Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | வங்கிகள் தேசியமயமாக்கப்படல்

இந்தியப் பொருளாதாரம் - வங்கிகள் தேசியமயமாக்கப்படல் | 11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence

   Posted On :  06.10.2023 09:27 pm

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்

வங்கிகள் தேசியமயமாக்கப்படல்

சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா ஒருதிட்டமிட்ட பொருளாதார மேம்பாட்டுக் கொள்கையைக் கையாண்டது.

வங்கிகள் தேசியமயமாக்கப்படல்

சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா ஒருதிட்டமிட்ட பொருளாதார மேம்பாட்டுக் கொள்கையைக் கையாண்டது. இதற்காக 1951 ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்கள் உருவாயின. பொருளாதாரத் திட்டமிடலின் முதன்மை நோக்கம் சமூக நலமாகும். சுதந்திரத்திற்கு முன்னர் வணிகவங்கிகள் தனியார் வசமிருந்தன. இவ்வங்கிகள் அரசாங்கம் திட்டமிடலுக்கான சமூக இலக்குகளை அடைவதற்கு உதவி செய்யத் தவறின. ஆகையால் அரசு 14 பெரிய வணிக வங்கிகளை ஜீலை 19, 1969 அன்று தேசியமயமாக்க முடிவு செய்தது. 1980 ஆம் ஆண்டில், அரசு மேலும் 6 வணிக வங்கிகளை நாட்டுடமையாக்கியது.


நாட்டுடமையாக்கலின் நோக்கங்கள்

பின்வரும் நோக்கங்களை அடைவதற்காக இந்திய அரசு வணிக வங்கிகளை தேசியமயமாக்கியது.

1) தேசிய மயமாக்கலின் முதன்மையான நோக்கம் சமூக நலத்தை அடைவதேயாகும். வேளாண்மை, சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் நிதி தேவைப்பட்டது.

2) நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் தனியார் முற்றுரிமையைக் கட்டுப்படுத்துவதற்கும் சமூகத்தில் தேவையான பகுதிகளுக்கு இலகுவாகக் கடன் அளிப்பதற்கும் பேருதவியாக இருந்தன.

3) இந்தியாவில் ஏறத்தாழ 70% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, கிராமப்புற மக்களிடையே வங்கிச் செயல்பாடுகளை ஊக்குவித்தல் மிகுந்த அவசியமாயிருந்தது.

4) வங்கி வசதிகள் இல்லாத இடத்தில் வட்டாரங்களிடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் உதவுகின்றன.

5) நாட்டின் விடுதலைக்கு முன் இருந்த வங்கிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. நாட்டுடைமையாக்கப்பட்ட பிறகு கிராமப்புறங்களிலும் மற்றும் நகர்புறங்களிலும் பல புதிய வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டன.

6) நாட்டுடைமையாக்கப்பட்ட பின் வேளாண்துறைக்கும் அதைச் சார்ந்த பிற துறைகளுக்கும் தேவையான கடன்களை வங்கிகள் கொடுக்க ஆரம்பித்தன.

7) 1991 ஆம் ஆண்டின் புதிய தொழிற் கொள்கைக்குப் பிறகு, இந்திய வங்கித்துறை பன்முகப் போட்டித் திறமை மற்றும் உற்பத்தித் திறன் போன்ற பல்வேறு முகங்களை எதிர்நோக்கி வருகிறது. மேற்கூறிய முன்னேற்றங்கள் இருந்தும், கிராமம் மற்றும் குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் தங்களின் கடன் தேவைக்கு, உள்ளூரில் கடன் வழங்குபவர்களைச் சார்ந்திருக்க வேண்டி உள்ளது.


நாட்டுடைமையாக்குதல்

1969 - 50 கோடிக்கு மேல் வைப்புத் தொகை கொண்ட 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன 

1980 - 200 கோடிக்கு மேல் வைப்புத் தொகை கொண்ட 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன

19 ஜூலை 1969 

1. அலகாபாத் வங்கி 

2. பாங்க் ஆப் பரோடா 

3. பாங்க் ஆப் மஹாராஷ்டிரா 

4. கனரா வங்கி 

5. மத்திய வங்கி 

6. தேனா வங்கி 

7. இந்தியன் வங்கி 

8. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 

9. பஞ்சாப் நேஷனல் வங்கி 

10. சின்டிகேட் வங்கி 

11. யூனியன் வங்கி 

12. யுனைடெட் வங்கி 

13. யூகோ வங்கி 

14. பாங்க் ஆப் இந்தியா

15 ஏப்ரல் 1980 

1. ஆந்திரா வங்கி 

2. கார்ப்பரேஷன் வங்கி 

3. நியூ பாங்க் ஆப் இந்தியா 

4. ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் 

5. பஞ்சாப் - சிந்து வங்கி 

6. விஜயா வங்கி

Tags : Indian Economy இந்தியப் பொருளாதாரம்.
11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence : Nationalisation of Banks - Indian Indian Economy in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும் : வங்கிகள் தேசியமயமாக்கப்படல் - இந்தியப் பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்