சர்வதேச அமைப்புகள் - அருஞ்சொற்பொருள் | 12th Political Science : Chapter 11 : International Organisations

   Posted On :  04.04.2022 04:32 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : சர்வதேச அமைப்புகள்

அருஞ்சொற்பொருள்

அரசியல் அறிவியல் : சர்வதேச அமைப்புகள் : அருஞ்சொற்பொருள்

அருஞ்சொற்பொருள்



சர்வதேச தொலைத்தொடர்பு கழகம் (ITU): முன்பு சர்வதேச தந்தி கழகம் என அழைக்கப்பட்டது. 1865 ஆம் ஆண்டு மே 17 இல் பாரிசில் நடைபெற்ற சர்வதேச தந்தி கழகத்தின் கூட்டத்தில் உருவாக்கப்பட்டது.


சர்வதேச அஞ்சல் கழகம் (UPU): 1874 இல் பேர்ன் ஒப்பந்தத்தின்படி உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு தற்பொழுது ஐ.நா-வின் சிறப்பு முகவாண்மையாக உறுப்பு நாடுகளிடையே அஞ்சல் கொள்கையையும், கூடுதலாக உலக அஞ்சல் சேவையினையையும் ஒருங்கிணைத்து வருகிறது. 


சர்வதேச அமைதி மாநாடு: இது 1919 ஆம் ஆண்டு ஜனவரி 18 இல் முதல் உலகப்போரின் முடிவில் நேச நாடுகளின் சார்பில் அமைதியை மைய அதிகாரமாக கொண்டதாக நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாடாகும். இது வெர்சல்ஸ் அமைதி மாநாடு எனவும் அறியப்படுகிறது. இம்மாநாட்டில் 32 நாடுகள் மற்றும் தேசங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு முக்கிய முடிவாக "சர்வதேச சங்கத்தை" உருவாக்கினர். 


சர்வதேச நீதிமன்றம் (IC)): இது உலக நீதிமன்றம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்நீதிமன்றம் ஐ.நா-வின் நீதித்துறை அமைப்பாகும். 


நிரந்தர நீதிமன்ற தீர்ப்பாயம் (PCA): நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள இத்தீர்ப்பாயமானது அரசுகளுக்கு இடையிலான ஓர் அமைப்பாகும். 


சர்வதேச சங்கம்: இது ஓர் அரசுகளுக்கு இடையிலான அமைப்பாகும். முதல் உலகப்போரின் முடிவில் நடந்த பாரிஸ் அமைதி மாநாட்டின் விளைவாக 1920 இல் ஜனவரி10இல் இவ்வமைப்பானது உருவாக்கப்பட்டது. இது உலக அமைதியை பாதுகாப்பதை நோக்கமாக கொண்ட அரசுகளுக்கு இடையிலான முதல் உலகளாவிய அமைப்பாகும். 


ஐக்கிய நாடுகள் சபை (UN): இது ஓர் அரசுகளுக்கு இடையிலான அமைப்பாகும். தனது நோக்கமாக சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவது, நாடுகளுக்கு இடையே நட்புறவை வளர்ப்பது, சர்வதேச ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான மையமாக செயல்படுவதாகும். 


ஐரோப்பிய ஒத்திசைவு: இது 1815-களிலும் 1848 இடையில் நடந்த ஐரோப்பிய அதிகார சமநிலையிணை குறிப்பிடுகிறது. 


சர்வதேச தொழிலாளர் கழகம் (ILO):

முதல் உலகப்போரினை தொடர்ந்து உருவாக்கப்பட்ட சர்வதேச சங்கத்தின் முகவாண்மையாக இது தோற்றுவிக்கப்பட்டது.


சர்வதேச நிதியம் (IMF): நிதியம் எனவும் அறியப்படும் இது ஒரு சர்வதேச அமைப்பாகும். இதன் தலைமையகம் வாஷிங்டனில் அமைந்துள்ளது. 189 நாடுகளை உறுப்பினராக கொண்டுள்ள இதன் பணியானது விரைவான உலக பணவியல் ஒருங்கிணைப்பை உருவாக்குவது, நிலையான நிதி செயல்பாட்டை பாதுகாப்பது, உலகம் முழுவதும் வறுமையைக் குறைப்பது ஆகும்.


உலக வங்கி (WB); மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கியாகவும் அறியப்படும். இது ஒரு சர்வதேச நிதி நிறுவனம் ஆகும். தனது சேவையாக வட்டியில்லாக் கடன்கள் மற்றும் மானியங்களை ஏழை நாடுகளின் அரசிற்கு தேவையான குறிப்பாக மூலதன வளர்ச்சி திட்டங்களுக்கு அளிக்கிறது.


ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி (AIIB): இது ஓர் பல்தேசிய வளர்ச்சி வங்கியாகும். இதன் நோக்கம் ஆசிய பசிபிக் பகுதியின் உள்கட்டுமானத்தை வளர்ப்பதாகும். இவ்வங்கி தற்போது 70 உறுப்பினர்களை கொண்டுள்ளது. மேலும் தனது நோக்கத்திற்கு ஆதரவாக உலகம் முழுவதும் 27 உறுப்பினர்களை கொண்டிருக்கிறது.


ஆசிய வளர்ச்சி வங்கி (ADB): மண்டல வளர்ச்சி வங்கியாக 1966ஆம் ஆண்டு டிசம்பர் 19இல் உருவாக்கப்பட்ட இவ்வங்கியானது பிலிப்பைன்ஸ் மெட்ரோ மணிலாவின் மண்டல்யங் நகரில் தனது தலைமையகத்தை கொண்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியானது தன்னை ஓர் சமூக வளர்ச்சிக்கான அமைப்பாக வரையறுத்து கொண்டு ஆசிய மற்றும் பசிபிக் பகுதியின் வறுமை குறைப்பிற்கான பணியினை ஆர்வமுடன் மேற்கொண்டு வருகிறது. 


சர்வதேச பொது மன்னிப்புச் சபை : இது ஓர் மனித உரிமைகளுக்கான அரசு-சாரா அமைப்பாகும். இது உலகம் முழுவதுமாக ஏழு மில்லியன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை கொண்டுள்ளது. சர்வதேச பொது மன்னிப்புச் சபை 1961இல் லண்டனில் தோற்றுவிக்கப்பட்டது.


மனித உரிமை கண்காணிப்பகம் (HRW): இது ஓர் சர்வதேச அரசு-சாரா அமைப்பாகும். 1978இல்தோற்றுவிக்கப்பட்ட இதன் தலைமையகம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இது மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சியையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. 


சர்வதேச சங்கத்தின் குழு : இது சங்க நாடுகளின் முக்கிய உறுப்புகளான சட்டமன்றம், மற்றும் நிரந்தர செயலகம் போன்றவற்றில் சட்டமன்றத்தின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக அமைப்பாகும். இது நான்கு நிரந்தர உறுப்பினர்களை கொண்டுள்ளது. மேலும் சர்வதேச நீதிக்கான நிரந்தர நீதிமன்றம் மற்றும் சர்வதேச தொழிலாளர் கழகம் ஆகிய இரண்டு அமைப்புகளையும் தனக்கு கீழ் கொண்டுள்ளது. 


பொதுச்சபை: பொதுச் சபையானது ஐ.நாவின் ஆறு முக்கிய அமைப்புகளுள் ஒன்று. இது மட்டுமே அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் சம் பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது. மேலும் ஐ.நாவின் பிரதிநிதியாக முக்கிய பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது மற்றும் கொள்கையினை வடிவமைப்பது  போன்றவற்றை மேற்கொள்கிறது. 


மூனிச் மாநாடு: இம்மாநாடு 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் மூனிச் நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஜெர்மனியானது செக்கோஸ்லோவியா பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டதை ஏற்றுக் கொண்டனர். 


அறங்காவலர் குழு: ஐ.நாவின் ஆறு முக்கிய அமைப்புகளுள் ஒன்றாக சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கைவிடப்பட்ட முந்தைய காலணி பகுதிகளில் சிறந்த நிர்வாகமானது செயல்படுவதற்கு உதவுகிறது. இதன் பகுதியாக இரண்டாம் உலகப்போரினால் பாதுகாக்கப்பட்ட பதினோரு பகுதிகளை அறங்காவலர் குழுவானது கொண்டிருந்தது. 


சர்வதேச அரசு சாரா அமைப்புகள் (INGO): அரசு சாரா அமைப்புகளைப் போன்றே சர்வதேச அமைப்பாக உலக அளவில் பல்வேறு நாடுகளில் காணப்படும் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கான பணியை மேற்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக அரசு சாரா அமைப்புகள் போன்றே சுற்றுச் சூழல் போன்றவற்றை முதன்மையாக கொண்டு செயல்படுகின்றன.

Tags : International Organisations சர்வதேச அமைப்புகள்.
12th Political Science : Chapter 11 : International Organisations : Glossary International Organisations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : சர்வதேச அமைப்புகள் : அருஞ்சொற்பொருள் - சர்வதேச அமைப்புகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : சர்வதேச அமைப்புகள்