பரவல், காரணிகள், கொள்கைகள் | இந்திய பொருளாதாரம் - இடம்பெயர்தல் | 9th Social Science : Economics: Migration

   Posted On :  11.09.2023 10:08 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : இடம்பெயர்தல்

இடம்பெயர்தல்

இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இடம்பெயர்தலின் பரவல் இடம் பெயர்தலுக்கான காரணிகள் இடம்பெயர்வு கொள்கைகள்

அலகு 5

இடம்பெயர்தல்


 

கற்றல் நோக்கங்கள்

இடம் பெயர்தல் பற்றியக் கருத்துருக்களைப் புரிந்து கொள்ளல்

இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் இடம்பெயர்தலின் பரவலைப்பற்றி அறிதல்

இடம்பெயர்தலுக்கான காரணிகள் பற்றி ஆராய்ந்து அறிதல்

 

அறிமுகம்

இடம்பெயர்தலின் கருத்துப் படிவம்

கிராமம் அல்லது நகரம் என அனைத்து விதமான குடியிருப்புப் பகுதிகளிலும் பிறப்பு இறப்பு மற்றும் இடம்பெயர்தலின் காரணமாக மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகின்றது. மக்கள்தொகை மாற்றத்தின் இம்மூன்று கூறுகளில் பிறப்பும் இறப்பும் கணக்கிடக்கூடிய வகையில் அமைந்துள்ளவை. அதே சமயத்தில் இடம்பெயர்தல் என்பது கணக்கிடுதல் மற்றும் வரையறைப் படுத்துவதில் அதிகளவிலான சிக்கல்களை உருவாக்குகிறது. பெரும்பாலும் அனைவரும் அதிகமான நேரங்களில் ஓர் இடம் விட்டு இன்னொரு இடம் நகர்ந்து கொண்டே இருப்பதால் இடம் பெயர்தலுக்கான நகர்வு எது என்பதை வரையறுப்பது சுலபமான காரியமாக இருப்பதில்லை .

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடப்பெயர்வு இரண்டு அடிப்படைகளில் கணக்கிடப்படுகிறது.

(i) பிறப்பிடம் அடிப்படையில் கணக்கெடுப்பின்போது இருக்கும் இடமும் பிறந்த இடமும் வேறுபட்டிருந்தால் வாழ்நாள் இடப்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது.

(ii) வாழிடம் அடிப்படையில் கணக்கெடுப்பின்போது இருக்கும் இடமும் கடைசியாக வாழ்ந்த இடமும் வேறுபட்டிருந்தால் வாழிட அடிப்படையிலான இடப்பெயர்வு என அழைக்கப்படுகிறது.



இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இடம்பெயர்தலின் பரவல்

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 121 கோடி மக்களில் 45 கோடி மக்கள் வாழ்தலின் அடிப்படையில் இடம்பெயர்ந்தவராகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த 7.2 கோடி மக்களில் 3.13 கோடிமக்கள் இடம்பெயர்ந்தவர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் இடம்பெயர்வு 37%இருந்த சமயத்தில், தமிழ்நாட்டின் இடம்பெயர்வு உச்சமாக 43% திகழ்ந்தது

பொதுவாக இடப்பெயர்வு நகரப் பகுதிகளோடு மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவிலும் தமிழகத்திலும் இடப்பெயர்வின் பரவல் நகர்ப்புறங்களில் இருந்ததைவிட கிராமப்புறங்களில் மிக அதிகமாகக் காணப்படுகிறது. 2011-ல் இந்தியாவில் கிராமப்புற மக்கள் 37% இடம்பெயர்ந்தவர்களகக் கணக்கிடப்படும் அதே சமயத்தில், நகர்ப்புற இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 27% உள்ளது. தமிழகத்தில் 41% கிராமப்புறங்களில் இடம்பெயர்ந்தவர்களாகவும், 35% நகரப்புறங்களில் இடம்பெயர்ந்தவர்களாகவும்  2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரிய வருகிறது. அதாவது நகர்ப்புறங்களை விட மக்களின் நகர்வு கிராமப்புறங்களில் அதிகமாகக் காணப்படுகிறது

