Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | வேளாண் துறையில் சீர்திருத்தங்களின் தாக்கம்

பொருளாதாரம் - வேளாண் துறையில் சீர்திருத்தங்களின் தாக்கம் | 11th Economics : Chapter 9 : Development Experiences in India

   Posted On :  06.10.2023 10:47 pm

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்

வேளாண் துறையில் சீர்திருத்தங்களின் தாக்கம்

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடக்கத்திலிருந்தே, இந்தியப் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சேவைத்துறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.

வேளாண் துறையில் சீர்திருத்தங்களின் தாக்கம்

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடக்கத்திலிருந்தே, இந்தியப் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சேவைத்துறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இருந்தாலும், இவ்வளர்ச்சி வேளாண்துறை வளர்ச்சியைத் தடைசெய்தது. (1984 - 85ல் 3.62 சதவீதமாக இருந்த வளச்சி, 1995 - 96 முதல் 2004 - 05 வரை 1.97 சதவீதமாகக் குறைந்தது) வேளாண்துறையில் விளைச்சல் மற்றும் உற்பத்தித் திறனில் ஒரு பெரிய இடைவெளியைப் பதிவு செய்துள்ளது, இதனால் பணப்பயிர்ப் பயிரிடுதலுக்கு விவசாயிகள் இடம்பெயர்ந்தனர். மேலும், கடன் சூழல்களால் பல்வேறு விவசாயக் குடும்பங்கள் வறுமைக்கும், தற்கொலை போன்ற கொடூர முடிவுகளைக் கையிலெடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.


1. பயிர் காப்பீடு

இந்தியாவில் வேளாண்துறை வெள்ளத்தாலும், வறட்சியாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றது. இயற்கைச் சீற்றங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்து அடுத்த பருவத்திற்கு தயார் செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு விவசாய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

18 பிப்ரவரி 2016ல், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (The Pradhan Mantri Fasal Bima) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் விவசாயிகள் கோடைகாலப் பயிர்களுக்கு 2%, மற்றும் குறுவை சாகுபடி பயிர்களுக்கு 1.5% என்ற ஒரே சீரான சந்தாத் தொகை கட்ட உதவுகிறது. தோட்டப் பயிர்கள் மற்றும் பணப்பயிர்களுக்கு வருடாந்திர சந்தா 5% ஆக இருக்கும்.



2. குளிர்பதன சேமிப்புக் கிடங்கு

பழங்களின் உற்பத்தியில், இந்தியா உலக அளவில், மிகப் பெரிய உற்பத்தியாளராகவும், காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாவது மிகப் பெரிய உற்பத்தியாளராகவும் விளங்குகிறது. இருந்தபோதிலும், அறுவடைக்குப் பின்னால் ஏற்படும் 25% முதல் 30% வரையிலான இழப்புகளினால், தனிநபருக்குக் கிடைக்கக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளின் அளவு மிகக்குறைவாகவே உள்ளது. அது தவிர நுகர்வோரை அடையும் நேரத்தில் பண்டத்தின் தரம் கணிசமான அளவில் குறைகிறது. விரைவில் அழுகும் தன்மையுடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சந்தைப்படுத்துவதில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது அதிக வியாபாரச் செலவுகள், சந்தைகளில் தேக்கம், விலையில் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பல பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது.இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, இந்திய அரசு மற்றும் வேளாண் அமைச்சகம், 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் மூன்றாவது பிரிவின்படி, "குளிர்பதன கிடங்கு ஆணை 1964" "Cold Storage Order, 1964", என்பதை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் இன்றளவும் குளிர்பதன சேமிப்பு கிடங்கு வசதி போதிய அளவில் இல்லை

உழவர் கடன் அட்டைத்திட்டம் 


உழவர் கடன் அட்டை, கிசான் கிரெடிட் கார்ட் (KCC) என்பது கடன் தேவைப்படுகிற ஒரு விவசாயியின் தகுதிக்கேற்ப கடன் மிக எளிதாக மற்றும் சரியான நேரத்தில் வழங்குவதற்கான ஓர் ஏற்பாடாகும். இது 1998ம் ஆண்டில் இந்திய மைய வங்கி மற்றும் "விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி" (National Bank for Agricultural and Rurul Development, NABARD) ஆகியவற்றால் தொடங்கப்பட்டது. விவசாயிகள் கடனுக்காக முறைசாரா வங்கிளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதே அதன் நோக்கமாகும். முறைசாரா வங்கிகளில் கடன் பெறுவது எளிது; ஆனால் வட்டி வீதம் அதிகம். இந்த கடன் அட்டையை பிராந்திய, கிராமப்புற, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்குகின்றன. மேலும் அரசு KCC கடன் அட்டையை மின் தகவல் கடன் அட்டையாக (Smart card cum debit card) மாற்றி வழங்க அறிவுறுத்தியுள்ளது.


3. அறுவடைக்குப் பின் எடுக்கப்படும் நடவடிக்கைகள்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Agricultural Research - ICAR), 2012-13 ஆம் ஆண்டுக்கான விபரங்களைக்கொண்டு, 2014ல் ஆம் ஆண்டு மொத்த விற்பனை விலையில், வேளாண்மையில் அறுவடைக்குப்பின் ஓராண்டுக்கான இழப்பீடு, ₹92,651 கோடியாகவுள்ளதாக கணித்துள்ளது.

