Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | மாணவர் செயல்பாடுகள்

தாவர உலகம் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 6th Science : Term 1 Unit 4 : The Living World of Plants

   Posted On :  16.09.2023 12:05 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : தாவர உலகம்

மாணவர் செயல்பாடுகள்

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : தாவர உலகம் : மாணவர் செயல்பாடுகள்




செயல்பாடு 1

வேரின் மூலம் நீரை உறிஞ்சுதல்

நோக்கம்: வேர்கள் நீரை உறிஞ்சுவதை உற்று நோக்கல்

தேவையான உபகரணங்கள்: குவளை நீர், நீல மை, கேரட்

செய்முறை: ஒரு குவளை நீரில் ஒருசில துளிகள் நீல மையை இட வேண்டும். நன்றாகக் கலக்கியபின் கேரட்டை அந்த நீரில் மூழ்கியவாறு வைக்கவேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு கேரட்டை எடுத்து நீளவாக்கில் வெட்டிப் பார்க்கவும்.

அறிதல்: கேரட் துண்டுகளின் மையப் பகுதி நீல நிறமாக மாறி இருப்பதிலிருந்து, வேர்கள் நீரை உறிஞ்சுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.


செயல்பாடு 2

தண்டின் மூலம் நீர் கடத்துதல்

நோக்கம்: தண்டின் மூலம் நீர் கடத்தப்படுவதை உற்றுநோக்கல்.

தேவையான உபகரணங்கள்: பால்சம் தாவரத்தின் ஒரு சிறு கிளை, ஒரு குவளை நீர், சிவப்பு மை.

எவ்வாறு செய்வது? ஒரு குவளை நீரில் சிவப்பு மையைக் கலந்து அதனுள் பால்சம் தாவரத்தின் சிறு கிளையினை வைக்கவும்.

நீ காண்பது என்ன? தண்டு சிவப்பாக மாறும்.

அறிதல்: சிவப்பு நிறமுடைய தண்டின் மூலம் நீர் மேல்நோக்கி கடத்தப்படுகிறது.


விக்டோரியா அமேசோனிக்கா என்ற தாவரத்தின் இலைகள் மூன்று மீட்டர் விட்டம் வரை வளரக்கூடியவை. நன்கு வளர்ச்சியடைந்த இலையின் மேற்பரப்பு 45 கிலோகிராம் எடை அல்லது அதற்கு இணையான ஒருவரைத் தாங்கும் திறன் கொண்டது.


எதன் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்துகிறோம்?

1. பூவின் அடிப்படையில், தாவரங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை; பூக்கும் தாவரங்கள் மற்றும் பூவாத் தாவரங்கள் ஆகும்.


2 விதை அமைந்திருக்கும் அடிப்படையில் தாவரங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (மூடிய விதைத் தாவரங்கள் விதைகள் கனிகளில் புதைந்திருக்கும்) மற்றும் ஜிம்னோஸ்பெர்ம்கள் (திறந்த விதைத் தாவரங்கள் - விதைகள் கனிகளில் புதைந்திருக்காது).


செயல்பாடு 3

ஆசிரியர் மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவின் தலைவனாக உள்ள மாணவன்/மாணவி ஆசிரியரிடமிருந்து வேர், தண்டு, இலை மற்றும் பூக்கள் என எழுதப்பட்ட ஒரு காகிதத்துண்டைப் பெற்றுக்கொள்ளவேண்டும். ஆசிரியர் மாணவர்களை பள்ளி வளாகத்திற்கு அழைத்துச் சென்று, ஒவ்வொரு குழுவும் தேர்வு செய்த தாவர பாகத்தைச் சேகரிக்க செய்யவேண்டும். மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தபின்னர் தன் குழு மாணவர்களோடு சேர்ந்து சேகரித்துவந்த வேர், தண்டு மற்றும் இலைகளைப் பற்றி கலந்துரையாடி ஒரு படத்தொகுப்பைத் தயாரிக்கவேண்டும். உதாரணமாக, மலரைத் தேர்வு செய்த குழுவினர் மலரின் பல்வேறு பாகங்களை உற்று நோக்கி படத்தொகுப்பைத் தயாரிக்கவும். இவ்வாறு ஒவ்வொரு குழுவினரும் தாங்கள் தயாரித்த படங்களை பிற பகிரவேண்டும்.