மேலும் இடப்பெயர்வு பெரும்பாலும் பெண்களை விட ஆண்களோடு மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் தரவுகளை வைத்து ஆராயும்போது மிக அதிக சதவிகித இடப்பெயர்வு ஆண்களை விட பெண்களில் மட்டுமே காணப்படுகிறது. 2011ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்களின் ஒட்டுமொத்தக் கணக்கில் 53% பெண்கள் இடம்பெயர்ந்தவர்களாகவும், ஆண்களில் 23% இடம் பெயர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். இதே காலகட்டத்தில் தமிழகத்திலும் இம்மாதிரியான ஒரு சூழ்நிலையே காணப்படுகிறது. பாதிக்கும் மேற்பட்ட, அதாவது 52% பெண்கள் இடம்பெயர்ந்தவர்கள் என்றும் ஆண்களில் 35% பேர் இடம்பெயர்ந்தவர்கள் என்றும் காணக்கிடைக்கிறது.

பெண்களில் அதிக அளவிலான இடப்பெயர்வு காணப்படுவது ஏன்? இந்தியாவில் 70% பேர் தமிழ்நாட்டில் 51% பேர் அவர்களது இடப்பெயர்விற்கான காரணமாகத் திருமணத்தை குறிப்பிடுகின்றனர் பெண்கள். இந்தியாவிலும் தமிழகத்திலும் திருமணமும் திருமணம் சார்ந்த இடப்பெயர்வும் பெண்களின் அதிக அளவிலான இடப்பெயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. வேலையும் வேலைவாய்ப்பும் ஆண்களுக்கு இடையில் இடப்பெயர்விற்கான உந்து சக்தியாக விளங்குகிறது. 2011 ல் இந்தியாவில், ஆண்களில் 28% பேர் தமிழகத்தில் 26% பேர் இடப்பெயர்வுகான முக்கிய காரணமாக வேலையைக் குறிப்பிடுகின்றனர்.

மொத்தத்தில் 2011 கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் ஐந்து பேரில் இருவர் இடம்பெயர்ந்தவராக உள்ளனர். கிராமப்புறப் பகுதிகளிலும் பெண்களுக்கு மத்தியிலும் இடப்பெயர்வு மிக அதிக அளவில் காணப்படுகிறது. தமிழ்நாடு இடம்பெயர்தலுக்கான ஒரு வரலாற்றை உடையது. வியாபாரம், வணிகம், வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழர்கள் பல நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். காலனியாதிக்கத்தின் போது தொழிலாளர்கள் வேலை தேடியும், வருமானத்திற்காகவும் பிற காலனி நாடுகளை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். அண்மைக்காலங்களில் தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மிக அதிக அளவில் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் இடம்பெயர்தலின் அளவு, தன்மை மற்றும் முறைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள தன்னார்வலர்கள் மேற்கொண்ட ஆய்வு கீழ்க்கண்ட விவரங்களை நமக்குத் தெரியப்படுத்துகிறது.

தமிழ்நாட்டின் மொத்த இடப்பெயர்வாளர்களில் 65% பேர் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கும், 35% பேர் நம் நாட்டிற்குள்ளும் இடம்பெயர்ந்துள்ளனர்.

சென்னை மாவட்டம், அதிக எண்ணிக்கையிலான வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கின்றது. சென்னையைத் தொடர்ந்து கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் திருச்சி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

கடலூர், கரூர், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்கள் மிகக்குறைந்த அளவிலான வெளி - குடியேற்ற எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன.

இவ்வாய்வு தமிழகத்தில் இடம்பெயர்ந்தவர்களின் சேருமிடம் மற்றும் பாலினப் பிரிவு குறித்தும் பல தகவல்களை நமக்குத் தருகின்றது.

  வெளிநாடுகளில் குடியேறுபவர்களின் 20% சிங்கப்பூரைத் தேர்வு செய்துள்ளனர். 18% ஐக்கிய அரபு எமிரேட்டிலும், 16% சவுதி அரேபியா, 13% பேர் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து குடியேறி உள்ளனர். மலேசியா, குவைத், ஓமன், கத்தார், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகியவை இடம்பெயர்வாளர்கள் சேரும் நாடுகளாக 2015 ஆம் ஆண்டு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச குடியேறுபவர்களில் 15% பெண்களாகவும், 85% ஆண்களாகவும் உள்ளனர்.

2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறுபவர்களின் கல்வித்தகுதி குறித்த கேள்விக்கு 7% கல்வியறிவு அற்றவர்கள் என்றும், 30% பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு வரை முடித்தவர்கள் 10% என்றும் தொழில் பயிற்சி பெற்றவர்கள் 15%. என்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் 11% என்றும் தொழிற்கல்வி முடித்தவர்கள் 12% என்றும் முதுகலை பட்டதாரிகள் 11% உள்ளனர் என்றும் இவ்வாய்வு தெளிவுபடுத்துகிறது.

இவ்வாய்வு இடம்பெயர்ந்தவர்கள் மேற்கொள்ளும் வேலையின் தன்மை குறித்தும் வெளிப்படுத்துகிறது. மிகவும் திறமை வாய்ந்த வேலைகளிலும், சாதாரணமாகச் செய்யக்கூடிய வேலைகளிலும், நடுத்தரமான வேலைகளிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர்.

 


இடம் பெயர்தலுக்கான காரணிகள்

ஒரு சமுதாயத்தில் ஏற்படும் இடப்பெயர்வின் தன்மை மற்றும் அதன் அளவினை, அச்சமுதாயம் அடைந்த வளர்ச்சியின் போக்கைக் கொண்டோ, தீர்மானிக்கப்படுகிறது. பொருளாதாரத்தில் விவசாயம் மற்றும் தொழில்துறைகளால் ஏற்பட்டிருக்கக்கூடிய வளர்ச்சியின் வீதங்கள் மற்றும் அதன் அளவுகோலைக் கொண்டே இடப்பெயர்வின் வடிவங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் விவசாயம் மற்றும் தொழில் துறையில் கடந்த ஆண்டுகளில் வளர்ச்சி ஏற்பட்டு இருந்த போதிலும் இவ்வளர்ச்சியானது சொத்து மற்றும் வருமானப் பகிர்வில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்யும் விதமாக அமையவில்லை . மேலும் ஏழ்மை என்பது தொடர் சிக்கலாகத் திகழ்ந்து வருகிறது.


உங்களுக்குத் தெரியுமா?

 உலகிலேயே மெக்ஸிகோ - அமெரிக்க ஐக்கிய நாடு இடையேயான இடப்பெயர்வு பாதையே 2010ஆம் ஆண்டின் மிகப் பெரிய இடப்பெயர்வுப் பாதையாகும். உலகிலேயே நீண்ட தூரம் இடம்பெயரும் பறவை ஆர்டிக் டெர்ன் (Artic tem) பறவையாகும்.

வளர்ச்சிப் போக்கானது வளர்ச்சி மண்டலங்களால் நிலம் சார்ந்த சமத்துவமின்மையை உருவாக்கியுள்ளது இந்தியா போன்ற வளர்ச்சியடையும் பொருளாதார சமூகத்தில் காணப்படும் இடப்பெயர்வுகளை வளர்ச்சிப் போக்குகளால் உருவாகியுள்ள பொருளாதார சமூக மற்றும் இடம் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் தீர்மானிக்கின்றன.

எனவே இடப்பெயர்வு நகர்வு பல்வேறு வகைப்பட்ட உள் நகர்வுகளைக் கொண்டதாக அமைகிறது. உதாரணமாக கிராமப்புற நகர்ப்புற இடப்பெயர்வு நகர்வை நாம் எடுத்துக்கொண்டால், அதற்குள் கிராமப்புற ஏழை பணக்காரர் ஆகியோருக்கு அவரவருக்கான காரணங்கள், உந்து சக்தி, இடப்பெயர்வு முறை மற்றும் இடப்பெயர்வினால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகிய உள்ளோட்டங்களைக் கொண்டதாக உள்ளது. ஏழை மக்கள் கிராமப்புறங்களில் நிலவிவரும் தங்களது துயர நிலையிலிருந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக்கொள்ளும் உத்தியாக இடப்பெயர்வை மேற்கொள்கின்றனர். அதேசமயம் சற்று வசதி வாய்ப்புகள் உடைய மக்கள் தங்களது துயர நிலையில் இருந்து மீள்வதற்காகவோ அல்லது வாழ்வாதார உத்தியாகவோ பயன்படுத்தாமல், தங்கள் வாழ்நிலையை மேம்படுத்துவதற்காக இடம்பெயர்தலை மேற்கொள்கின்றனர்.

நிலப்பரப்பு சார்ந்து நோக்கும் போது நகர்ப்புரமானாலும் கிராமப்புரமானாலும் வளர்ச்சி அடைந்த நிலப்பகுதிகளில் குவியும் தன்மை உடையவர்கள் இடம்பெயர்ந்தவர்கள்.