அட்டவணை 9.1 உணவுப்பொருள் கழிவுகள் (%)


விவசாய விளை பொருட்களின் விரயங்களைக் குறைப்பதற்காகவும் மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதற்கும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் அமைச்சகம் (MOFPI), மத்திய அரசுத் திட்டங்களின் பல்வேறு அமைப்புகளை நடைமுறைப் படுத்தியுள்ளது. அவற்றில் சில: பெரிய உணவுப்பூங்கா, ஒருங்கிணைந்த குளிர் இணைப்பு (அறுவடை இடத்திலிருந்து பாதுகாப்பு பெட்டகம் வரும்வரை குளிர்பதன வசதி), மதிப்புக் கூட்டி பாதுகாக்கும் கட்டமைப்பு, நவீன இறைச்சி வதைக் கூடங்கள், தர உத்திரவாதத் திட்டம், தரக் குறியீடு (அறிவியல் பூர்வமான தரக் குறியீடு) ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பிற முன்னேற்ற நடவடிக்கைகள்.

மேலும் தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை அல்லாத பொருட்களின் அறுவடைக்குப்பின் நேரிடும் இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, விளைநிலங்களிலிருந்து நுகர்வோர் வரையிலான அல்லது உற்பத்திப் பகுதியிலிருந்து அங்காடி வரையிலான ஒருங்கிணைந்த குளிர்பதன மற்றும் பதப்படுத்தும் கட்டடைப்பு வசதிகளை இந்திய அரசு செய்துள்ளது. 2008-09 ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் பெரிய முன்னேற்றம் எதுவும் தெரியவில்லை


4. விவசாயபொருட்களுக்கான அங்காடி குழு Agricultural Produce Market Committee (APMC)

விவசாய பொருட்களுக்கான அங்காடிக் குழு, வேளாண்மை அல்லது தோட்டப்பயிர்கள் அல்லது கால்நடைப் பொருட்களை வர்த்தகம் செய்வதற்கு மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு ஆகும்.

APMCன் பணிகள் பின்வருமாறு

1. வேளாண் சந்தைகளில் பொது மற்றும் தனியர்களிடையே கூட்டுறவை வளாச்சி பெறச் செய்தல்

2. சந்தை சார்ந்த விரிவாக்க சேவைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்

3. விலை நிர்ணயம் மற்றும் அங்காடிப் பறிமாற்றங்களில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருதல்

4. விவசாய உற்பத்திகளை விற்பனை செய்த அதேநாளில் விவசாயிகளுக்குப் பணம் செலுத்துவதை உறுதி செய்தல்

5. வேளாண் நடவடிக்கைகளை ஊக்குவித்தல் 

6. வேளாண் பொருட்களின் வரவு மற்றும் விலை தொடர்பான புள்ளி விவரங்களை அவ்வப்போது காட்சிப்படுத்துதல்


5. சீர்திருத்தங்களுக்குப் பிந்தைய விவசாய நெருக்கடிகள் 


) இடுபொருட்களின் செலவு உயர்வு

விதைகளே விவசாயிகளுக்கான மிகப்பெரிய உள்ளீடு ஆகும். தாராளமயமாக்கப்படுவதற்கு முன் நாடு முழுவதும் விவசாயிகள் மாநில அரசாங்க நிறுவனங்களிலிருந்து விதைகளைப் பெற்று வந்தனர். இந்நிறுவனங்கள் விதைகளை தாங்களே உற்பத்தி செய்து தரம் மற்றும் விலை நிர்ணயித்துக்கு முழுப் பொறுப்பாக இருந்தன. தாராளமயமாக்கல் மூலம் இந்தியாவின் விதைகள் சந்தை உலகளாவிய வேளாண் தொழிலுக்கு திறந்து வைக்கப்பட்டது. மேலும் கட்டுப்பாடுகள் தளர்ந்தப்பட்டதால் 2003 ஆம் ஆண்டு பல மாநில அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன. இது உழவர்களை இரட்டிப்பாகப் பாதித்தது. விலைகள் உயர்வு மற்றும் போலி விதைகள் உருவாக்கம் முதலான பல சிக்கல்களை மேலும் பெரிதாக்கியது.


) வேளாண்மை மானியக் குறைப்பு

ஏற்றுமதி நோக்கத்துடன் மிளகாய், பருத்தி மற்றும் புகையிலை போன்ற பணப்பயிர்களை பாரம்பரியப் பயிர்களோடு ஊடு பயிராக வளர்ப்பதற்கு விவசாயிகளை ஊக்குவித்தனர். தாராளமயமாக்கல் கொள்கைகள், பூச்சிக்கொல்லி மற்றும் உர மானியத்தைக் குறைத்து விட்டதால் உரங்களின் விலைகள் 300% அதிகரித்தன மற்றும் மின் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. ஆனால் விவசாயப் பொருட்களின் விலை அந்தளவுக்கு உயரவில்லை.


) இறக்குமதிச் சுங்கவரி குறைப்பு

உலகமயமாக்குதலின் விளைவாக இறக்குமதி மேல் விதிக்கப்பட்ட வரிகள் குறைக்கப்பட்டன. அத்துடன் 2001ல் 1500க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. இதன் விளைவாக இறக்குமதி மலிந்து, பொருட்கள் சந்தையில் குவிந்தன. இதனால் பருத்தி மற்றும் மிளகு போன்ற பயிர்களின் விலைகள் சரிந்தன.


) கடன் வசதிகளை நிறுத்தி வைத்தல் 

1991க்குப் பின்னர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உட்பட வணிக வங்கிகளின் கடனளிப்பு முறையில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தால் விவசாயத்திற்குப் போதுமான கடனுதவி அளிக்க இயலவில்லை . இது விவசாயிகளை அதிக வட்டி வசூலிக்கக்கூடிய வட்டிக்கடைக்காரர்களைச் சார்ந்திருக்கக் கட்டாயப்படுத்தியது

Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 9 : Development Experiences in India : Impact of LPG on Agricultural Sector Reforms - Development Experiences in India Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் : வேளாண் துறையில் சீர்திருத்தங்களின் தாக்கம் - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்