சர்வதேச நிதி நிறுவனத்தின் தேவை, செயல்பாடுகள் - சர்வதேச நிதி நிறுவனம் | 12th Political Science : Chapter 11 : International Organisations
சர்வதேச நிதி நிறுவனம்
சர்வதேச நிதியமானது உலகின் மிகப் பெரிய முதன்மையான சர்வதேச நிதி நிறுவனமாகும். 1930இல் ஏற்பட்ட உலக நாடுகளின் பெரும் பொருளாதார மந்த நிலைக்குப் பதிலாக 1944இல் பிரெட்டன் உட்ஸ் மாநாட்டில் இது உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு நாடும் பக்கத்து நாடுகளிடம் கடன் வாங்குவது இதனால் குறைந்தது.
உறுப்பு நாடுகளின் செழித்த நிலை தேவைக்கான குறுகிய மற்றும் இடைக்கால நிதியை வழங்குவதுடன் அந்நாடுகளின் பொருளாதார கொள்கையில் நெகிழ்வை ஏற்படுத்தி பண மதிப்பு இழப்பு போட்டியை தடுத்து வர்த்தகத்தைப் பாதுகாக்கிறது.
சர்வதேச நிதி நிறுவனம் ஓர் சுதந்திரமான சர்வதேச அமைப்பாகும். இது 185 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது. இதன் நோக்கமானது பொருளாதார நிலைதன்மையை ஏற்படுத்தி வளர்ச்சிக்கு வித்திடுவதாகும். உறுப்பு நாடுகள் இதன் பங்குதாரராக கூட்டுறவு முறையில் சர்வதேச நிதி நிறுவனத்திற்காக மூலதனத்தை தங்கள் நாட்டிற்கான ஒதுக்கீடு அடிப்படையில் வழங்குகின்றன. இதற்காக நிதியமானது அதன் உறுப்பினர்களுக்கு நுண்பொருளாதார கொள்கைக்கான ஆலோசனைகளை, செலுத்து நிலை தேவைக்கான நிதியுதவி, தொழிற்நுட்ப உதவி மற்றும் தேசிய பொருளாதாரமேம்பாட்டிற்கான மேலாண்மை பயிற்சிகளை வழங்குகிறது. நிதியமானது ஐ.நா-வின் பல்வேறு தன்னாட்சி நிறுவனங்களில் ஒன்றாக சிறப்பு முகவாண்மையாக குறிப்பிடப்படுகிறது. மேலும் இது ஐ.நா-வின் நிரந்தர பார்வையாளராகவும் உள்ளது. நிதியத்தின் விதி எண் ஒன்றானது கீழ்க்கண்ட முக்கிய நோக்கங்களை குறிப்பிடுகிறது.
❿ ஒரு நிரந்தர அமைப்பாக சர்வதேச அளவில் நிதி ஒத்துழைப்பை ஏற்படுத்துகிறது. மேலும் சர்வதேச பணவியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான வழிமுறைகளை உருவாக்குகிறது.
❿ பரந்த அளவிலான, சமச்சீரான, சர்வதேச வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் அதிக வேலை வாய்ப்பு மற்றும் வருவாயைப் பாதுகாத்து உற்பத்தி சக்திகளின் நோக்கமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையைக் கடைபிடிக்க உறுப்பு நாடுகளை அறிவுறுத்துகிறது.
❿ பரிவர்த்தனை விகிதங்களில் நிலைத்த தன்மை, உறுப்பு நாடுகளிடையே ஒழுங்கமைந்த பரிமாற்றத்திற்கான வழிமுறைகளை ஏற்படுத்துதல் மற்றும் போட்டியின் காரணமாக மதிப்பு குறைத்தலைத் தடுக்கிறது.
