இயற்கை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு ஒன்றியம் (IUCN)
ஐ.யூ.சி.என் என்ற பன்னாட்டு அமைப்பானது இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை வளம் குன்றாமல் பயன்படுத்துதல் ஆகியவற்றில் பெரும் பங்காற்றி வருகிறது. ஐ.யூ.சி.என், இவ்வுலகின் இயற்கை நிலையை அறிவதற்கும், தேவையான நடவடிக்கைகளை எடுத்து இயற்கையின் பாதுகாவலனாக விளங்குவதற்கும் உலகளாவியதலைமை (அதிகார) அமைப்பாக உள்ளது.
ஐ.யூ.சி.என். நோக்கம்
"இயற்கையை மதிக்கக்கூடிய மற்றும் பாதுகாக்கக்கூடிய நேர்மையான உலகம்" என்பதே இதன் நோக்கமாகும்.
ஐ.யூ.சி.என். இலக்கு
இயற்கையிலுள்ள வேற்றுமை மற்றும் ஒற்றுமையைப் பாதுகாக்கவும், எந்தவொரு இயற்கை வளத்தைப் பயன்படுத்தினாலும் அது நியாயமானதாகவும்,
சூழ்நிலையைப் பாதிக்காத வகையிலும் உள்ளதா என்பதை வலியுறுத்துவதற்கும்,
ஒவ்வொரு சமுதாயத்தினையும் ஊக்கப்படுத்தி அவற்றிற்கு உதவிசெய்வதே இதன் இலக்காகும்.
இவ்வமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளான சிற்றினங்களின் சிவப்புப் பட்டியலைத் தயார் செய்து,
தொகுத்து வெளியிடுகிறது. இது உலக அளவில் உள்ள சிற்றினங்களின் பாதுகாப்பு நிலையைக் கணிப்பதற்குப் பயன்படுகிறது.
இந்தியா ஒரு பெரிய பல்வகைத் தன்மை கொண்ட நாடு. இது உலக மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதம் பரப்பளவைக் கொண்டது. கணக்கின்படி 7.8 சதவீதம் பதியப்பட்ட சிற்றினங்கள் இங்கு உள்ளன. இதில் 45,000 தாவர சிற்றினங்களும்,
91,000 விலங்கு சிற்றினங்களும் பதியப்பட்டுள்ளன. நம் நாட்டில் வேறுபட்ட இயற்பியல் தன்மைகள்,
தட்ப வெப்ப நிலைகள் காணப்படுவதன் விளைவாக, பலவகையான சூழ்நிலை மண்டலங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் காடுகள், வீணாக உள்ள நிலங்கள், புல்வெளிகள், பாலைவனங்கள், கடற்கரைப்பகுதிகள், கடல்சூழ்நிலை மண்டலங்கள் ஆகியவை அடங்கும். உலக அளவில் கண்டறியப்பட்ட உயிரியல் பல்வகைத்தன்மை கொண்ட மிக முக்கிய 34 இடங்களில் 4 இடங்கள் இந்தியாவில் உள்ளன. அவை:
● இமயமலை
● மேற்குத் தொடர்ச்சி மலைகள்
● வட கிழக்குப் பகுதிகள்
● நிக்கோபார் தீவுகள்
காடுகள், தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் மூலம் இந்தியா 1969 முதல் ஐ.யூ.சி.என்.இல் உறுப்பினராக இருந்து வருகின்றது.
உங்களுக்குத் தெரியுமா?
சுவிட்சர்லாந்து நாட்டில் கிலான்ட் என்ற இடத்தில் 1948ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் ஐ.யூ.சி.என் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது
நினைவில் கொள்க
❖ உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கிடையே நடைபெறும் நுண்ணூட்டங்களின் சுழற்சியே உயிர் புவி வேதிச் சுழற்சி எனப்படும்.
