தாவர உலகம் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - தாவரத்தின் அமைப்பு மற்றும் செயல்கள் | 6th Science : Term 1 Unit 4 : The Living World of Plants
தாவரத்தின் அமைப்பு மற்றும் செயல்கள்
நமது உடல் பல்வேறு உறுப்புக்களைக் கொண்டது. அதுபோல, தாவரங்களும்
இலை, தண்டு, வேர் மற்றும் மலர்கள் ஆகிய பாகங்களைக் கொண்டுள்ளன. தாவரங்கள் அமைப்பிலும்,
நிறங்களிலும் வேறுபட்டாலும், அவை ஒருசில பண்புகளில் ஒத்துள்ளன. அதாவது, பெரும்பாலான
தாவரங்களின் தண்டு மற்றும் இலைகள் நிலத்திற்கு மேலேயும், அவற்றின் வேரானது நிலத்திற்குக்
கீழேயும் உள்ளது.
படத்தில் காண்பதுபோல பூக்கும் தாவரங்கள் இரண்டு முக்கியத் தொகுப்புகளைக்
கொண்டுள்ளன. அவை:
1. வேர்த் தொகுப்பு
2. தண்டுத் தொகுப்பு
இவற்றைப் பற்றி விரிவாகப் படிப்போம்.
1. வேர்த் தொகுப்பு
வேர் என்பது ஒரு தாவரத்தின் முக்கிய அச்சின் கீழ்ப் பகுதியாகும்.
இது நிலத்திற்குக் கீழே காணப்படுகிறது. வேர்களில் கணுக்களும், கணுவிடைப் பகுதிகளும்
இல்லை. அதன் நுனிப் பகுதியில் வேர்மூடி உள்ளது. வேர் நுனிக்குச் சற்று மேற்பகுதியில்
வேர்த்தூவிகள் ஒரு கற்றையாகக் காணப்படுகின்றன. வேர்கள் நேர் புவிநாட்டம் உடையவை.
தாவரங்களின் வேர்த் தொகுப்புகள் இரண்டு வகைப்படும், அவை:
அ. ஆணிவேர்த் தொகுப்பு
ஆ. சல்லிவேர்த் தொகுப்பு
அ. ஆணிவேர்த் தொகுப்பு
விதையிலிருந்து முளைவேர் தொடர்ந்து வளர்ந்து ஆணிவேரை உண்டாக்குகின்றது.
முளைவேர் தடித்த முதல்நிலை வேராக வளர்கிறது. இதிலிருந்து துணை வேர்களான இரண்டாம்நிலை
வேர்கள் தோன்றுகின்றன. பொதுவாக இரு வித்திலைத் தாவரங்களில் இவ்வகை வேர் காணப்படுகிறது.
எ.கா. அவரை, மா, வேம்பு.
ஆ. சல்லிவேர்த் தொகுப்பு
முதல்நிலை வேர், சிறிது காலத்தில் அழிந்து, தண்டின் அடிப்பகுதியில்,
சம பருமனுள்ள வேர்கள் கொத்தாகத் தோன்றி வளர்கின்றன. பெரும்பாலும் ஒரு வித்திலைத் தாவரங்களில்
இவ்வேர்த்தொகுப்பு காணப்படுகிறது. எ.கா. நெல், புல், மக்காச் சோளம்.
செயல்பாடு 1
வேரின்
மூலம் நீரை உறிஞ்சுதல்
நோக்கம்: வேர்கள்
நீரை உறிஞ்சுவதை உற்று நோக்கல்
தேவையான
உபகரணங்கள்: குவளை நீர், நீல மை, கேரட்
செய்முறை: ஒரு
குவளை நீரில் ஒருசில துளிகள் நீல மையை இட வேண்டும். நன்றாகக் கலக்கியபின் கேரட்டை அந்த
நீரில் மூழ்கியவாறு வைக்கவேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு கேரட்டை
எடுத்து நீளவாக்கில் வெட்டிப் பார்க்கவும்.
அறிதல்: கேரட்
துண்டுகளின் மையப் பகுதி நீல நிறமாக மாறி இருப்பதிலிருந்து, வேர்கள் நீரை உறிஞ்சுகின்றன
என்பதை அறிந்து கொள்ளலாம்.
வேரின் பணிகள்
❖ வேர்கள் தாவரத்தைப் பூமியில்
நிலை நிறுத்துகின்றன.
❖ மண்ணிலிருந்து நீரையும்,
கனிமச் சத்துக்களையும் உறிஞ்சுகின்றன.
❖ கேரட், பீட்ரூட் போன்ற
தாவரங்கள், தாங்கள் தயாரித்த உணவைத் தங்களின் வேர்களில் சேமிக்கின்றன.
