சர்வதேச சங்கத்தின் தோல்விக்கு காரணங்கள் | சர்வதேச அமைப்புகள் - சர்வதேச சங்கம் | 12th Political Science : Chapter 11 : International Organisations

   Posted On :  04.04.2022 04:09 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : சர்வதேச அமைப்புகள்

சர்வதேச சங்கம்

உட்ரோவில்சனின் பதினான்கு கருத்துகள்(1918) சர்வதேச சங்கத்தின் தோல்விக்கு காரணங்கள்

சர்வதேச சங்கம்

உட்ரோவில்சனின் பதினான்கு கருத்துகள்(1918) 


1. வெளிப்படையான தூதாண்மை 

2. கடல்கள் மீதான சுதந்திரம் 

3. பொருளாதாரத் தடைகளை நீக்குதல் 

4. ஆயுதமயமாதலை குறைத்தல் 

5. காலனிய உரிமைகள் மீதான நெகிழ்வு 

6. ரஷ்ய கட்டுப்பாடு பகுதிகளை - விடுவிப்பது 

7. பெல்ஜிய -இறையாண்மையை - பாதுகாப்பது 

8. பிரெஞ்சு பிரதேசங்களை விடுவிப்பது 

9. இத்தாலியின் எல்லைகளை மறுசீரமைத்தல் 

10. ஆஸ்திரியா-ஹங்கேரியினை பிரிப்பது 

11. பால்கன் எல்லைகளை மறுசீரமைத்தல் 

12. துருக்கியின் அதிகாரத்தை குறைப்பது 

13. போலந்தை சுதந்திர நாடக்குவது. 

14. நாடுகளின் கூட்டமைப்பான சர்வதேச சங்கத்தை ஏற்படுத்துதல்.

முதல் உலகப்போரின் இறுதியில் அமெரிக்க அதிபர் உட்ரோவில்சன் 1918ஆம் ஆண்டு ஜனவரியில் சர்வதேச சங்கத்திற்கான தனது கருத்தினை வெளிப்படுத்தினார். இதற்கு பெரும் அளவிலான ஆதரவு கிடைத்தது. மேலும், முதல் உலகப்போர் ஏற்படுத்திய பெரும் அழிவு இக்கருத்துக்கு வலுசேர்த்தது. இராணுவ மோதல்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச அமைப்புகள் தேவையென முடிவுக்கு வந்தனர். இருந்தபோதும், அமெரிக்காவானது சர்வதேச அமைப்பில் இணையாதபோதும், குடியரசுத்தலைவர் உட்ரோ வில்சன் வெர்செல்ஸ் அமைதி மாநாட்டிற்கு தலைமை ஏற்று சர்வதேச அமைப்பு உருவாகச் செய்தார். வில்சன் அமெரிக்க காங்கிரசின் இரு அவையின் கூட்டுக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு அறிவித்தார்.

"இது அமைதிக்கான நிச்சயமான ஓர் உத்திரவாதமாகும். ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான வார்த்தைகளை கொண்டது, நாகரீக உலகை கிட்டதட்ட அழிவின் விளிம்பிற்கே கொண்டு சென்ற ஒன்றுக்கு எதிரானது இது. இதன் நோக்கங்கள் அனைவருக்கும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் குற்றம் காணமுடியாத அதிகாரத்தை கொண்டது. இந்த சங்கமானது எந்த ஒரு சர்வதேச பிரச்சனைக்கும் தீர்வு தர வல்லது."