❖ அழுக வைக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் (காளான்கள்) மூலம் நைட்ரஜன் கழிவுப் பொருள்களை அம்மோனிய கூட்டுப் பொருட்களாக மாற்றும் நிகழ்வு அமோனியாவாதல் என அழைக்கப்படுகிறது.
❖ நீர்த்தாரவங்கள் என்பவை ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஆழமற்ற நீர் நிலைகள், சதுப்பு நிலங்கள், சமுத்திரங்கள் போன்ற வாழிடங்களில் மிதந்தோ, மூழ்கியோ காணப்படும் தாவரங்கள் ஆகும்.
❖ வறண்ட பகுதிகளில் வளரும் தாவரங்கள் வறண்ட நிலத்தாவரங்கள் எனப்படுகின்றன.
❖ மிகவும் அதிகமான அல்லது மிகவும் குறைவான நீரளவுள்ள இடங்களில் வளராமல், இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட சூழ்நிலையில் வாழும் தாவரங்கள் இடை நிலைத்தாவரங்கள் ஆகும்.
❖ அதிகமான வெப்பநிலை, ஒளி ஆகியவற்றிலிருந்து தப்பிக்க சில விலங்குகள் சிறப்புப் பண்புகளையோ அல்லது நடத்தை முறைகளையோ உருவாக்கிக் கொள்கின்றன.
❖ பண்ணைக்குட்டை என்பது குறிப்பிட்ட வடிவம் மற்றும் அளவுடன் நிலத்தில் தோண்டப்பட்ட அமைப்பாகும். வழிந்தோடும் நீரை உட்செலுத்துவதற்கும் வெளிவிடுவதற்கும் சரியான அமைப்புகள் இவற்றில் காணப்படும்.
❖ கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பிற தேவைகளுக்குப் பயன்படுத்தும் முறையே நீர் மறுசுழற்சி செய்தல் எனப்படும்.
❖ ஐ.யூ.சி.என் என்பது உலகின் இயற்கையான நிலையை அறிவதற்கும் அதைப் பாதுகாத்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமான தலைமை அமைப்பாகும்.
A-Z சொல்லடைவு
கோடைகால உறக்கம்
: அதிக வெப்பமும், வறண்ட சூழ்நிலையும் காணப்படும் கோடைகாலத்தில், விலங்குகள் செயலற்ற நிலையில் இருத்தல்.
உட்கிரகித்தல் : ஊட்டச் சத்துக்கள், பயன்படுத்தப்படக் கூடிய பொருள்களாக மாற்றப்பட்டு, திசுக்கள் மற்றும் உறுப்புகளைச் சென்றடைதல்.
உயிர் புவி வேதிச்சுழற்சி : உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கிடையே நடைபெறும் ஊட்டச்சத்துக்களின் சுழற்சி முறை.
மிதக்கும் தன்மை : நீர்மம் மற்றும் வாயுக்களின் மீது மிதக்கக் கூடிய நிகழ்வு.
எதிரொலித்து இடம் கண்டறிதல் :
மீயொலிகளைச் செலுத்தி பொருள்களின் அமைவிடத்தைக் கண்டறிதல்.
குளிர்கால உறக்கம் : குளிர்காலத்தில் குறைந்த செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தைக் கொண்டிருத்தல்.
ஊடுருவல் : மழை நீரானது நிலத்திற்குள் சென்றடையும் முறை.
மழைப்பொழிவு : மேகங்கள் ஒன்று சேர்ந்து பெரிய நீர்த்திவலைகளாக மாறுதல்.
நீட்சிகள் : மண்புழுவின் கண்டங்களில் காணப்படும் முடிபோன்ற உறுப்புகள்.
இலைத்துளைகள் : வாயுப் பரிமாற்றத்திற்காக இலைகளின் மேற்பரப்பில் காணப்படும் துளைகள்.
பதங்கமாதல் : திடப்பொருளானது நேரடியாக வாயுப்பொருளாக மாறுதல்.