செயல்பாடு 4

இந்தக் கதையை உன் நண்பர்களுடன் சேர்ந்து படிக்கவும்

நான் ஒரு குரங்கு. ஒரு அழகான அடர்த்தியான காட்டில் என் அம்மா மற்றும் இரு சகோதரர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். நாங்கள் மரத்திற்கு மரம் தாவி, ஓடி விளையாடி மகிழ்ந்தோம். ஒருநாள் ஒரு மரத்தின் கீழே நான் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தேன். அப்படியே உறங்கி விட்டேன். திடீரென்று சூரிய ஒளிபட்டு நான் எழுந்தேன். நான் கண்விழித்துப் பார்த்தபோது நான் பார்த்ததை என்னால் நம்பமுடியவில்லை. எல்லாமே மாறி இருந்தது. எல்லாமே அழிக்கப்பட்டிருந்தன. மரங்கள் இருந்த இடமெல்லாம் மரக்கட்டைகளாக இருந்ததை நான் பார்த்தேன். உலர்ந்த தரை, தெருக்கள் மற்றும் கட்டிடங்கள் வேறொன்றுமில்லை. அப்போது அங்கு சோகமாக நின்றிருந்த ஒரு மானைப் பார்த்தேன். "இங்கு இருந்த மரங்கள் மற்றும் விலங்குகளுக்கு என்ன நடந்தது?", என்று கேட்டேன். மனிதர்கள் அனைத்து மரங்களையும் வெட்டி விட்டதையும், அவற்றிற்குப் பதிலாக வேறு மரங்களை நடாததையும் மான் எனக்கு விளக்கிக் கூறியது. பின்னர், சென்று வருகிறேன் என மானிடம் கூறிவிட்டு நான் வந்துவிட்டேன். என் வீடு போய்விட்டது. என் குடும்பம் எங்கே எனத் தெரியாது. இரவும், பகலும் பசியிலும் தாகத்திலும் இருந்தேன். உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடத்திற்காக அலைந்தேன். நான் சென்ற இடமெல்லாம் மனிதர்கள் குச்சியைக் கொண்டும், கடுமையான வார்த்தைகளாலும் என்னை விரட்டினார்கள். எனது உடல் சோர்ந்து போனதை என்னால் உணர முடிந்தது. ஒருநாள் எனது நம்பிக்கையை இழந்து குளிர்ந்த, இருண்ட காட்டிற்குள் நான் நுழைந்தேன். அங்கு வந்தபோது ஏராளமான உணவு மற்றும் நீரைக் கண்டேன். காடு எனக்கு பாதுகாப்பாக இருந்தது. அங்கு மனிதர்கள் இடையூறு இல்லை.

❖ மான் ஏன் வருத்தமாக இருந்தது?

❖ மரத்தை வெட்டியது யார்?

❖ குரங்கு வசிப்பதற்கு பாதுகாப்பான இடம் எது?


செயல்பாடு 5

உனக்கு அருகில் உள்ள நாற்றுப் பண்ணைக்குச் சென்று ஏதேனும் பத்து வகையான தாவரங்களைத் தேர்வு செய்து அவற்றை ஏற்ற வாழிடத்தில் வளரச் செய்யவும்.


உயர் சிந்தனை வினா

கள்ளி வகைத் தாவரங்கள் பச்சை நிறத்தைக் கொண்டு ஒளிச் சேர்க்கையில் ஈடுபடுகின்றன. இத்தாவரத்தின் எந்தப் பகுதியில்ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது?

 

செயல்பாடு 6

களப்பயணம்

மாணவர் பெயர் :

தேதி இடம்

உற்று நோக்கிய தாவரங்களின் வகைகள்:

1. ஏறு கொடிகள்

2. பின்னு கொடிகள்

3. முட்களைக் கொண்ட தாவரங்கள்

இவ்வகைத் தாவரங்களில் காணப்படும் மாற்றுருக்களை அட்டவணைப்படுத்துக


Tags : The Living World of Plants | Term 1 Unit 4 | 6th Science தாவர உலகம் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 4 : The Living World of Plants : Student Activities The Living World of Plants | Term 1 Unit 4 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : தாவர உலகம் : மாணவர் செயல்பாடுகள் - தாவர உலகம் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : தாவர உலகம்