மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது | அலகு 1 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மாநில சட்டமன்றம் | 8th Social Science : Civics : Chapter 1 : How the State Government Works

   Posted On :  13.06.2023 12:28 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 1 : மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது

மாநில சட்டமன்றம்

இந்தியாவில் மாநில சட்டமன்றம் என்பது ஆளுநரையும் ஒன்று அல்லது இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும். மேலவை என்பது சட்டமன்ற மேலவை எனவும் கீழவை என்பது சட்டமன்ற பேரவை எனவும் அழைக்கப்படுகிறது.

மாநில சட்டமன்றம்

இந்தியாவில் மாநில சட்டமன்றம் என்பது ஆளுநரையும் ஒன்று அல்லது இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும். மேலவை என்பது சட்டமன்ற மேலவை எனவும் கீழவை என்பது சட்டமன்ற பேரவை எனவும் அழைக்கப்படுகிறது.



சட்டமன்ற மேலவை

ஒரு மாநிலத்தின் சட்ட மன்ற மேலவையானது நாற்பது உறுப்பினர்களுக்குக் குறையாமலும், அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. இதன் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

•மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் நகராட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

•மேலும் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

•பன்னிரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

•மற்றொரு பன்னிரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இடைநிலை பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

•ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.

சட்டமன்ற மேலவை ஒரு நிலையான அவையாகும். இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுவர். அக்காலிப் பணியிடங்களுக்கு தேர்தல் நடைபெறும். உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒருவர் இந்தியக் குடிமகனாகவும், 30 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். இவர் மாநில சட்டமன்றத்திலும் அல்லது பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது. தலைமை அலுவலராக அவைத்தலைவர் இருப்பார். அவைத்தலைவர் இல்லாதபோது துணைத் தலைவர் அவையை நடத்தும் பொறுப்பினை கொண்டிருப்பார். சட்டமன்ற மேலவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை அவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவில் தற்போது ஆறு மாநிலங்களில் மட்டும் சட்டமன்ற மேலவை  நடைமுறையில் உள்ளது. அவைபீகார், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகும்.


சட்டமன்றப் பேரவை

மாநில அரசாங்கத்தின் சட்டங்களை உருவாக்குபவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சட்டமன்ற தேர்தலுக்காக, மாநிலம் பல்வேறு தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை சட்டமன்ற தொகுதிகள் என அழைக்கப்படுகின்றன. ஒரு சட்டமன்ற தொகுதி ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலிருந்தும் ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

சட்டமன்ற பேரவைக்கான தேர்தல்

சட்டமன்ற பேரவைக்கான தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் தமது வேட்பாளர்களை நியமிக்கின்றன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மக்களிடம் தமக்கு வாக்களிக்குமாறு கோருகிறார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். ஒருவர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம். எந்த கட்சியையும் சாராத ஒருவரும் தேர்தலில் போட்டியிடலாம். அவ்வாறு போட்டியிடும் ,வேட்பாளர் சுயேட்சை வேட்பாளர் என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு கட்சியும் தனக்கென ஒரு சின்னத்தை கொண்டிருக்கும். சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒரு சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 18 வயது நிரம்பிய அனைவரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம்.

அரசியலமைப்பின்படி ஒரு மாநில சட்டமன்றத்தில் 500 உறுப்பினர்களுக்கு மேலாகவும் 60 உறுப்பினர்களுக்கு குறைவாகவும் இருத்தல் கூடாது. அட்டவணைப் பிரிவினர், பழங்குடியினருக்கு சட்டமன்றத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மாநில ஆளுநர் சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நியமனம் செய்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் மாநில ஆளுநர், சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அதனை கலைத்து புதிதாக தேர்தல் நடத்த அழைப்பு விடுக்கலாம். சட்டமன்ற கூட்டத்திற்கு சபாநாயகர் தலைமை ஏற்கிறார். இவர் சட்டமன்ற   உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சபாநாயகர் இல்லாத நேர்வுகளில் துணை சபாநாயகர் சட்டமன்ற கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார்.


மாநில அமைச்சரவை

தேர்தலில் பெரும்பான்மை பெரும் கட்சியின் தலைவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 118 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி ஆளுநரால் ஆட்சி அமைக்க அழைக்கப்படுகிறது. முதலமைச்சர் (இவரும் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருத்தல் வேண்டும்) அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து, அமைச்சர்களை தேர்வு செய்கிறார். இவ்வாறு முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான பல்வேறு துறை அமைச்சர்களும் கொண்ட அமைப்பு மாநில அரசாங்கம் என அழைக்கப்படுகிறது. ஆகவே தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும் எனக் கூறலாம்.


மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகள்

சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அதன் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் வேண்டும். சட்டமன்றம் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூடும். மாநிலத்திற்கானசட்டங்களை இயற்றுவது சட்டமன்றத்தின் முக்கிய பணி ஆகும். சட்டமன்றம் மாநிலப் பட்டியல் மற்றும் மத்தியப் பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக சட்டத்தை இயற்றலாம். எனினும் நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ள போது சட்டமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்த இயலாது.

மாநில சட்டமன்றம் அமைச்சரவையின் மீது கட்டுப்பாட்டினை செலுத்துகிறது. மாநில அமைச்சரவை சட்டமன்றத்திற்கு பொறுப்புள்ளதாகவும் மற்றும் பதில் அளிக்கவும் கடமைப்பட்டுள்ளது. அமைச்சரவையின் செயல்பாடுகளில் திருப்தி ஏற்படாவிட்டால் மாநில சட்டமன்றத்தில் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இயற்றி அமைச்சரவையை நீக்கம் செய்திடலாம் மாநில சட்டமன்றம் ஆனது மாநிலத்தின் நிதியைக் கட்டுப்படுத்துகிறது. நிதி மசோதாவை சட்டமன்றத்தில் மட்டுமே கொண்டுவர இயலும். சட்டமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநில அரசாங்கம் வரியினை விதிக்கவோ, அதிகரிக்கவோ, குறைக்கவோ, விலகிக் கொள்ளவோ இயலாது. சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கேற்கின்றனர். மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் சட்டமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு கொள்கின்றனர். அரசியலமைப்பைத் திருத்தும் சில நேர்வுகளில் சட்டமன்றம் பங்கு வகிக்கிறது. எனவே அரசாங்கமானது சட்டத்தை உருவாக்குதல், சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், நீதியை உறுதி செய்தல் ஆகிய மூன்று அடிப்படை பணிகளைக் கொண்டுள்ளது.


மாநில அரசாங்கத்தில் சட்டங்கள் எவ்வாறு இயற்றப்படுகின்றன?

நாட்டு மக்களுக்காக பல்வேறு வகையான விதிகள் மற்றும் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக நீங்கள் ஒரு துப்பாக்கியை உரிமம் இல்லாமல் வைத்துக் கொள்ள இயலாது அல்லது சட்டப்படி ஒரு பெண் 18 வயதிற்கு முன்பாகவும் அல்லது ஒரு ஆண் 21 வயதிற்கு முன்பாகவும் திருமணம் செய்து கொள்ள இயலாது. இத்தகைய விதிகளும் சட்டங்களும் சாதாரணமாக இயற்றப்பட்டவை அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இதுபோன்ற சட்டங்களை உருவாக்குவதற்கு முன்பாகக் கவனமாக சிந்தித்து உள்ளது. இவை போன்ற பல்வேறு சட்டங்கள் மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தால் இயற்றப்படுகின்றன.

சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளான பொதுப்பணிகள், கல்வி, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவை பற்றி விவாதிக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கான துறைகளின் செயல்பாடுகளை தெரிந்துகொள்ள கேள்விகளை எழுப்பலாம் இதற்கு அந்தத்துறை சார்ந்த அமைச்சர் விடையளிக்க வேண்டும். சில நிகழ்வுகள் குறித்து சட்டமன்றம் சட்டங்களை இயற்றுகிறது. சட்டம் இயற்றும் முறை பின்வருமாறு:


சட்டங்களை நடைமுறைப்படுத்துதல்

சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மாநில அமைச்சரவையின் பணியாகும். தமிழ்நாடு சட்டமன்றம் சென்னையில் அமைந்துள்ளது. ஒரு மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் அமைச்சரவை பொதுவாக எங்கு செயல்படுகிறதோ அதுவே மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.

Tags : How the State Government Works | Chapter 1 | Civics | 8th Social Science மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது | அலகு 1 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 1 : How the State Government Works : The Legislature How the State Government Works | Chapter 1 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 1 : மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது : மாநில சட்டமன்றம் - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது | அலகு 1 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 1 : மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது