உலக வங்கியின் ஐந்து நிறுவனங்கள் | சர்வதேச அமைப்புகள் - உலக வங்கி | 12th Political Science : Chapter 11 : International Organisations
உலக வங்கி
வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள உலக வங்கியானது உண்மையில் மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேசவங்கியாகும். உலக வங்கி அல்லது உலக வங்கி குழுமம் 1945-ல் உருவாக்கப்பட்டு உலகில் வளர்ந்து வரும் நாடுகளின் தேவைக்கான மிகப்பெரும் நிதியையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கிவருகிறது. "உலக வங்கி" என்ற பெயரானது மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கியின் பொருளாதார சட்டப்பிரிவினால் 1944ஆம் ஆண்டு ஜூலை 22இல் பிரெட்டன் உட்ஸ் மாநாட்டில் அளித்த அறிக்கையில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. இவ்வங்கியின் முதன்மை நோக்கமாக ஏழை மக்கள் மற்றும் ஏழை நாடுகளில் தனது ஐந்து நிறுவனங்கள் மூலம் வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது போன்ற பணிகளில் தனது நிதி ஆதாரங்களையும் மற்றும் தனது எல்லையற்ற அனுபவங்களையும் கொண்டு செயல்படுகிறது. உலக வங்கியின் நிர்வாகமானது அதன் உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது. அவர்களே கடன் அளிப்பவர், பெறுபவர் மற்றும் நன்கொடையாளராகவும் இருக்கின்றனர்.
விவாதம்
உலக வங்கியில் அரசியல் கலப்பு உள்ளதாக நீ நினைக்கிறாயா? அது ஒரு சார்பானதா? அல்லது சார்பற்றதா?
உலகின் பெரும்பான்மையான வளரும் நாடுகள் உலக வங்கியின் உதவிகளை கடன் மற்றும் மானியங்கள், தொழில்நுட்ப உதவி மற்றும் கொள்கை உருவாக்கத்திற்கான அறிவுரைகளை பெறுகின்றன. வங்கியானது மிகப் பரந்த அளவிலான செயல்பாட்டாளர்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அரசுத்துறை நிறுவனங்கள், குடிமைச் சமூக அமைப்புகள், பிற உதவி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர் போன்றோரின் மூலமாக செயல்படுகிறது. உலக வங்கியின் அடிப்படை நோக்கமான வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்க்கைத் தர மேம்பாடு போன்றவை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து இருக்கின்றன. ஆனால் தற்பொழுது புதிய பொருளாதார சூழலின் அடிப்படையில் வளரும் நாடுகளுக்கான தேவையைக் கருதி தனது அணுகுமுறையில் மாற்றம், கொள்கையில் நெகிழ்வைக் கடைபிடிக்கிறது. வளர்ச்சிக்கான தற்போதைய சவால்களை எதிர்க்கொள்ள நிறுவனங்கள் மக்களுக்கு நெருக்கமாக இருந்தால் மட்டும் போதாது, மேலும் அவை சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்கும் விதத்தில் அரசு, தனியார் மற்றும் குடிமைச் சமூகத்தில் உள்ள ஆற்றல் மிக்கோரை ஒன்றிணைக்கவும் வேண்டும். இச்சவால்களை எதிர்கொள்ளும் விதமாக எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதில் வங்கி கவனமாக உள்ளது. அதற்கேற்றார் போல் தன்னுடைய நிர்வாக உத்தியில் மாற்றம் மற்றும் ஆளுகையில் முன்னேற்றம் போன்றவற்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் சுயசார்பானதாக, புதுமையானதாக, திறமையானதாக, செயலாக்கம் மிக்கதாக மற்றும் வெளிப்படையானதாக என ஐந்து பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. மேலும் அவை;
கடன் முறைகளில் சீர்திருத்தம்: மிகவும் நவீனப்படுத்தப்பட்ட நிதி சேவை மற்றும் கடன் முறைகளைக் கொண்டு, வங்கியானது கடன் பெறுபவரின் தேவையை அறிந்து மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறது. நெருங்கிய கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் நிலையான பயனை அடைவதற்கான அழைப்பை விடுக்கிறது. மேலும் அதிக பாதுகாப்பற்ற முதலீடுகளின் மீது நேரடியான நடவடிக்கையை வலுப்படுத்துவது மற்றும் கண்காணிப்பை மேம்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்கிறது.
பங்கேற்பை அதிகப்படுத்தி குரல்களை ஒலிக்க செய்கிறது : இயக்குநர்கள் குழுவில் கூடுதல் இடங்களை பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு அளிப்பதன்மூலம் வளர்ந்து வரும் நாடுகளின் ஓட்டு அதிகாரத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் வங்கியானது, வளர்ச்சி மற்றும் மாற்றம் அடைந்து வரும் நாடுகளின் பிரதிநிதித்துவம் மற்றும் அதன் தாக்கத்தை ஆராய்ந்து அந்நாடுகளுக்கு வங்கி குழுமங்களில் இடம் அளிக்கிறது.
