Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | ஆங்கிலேயர் காலத்தில் இந்திய பொருளாதாரம்
   Posted On :  06.10.2023 09:01 pm

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்

ஆங்கிலேயர் காலத்தில் இந்திய பொருளாதாரம்

வாஸ்கோடகாமா இந்தியாவிலுள்ள கோழிக்கோட்டிற்கு மே 20, 1498 ஆம் ஆண்டில் வந்ததற்குப் பின்னரே இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுடனான கடல் வாணிகம் ஆரம்பித்தது.

ஆங்கிலேயர் காலத்தில் இந்திய பொருளாதாரம்

வாஸ்கோடகாமா இந்தியாவிலுள்ள கோழிக்கோட்டிற்கு மே 20, 1498 ஆம் ஆண்டில் வந்ததற்குப் பின்னரே இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுடனான கடல் வாணிகம் ஆரம்பித்தது. போர்ச்சுகீசியர்கள் 1510 ஆம் ஆண்டிலிருந்து கோவாவுடன் வாணிகம் செய்து வந்தனர். 1601 ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டவுடன் ஆங்கிலேயர்கள் இந்தியப் பெருங்கடல் வழி வாணிகத்தைத் தொடங்கினர். 1614 ஆம் ஆண்டில் சர் தாமஸ் ரோ பேரரசர் ஜஹாங்கீரிடமிருந்து தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி பெறுவதில் வெற்றி பெற்றதுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை மெதுவாக ஆக்கிரமிப்பு செய்தார்.

பிளாசிப் (PLASSEY) போருக்கு நூறு ஆண்டுகளுக்குப் பின் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது. 1858-ல் ஆங்கிலப் பாராளுமன்றம், இந்தியாவை ஆளும் அதிகாரத்தை கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசுக்கு மாற்றி, ஒரு சட்டம் இயற்றியது. கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து அதிகாரம் ஆங்கிலேய அரசுக்கு மாற்றப்பட்ட போது இந்திய பொருளாதார நிலைமையை முழுவதுமாக மாற்ற இயலவில்லை .


ஆங்கிலேயர் கால வரலாறு 

ஆங்கிலேயர் காலத்தில் 

ஆங்கிலேயர் நுழைவுக்கு முன் இந்தியப் பொருளாதாரம் கிராமத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்தது. அப்போது கிராமப் பொருளாதராமானது சுயசார்புப் பொருளாதாரமாக இருந்தது. ஆனால் ஆங்கிலேய ஆட்சியின்போது தொழிற்சாலைகள் வளர அனுமதிக்கப்பட்டன

பொருளாதார மற்றும் அமைப்புரீதியான இந்த மாற்றம் இந்திய பொருளாதார நிலையை பின்தங்கிய நிலைக்குத் தள்ளியது. பிரச்சினைகள் அனைத்தும் உடல்நலம், குடியிருப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் மற்றும் உழைப்பாளர்கள், பொழுதுபோக்கு, குற்றங்கள், மற்றும் சமூகச்சீர்குலைவு ஆகியவற்றைச் சார்ந்ததாகவே இருந்தன. இந்த பிரச்சினைகள் காரணமாக ஒழுங்குற அமைக்கபட்ட சமூகபணிகளின் முக்கியத்துவத்திற்கான தேவை உணரப்பட்டது.

பிரிட்டன் நாடு, இந்தியாவைக் காலனி ஆதிக்கத்தின் கீழ் 200 ஆண்டுகளுக்கும் மேலாக சீரழித்து வந்தது. காலனி ஆதிக்க சிதைப்பின் அடிப்படையில் முழு காலத்தையும் வரலாற்றுப் பொருளியல் வல்லுநர்கள் மூன்று கட்டங்களாகப் பிரித்தனர். அவை, வணிக மூலதனக் காலம், தொழில் மூலதனக் காலம், நிதி மூலதனக் காலம்.


1. வணிக மூலதனக் காலம்

1757 லிருந்து 1813 வரையிலான காலம் வணிக மூலதனக் காலம் ஆகும் 

கிழக்கிந்தியக் கம்பெனியின் முக்கிய நோக்கம் இந்திய மற்றும் கிழக்கிந்தியப் பொருட்களை முற்றுரிமையாக வாணிபம் செய்து இலாபம் ஈட்டுவதேயாகும்

இக்காலத்தில் பிரிட்டனில் தொழில் மூலதனத்தை முன்னேற்ற இந்தியா ஒரு மிக முக்கியமான சுரண்டல் பிரதேசமாக கிழக்கிந்தியக் கம்பெனி கருதியது

1750 மற்றும் 1760 ஆம் ஆண்டிகளில் வங்காளமும், தென்னிந்தியாவும் கிழக்கிந்தியக் கம்பெனியின் அரசியல் நெருக்கடிக்கு உள்ளான போது முற்றுரிமை வணிகத்தின் (அல்லது வாணிபத்தின்) நோக்கம் நிறைவேறியது.

