முதல் பருவம் அலகு 1 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - புவியின் உள்ளமைப்பு | 7th Social Science : Geography : Term 1 Unit 1 : Interior of the Earth
புவியியல்
அலகு - I
புவியின் உள்ளமைப்பு
கற்றலின் நோக்கங்கள்
• புவியின் உள்ளமைப்பைப் பற்றி விளக்கமாக அறிதல்
• புவித்தட்டுக்களின் இயக்கங்களை கற்றறிதல்
• நிலநடுக்கம் மற்றும் எரிமலைகளின் செயல்பாடுகளைப் பற்றி புரிந்து கொள்ளுதல்.
அறிமுகம்
நாம் வாழும் இப்புவியானது பல்வேறு இயக்கங்களுக்கு உட்பட்டது. புவிப்பரப்பின் மேற்பகுதியில், வானளாவிய மலைகள், உயர் பீடபூமிகள், பரந்த சமவெளிகள் , ஆழ்பள்ளத்தாக்குகள் மற்றும் பல நிலத்தோற்றங்கள் அமைந்துள்ளன. புவியின் உள்ளேயும் வெளியேயும் பல்வேறு செயல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. புவியின் உள்ளமைப்பு எவ்வாறாக இருக்கும் என்று எப்பொழுதாவது ஆச்சரியப்பட்டது உண்டா ? இதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
புவியின் உள்ளமைப்பு
புவியின் உள்ளமைப்பினை ஓர் ஆப்பிள் பழத்தோடு ஒப்பிடலாம். புவி அதிர்வு அலைகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில்,புவிக்கோளம் மூன்று செறிந்த அடுக்குகளாக காணப்படுகின்றன, அவை
1. புவி மேலோடு
2. கவசம்
3. புவிக்கரு
1. புவி மேலோடு (Crust)
புவியின் வெளிப்புற அடுக்கு மேலோடு ஆகும். இதன் சராசரி பருமன் 5 முதல் 30 கிலோ மீட்டர் வரை உள்ளது. இதன் பருமன் கண்டப்பகுதிகளில் 35 கிலோ மீட்டர்களாகவும், கடற்தளங்களில் 5 கிலோ மீட்டர்களாகவும் உள்ளது. கண்டத்தின் மேலோடு அதிக பருமனாக இருந்தபோதிலும், கண்டப்பகுதிகளின் அடர்த்தி கடல் மேலோட்டின் அடர்த்தியை விட குறைந்தே காணப்படுகிறது. ஏனெனில் கடல் மேலோடுகள் இலகுவான மற்றும் அடர்ந்த பாறைகளின் கலவையாகும். பெரும்பாலும் கடல் மேற்பரப்பானது பசால்ட் பாறையால் ஆனது.
பூமி ஒரு நீல நிறக் - கோள். 71% பூமியின் பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது.
புவிமேலோடு இரண்டு பிரத்யேக பிரிவுகளைக் கொண்டது. கண்டங்களின் மேற்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது. இப்பகுதி முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமனியம் தாதுக்களால் ஆனது. இதனையே சியால் (SIAL) என்று அழைக்கின்றோம். இதன் சராசரி அடர்த்தி 27 கிராம் /செ.மீ3
மேலோட்டின் கீழ்ப்பகுதி அடர்ந்த பசால்ட் பாறைகளாலான ஓர் தொடர்ச்சியான பிரதேசமாகும். கடல் தரைகளாலான இப்பகுதி சிலிக்கா மற்றும் மெக்னீசியத்தை மூலக்கூறுகளாக கொண்டு அமைந்ததாகும். எனவே இப்பகுதியை சிமா (SIMA) என்று அழைக்கிறோம். இதன் சராசரி அடர்த்தி 3.0 கி/செ.மீ3. சியாலும் சீமாவும் சேர்ந்து புவியின் மேலோட்டின் கருப்பொருளாக அமைகின்றது. சியாலின் அடர்த்தி சிமா அடர்த்தியை விடக் குறைவானதால் இவை சிமா அடுக்கின் மீது மிதக்கின்றன.
2. கவசம் (Mantle)
புவி மேலோட்டின் கிழ் அடுக்கு கவசம் என அழைக்கப்படுகிறது. புவி மேலோடும் கவசமும் மோஹோரோவிசிக் என்ற எல்லை மூலம் பிரிக்கப்படுகிறது. கவசமானது சுமார் 2900 கி.மீ தடிமன் கொண்டதாக காணப்படுகிறது. கவசத்தை இரண்டாக பிரிக்கலாம். (i) மேல் கவசம் 3.4 முதல் 4.4 கி/செ.மீ3 அடர்த்தியுடன் , 700 கிலோ மீட்டர் ஆழம் வரை உள்ளது. (ii) கீழ்க்கவசம் 4.4 முதல் 5.5 கி/செ.மீ3 அடர்த்தியுடன், 700 முதல் 2900 கிலோ மீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது.
புவியின் உட்பகுதி ஏன் மிகுந்த வெப்பமாக காணப்படுகிறது?
3. புவிக் கருவம் (Core)
புவியின் மையப்பகுதியை புவிக் கருவம் என குறிப்பிடப்படுகிறது. இது பேரிஸ்பியர் (Barysphere) என்றும் அழைக்கப்படுகிறது. வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி புவிக்கருவிற்கும் கவசத்திற்கும் இடையே எல்லையாக அமைகின்றது. புவிக்கருவம் இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. அவை
1. வெளிக்கருவம்: இது திரவ நிலையில் உள்ள , இரும்பு குழம்பாலானது. இக்கருவம் 2900 கி.மீ முதல் 5,150 கிலோமீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது.
2. உட்கருவம்: இது திடநிலையில் உள்ள நிக்கல் (Ni) மற்றும் இரும்பால் (Fe) ஆனது. உட்கருவம் அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்துடன் காணப்படுகிறது. நைஃப் (Nife) என்ற உட்கருவம் 5,150 முதல் 6,370 கிலோ மீட்டர் ஆழம் வரை பரந்துள்ளது. இதன் அடர்த்தி 13.0 கிராம்/செ.மீ3 ஆகும்.
புவியின் கொள்ளளவில் புவி மேலோடு 1%, கவசம் 84%, மீதமுள்ள 15% புவிக்கருவம் உள்ளது. புவியின் ஆரம் 6371 கி.மீ ஆகும்.