பொருளாதாரம் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் | 11th Economics : Chapter 9 : Development Experiences in India
இயல் 9
இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்
."சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்"
கற்றல் நோக்கங்கள்
1. இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை புரிந்து கொள்ளல்.
அறிமுகம்
இந்தியா 1947இல் சுதந்திரம் அடையும் போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலே இருந்தது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களில் பின்தங்கிய நிலையில் இருந்ததால் தொழில்மயமாதல் மிகக் குறைவாகவும், உறுதியின்றியும் இருந்தது. விவசாயத்துறை நிலப்பிரபுக்களின் கையில் இருந்தது. எனவே, அங்கு உற்பத்தித்திறன் மிகவும் குறைவாக இருந்தது. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பின்தங்கிய நிலையிலே காணப்பட்டன. கல்வி மற்றும் சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லை . மேலும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் கானல் நீராகவே இருந்தன. சுருங்கக்கூறின், வறுமையும், வேலையின்மையும் நாட்டின் இரண்டு மிகப்பெரிய பிரச்சனைகளாக இருந்தன. இதன் காரணமாக மக்களின் வாழ்க்கைத்தரம் பின் தங்கிய நிலையில் இருந்தது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் 1991-ம் ஆண்டு, இந்திய பொருளாதாரத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்தது. வெளிநாட்டு வாணிபக் கணக்கில் பேரிழப்பு ஏற்பட்டு இருந்தது. எனவே இந்தியா புதிய பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டுவர வேண்டியிருந்தது. இந்திய பொருளாதார அமைப்பில் பெரும்பாலன மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியிருந்தது. நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தும் கொள்கைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது. இந்த கொள்கைகள் தொழிற்சாலை, வணிகம், நிதி மற்றும் வேளாண்மை போன்ற பொருளாதாரத்தின் பல துறைகளின் பலவீனத்தையும், முட்டுக்கட்டையாக இருந்த கடுமையான தடைகளை மாற்றுவதையும் முக்கிய நோக்கமாக கொண்டிருந்தன.