது வலது ஆரிக்கிளிலுள்ள சிறப்புத் தசை மடிப்புகளால் ஆன சைனு ஆரிக்குலார் கணுவாகும். இந்த இயக்கம் அலையாக இதயத்தில் பரவுகிறது. .சி.ஜி யில் காணப்படும் அலைகள் இதயம் சுருங்குவதால் ஏற்படுவது அல்ல, இது முனைப்பியக்க நீக்கத்தால் (Depolarization) ஏற்படுவதாகும். இதயத்தசை சுருங்கத் துவங்கும் முன்பே, மின்முனைப்பியக்க நீக்க அலை தோன்றுகிறது. ஒரு சாதாரண .சி. ஜி யில் மூன்று அலைகள் காணப்படும். இது P அலை QRS கூட்டமைப்பு மற்றும் T அலை எனக் குறிக்கப்படுகிறது. PQRST கூட்டமைப்பு படம் 7.8 லும் .சி.ஜி கட்ட வரைபடம் (ECG graph), படம் 7.9 லும் காண்பிக்கப்பட்டுள்ளது.




P அலை (ஆரிக்குலார் மின்முனைப்பியக்க நீக்கம் - (Atrial Depolarization)

இவ்வலை ஆரிக்கிளில் தோன்றும் மின்முனைப்பியக்க நீக்க நிலையை (Depolarisation) குறிக்கும். இது ஒரு சிறிய மேல் நோக்கிய அலையாகும். இது சைனு ஆரிக்குலார் கணுவில் தோன்றிய தூண்டல், ஆரிக்கிள்களில் பரவ எடுத்துக்கொள்ளும் காலஅளவைக்குறிக்கின்றது. இரண்டு ஆரிக்கிள்களின் சுருக்கத்திற்கான கால அளவு 0.08 – 0.1 வினாடி ஆகும்.


PQ இடைவெளி (ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் கணு தாமதம்)- (AV Node Delay)

இது P அலை தோன்றியது முதல் QRS கூட்டமைப்பு அலைகள் தோன்றும் வரை உள்ள இடைவெளியாகும். இந்நிலை ஆரிக்கிள்களின் மின்முனைப்பியக்க நீக்க நிலை தொடங்கி வென்ட்ரிக்கிள்களின் மின்முனைப்பியக்கம் வரை குறிப்பதாகும். ஆரிக்கிள்களிலிருந்து வென்ட்ரிக்கிள்களுக்கு தூண்டல் கடத்தப்படும் நேரத்தை இது குறிக்கிறது. (0.12 – 0.21 வினாடி) இது ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் முடிச்சு, தூண்டலைக் கடத்தும் கால அளவாகும்.


QRS கூட்டமைப்பு (வென்ட்ரிகுலார் மின்முனைப்பியக்க நீக்க நிலை) (Ventricular Depolarisation)

.சி.ஜி யில் ஆரிக்குலார் மின் முனைப்பியக்க மீட்சி நிலையைக் காட்டும் தனியான அலை தெளிவாகப் புலப்படாது. ஆரிக்குலார் மற்றும் வென்ட்ரிக்குலார் மின் முனைப்பியக்கம் நீக்கம் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. QRS கூட்டின் கால அளவு 0.06 - 0.09 வினாடிகள் ஆகும். இந்த QRS கூட்டமைப்பின் கால அளவு P அலையைவிடக் குறுகியது. ஏனெனில், மின்முனைப்பியக்க நீக்கம் பர்கின்ஜி நார்கள் வழியாகப் பரவுகிறது. நீண்ட QRS அலை தாமதமாகத் தூண்டல் கடத்தப்படுவதைக் குறிக்கின்றது. இந்நிலை வென்ட்ரிக்கிள் வீக்கமடைதல் (Ventricular hypertrophy) அல்லது ஹிஸ்ஸின் கற்றை கிளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்பினால் ஏற்படுவதாகும்.


ST பகுதி (ST Segment):

இப்பகுதி QRS கூட்டமைப்பிற்கும் T அலைக்கும் இடையே அமைகிறது. வென்ட்ரிக்கிளின் அனைத்துப் பகுதியும் மின் முனைப்பியக்கம் அடைந்தபின் மீண்டும் இதயத்தசையில் மின்முனைப்பியக்க மீட்சி (Repolarisation) நடை பெறும் முன் ஒரு சமமட்ட பகுதி (ST) உருவாகிறது. பொட்டாசியம் அயனி (K+) வெளியேற்றம் குறைவதனால் மின்முனைப்பியக்க  காலம் கூடுகிறது. இதுவே சமமட்ட பகுதிக்குக் காரணமாகும். ST பதிவின் கால அளவு 0.09 வினாடியாகும்.


T அலை (வென்ட்ரிக்குலார் முனைப்பியக்க மீட்சி - Ventricular Repolarisation):

இது வென்ட்ரிக்கிளில் ஏற்படும் மின் முனைப்பியக்க மீட்சி நிலையைக் குறிக்கிறது. இது QRS கூட்டினை விட நீண்ட அலை. ஏனெனில், வென்ட்ரிக்குலார் முனைப்பியக்க மீட்சியும், வென்ட்ரிக்குலார் முனைப்பியக்க நீக்கமும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. T அலையின் கால அளவு 0.2-0.4 வினாடிகள் ஆகும்.


11th Zoology : Chapter 7 : Body Fluids and Circulation : Human circulatory system in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 7 : உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் : மனிதச் சுற்றோட்ட மண்டலம் (Human Circulatory System) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 7 : உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்