புவியின் உள்ளமைப்பு | முதல் பருவம் அலகு 1 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - எரிமலைகள் | 7th Social Science : Geography : Term 1 Unit 1 : Interior of the Earth
எரிமலைகள்
புவியின் மேற்பரப்பில் உள்ள பிளவு அல்லது துளை வழியே வெப்பம் மிகுந்த மாக்மா என்னும் பாறைக்குழம்பு வெளியேறுவதையே எரிமலை என்கிறோம். பொதுவாக எரிமலையின் வாய் வட்ட வடிவில் காணப்படும். நீளமான பிளவு மூலமும் சிலசமயங்களில் நீராவியுடன் கூடிய எரிமலைப் பாறைக் குழம்பு வெளியேறும்.
புவியினுள் உள்ள வாயுக்களுடன் கூடிய பாறைக் குழம்பு மாக்மா எனவும் இவை புவி மேற்பரப்பிற்கு வரும்பொழுது“லாவா ” (Lava) எனவும் அழைக்கப்படுகிறது. எரிமலையின் திறப்பு எரிமலை வாய் (Vent) என அழைக்கப்படுகிறது.
காலப்போக்கில் துளை வழியே வெளியேறும் லாவாவும் இதர பொருட்களும் துளைப் பகுதியை சுற்றி படிந்து ஓர் கூம்பு வடிவ குன்று அல்லது மலையை உருவாக்குகின்றது. கூம்பு வடிவ குன்றின் உச்சி பகுதியில் தோன்றும் பள்ளத்தையே எரிமலைப் பள்ளம் (crater) என்கின்றனர். எரிமலைப் பள்ளம் வெடிப்பின் போது பொருட்கள் வாய்ப் பகுதியில் படிந்து வழியை அடைத்துக் கொள்ளும். அப்போது எரிமலை மீண்டும் பயங்கரமாக வெடித்து கூம்பு வட்டக் குன்றின் உச்சியில் பெரிய பள்ளத்தை தோற்றுவிக்கும். இதனை வட்ட எரிமலை வாய் (Caldera) என்கிறோம்.
எரிமலை வெடிப்பின் விளைவுகள்
புவியின் உள்ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பமானது ஒவ்வொரு 32 மீட்டருக்கும் 1° செ ஆக உயர்ந்து கொண்டே வருகிறது. வெப்பத்துடன் அழுத்தமும் அதிகரிக்கின்றது. 15 கிலோமீட்டர் ஆழத்தில் அழுத்தமானது சதுர செ.மீக்கு 5 டன்கள் என்ற அளவில் உயருகின்றது. இத்தகைய நிலையில் புவியின் உள்ளே பாறையானது குழம்பு நிலைக்கு மாறுகிறது. இதனையே மாக்மா என்கிறோம். மிகுதியான அழுத்த நிலையில் மாக்மாவானது எளிதில் பற்றக் கூடிய வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் திறன் கொண்டதாக காணப்படுகிறது. இத்திறன் காரணமாகவே பலவீனமான புவி மேலோட்டுப் பகுதிகளில் மாக்மா பாறைக்குழம்பு வெடித்து வெளியேறுகிறது.
எரிமலைகள் பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வுகளை எரிமலை ஆய்வியல் (Volcanology) என அழைக்கின்றோம். ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநர்கள் எரிமலை ஆய்வியலாளர்கள் (Volcanologist) என அழைக்கப்படுகின்றனர்.
