நீர்த்தாவரங்கள், வறண்ட நிலத்தாவரங்கள், இடைநிலைத் தாவரங்கள் - தாவரங்களின் தகவமைப்புகள் | 9th Science : Environmental Science
தாவரங்களின் தகவமைப்புகள்
ஒரு உயிரினத்தின் எந்த ஒரு பண்போ அல்லது அதன் ஒரு பகுதியோ அந்த உயிரினத்தை அதன் வாழிடத்தில் இருக்கக் கூடிய சூழ்நிலைக்கேற்ப ஒத்துப்போக வைப்பதையே தகவமைப்பு என்கிறோம். வாழிடத்தில் இருக்கக்கூடிய நீரின் அளவை அடிப்படையாகக் கொண்டு,
தாவரங்கள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.
i.
நீர்த்தாவரங்கள்
ii.
வறண்ட நிலத்தாவரங்கள்
iii. இடைநிலைத் தாவரங்கள்
நீரூக்குள் அல்லது நீர்நிலைகளின் அருகில் வாழக்கூடிய தாவரங்கள் நீர்த்தாவரங்கள் (ஹைடிரோபைட்ஸ்) எனப்படுகின்றன. இவ்வகைத் தாவரங்கள் நீரின் மேற்பரப்பில் தனியே மிதந்தோ அல்லது மூழ்கியோ வாழக்கூடியவை. இவை ஏரிகள்,
கண்மாய்கள், குளங்கள், ஆழமற்ற நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆழிகள் (கடல்) போன்ற வாழிடங்களில் காணப்படலாம். நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சில சவால்களை எதிர்கொள்கின்றன. அவையாவன:
i.
தேவைக்கு அதிகமான நீர் இருத்தல்.
ii.
நீரோட்டம் தாவரத்தினை சேதப்படுத்துதல்.
iii.
நீரின் அளவு தொடர்ந்து மாறிக்கொண்டிருத்தல்.
iv.
நீரில் மிதக்கும் தன்மையைப் பராமரித்தல்.
நீர்த்தாவரங்களின் தகவமைப்புகள்
1.
வேலம்பாசியில் (Hydrila)
காணப்படுவதுபோல் வேர்கள் நன்கு வளர்ச்சியடையாமலோ அல்லது உல்பியாவில் (Wolffia) காணப்படுவதுபோல் வேர்கள் இல்லாமலோ காணப்படும்.
2.
லெம்னாவில் இருப்பதுபோல், தாவர உடலம் பெரிதும் குறைக்கப்பட்டிருக்கும்.
3.
நீரினுள் மூழ்கிய இலைகள் குறுகியதாகவோ அல்லது நுண்ணியதாக பிளவுற்றோ காணப்படும். எ.கா. வேலம்பாசி (Hydrilla)
4.
மிதக்கும் இலைகள் நீளமான இலைக்காம்புடன்
நீரின் அளவிற்கேற்ப மேலும் கீழும் இயங்கும் வகையில் காணப்படும். எ.கா. தாமரை (Lotus)
5.
சில தாவரங்களில் காணப்படும் காற்றறைப்பைகள் அவற்றிற்கு மிதப்புத் தன்மையையும், உறுதித் தன்மையயும் தருகின்றன. எ.கா. ஆகாயத்தாமரை (காற்றறைப் பைகளுடன் பஞ்சுபோன்று காணப்படும் வீங்கிய இலைக்காம்பு)
குறைந்த அளவு நீர் உடைய, வறண்ட பாலைவனம் போன்ற வாழிடங்களில் காணப்படும் தாவரங்கள் வறண்ட நிலத்தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தாவரங்கள் கீழ்க்கண்ட சூழ்நிலைகளைச் சந்திப்பதற்கான சிறப்பான அமைப்பியல் மற்றும் உடலியல் பண்புகளை,
உருவாக்கிக்கொள்கின்றன.
i.
சுற்றுப்புறத்திலிருந்து தேவையான அளவு நீரை உறிஞ்சிக்கொள்ளல்.
ii.
பெறப்பட்ட நீரை அவைகளின் உறுப்புகளில் தேக்கி வைத்தல்.
iii.
நீராவிப்போக்கின் வேகத்தைக் குறைத்தல்.
iv.
குறைந்த அளவு நீரைப் பயன்படுத்துதல்.
வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகள்
1. இவை நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டுள்ளன. அவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளைச் சென்றடைகின்றன. எ.கா. எருக்கு.
2.
சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன. எ.கா. சப்பாத்திக்கள்ளி, சோற்றுக் கற்றாழை.
3.
மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள் காணப்படும். எ.கா. கருவேலமரம். சில தாவரங்களின் இலைகள் முட்களாகவும் மாறி உள்ளன. எ.கா. சப்பாத்திக்கள்ளி.
4.
ஒரு சில வறண்ட நிலத்தாவரங்கள், போதிய அளவு ஈரப்பதம் இருக்கும்போதே, குறுகிய கால இடைவெளியில் தங்களது வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்கின்றன.
மிகவும் அதிகமான அல்லது மிகவும் குறைவான அளவு நீரளவைக் கொண்டிராமல் இரண்டிற்கும் இடைப்பட்ட நீரளவைக் கொண்ட இடங்களில் வளரும் தாவரங்கள் இடைநிலைத் தாவரங்கள் எனப்படுகின்றன. இவற்றிற்கு அதிகப்படியான தகவமைப்புகள் தேவைப்படுவதில்லை .
இடைநிலைத் தாவரங்களின் தகவமைப்புகள்
1.
இவற்றில் வேர்கள் நன்கு வளர்ச்சியடைந்து வேர் மூடியுடன் காணப்படும்.
2.
தண்டானது பொதுவாக நேராகவும், கிளைத்தும் காணப்படும்.
3.
இவற்றின் இலைகள் பொதுவாக அகலமாகவும், தடித்தும் இருக்கும்.
4.
இலையின் மேற்பகுதியில் கியுட்டிக்கிள் மெழுகுப்பூச்சு இருப்பதனால் ஈரப்பதத்தைத் தடுத்து நீர் இழப்பைக் குறைக்கின்றது.
5. அதிக வெப்பம் மற்றும் அதிக காற்று உள்ள சூழலில் இலையின் மீதுள்ள இலைத்துளைகள் தாமாகவே மூடிக்கொண்டு நீராவிப் போக்கினைத் தடுக்கின்றன.