Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | தொழில்துறை - தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

பொருளாதாரம் - தொழில்துறை - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் | 11th Economics : Chapter 11 : Tamil Nadu Economy

   Posted On :  07.10.2023 06:22 am

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

தொழில்துறை - தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 110 தொழிற் பூங்காக்கள் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளோடு செயல்பட்டு வருகின்றன.

தொழில்துறை

சென்னை, இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் எனவும், வங்கித் தலைநகரம் எனவும் அழைக்கப்படுகிறது. இது உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது ஆசியாவின் டெட்ராய்ட் (Detroit of Asia) எனவும் அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 110 தொழிற் பூங்காக்கள் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளோடு செயல்பட்டு வருகின்றன. மேலும் தமிழக அரசு இரப்பர் பூங்கா, ஆயத்த ஆடைகள் பூங்கா, பூக்கள் பூங்கா, உயிரி தொழில்நுட்பப் பூங்கா, சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் வேளாண் ஏற்றுமதிப் பூங்கா போன்ற பல துறைகளையும் முன்னேற்றியுள்ளது.

மாநிலத்தின் பெரிய அளவிலான பொறியியல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மையமிட்டுள்ளன. சென்னை பன்னாட்டு அளவில் கார் உற்பத்தி ஜாம்பவான்களின் நகரமாக உள்ளது.

பேருந்து கட்டுமானத் தொழிலுக்குப் பெயர் பெற்ற கரூர், தென்னிந்திய பேருந்து கட்டுமானத் தொழிலுக்கான பங்களிப்பில் 80% மாக உள்ளது. கரூரில் உள்ள தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனம் ஆசியாவிலேயே மிகப் பெரிய சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத காகித நிறுவனங்களுள் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. 'எஃகு நகரம்' என்றழைக்கப்படும் சேலத்தில் பல பெரிய ஜவ்வரிசி தயாரிப்பு நிறுவனங்களும் கனிமச் செல்வங்களும் உள்ளன. சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு நிறுவனங்களுடன் தீப்பெட்டித் தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது. இந்தியாவின் மொத்தத் தீப்பெட்டி உற்பத்தியில் 90% பங்கு சிவகாசியில் உற்பத்தியாகிறது. 'தமிழகத்தின் நுழைவாயில்' தூத்துக்குடி ஆகும். சென்னைக்கு அடுத்தபடியாக வேதிப்பொருட்கள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.



1. ஜவுளித்துறை


தமிழ்நாடு இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளி உற்பத்தி மையமாகும். தமிழ்நாடு இந்தியாவின் 'நூல் கிண்ணம்' என அழைக்கப்படுகிறது. இந்திய அளவில் மொத்த உற்பத்தியில் 41 சதவீத நூல் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் பொருளாதாரத்தில் ஜவுளித்துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. 35 மில்லியன் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% பங்களிப்பையும், மொத்த ஏற்றுமதி வருவாயில் 35% ஜவுளித் துறையிலிருந்து கிடைக்கிறது. உற்பத்தித்துறையில் 14% பங்களிப்பு ஜவுளித்துறை மூலமாக கிடைக்கப் பெறுகிறது. நூல் நூற்பிலிருந்து ஆடைத் தயாரிப்பு, ஜவுளிகளுக்கான உற்பத்தித் தொடர்புடைய அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளன.

தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிகளான கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கரூர் போன்ற மாவட்டங்களில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா நூற்பாலைகளில் பயன்படுத்தப்படும் பருத்தி பாலியஸ்டர் கலப்பு நூல் (Blended Yarn), பட்டு நூல் உற்பத்தி செய்யும் ஆலைகள் பெருமளவில் அமைந்துள்ளன. இங்கிருந்து சீனா வங்கதேசம் போன்ற பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

'பின்னலாடைகளின் நகரம்' என அழைக்கப்படும் திருப்பூர் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பளவில் பின்னலாடைகளை ஏற்றுமதி செய்கிறது. திரைச் சீலைகள், படுக்கை விரிப்புகள், சமையலறை விரிப்புகள், கழிவறை விரிப்புகள், மேஜை விரிப்புகள், சுவர் அலங்காரங்கள் போன்ற உள்நாட்டுத் தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. ஈரோடு மாவட்டம் தென்னிந்தியாவின் மொத்த மற்றும் சில்லறை ஆயத்த ஆடைகளுக்கான முக்கிய ஜவுளி சந்தையாக உள்ளது.


2. தோல்பொருட்கள்

இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 30%தையும், தோல் பொருட்கள் தயாரிப்பில் 70 சதவீதத்தையும் தமிழகம் கொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான தோல் பொருட்கள் மற்றும் பதனிடும் தொழிற்சாலைகள் வேலூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு தோல் பொருட்கள் கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது.


3. மின்னணு சாதனங்கள்

மின்னணு சாதனங்கள் உற்பத்தி தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக உள்ளது. பல பன்னாட்டு மற்றும் தெற்காசியாவின் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையமாக சென்னையைத் தேர்ந்தெடுத்துள்ளன.


4. வாகன உற்பத்தி

'ஆசியாவின் டெட்ராய்ட்என்றழைக்கப்படும் சென்னை மிகப்பெரிய அளவிலான வாகன உதிரி பாகங்கள் தயாரிப்புக்கான இடமாக விளங்குகிறது. தமிழ்நாடு, இந்திய அளவில் வாகன மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் 28 விழுக்காடும், லாரிகளுக்கான உற்பத்தியில் 19 சதவீதமும், பயணியர் கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியில் 18 விழுக்காடும் கொண்டுள்ளது.


5. சிமெண்ட் தொழிற்சாலை

சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு இந்திய அளவில் 3ஆம் இடத்தில் உள்ளது (ஆந்திர பிரதேசம் - முதலிடம், ராஜஸ்தான் - இரண்டாமிடம்). 2018ல் இந்தியாவில் உள்ள 10 மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த ராம்கோ சிமெண்ட் மற்றும் இந்தியா சிமெண்ட் ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. மொத்த சிமெண்ட் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் 21 அலகுகளுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும், 35 அலகுடன் ஆந்திர பிரதேசம் முதலிடத்திலும் உள்ளன.


6. பட்டாசுப் பொருட்கள்


சிவகாசி நகரம் அச்சுத் தொழில், பட்டாசுப் பொருட்கள் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியில் தலைமையாகச் செயல்படுகிறது. ஜவஹர்லால் நேரு அவர்களால் 'குட்டி ஜப்பான்' என்று சிவகாசி அழைக்கப்பட்டது. இந்திய பட்டாசு உற்பத்தியில் 80% சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் அச்சுத் துறைத் தீர்வுகளில் 60% சிவகாசியிலிருந்தே பெறப்படுகிறது.


7. பிற தொழிற்சாலைகள்

உலக அளவில் மிகப் பெரிய மின்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று BHEL நிறுவனம். திருச்சியிலும் ராணிப்பேட்டையிலும் அதன் தொழிற்சாலைகள் உள்ளன. கரூரில் அமைந்துள்ள தமிழக அரசின் தமிழ்நாடு காகிதத் தயாரிப்பு நிறுவனம் உலகின் மிகப் பெரிய காகிதத் தயாரிப்பு நிறுவனமாகும். இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தியில் அரியலூர், விருதுநகர், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் தயாரிப்பு நிறுவனங்களைக் கொண்டு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. சேலத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் செழிப்பான கனிமவளம் கொண்டுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய எஃகு உருக்காலை நிறுவனமான SAIL தனது எஃகு ஆலையை சேலத்தில் நிறுவியுள்ளது.

இந்தியாவின் மோட்டார் மற்றும் பம்புகளுக்கான தேவையில் மூன்றில் இரண்டு பங்கினை வழங்குவதால் கோயம்புத்தூர் 'காற்றழுத்த விசைக் குழாய் நகரம்' (Pump city) என்றழைக்கப்படுகிறது. தங்க ஆபரணங்கள், மாவு அரைப்பான் இயந்திரம் மற்றும் வாகன உதிரிப்பாகம் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிப்பதால் "கோயம்புத்தூர் மாவு அரைப்பான் இயந்திரத்திற்கான" புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.

தூத்துக்குடி தமிழ்நாட்டின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படுகிறது. மாநிலத்தில் வேதிப்பொருள் உற்பத்தியில் தூத்துக்குடி முதலிடம் வகிக்கிறது. இந்திய உப்பு உற்பத்தியில் 30 சதவீதமும், மாநிலத்தின் உப்பு உற்பத்தியில் 70 சதவீதமும் தூத்துக்குடியில் உற்பத்தியாகிறது.


8. குறு சிறு நடுத்தர நிறுவனங்கள்

MSMED-2006 சட்டத்தின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கட்டமைப்பு மற்றும் தளவாடப் பொருட்கள் மீதான முதலீட்டின் அடிப்படையில் (நிலம் மற்றும் கட்டிடம் நீங்கலாக) உற்பத்தி நிறுவனம், பணிகள் நிறுவனம் என வகைப்படுத்தப்படுகின்றன.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், தமிழ்நாடு 15.07 சதவீதத்துடன் தேசியளவில் முதலிடத்தில் உள்ளது. 6.89 இலட்சம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இவை 8000 வகையான பொருட்களை ₹32,000 கோடி முதலீட்டில் உற்பத்தி செய்கின்றன. இவை அனைத்து துறைகளைச் சார்ந்த பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றுள் முக்கியமானவை பொறியியல் பொருட்கள், மின் சாதன பொருட்கள், வேதிப் பொருட்கள், இரும்பு, காகிதம், தீப்பெட்டி, நெசவு மற்றும் ஆடைகள் போன்றவையாகும். 1,68,331 கோடி முதலீட்டில், பதிவு செய்யப்பட்ட 15.61 இலட்சம் தொழிலமுனைவோருடன் 99.7 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிறது

(ஆதாரம் - MSMES திட்ட குறிப்பு 2017-18)

Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 11 : Tamil Nadu Economy : Industry - Tamil Nadu Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம் : தொழில்துறை - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்