இடம்பெயர்தலின் வடிவம் சிக்கலான பல தரப்பட்ட நகர்வுகளை உள்ளடக்கியதாகும்.

  கிராமப்புறத்தில் இருந்து கிராமத்திற்கு, கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புரம் நோக்கி, நகர் புறத்திலிருந்து கிராமம் நோக்கி, நகர் புறத்திலிருந்து நகரம் நோக்கிய இடப்பெயர்வுகள்.

குறுகிய, நடுத்தரமான மற்றும் நீண்டதூர இடப்பெயர்தல் நகர்வுகள்

நீண்டகால நிரந்தர இடப்பெயர்வு மற்றும் குறுகிய கால சுழற்சி முறையிலான நகர்வுகள்.


ஒவ்வொரு இடப்பெயர்வு நகர்வும் வெவ்வேறு வகையான வகுப்பு சார்ந்த குடியேறுபவர்களை கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு இடப்பெயர்தலும் அவற்றிற்கான சொந்த காரணங்களைக் கொண்டவை இடப்பெயர்தலின் அளவு மற்றும் தன்மை ஆகியவை கீழ்க்கண்டவற்றைச் சார்ந்துள்ளன

இடப்பெயர்தல் துவங்கும் இடத்தில் மக்கள் அனுபவிக்கும் அழுத்தம் மற்றும் விருப்பங்கள்

இடப்பெயர்தல் துவங்குமிடத்தில் மக்களின் நகர்வு மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள்

சேருமிடத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் அவை குறித்த தகவல்கள்.

குடியேற்றச் செலவு

 


இடம்பெயர்வு கொள்கைகள்

இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் இடப்பெயர்தல் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான கொள்கைகளை உருவாக்கும் அடிப்படைகள்:

இடம்பெயர்தலின் அளவை குறைப்பதற்கான வழிகள்: அதிக அளவிலான இடப்பெயர்தல் கிராமப்புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினைப்பிரதிபலிக்கிறது எனவே கிராமப்புறங்களின் மீது தனிக்கவனம் இருத்தல் வேண்டும். ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையை குறைக்கும் விதமான கிராம வளர்ச்சித்திட்டங்கள் அதிக அளவிலான இடம்பெயர்தலை குறைப்பதற்கு உதவியாக அமையும்.

இடம்பெயர்ந்து நகர்தலைத் திசைதிருப்புதல்: பெருநகரங்கள் நோக்கி குவியும் இடம் பெயர்தலைத் திசைமாற்றி அமைத்திடும் கொள்கைகள் விரும்பத்தக்க கொள்கை முடிவுகள் ஆகும். நிலப்பரப்புச் சார்ந்த குடிபெயர்தலால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு நகர்புறங்களை பரவலாக்கும் வடிவமைப்புகள் பொருத்தமான உத்திகளாக அமைகின்றன.

 


மீள்பார்வை

பிறப்பு, இறப்பு மற்றும் இடம்பெயர்வைப் பொறுத்து மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகின்றது.

மக்கள் தொகை நகர்வில் கிராமப்புற இடப்பெயர்வானது நகர்ப்புற இடப்பெயர்வைவிட அதிகமாகும்.

இந்தியா மற்றும் தமிழ் நாட்டில், பெண்களின் இடப்பெயர்வினைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக திருமணம் உள்ளது.

ஆண்களின் இடப்பெயர்வினைத் தீர்மானிக்கும் முக்கிய காரணி வேலை வாய்ப்பாகும்.

ஒரு சமுதாயத்தில் ஏற்படும் இடப்பெயர்வின் தன்மை மற்றும் அளவு அச்சமுதாயம் அடைந்த வளர்ச்சியின் போக்கைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

  ஏழை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும் வசதி வாய்ப்புடைய மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் இடம்பெயர்கின்றனர்.

Tags : Concept, Factors, Policies | Indian Economics பரவல், காரணிகள், கொள்கைகள் | இந்திய பொருளாதாரம்.
9th Social Science : Economics: Migration : Migration Concept, Factors, Policies | Indian Economics in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : இடம்பெயர்தல் : இடம்பெயர்தல் - பரவல், காரணிகள், கொள்கைகள் | இந்திய பொருளாதாரம் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : இடம்பெயர்தல்