எரிமலை வெடிப்புகளின் தன்மைகள்
சில சமயங்களில் எரிமலைக் குழம்பின் வெளியேற்றம் மற்றும் பரவல் மெதுவாக நடைபெறுகின்றது. இதனையே பிளவு வெடிப்பு வகை எரிமலை என்கின்றோம். சில சமநிலங்களும் பீடபூமிகளும் இம்முறையில் தோன்றின. எடுத்துக்காட்டு, இந்தியாவின் தக்காண பீடபூமி மற்றும் வடஅமெரிக்காவின் கொலம்பியா பீடபூமிகளைக் கூறலாம். புவியினுள்ளேயிருந்து மாக்மா திடீரென வேகமாக வெளியேறுவதால் அது வளிமண்டலத்தை நோக்கி தூக்கி எறியப்படுகிறது. அந்த சமயத்தில் லாவா, சாம்பல், நீராவி மற்றும் வாயுக்களோடு கற்களும் தூக்கி எறியப்படுகின்றன. இதனையே எரிமலை வெடிப்பு வெளியேற்றம் என்கிறோம். இந்தோனேஷியாவில், கரக்காட்டாவோ தீவிலுள்ள எரிமலை, 27 ஆகஸ்ட் 1883-ம் ஆண்டு இவ்வாறு வெடித்து மாக்மாவை வெளியேற்றியது.
லாவாவின் பரவல் மற்றும் வேகம் அதிலுள்ள சிலிகா மற்றும் நீரின் அளவை பொறுத்ததாகும். சிலிகா அதிகமுள்ள அமில லாவா மெதுவாகவும், சிலிகா குறைவாக உள்ள கார லாவா வேகமாகவும் பரவுகின்றது.
பேரென்தீவானது (Barren Island) அந்தமான் தலைநகரிலிருந்து 138கி.மீட்டர் வடகிழக்கே அமைந்துள்ளது. சுமத்ராவிலிருந்து மியான்மர் வரை உள்ள நெருப்பு வளையத்தினுள் இருக்கும் ஒரு செயல்படும் எரிமலை இதுவே ஆகும். கடைசியாக 2017ஆம் ஆண்டில் இது எரிமலைக் குழம்பை வெடித்து வெளியேற்றியது.
எரிமலைகளின் வகைகள் (Types of Volcanoes)
எரிமலைகள் அதன் எரிமலை குழம்பு வெளியேறும் கால அளவு மற்றும் செயல்படும் விதத்தைக் கொண்டு மூன்று வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன. அவை:
1. செயல்படும் எரிமலை
2. உறங்கும் எரிமலை
3. செயலிழந்த எரிமலை
1. செயல்படும் எரிமலை (Active Volcano)
அடிக்கடி வெடித்தும், பாறைக் குழம்பை வெளியேற்றும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள் என்றழைக்கப்படுகின்றன. பசிபிக் கடற்கரையோரமாக உள்ள பெரும்பாலான எரிமலைகள் இவ்வகையைச் சார்ந்தது. சராசரியாக உலகெங்கும் 600 செயல்படும் எரிமலைகள் உள்ளன. அவற்றுள் மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள ஸ்ட்ராம்போலி, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள செயிண்ட் ஹெலன், பிலிப்பைன்ஸ் தீவிலுள்ள பினாடுபோ போன்றவையும் அடங்கும். ஹவாய் தீவிலுள்ள மவுனா லோ எரிமலை உலகின் மிகப் பெரிய செயல்படும் எரிமலை ஆகும்.
ஸ்ட்ராம்போலி எரிமலை மத்தியதரைக் கடலின் கலங்கரை விளக்கம் என
அழைக்கப்படுகிறது.
2. உறங்கும் எரிமலை (Dormant Volcano)
பல வருடங்களாக எரிமலைக் குழம்பை வெளியேற்றுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் வெளிப்படுத்தாமல், எப்போது வேண்டுமானாலும் செயல்படலாம் என்ற நிலையில் உள்ள எரிமலைகள் உறங்கும் எரிமலைகள் என அழைக்கப்படுகின்றன. இத்தாலியின், வெசுவியஸ், ஜப்பானில் பியூஜியாமா, இந்தோனேஷியாவில் கரக்கடோவா ஆகியவை இவ்வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
3. செயலிழந்த எரிமலை (Extinct Volcano)
வெடிப்பு ஆற்றல் முழுவதையும் இழந்து, சுமார் 1000 ஆண்டுகளாக வெடிப்பதை நிறுத்திவிட்ட எரிமலை , செயலிழந்த எரிமலை என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான செயலிழந்த எரிமலைகளின் உச்சிப் பகுதிகள் முழுவதும் அரிக்கப்பட்டுவிட்டன. மியான்மரின் போப்பா , ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சரோ மற்றும் கென்யா எரிமலைகள் இதற்கான உதாரணங்களாகும்.