2. தண்டுத் தொகுப்பு
நிலத்தின் மேற்பரப்பில் வளர்கின்ற தாவரப் பகுதிக்கு தண்டுத்
தொகுப்பு என்று பெயர். இதன் மைய அச்சு தண்டு என அழைக்கப்படும். தண்டுத்தொகுப்பானது
இலைகள், மலர்கள் மற்றும் கனிகளைக் கொண்டுள்ளது.
தண்டு
தண்டு பூமியின் மேற்பரப்பில் சூரியனை நோக்கி வளர்கிறது. தண்டில்
கணுக்களும், கணுவிடைப் பகுதிகளும் உள்ளன. தண்டில் இலைகள் தோன்றும் பகுதி கணு எனப்படும்.
இரண்டு கணுக்களுக்கு இடையே உள்ள பகுதி கணுவிடைப் பகுதி எனப்படும். தண்டின் நுனியில்
தோன்றும் மொட்டு நுனி மொட்டு எனப்படும். இலையின் அடிப்பகுதிக்கும், தண்டிற்கும் இடையே
உள்ள கோணம் இலைக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இலையின் கோணத்தில் தோன்றும் மொட்டு
கோண மொட்டு எனப்படும்.
செயல்பாடு 2
தண்டின் மூலம் நீர் கடத்துதல்
நோக்கம்: தண்டின் மூலம் நீர் கடத்தப்படுவதை
உற்றுநோக்கல்.
தேவையான உபகரணங்கள்: பால்சம் தாவரத்தின் ஒரு
சிறு கிளை, ஒரு குவளை நீர், சிவப்பு மை.
எவ்வாறு செய்வது? ஒரு குவளை நீரில் சிவப்பு
மையைக் கலந்து அதனுள் பால்சம் தாவரத்தின் சிறு கிளையினை வைக்கவும்.
நீ காண்பது என்ன? தண்டு சிவப்பாக மாறும்.
அறிதல்: சிவப்பு நிறமுடைய தண்டின்
மூலம் நீர் மேல்நோக்கி கடத்தப்படுகிறது.
தண்டின் பணிகள்
❖ தண்டானது கிளைகள், இலைகள்,
மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவற்றைத் தாங்குகின்றது.
❖ வேரினால் உறிஞ்சப்பட்ட
நீர் மற்றும் கனிமங்கள் தண்டின் வழியாக தாவரத்தின் மற்ற பாகங்களுக்குக் கடத்தப்படுகின்றன.
❖ இலையினால் தயாரிக்கப்பட்ட
உணவு தண்டின் வழியாக தாவரத்தின் பிற பாகங்களுக்குக் கடத்தப்படுகின்றது.
❖ சில தாவரங்கள் உணவைத் தண்டில்
சேமித்து வைக்கின்றன. எ.கா. கரும்பு.
இலை
தண்டின் கணுவின் மேல் விரிந்த தட்டையான பசுமை நிறத்தில் தோன்றும்
புறஅமைப்பு இலை ஆகும்.
தண்டு மற்றும் இலையை இணைக்கும் காம்புப் பகுதியே இலைக் காம்பு
எனப்படும். பசுமையான தட்டையான பகுதிக்கு இலைத் தாள் அல்லது இலைப் பரப்பு என்று பெயர்.
இலையின் மையத்தில் உள்ள நரம்பிற்கு மைய நரம்பு என்று பெயர். மைய நரம்பிலிருந்து கிளை
நரம்புகள் தோன்றுகின்றன. தண்டு அல்லது கிளையுடன் இணைக்கப்பட்டுள்ள இலையின் பகுதி இலையடிப்
பகுதி எனப்படும். ஒருசில இலைகளின் அடிப்பகுதியில் இரண்டு சிறிய பக்கவாட்டு வளரிகள்
உள்ளன. அவற்றிற்கு இலையடிச் செதில்கள் என்று பெயர்.
இலைகள் பசுமை நிறத்தில் உள்ளன, அதற்குக் காரணம் அவற்றிலுள்ள
பச்சை நிறமிகளான பச்சையம் ஆகும். இலையின் அடிப்பகுதியில் நுண்ணிய துளைகள் காணப்படுகின்றன.
இவை இலைத் துளைகள் எனப்படுகின்றன.
இலையின் பணிகள்
❖ ஒளிச்சேர்க்கையின் மூலம்
உணவைத் தயாரிக்கிறது.
❖ சுவாசித்தலுக்கு உதவுகிறது.
❖ இலைத்துளை வழியே நீராவிப்
போக்கு நடைபெறுகிறது.
விக்டோரியா
அமேசோனிக்கா என்ற தாவரத்தின் இலைகள் மூன்று மீட்டர் விட்டம் வரை வளரக்கூடியவை. நன்கு
வளர்ச்சியடைந்த இலையின் மேற்பரப்பு 45 கிலோகிராம் எடை அல்லது அதற்கு இணையான ஒருவரைத்
தாங்கும் திறன் கொண்டது.