சங்கமானது தற்காலிகமாக லண்டனில் இருந்து செயல்பட்டது. பின்பு 1920 முதல் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரத்தில் இருந்து இயங்கி வந்தது. ஆரம்பத்தில் சில பிரச்சனைகளை தீர்வு காண்பதில் வெற்றி பெற்றது குறிப்பாக பின்லாந்து மற்றும் சுவீடன் இடையிலான ஆலன்ட் தீவு பிரச்சனை, ஜெர்மனி மற்றும் போலந்து இடையிலான மேல் சைலேசியா மற்றும் ஈராக் மற்றும் துருக்கி இடையிலான மொசூல் நகரம் மீதான பிரச்சனைகள் ஆகும். மேலும் சில வெற்றிகளை, குறிப்பாக ரஷ்யாவின் அகதிகள் பிரச்சனையைத் தீர்ப்பதிலும் மற்றும் சர்வதேச அபினி வர்த்தகத்தை ஒழிப்பதிலும் வெற்றிகண்டது. சர்வதேச சங்கத்தின் தலைமையின் கீழ் சர்வதேச அமைப்புகளான தொழிலாளர்களுக்கான சர்வதேச கழகம் மற்றும் சர்வதேச நீதிக்கான நிரந்த நீதிமன்றம் போன்றவை செயல்பட்டன. பிற்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறந்த முன் உதாரணமாக சர்வதேச சங்கம் அமைந்து இருந்தது.

சர்வதேச சங்கமானது முதல் உலகப் போரில் வெற்றி பெற்ற நாடுகளின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது. இதில் குறிப்பாக பிரான்சு, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் இத்தாலி நாடுகளின் மேலாதிக்கத்தில் சங்கம் இருந்தது. துவக்கத்தில் இருபத்தி எட்டு உறுப்பினர்களைப் பிரதிநிதிகளாகக் கொண்ட பொதுச்சபையானது பெரும்பாலும் ஐரோப்பிய மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளைக் கொண்டவையாகக் காணப்பட்டன. இதன் காரணமாக சர்வதேச சங்கமானது ஐரோப்பிய நாடுகளை மையப்படுத்தியே செயல்பட்டது. அப்போது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. இப்பகுதிகளில் தங்களுக்கான சுயாட்சி அரசுகளை ஏற்படுத்திகொள்ளவும் மற்றும் விடுதலையும் பெறுவதற்கான வழிமுறைகளையும் சங்கம் ஏற்படுத்தி தந்தது.


சர்வதேச சங்கத்தின் தோல்விக்கு காரணங்கள்: 

1. அமெரிக்கா இதில் பங்கேற்காதது சங்கம் வலிமை பெறாமல் போனதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 

2. மேலும் இதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் ஜெர்மனி மற்றும் சோவியத் யூனியன் எந்த முக்கிய பொறுப்பையும் ஏற்காமல் வெறுமனே உறுப்பினராக மட்டுமே இருந்தன. 1926இல் ஜெர்மனியானது சங்கத்தில் இணைந்தது பின்பு நாஜிக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து 1933இல் அமைப்பில் இருந்து வெளியேறியது.

3. 1933ஆம் ஆண்டு சோவியத் யூனியனானது சங்கத்தில் இணைந்தது; இருந்தபோதும் 1939இல் பின்லாந்து மீது தாக்குதல் தொடுத்ததை அடுத்து சோவியத் யூனியன் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரே நாடு சோவியத் யூனியன் ஆகும். 

4. ஜப்பான் 1933இல் மஞ்சூரியாவை ஆக்கிரமித்ததை சங்கம் விமர்சித்ததை அடுத்து ஜப்பானும் அமைப்பில் இருந்து வெளியேறியது. மேலும் இதே காரணத்திற்காக எத்தியோப்பியாவின் மீது தாக்குதல் நடத்தி அதனை ஆக்கிரமித்துக் கொண்ட இத்தாலியின் உறுப்பினர் ஆவதற்கான விருப்பமானது சங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சங்கத்தினால் கட்டுபடுத்த முடியவில்லை . 

5. மேலும் 1930இல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலை இப்பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்கியது. குறிப்பாக, பிரான்சு மற்றும் பிரிட்டன் இந்த ஆக்கிரமிப்புப் போர்களைக் கண்டிக்கவில்லை, ஏனெனில் இவை அந்நாடுகளின் தேசிய பாதுகாப்பினை உடனடியாக பாதிக்கவில்லை . மேலும் சங்கம் திருப்திபடுத்தும் கொள்கையை கையிலெடுக்க, அதுவும் தோல்வியை தழுவியது.