.
உலக எரிமலை பரவல் (World Distribution of Volcano)
எரிமலைகளின் அமைவிடமானது பொதுவாகவே தெளிவான வரையறுக்கப்பட்ட முறையிலேயே காணப்படுகிறது. அதிகமாக வளைந்த அல்லது பிளவுபட்ட பகுதிகளில்தான் எரிமலை வெடிப்பு ஏற்படுகின்றது. சுமார் 600 செயல்படும் எரிமலைகளும், ஆயிரக்கணக்கிலான செயல்படாத எரிமலைகளும், அழிந்த எரிமலைகளும் உள்ளன. இவை பெரும்பாலும் கடலோரமும் , மலைப்பிரதேசங்களிலும், கடற்கரையோர தீவுகளிலும், கடலுக்கு மத்தியிலும் அமைந்துள்ளன. ஒரு சில எரிமலைகள் மட்டுமே கண்டங்களின் உட்பகுதிகளில் காணப்படுகின்றன. உலகின் எரிமலை பிரதேசங்களே முக்கிய நில அதிர்வு பகுதிகளாக விளங்குகின்றன. உலகில் மூன்று முக்கிய எரிமலை நிகழ்வு பகுதிகள் உள்ளன. அவை
1. பசிபிக் வளையப் பகுதி (The Cirum - Pacific belt)
2. மத்திய கண்டப் பகுதி (The Mid Continental belt)
3. மத்திய அட்லாண்டிக் பகுதி (The Mid Atlantic belt )
1. பசிபிக் வளையப் பகுதி
இந்த எரிமலைப் பகுதியானது குவிய கடல் தட்டின் எல்லை பகுதியில் அமையப் பெற்றுள்ளது. பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் இப்பகுதியில் அமைந்திருப்பதால் இதனை பசிபிக் நெருப்பு வளையம் (Pacific Ring of Fire) என்று அழைக்கின்றனர்.
2. மத்திய கண்டப் பகுதி
கண்டத்தட்டுகள் குவியும் எல்லைப் பகுதியிலுள்ள இந்தப் பகுதி அல்பைன் மலைத் தொடர், எரிமலைப் பகுதிகள் மத்தியத் தரைக்கடல் பகுதி மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் அமையப் பெற்றுள்ளன. முக்கிய எரிமலைகளான வெசுவியஸ், ஸ்ட்ராம்போலி, எட்னா , கிளிமாஞ்சாரோ மற்றும் கென்யா எரிமலைகள் இதற்கு உதாரணமாகும். இமயமலைப் பகுதியில் ஆச்சரியப்படும் வகையில் எந்த ஒரு செயல்படும் எரிமலையும் இடம் பெறவில்லை.
3. மத்திய அட்லாண்டிக் பகுதி
விலகிச் செல்லுகின்ற தட்டுகளின் எல்லையான மத்திய அட்லாண்டிக் பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலைப் பகுதி, பிளவு வடிவ எரிமலை வெளியேற்ற வகையைச் சார்ந்ததாகும். மத்திய அட்லாண்டிக் மலைத்தொடரில் அமைந்துள்ள ஐஸ்லாந்தில் செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன. செயிண்ட் ஹெலினா மற்றும் அசோர்ஸ் தீவுகள் ஆகியவை இதற்கு வேறு உதாரணங்களாகும்.