பொறுப்பு மிக்க நல்ல அரசை ஏற்படுத்துவது: இதன் முக்கிய பகுதியாக, வங்கியானது அனைத்து துறைகள் மற்றும் நாடுகளிலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதன் முக்கிய அடிப்படையாக வறுமை ஒழிப்பிற்கான திறமை மிக்க மற்றும் பொறுப்புமிக்க அரசாக வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்க செய்கிறது.
❖ மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி
❖ சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு
❖ சர்வதேச நிதி கழகம்
❖ பல்தேசிய முதலீட்டு உத்தரவாதத்திற்கான பாதுகாப்புக் குழுமம்
❖ முதலீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான சர்வதேச மையம்
மிகவும் வெளிப்படையான, பொறுப்பு மிக்க தகவல்களை அளித்தல்: வங்கியின் தகவல் கொள்கையானது இதற்கான வாய்ப்பை வழங்குகிறது. வங்கியானது தனது அறிவாற்றல் மற்றும் அனுபவங்களை மிக பரந்த அளவில் அனைவரும் அறியும் வண்ணம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதன் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் பற்றிய தகவல்களை அளிக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட அமைப்பு: வளர்ச்சிக்கான மிகச் சிறந்த பங்காளராக வங்கியானது பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இச்சீர்திருத்தங்கள் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டது. அவை;
நவீன கடன் அளிப்பு, அறிவாற்றல் உதவி மற்றும் சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக, வறுமை ஒழிப்பிற்கான பணிகளில் உதவுகிறது.
மேம்பட்ட வகையில் தனது சிறந்த அறிவினை மற்றும் அனுபவங்களை அமைப்பிற்குள்ளும் மற்றும் வெளியிலும் பகிர்ந்து கொள்வதை மேற்கொள்கிறது.
வங்கியின் நடைமுறைகளில் கடைபிடிப்பதாகும். அமைப்பு மற்றும் நவீனத்துவத்தை இதன் துவக்கமானது 1946இல் 33 உறுப்பினர்களை கொண்டு துவக்கப்பட்டது மிக பெரும் அளவிலான மாற்றங்களை இதன் உறுப்பினர்களிடையேயும் மற்றும் உலக அளவிலும் ஏற்படுத்தி உள்ளது. காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்த பல நாடுகள் வங்கியில் உறுப்பினர் ஆகின. கூடவே உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்கான தேவையும் அதிகரித்தது.
மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி (IBRD)
இதன் முக்கிய நோக்கமானது நடுத்தர வருவாய் நாடுகள் மற்றும் குறைவான வருவாய்க்கான கடன்களை பெறும் நாடுகளில் வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பான வளர்ச்சியை ஏற்படுத்துவது, உத்திரவாதம் அளிப்பது, பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைகளை வழங்குவதாகும். 1945 இல் ஏற்படுத்தப்பட்ட இவ்வங்கியில் 184 உறுப்பு நாடுகள் உள்ளன. இதன் மொத்த வருவாய் மற்றும் நிதியாண்டுகளில் கிடைக்கும் வருவாய் என 2018ஆம் ஆண்டு ஜுனில் 698 பில்லியன் அமெரிக்க டாலரை கொண்டு இருந்தது.
சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு (IDA)
உறுப்பு நாடுகளின் துணையுடன் ஏழை நாடுகளில் வறுமை ஒழிப்பிற்கான வட்டியில்லா கடன்கள், மானியங்களை உறுப்பினர்களிடமிருந்து நிதி உதவியாகப் பெற்று வழங்குகிறது.1960 இல் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு தனது பொறுப்பில் 24 பில்லியன் அமெரிக்க டாலரை ஜுன் 2018ஆம் நிதியாண்டில் மேலாண்மை செய்தது.
சர்வதேச நிதி கழகம் (IFC)
வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான கடன்களை தனியார் துறையினருக்கு வழங்குகிறது. 1956இல் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பில் 176 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 2018ஆம் நிதியாண்டில் 23.3 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாக செய்து உள்ளது.
பல்தேசிய முதலீட்டு உத்தரவாதத்திற்கான பாதுகாப்புக் குழுமம் (MIGA)
இக்குழுமமானது வளரும் நாடுகளில் தனியார் துறையினரின் முதலீட்டினை அதிகரிக்க செய்கிறது. மேலும் ஒப்பந்தங்கள், பிரச்சனைகள், போர் மற்றும் பணப்பரிமாற்று விகிதங்களினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து முதலீட்டிற்கான பாதுகாப்பை வழங்குகிறது. 1988இல் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பில் 164 உறுப்பினர்களைக் கொண்டு அதிகபட்சமாக 5.3 பில்லியன் தொகையை வர்த்தகம் செய்துள்ளது.
முதலீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான சர்வதேச மையம் (ICSID)
வளரும் நாடுகளில் வெளிநாட்டு முதலீட்டை ஆதரிக்கிறது. மேலும் முதலீடு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறது. 1966இல் ஏற்படுத்தப்பட்ட இவ்வமைப்பில் 140 உறுப்பினர்கள் உள்ளனர்.