1938இல் நடைபெற்ற மூனிச் மாநாட்டில், ஹிட்லரின் அரசு செக்கோஸ்லாவியாவை ஆக்கிரமித்து, சூதன்லாந்து தன்னுடன் இணைத்துக் கொண்டதையும் பிரிட்டனும், பிரான்சும் ஏற்றுக் கொண்டன. இறுதியாக, 1939இல் சோவியத் யூனியன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு ஜெர்மனி போலந்து மீது தாக்குதல் நடத்தியது. சர்வதேச சங்கத்திற்கான எல்லா வாய்ப்புகளையும் தகர்த்தெறிந்தது. சர்வதேச சங்கமானது ஆக்கிரமிப்பு நாடுகளின் மீது தனது வலுவான அதிகாரத்தைச் செலுத்த முடியவில்லை . மேலும் ஆக்கிரமிப்புக்கு எதிராக இராணுவ குறுக்கீடு செய்யாமல் வெறும் பெயரளவிலான பொருளாதார தடையை மட்டுமே அந்நாடுகளின் மீது விதிக்க முடிந்தது.

செயல்பாடு

சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான  காரணங்களை வகுப்பில் விவாதிக்கவும்.

உறுப்பினரல்லாத மற்ற நாடுகளின் மீது சர்வதேச சங்கத்தால் அதிகாரம் செலுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லை. உறுப்பு நாடுகள் உறுப்பினரல்லாத நாடுகளுடன் வர்த்தகம் செய்யவும் இயலவில்லை . மேலும் சங்கத்திற்கென்று படைகள் என்று எதுவும் இல்லாததால், ராணுவ நடிவடிக்கைகளின் போது, உறுப்பு நாடுகள், குறிப்பாக பிரான்சு மற்றும் பிரிட்டன், தங்களது படைகளை அனுப்ப வேண்டியிருந்தது.


விவாதம்

தலைப்பு - சர்வதேச சங்கம் ஏன் உலகில் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை

கீழ்க்கண்ட கருத்துகள் அடிப்படையில் விவாதிக்கவும்

) ஜரோப்பியர்களின் ஆதிக்கம் 

நிற வெறியை எதிர்க்கத் தவறியது 

) சங்கத்தில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பானின் ஆதிக்கம்

இருந்தபோதும், எந்த நாடும் மிகவும் செலவு பிடிக்கும் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய பிரச்சனைகளில் தலையிடுவதை விரும்பவில்லை. இந்த நேரத்தில் சர்வதேச சங்கத்திலிருந்து 1939இல் சோவியத் யூனியன் வெளியேற்றப்பட்டது. இதுவே சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும் பின்நாட்களில் அமெரிக்க அதிபர் வில்சன் குறிப்பிட்ட "அமைதிக்கான நிரந்த பாதுகாப்பு" என்பற்கான வாய்ப்பு பொருளற்றதாக ஆகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் ஓர் உலகப்போர் நிகழ்வதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததன. அப்படி ஓர் போர் நிகழாவண்ணம் தடுத்து உலகை காக்கும் திறன்படைத்த சர்வதேச அமைப்பு தேவையாக இருந்தது. ஆனால் அதற்கான திறனற்ற அமைப்பாக அந்நிலையில் சங்கம் இருந்தது.

செயல்பாடு

உனது கருத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்.

சங்கத்தில் இணைந்து கொள்ளாத அமெரிக்காவின் முடிவே அமைப்பின் தோல்விக்கான முக்கிய காரணமாக நீ | நினைக்கிறாயா?

Tags : Causes for the failure | International Organisations சர்வதேச சங்கத்தின் தோல்விக்கு காரணங்கள் | சர்வதேச அமைப்புகள்.
12th Political Science : Chapter 11 : International Organisations : League of Nations Causes for the failure | International Organisations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : சர்வதேச அமைப்புகள் : சர்வதேச சங்கம் - சர்வதேச சங்கத்தின் தோல்விக்கு காரணங்கள் | சர்வதேச அமைப்புகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : சர்வதேச அமைப்புகள்