Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | மாணவர் செயல்பாடுகள்

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நீர் - மாணவர் செயல்பாடுகள் | 6th Science : Term 3 Unit 2 : Water

   Posted On :  21.09.2023 04:17 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நீர்

மாணவர் செயல்பாடுகள்

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நீர் : மாணவர் செயல்பாடுகள்

செயல்பாடு 1 : வெவ்வேறு மூலங்களில் இருந்து பெறக்கூடிய நீரின் சார்பளவு:


ஒரு 20 லிட்டர் வாளி நீரினை எடுத்துக் கொள்வோம். மேலும், ஒரு 500 மி.லி குவளை, ஒரு 150 மி.லி டம்ளர் மற்றும் 1 மி.லி தேக்கரண்டி (ஸ்பூன்) ஆகியவற்றினை எடுத்துக்கொள்வோம். 20 லிட்டர் அளவுள்ள வாளியின் கொள்ளளவு புவியில் உள்ள மொத்த நீரின் அளவைக் குறிப்பதாக வைத்துக்கொள்வோம்.

இப்பொழுது 20லி வாளியில் இருந்து ஒரு 500 மி.லி குவளை அளவு எடுத்தால், அது பூமியில் உள்ள மொத்த நன்னீரின் அளவினைக் குறிக்கும். வாளியில் மீதமுள்ள நீர் கடல்கள் மற்றும் பெருங்கடல்களில் காணப்படும் நீரின் அளவினைக் குறிக்கும். இது மனித பயன்பாட்டிற்கு உரியது அல்ல. குவளையில் உள்ள நன்னீரில் மலைகள், பனியாறுகள், பனிப்படிவுகள் ஆகியவற்றில் காணப்படும் நீரும் அடங்கியுள்ளதால் இதுவும் மனிதனின் தேவைக்கு முழுவதுமாகப் பயன்படுவதில்லை. பிறகு குவளையில் இருந்து ஒரு 150 மி.லி அளவுள்ள டம்ளரில் நீரை எடுக்கவும்.

இது புவியில் உள்ள மொத்த நிலத்தடி நீரின் அளவினைக் குறிக்கிறது. இறுதியாக அந்த டம்ளர் நீரிலிருந்து தேக்கரண்டியில் ஒரு கால்பங்கு நீரினை எடுக்கவும். இதுவே பூமியில் உள்ள மொத்த ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள மேற்பரப்பு நீராகும்.

இச்செயல்பாட்டிலிருந்து உலகெங்கிலும் பயன்பாட்டிற்கு என உள்ள மொத்த நீரின் அளவு மிகக் குறைவாகவே உள்ளது என்பதனை அறியலாம். எனவே நாம் நீரினை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டுமல்லவா?


 

நீரானது மண்ணில் உள்ள உப்புகள் மற்றும் தாதுப்பொருள்களை தன்னுடன் கரைத்து எடுத்துச் செல்கிறது. இந்த உப்புகளும், தாதுக்களும் கடல்கள் மற்றும் பெருங்கடல்களில் இலட்சக்கணக்கான ஆண்டுகளாக படிந்து வருகிறது. கடலின் அடியில் காணப்படும் எரிமலைகளும் கடல் நீருடன் உப்பினை சேர்க்கின்றன.

அதிக அளவு கரைபொருள் கரைந்துள்ள நீரினை நம்மால் பயன்படுத்தவோ அல்லது பருகவோ இயலாது. இத்தகைய நீரினை நாம் உப்பு நீர் என அழைக்கிறோம்.

 

செயல்பாடு 2 : இச்செயல்பாட்டிற்கு சாதாரண உப்பு, மணல், சுண்ணக்கட்டித்தூள், கரித்தூள் மற்றும் காப்பர் சல்பேட்டினை எடுத்துக்கொள்ளவும். உரிய இடத்தில் செய்யவும்.

பின்வரும் அட்டவணையை நிரப்புக:


இச்செயல்பாட்டில் சாதாரண உப்பு மற்றும் காப்பர் சல்பேட் ஆகியவை முழுவதும் நீரில் கரைவதோடு தங்களின் நிறம் மற்றும் பண்புகளை நீருக்கு அளிக்கின்றன. ஆனால் மணல், சுண்ணக்கட்டித் தூள் மற்றும் கரித்தூள் ஆகியவை நீரில் கரையவில்லை.


பொதுவான வளிமண்டல அழுத்தத்தில் நீரானது ௦° செல்சியஸ் வெப்பநிலையில் பனிக்கட்டியாக உறைகிறது.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ஆம் தேதி உலக நீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.


செயல்பாடு 3 : நீர் கரையும் உப்புகளை கொண்டுள்ளது

ஒரு பீங்கான் கிண்ணத்தில் சிறிதளவு நீரினை எடுத்துக்கொண்டு வெப்பப்படுத்தவும்.நீர்முழுவதும் ஆவியாகும் வரை தொடர்ந்து வெப்பப்படுத்தவும். பிறகு வெப்பப்படுத்துவதனை நிறுத்தி பீங்கான் கிண்ணத்தினை உற்றுநோக்கவும். பீங்கான் கிண்ணத்தின் பரப்பில் நீவிர் காண்பது என்ன?

பீங்கான் கிண்ணத்தில் சிலதிண்மப்பொருள்கள் படிந்திருப்பதைக் காணலாம். நீரில் கரைந்துள்ள உப்புகளினால் இந்த படிதல் ஏற்பட்டுள்ளது. இச்செயல்பாட்டின் மூலம் நீரில் உப்புகள் கரைந்துள்ளதை அறியலாம்.


குறிப்பு: காய்ச்சி வடித்த நீரையோ, தூய்மையாக்கியிலிருந்து நீரையோ, மீள் சவ்வூடு பரவல் தூய்மையாக்கினியில் இருந்து பெறப்பட்ட நீரையோ இச்செயல்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டாம்.


செயல்பாடு 4 : ஓர் ஈரத் துணியினை வெயிலில் உலர்த்தவும்.சிறிது நேரம் கழித்து உற்று நோக்கவும். துணியில் இருந்த ஈரம் எங்கு சென்றது?


நீரானது சூரிய வெப்பத்தின் காரணமாக ஆவியாகி வளிமண்டலத்திற்குள் சென்றது.

ஆவியாதல் : கடல்கள், குளங்கள் மற்றும் ஆறுகள் போன்ற நீர் நிலைகளில் காணப்படும் நீரானது சூரிய வெப்பத்தின் காரணமாக ஆவியாகிறது.

ஆவி சுருங்குதல் : வளிமண்டலத்தில் ஆவியாதலின் காரணமாக நுழைந்த நீராவியானது காற்றில் மேலே செல்லச்செல்ல குளிர்ச்சியடைந்து மிக நுண்ணிய நீர்திவலைகளாக மாறி மேகங்களை வானில் உருவாக்குகின்றன.

மழைபொழிதல் : இலட்சக்கணக்கான மிக நுண்ணிய நீர்திவலைகள் ஒன்றோடொன்று நீர்திவலைகளாக மோதி பெரிய மாறுகின்றன. மேகங்களைச் சுற்றியுள்ள காற்றானது குளிர்ச்சியடையும்போது இந்த நீர் மழையாகவோ அல்லது பனியாகவோ புவியை வந்தடைகின்றது.


செயல்பாடு 5 : நீராவி நீராக மாறுதல்

ஒரு குவளையில் பாதியளவு நீரை எடுத்துக் கொள்ளவும். குவளையின் வெளிப்பகுதியினை ஒரு தூயதுணியினால் துடைக்கவும். நீரில் சிறிது பனிக் கட்டிகளைப் போடவும். ஓரிரு நிமிடங்கள் பொறுத்திருக்கவும். குவளையின் வெளிப்பகுதியினை உற்று நோக்கவும்.

