Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | வர்த்தகக் கொள்கைச் சீர்திருத்தங்கள்

இந்தியப் பொருளாதாரம் - வர்த்தகக் கொள்கைச் சீர்திருத்தங்கள் | 11th Economics : Chapter 9 : Development Experiences in India

   Posted On :  06.10.2023 10:53 pm

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்

வர்த்தகக் கொள்கைச் சீர்திருத்தங்கள்

1991 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் புதிய வர்த்தகக் கொள்கையின் முக்கிய அம்சங்களாவன

வர்த்தகக் கொள்கைச் சீர்திருத்தங்கள்

1991 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் புதிய வர்த்தகக் கொள்கையின் முக்கிய அம்சங்களாவன


தடையில்லா இறக்குமதி, ஏற்றுமதி

1991க்கு முன், இந்திய இறக்குமதியானது ஒழுங்குபடுத்தப்பட்டு காணப்பட்டது. 1992ஆம் ஆண்டிலிருந்து இறக்குமதியானது வரையறுக்கப்பட்ட எதிர்மறைப் பட்டியல் மூலம் ஒழுங்குபடுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஏப்ரல் 1, 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வர்த்தகக் கொள்கையின்படி ஏறத்தாழ அனைத்து இடைவினை மற்றும் மூலதனப் பண்டங்களுக்கான இறக்குமதி தடைநீக்கப்பட்டது. 71 பொருட்கள் மட்டுமே தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ளன.


சுங்க கட்டண அமைப்பு மற்றும் அளவுக் கட்டுப்பாடுகளை நீக்குதல்

ராஜா செல்லையா குழு அறிக்கை, இறக்குமதிக்கான தீர்வைகளை பெருமளவு குறைக்கப் பரிந்துரை செய்துள்ளது. உச்ச அளவாக 50 சதவிகிதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது. இந்தத்தீர்வைகளைப் படிப்படியாகக் குறைப்பதன் முதல் முயற்சியாக, 1991-92 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையில் இறக்குமதி வரி 300 சதவீதத்திலிருந்து 150 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நிதி அறிக்கைகளில், சுங்க வரியைப் படிப்படியாகக் குறைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


1. ஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கை

இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று 2015-2020 வரையிலான காலத்திற்கான புதிய வெளிநாட்டு வாணிபக் கொள்கையை அறிவித்தது.

ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை (2015-2020):

ஏற்றுமதி சூழல்களை மேம்படுத்துதல், உற்பத்தி அதிகரிப்பு மற்றும் "இந்தியாவில் தயாரிப்பு" (Make in India) மற்றும் "மின்னனு இந்தியா" (Digital India) போன்ற திட்டங்களுக்கு ஆதரவளித்தலே இக்கொள்கையின் முதன்மையான நோக்கமாகும்.

சிறப்பு கூறுகள்:

ஏற்றுமதி உதவிகளை 25 சதவீத அளவு குறைக்கவும், இந்தியப் பொருட்களை ஊக்குவிக்கவும் "இந்திய தயாரிப்பு" என்ற கருத்து உருவாக்கப்பட்டது.

டிஜிட்டல் இந்தியா முறைப்படி, வரித்தாக்கல், முத்திரைத்தாள் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றிற்கான கைபேசி செயலி மற்றும் பட்டயக் கணக்காளர், கணக்குக்காசாளர் போன்றோரால் (CA/ CS/Cost Accountant) மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்ட ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன

ஏற்றுமதியாளர் / இறக்குமதியாளர் சுயவிவர ஆவணங்களின் அசல் நகல்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை 

பாதுகாப்பு, இராணுவக்கிடங்கு, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்றவை தொடர்பான ஏற்றுமதிக் கோரிக்கைகளுக்கு கால அளவு 24 மாதங்களாகும்.

தற்போது உலக வர்த்தகத்தில் 3% மாக இருக்கிற இந்தியாவின் பங்கை 2020க்குள், ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை (2015-2020) இரு மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2. சிறப்புப் பொருளதார மண்டலங்கள் (Special Economic Zones)

அனுமதி வழங்குவதில் பெருகியிருந்த கட்டுப்பாடுகள், உள்கட்டமைப்பு வசதியின்மை, குறைவான நிதி போன்ற குறைபாடுகளைச் சமாளிக்கவும், நேரடி முதலீட்டை ஈர்க்கவும் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை உருவாக்கப்பட்டது.

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக வணிக மற்றும் தொழில் காரணங்களுக்காக அரசாங்க நிலங்களை கையப்படுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. 2005ம் ஆண்டின் சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கையின்படி 400 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. இக்கொள்கையினால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விளை நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. உலகமயமாதலோடு கூடிய ஏற்றுமதி முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை அடைவதற்காக, பல நாடுகளில் SEZ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு பொருளாதாரமண்டலம்


ஏற்றுமதி செயலாக்க மண்டல மாதிரிகளின் (Export Processing Zone - EPZ) பயன்பாட்டை உணர்ந்த நாடுகளில் முதன்மையானது இந்தியாவாகும். 1965 ஆம் ஆண்டில் காண்ட்லாவில் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் அமைக்கப்பட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பல மண்டலங்களை உள்ளடக்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, சுதந்திர வர்த்தக மண்டலங்கள், ஏற்றுமதி செயலாக்க மண்டலங்கள், தொழில் பூங்காங்கள், பொருளாதார மற்றும் தொழில் நுட்ப முன்னேற்ற மண்டலங்கள், உயிர் தொழில் நுட்ப மண்டலங்கள், அறிவியல் மற்றும் புதுமைப் பூங்காக்கள், இலவசத் துறைமுகங்கள், நிறுவன மண்டலங்கள் போல இன்னும் பல.

SEZ-ன் முக்கிய நோக்கங்கள்

1. வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க, முக்கியமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்த்து, நம் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) யை அதிகரித்தல்.

2. பன்னாட்டு வியாபாரத்தில் / உலக ஏற்றுமதியில் நமது பங்கினை அதிகரித்தல்.

3. கூடுதல் பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குதல்.

4. வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்

5. கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்

6. உலக அங்காடித் தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்

SEZ ன் முக்கியமான இயல்புகள் 

a. பாதுகாப்புடன் கூடிய நிலப்பகுதிகள்

b. தனி அமைப்பால் நிர்வகிக்கப்படுவது

c. நெறிமுறைப்படுத்தப்பட்ட நடைமுறைகள்

d. தனிப்பட்ட விருப்பப் பகுதியைக் கொண்டது

e. தாரளமய பொருளாதார சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது

f. இதில் அமையப்பெற்ற நிறுவனங்களுக்கு அதிக அளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே அரசின் சட்டதிட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை

இதனால் சமூக மற்றும் சுற்றுப்புறச் சூழல்கள் பாதிக்கப்படுகின்றன.


Tags : India | Economics இந்தியப் பொருளாதாரம்.
11th Economics : Chapter 9 : Development Experiences in India : Trade Reforms India | Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் : வர்த்தகக் கொள்கைச் சீர்திருத்தங்கள் - இந்தியப் பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்