மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது | அலகு 1 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மாநிலத்தின் நீதித்துறை | 8th Social Science : Civics : Chapter 1 : How the State Government Works
மாநிலத்தின்
நீதித்துறை
உயர் நீதிமன்றம்
மாநிலத்தில்
உயரிய நீதி அமைப்பாக உயர் நீதிமன்றம் விளங்குகிறது. அரசியலமைப்பின் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும்
ஒரு உயர் நீதிமன்றம் இருக்கும். எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன்
பிரதேசங்களுக்கு பொதுவான ஒரு உயர்நீதிமன்றமும் இருக்கலாம். மாநில உயர்நீதிமன்றம் ஒரு
தலைமை நீதிபதியையும், குடியரசுத் தலைவர் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது நியமனம் செய்யும்
இதர நீதிபதிகளையும் கொண்டிருக்கும். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும்
ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை . குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும்,
மாநில ஆளுநரையும் கலந்தாலோசித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்.
உயர்நீதிமன்றத்தின்
நீதிபதி பின்வரும் தகுதிகளை கட்டாயம் கொண்டிருத்தல் வேண்டும்.
•இந்தியக்
குடிமகனாக இருத்தல் வேண்டும்.
•ஒன்று
அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்
அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
உயர்
நீதிமன்ற நீதிபதி 62 வயது வரை அப்பதவியில் இருப்பார். உயர்நீதிமன்ற நீதிபதி நிரூபிக்கப்பட்ட
தவறான நடத்தை மற்றும் திறமை இன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை
நீக்குவது போன்று நீக்கப்படலாம்.
உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் பணிகள்
•அடிப்படை
உரிமைகள் மற்றும் இதர நோக்கங்களை வலியுறுத்த உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு நீதிப் பேராணை,
தகுதி முறை வினவும் நீதிப்பேராணை, தடை உறுத்தும் நீதிப்பேராணை, கட்டளையிடும் நீதிப்பேராணை
மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வலியுறுத்தும் நீதிப் பேராணை ஆகியவற்றைப் பிறப்பிக்கின்றன.
•ஒவ்வொரு
உயர்நீதிமன்றமும் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள்
நீங்கலாக அனைத்து சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை கண்காணிக்கும் அதிகாரத்தைக்
கொண்டுள்ளது.
•சார்
நிலை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஒரு வழக்கில் அதில் சட்ட முகாந்திரம் உள்ளது என
உயர் நீதிமன்றம் திருப்தியுறும் போது இவ்வழக்கினை எடுத்து தானே முடிவு செய்யலாம்.
•உயர்
நீதிமன்றம் மாநிலத்தில் உள்ள அனைத்து சார் நிலை நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
•உயர்
நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தைப் போலவே வழக்குகள் பற்றிய பதிவேடுகளின் ஆதாரச் சான்றாக
உள்ள பதிவுரு நீதிமன்றமாக விளங்குகிறது.