நீர் | பருவம் 3 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நாம் நீரினை எங்கிருந்து பெறுகிறோம்? | 6th Science : Term 3 Unit 2 : Water
நாம் நீரினை எங்கிருந்து பெறுகிறோம்?
நமது அன்றாட செயல்களான சமைத்தல், குளித்தல், துணிகளைத் துவைத்தல்,
பாத்திரங்களைக் கழுவுதல் போன்ற பல செயல்பாடுகளுக்கு நீர் மிகவும் அவசியமாகும்.
நாம் நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு மூலங்களில் இருந்து நீரினைப்
பெறுகிறோம். கிணறுகள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள், குளங்கள், ஆறுகள், நீர்த்தொட்டிகள்,
ஆழ்துளைக் கிணறுகள் போன்றவை கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் முக்கிய நீர் ஆதாரங்களாக
விளங்குகின்றன.
உங்கள் கிராமம் அல்லது நகரத்தில் காணப்படும் நீர் ஆதாரங்களைப்
பட்டியலிடுக.
உதாரணமாக, ராமு தங்கள் வீட்டின் சமையல் அறையிலும் குளியல் அறையிலும்
குழாய்கள் மூலம் நீர் வருவதாகக் கூறுகிறான். சங்கர் தான் குளிப்பதற்கு காலையிலும் மாலையிலும்
அடிகுழாயிலிருந்து நீரினைப் பெறுவதாகக் கூறுகிறான். ராஜா அவனது தாயார் தினமும் அதிகாலையில்
எழுந்து அருகில் உள்ள குளத்திலிருந்து நீரினை எடுத்து வருவதாக கூறுகிறான். உங்கள் வீட்டிற்கு
பயன்படும் நீரினை எங்கிருந்து பெறுகிறீர்கள்?