குவளையின் வெளிப்பகுதியில் நீர்திவலைகள் எங்கிருந்து வந்தன?

பனிக்கட்டிகளைக் கொண்ட நீரின் குளிர்ந்த பகுதியானது அதனைச் சுற்றியுள்ள காற்றினை குளிரச் செய்கிறது. அதன்மூலம் காற்றிலுள்ள நீராவி சுருங்கி குவளையின் வெளிப்பகுதியில் உருவாக்கியுள்ளது. நீர்திவலைகளை இதன் மூலம் வளிமண்டலத்தில் நீராவி உள்ளதனை நாம் அறியலாம்

மேலும் தெரிந்து கொள்க: நீரின் கனஅளவை லிட்டர் மற்றும் மில்லி லிட்டர் போன்ற அலகுகளால் அளக்கலாம். காலன் என்பதும் நீரின் கன அளவினை அளக்கக்கூடிய அலகாகும்.

ஒரு காலன் என்பது 3.785 லிட்டர் ஆகும். நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவினை TMC/Feet என்ற அலகால் அளக்கப்படுகின்றது. அணைக்கட்டுகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு கியூசக் (கன அடி/விநாடி) என்ற அலகால் அளக்கப்படுகிறது.




கூவம் ஒரு முகத்துவாரம்!

நீர் நிலைகள், கடலைச் சந்திக்கும் ஈர நிலங்களுக்கு முகத்துவாரம் என்று பெயர். இதுநிலத்திலிருந்து நன்னீரும் கடலிலிருந்து உப்பு நீரும் சந்திக்கும் இடமாகும். தனித்தன்மையான தாவர மற்றும் விலங்கு வகைகளுக்கு உறைவிடமாக முகத்துவாரம் அமைகிறது.


சதுப்பு நிலங்கள் என்பவை ஈரப்பதம் நிறைந்த காடுகள் ஆகும். அவை பெரிய ஆறுகளைச் சார்ந்தோ அல்லது பெரிய ஏரிகளின் கரைகளிலோ காணப்படும். சதுப்பு நில நீர் நன்னீராகவோ, உவர்ப்பு நீராகவோ அல்லது கடல் நீராகவோ இருக்கலாம். உயிரினங்களுக்கு நன்னீரையும், ஆக்ஸிஜனையும் அளிப்பதில் சதுப்பு நிலங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. சிதம்பரத்தினை அடுத்த பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள், முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகள், சென்னையில் உள்ள | பள்ளிக்கரணை சதுப்புநிலம், காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் சதுப்புநிலம் ஆகியன தமிழ்நாட்டில் உள்ள சில சதுப்பு நிலங்களாகும்.


தண்ணீர் வீணாவதைத் தவிர்ப்போம்

உமது வீட்டிலோ அல்லது பள்ளியிலோ ஒழுகும் தண்ணீர்க் குழாய் இருப்பின், அதன் அடியில் ஒரு காலி வாளியினை வைத்து நீரைச் சேகரிக்கவும். ஒரு வாளி நிரம்பும் காலத்தினைக் கணக்கிட்டுக் கொண்டு, நீரின் அளவையும் கணக்கிட்டுக் குறித்துக் கொள்ளவும். ஒரு வாளி நீர் நிரம்பும் நேரத்தைக் கணக்கிட்டபின், ஒரு நாளில் வீணாகும் நீரை கணக்கிடலாம்.

இக்கணக்கீட்டின் மூலம் உலகம் முழுவதும் உள்ள ஒழுகும் குழாய்களில் வீணாகும் நீரை உம்மால் உத்தேசிக்க முடிகிறதா? மிகவும் அரிதான நீர் எவ்வளவு வீணாகிறது என அறிந்து கொள்ளுங்கள்.

Tags : Water | Term 3 Unit 2 | 6th Science 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நீர்.
6th Science : Term 3 Unit 2 : Water : Student Activities Water | Term 3 Unit 2 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நீர் : மாணவர் செயல்பாடுகள் - 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நீர் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நீர்