உபரிகளை இங்கிலாந்திற்கு கடத்துவதில் இந்நிர்வாகம் வெற்றி பெற்றது. இந்தியத் தலைவர்கள் இப் பிரச்சினையை சுரண்டலுடன் ஒப்பிட்டனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக இக்கம்பெனியின் அலுவலர்கள் அனைவரும் நேர்மையற்று, ஊழல் நிறைந்தவர்களாக இருந்தனர்.


2. தொழில் மூலதனக் காலம்

1813 முதல் 1858 ஆம் ஆண்டு வரையிலான காலம் தொழில் மூலதனக் காலமாகும்

பிரிட்டிஷ் துணிமணிகளின் சந்தையாக இந்தியா விளங்கியது

இந்தியாவிலிருந்து மலிவு விலையில் பெறப்பட்ட கச்சாப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு முழுமைபெற்றபொருட்கள் இந்தியாவிற்கு அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்டன. இவ்வாறு, இந்தியர்கள் வஞ்சிக்கப்பட்டனர்

இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தூக்கி எறியப்பட்டன.


3. நிதி மூலதனக் காலம்

19 ஆம் நூற்றாண்டின் இறுதி வருடங்களிலிருந்து சுதந்திரம் அடைந்த வரையிலான காலம் மூன்றாவது கட்டமான நிதி மூலதனக் காலமாகும். இக்கால கட்டத்தில் வியாபார நிறுவனங்கள், செலாவணி ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் மாற்று வங்கிகள் மற்றும் சில மூலதன ஏற்றுமதிகளில் நிதி ஏகாதிபத்தியம் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியது.

இந்திய மூலதனத்தைக் கொள்ளையடித்து இந்தியாவில் இருப்புப் பாதை,சாலைவசதிகள், அஞ்சலகத்துறை, பாசனம்,ஐரோப்பிய வங்கி முறை மற்றும் கல்வியில் குறிப்பிட்ட பகுதிகளில் பெரிய அளவில் முதலீடு செய்ய பிரிட்டன் முடிவு செய்தது. இதனால் சில பயன்களும் விளைந்தன என்பதை மறுக்க முடியாது.

பிரிட்டன் இரயில்வே கட்டமைப்புக் கொள்கையானது கற்பனை செய்ய முடியாத பொருளாதாரப் பயனில்லாக் கொள்கையாகும். இந்தியாவின் வரிசெலுத்துவோர் இருப்புப்பாதை நிர்மாணத்திற்கு நிதி செலுத்தக் கட்டாயப்படுத்தபட்டனர். 1858 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி தனது அரசியல் அதிகாரத்தை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைத்தது.


4. இந்தியக் கைவினைப் பொருட்கள் நசிவுக் காலம் 

இந்தியக் கைவினைப் பொருட்களுக்கு உலக அளவில் மிகுந்த வரவேற்பு இருந்தது. இந்திய ஏற்றுமதியில் கையால் நெய்யப்பட்ட பருத்தி, பட்டு ஆடைகள், காலிகோ துணிகள் அலங்காரப் பொருட்கள் மற்றும் மரச்சிற்பங்கள் முதன்மையானவையாக இடம் பெற்றிருந்தன.


பாகுபாடான சுங்க வரிக்கொள்கை மூலம் பிரிட்டீஷ் அரசு வேண்டுமென்றே இந்தியக் கைவினைப் பொருட்களை அழித்தது

நவாப் மற்றும் அரசர்கள் காலம் முடிவுக்கு வந்தவுடன், இந்தியக் கைவினைப் பொருட்களைக் காப்பாற்ற எவருமில்லாத நிலை ஏற்பட்டது.

இந்தியக் கைவினைப் பொருட்களால் இயந்திரத் தயாரிப்புப் பொருட்களுடன் போட்டியிட முடியவில்லை .

இந்தியாவில் இரயில்வே அறிகமுகமான பின் பிரிட்டிஷ் பொருட்களுக்கான உள்நாட்டு சந்தை அதிகரித்தது.

11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence : Indian Economy during the British Period in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும் : ஆங்கிலேயர் காலத்தில் இந்திய பொருளாதாரம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்