❿ உறுப்பினர்களுக்கு இடையே நடைபெறும் நடப்பு பரிவர்த்தனையில் பல்தேசிய பண வழங்கல் முறை ஏற்படுவதற்கான உதவியை செய்கிறது மற்றும் உலக வர்த்தக வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் அந்நிய செலாவணி பரிமாற்று விகிதங்களின் மீதான கட்டுபாடுகளை நீக்குகிறது.
❿ நிதியமானது தனது பொது நிதி வளங்களை உறுப்பினர்களுக்கு தற்காலிகமாக பயன்படுத்தி தங்களைப் பாதுகாத்து கொள்வதற்கான நம்பிக்கையை அளிக்கிறது. இதன் மூலம் செலுத்து நிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் மீட்சி அடைவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.
❿ உறுப்பினர்களிடையே செலுத்து நிலையில் ஏற்படும் நிலையற்ற தன்மையின் தாக்கம் மற்றும் அதன் கால அளவினை குறைக்க செய்கிறது.
❿ முக்கியமாக நிதியமானது தனது ஒற்றை பண்பாக ஓர் சர்வதேச நிதி நிறுவனமாக தொலைநோக்குப் பார்வையுடன் தனது பொறுப்பு மிக்க நடைமுறையின் மூலம் சர்வதேச வளர்ச்சி மற்றும் நிதி பரிமாற்ற முறைகளைக் கையாள்கிறது.
நிதியமானது மிக பரந்த அளவிலான பணிகளை அதன் முக்கியத்துவம் கருதி மேற்கொள்கிறது.
உறுப்பினர்களின் பொருளாதார கொள்கையினைக் கண்காணிப்பது
எந்த நாடு நிதியத்தில் உறுப்பினராக இணைந்து அதன் கொள்கையினை ஏற்று கொண்டதோ அது தனது பொருளாதார கொள்கையினை நிதியத்தின் நோக்கத்திற்கு இணையானதாகக் கொண்டு செயல்படவேண்டும். மேலும் உலகின் எல்லா நாடுகளின் பொருளாதார நிலையினை தொடர்ந்து கண்காணிப்பதற்கான முக்கிய ஒரே அமைப்பாக செயல்படுகிறது.
செலுத்துநிலை தேவைக்கான தற்காலிக நிதிவழங்கல்
செலுத்துநிலைத் தேவைக்கான கடன்களை நிதியமானது உறுப்பு நாடுகளுக்கு தற்காலிகமாக வழங்குகிறது. கூடுதலாக நேரடியான நிதியினை உறுப்பு நாடுகளுக்கு வழங்குகிறது. மேலும் நாடுகளின் செலுத்து நிலை தேவைக்கான நிதியினை வெளியிலிருந்து திரட்டும் பணியையும் மேற்கொள்கிறது.
குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வறுமை தடுப்பு
நிதியமானது வருவாய் குறைந்த நாடுகளுக்கு நிபந்தனையற்ற கடன்களை அளித்து அந்நாடுகளில் வறுமை ஒழிப்பிற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த முயற்சியில் நிதியமானது உலக வங்கி மற்றும் பிற வளர்ச்சிக்கான பங்குதாரர்களையும் கொண்டு பணியாற்றுகிறது. கூடுதலாக நிதியமானது கடன்களில் இருந்து மீள்வதற்கான இரண்டு சர்வதேச பணிகளையும் மேற்கொள்கிறது. அவை:
1. மிக அதிக கடனில் உள்ள ஏழை நாடுகள் (HIPC)
2. பல்தேசிய கடனில் இருந்து மீள்வதற்கான முன்னெடுப்பு (MDRI)
வெளியிலிருந்து நிதியினை திரட்டுவது
நிதியமானது நாடுகளின் கொள்கை நடைமுறைக்கான நிதியினை பல்தேசிய கடன் அளிப்போர் மற்றும் நன்கொடையாளர்களிடம் இருந்து திரட்டுவதை முக்கிய பணியாக கொண்டிருக்கிறது. நாடுகளின் பொருளாதார எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்கான முக்கிய தகவல்களை நிதியத்தின் கொள்கை ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகள் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் நிதிச் சந்தைகளுக்கு அளிக்கின்றது. இதன் முலம் பொருளாதாரத்தின் மீதான முதலீட்டாளர்கள் மற்றும் சந்தையாளர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது.
சர்வதேசபணவியல்முறையை பலப்படுத்துவது
நிதியமானது சர்வதேச பணவியல் முறைக்கான மைய அமைப்பாக செயல்படுகிறது. தனது உறுப்பினர்களுக்கு சர்வதேச பணவியல் தொடர்பான ஆலோசனைகளையும் மற்றும் உதவிகளையும் வழங்குகிறது. இது தனது பணியாக பிற பல்தேசிய நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சர்வதேச விதிகளின் துணையுடன் அவற்றை கட்டுப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
சர்வதேச இருப்பை உலகளவில் வழங்குதலை அதிகரித்தல்
உலக தேவைகளுக்காக நிதியமானது அதிகாரபூர்வ அமைப்பாக தனது சர்வதேச கையிருப்பை வழங்குகிறது. இது சிறப்பு எடுப்பு உரிமை (SDR) என கூறப்படுகின்றது. இந்த சிறப்பு எடுப்பு உரிமையானது சர்வதேச கையிருப்பை உறுப்பினர்களின் எந்த மாற்றதக்க பணங்களுடனும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சியின் மூலம் ஆற்றலை வளர்த்தல்
நிதியமானது சிறந்த பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை உறுப்பு நாடுகளுக்கு தங்கள் பொருளாதார கொள்கைக்கான வடிவங்களையும் மற்றும் பொருளாதார மேலாண்மைக்கான திறமையினை மேம்படுத்தும் வகையில் வழங்குகிறது. இந்த உதவியானது கொள்கைகள் தோல்வியடைவதை மற்றும் அதிர்வுகளை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் திட்டங்களுக்கான வடிவங்கள் மற்றும் நடைமுறைகளை வழங்குகிறது. இந்த நடவடிக்கைகள் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு தங்கள் வளங்களை பாதுகாக்கவும் மற்றும் நிறுவனங்கள் வீழ்ச்சியடையாமல் தடுப்பதற்கும் பயன்படுகிறது.
தகவல் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சிகள்
நிதியமானது உறுப்பு நாடுகளின் பொருளாதார கொள்கைகள் பற்றிய பொருளியல் பகுப்பாய்வுகள் மற்றும் புள்ளி விவரங்களைப் பெறுவதற்கான முதன்மை அமைப்பாகும். நிதியமானது தனது தகவல்களை அளிக்கும் வகையில் எண்ணிலடங்கா அறிக்கைகள், ஆய்வறிக்கைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த புள்ளி விவரங்களை வெளியிடுகின்றது. மேலும் குறிப்பாக, தனது பொருளாதார பகுப்பாய்வு மற்றும் உறுப்பு நாடுகளுக்கு அளிக்கும் ஆலோசனைகளை மேம்படுத்தும் வகையில் பல ஆய்வுகளை அதன் முக்கியத்துவம் மற்றும் நடைமுறைகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்கிறது. இதன் வெளியீடுகளை புத்தகமாகவும், இதழ்களில் கட்டுரையாகவும், ஆய்வு அறிக்கைகளாகவும் மற்றும் இணையத்திலும் காணலாம்.
இருந்தபோதும் நிதியத்தின் மீதான பொது விமர்சனமானது சேவைத்துறைகளை வணிகமயமாக்குவதன் மூலம் பெரு நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதாகும். குறிப்பாக கல்வி, மருத்துவம், மக்கள் நல திட்டங்கள் போன்றவற்றை லாபகரமான தொழில் விருப்பமாக மாற்றுவதுடன் மேலும் இறையாண்மை உடைய அரசுகளை சர்வதேச பெருநிறுவன வணிகத்திற்கு ஆதரவாக சேவையாற்ற கட்டாயப்படுத்துகிறது என்பதாகும்.